படம் | CPAlanka (அரசியலமைப்பு மாற்றத்திற்காக மக்களிடமிருந்து  கருத்துக்கள் அறியும் அமர்வு கொழும்பில் இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட படம்)

அரசியலமைப்பை சீர்திருத்துவதா? அல்லது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதா? என்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளேயே இரு வேறு கருத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. யு.என்.பி. அணியினர் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறுவதாகவும், ஆனால், எஸ்.எல்.எவ்.பி.யினர் அரசியலமைப்பைத் திருத்தினால் போதும் என்று கருதுவதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், பிரதமர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் அரசியலமைப்புத் சீர்திருத்தம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அண்மை வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை வைத்துப்பார்த்தால் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கப்போவதான ஒரு தோற்றமே எழுகிறது.

நாடாளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றுவதற்குரிய பிரேரணை கடந்த 9ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. அதற்குரிய தீர்மானம் இனிமேல்தான் நிறைவேற்றப்படவிருக்கிறது. அதற்கிடையில் அதில் மாற்றங்களைச் செய்யுமாறு எஸ்.எல்.எவ்.பி.யினர் கோரி வருகிறார்கள். எனவே, இறுதித்தீர்மானம் நிறைவேற்றப்படும் வரையிலும் இதுதொடர்பாக அதாவது, ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா? அல்லது இருக்கிற அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவருவதா? என்பது தொடர்பாக உறுதியாகக் கூறமுடியாத ஒரு நிலை தொடர்வதாகக் கூறப்படுகிறது.

இது விடயத்தில் கூட ஓர் உறுதியான முடிவை இதுவரையிலும் எடுக்கமுடியாத ஒரு நிலையிலேயே நாடு காணப்படுகிறது. எனவே, இதுதொடர்பான குழப்பநிலை காரணமாக இக்கட்டுரையானது அரசியலமைப்பு மாற்றம் என்ற பொதுவான சொற்றொடரைப் பயன்படுத்துகிறது.

அரசியலமைப்பை மாற்றும்போது சாதாரண சனங்களையும் அதில் பங்காளிகளாக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இதற்காக சட்டத்தரணி லால் விஜயநாயக்கவின் தலைமையின் கீழ் ஓர் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு இம்மாதம் 18ஆம் திகதியிலிருந்து செயற்படத் தொடங்கியது. முதல் அமர்வு கொழும்பில் ஐந்து நாட்களுக்கு இடம்பெறும். அதன்பின் வடக்கில் எல்லா மாவட்டங்களிலும் இவ்விரண்டு நாட்கள் அமர்வுகள் இடம்பெறும். அரசியலமைப்பை மாற்றும்போது சாதாரண குடியானவர்களிடமிருந்து கருத்துக்களை அறிவதே இவ்வமர்வுகளின் நோக்கமாகும். இதன்மூலம் அரசியலமைப்பு மாற்றங்கள் சில துறைசார் நிபுணர்களால் மேலிருந்து கீழ்நோக்கி செய்யப்படுவதற்குப் பதிலாக நாட்டின் குடிமக்களின் கருத்துக்களையும் கேட்டுப் பெறுவதன் மூலம் கீழிருந்து மேல்நோக்கிச் செய்யப்படுவதாக அமையும் என்று கூறப்படுகிறது.

அரசியலமைப்பை மாற்றும்போது அந்நாட்டுக் குடியானவர்களையும் அதில் பங்காளிகளாக்குவது என்பது அந்நாட்டின் ஜனநாயகச் செழிப்பையே காட்டும். இவ்வாறு அரசியலமைப்பை மாற்றும்போது குடியானவர்களும் பங்களிப்பது என்பது அவர்களுக்குள்ள அரசியல் உரிமைகளில் ஒன்று ஆகும். 1976ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த ஐ.நாவின் சிவில் மற்றும் அரசியலுரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கையின் 25ஆவது பிரிவே (International Covenant on Civil and Political Rites – ICCPR) மேற்கண்டவாறு வியாக்கியானம் செய்யப்படுகிறது. புதிய நாடுகள் உருவாகும்போது அல்லது போருக்குப்பின் புதிய அரசியலமைப்புக்கள் உருவாக்கப்படும் போது மேற்கண்ட ஐ.நா. உடன்படிக்கையின் பிரகாரம் சாதாரண குடியானவர்களின் பங்களிப்பு பெறப்பட்டு வருகிறது.

ஐ.நா. பிரகடனங்களில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும் பல கூட்டுரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் எப்படி ஏட்டுச்சுரக்காய்களாக உள்ளனவோ அப்படித்தான் இந்த நடைமுறையும் பெரும்பாலும் ஒரு கண்துடைப்பாகவே காணப்படுகிறது. குறிப்பாக தென்னாபிரிக்கா, டுனிசியா, கென்யா. ஈராக் போன்ற நாடுகளில் இது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்று கூறப்பட்டாலும் கூட தென்னாபிரிக்காவே அண்மைத் தசாப்தங்களில் இது விடயத்தில் பிரகாசமான ஒரு முன்னுதாரணமாகக் காட்டப்படுகிறது.

தென்னாபிரிக்காவில் அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது குடியானவர்களின் கருத்தறியும் செயற்பாடானது ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு மேல் இடம்பெற்றது. இதில் அரசியலமைப்புப் பேரவைக்கும் குடிமக்களுக்கும் இடையில் மொத்தம் பதினேழாயிரம் கருத்துப்பகிர்வுக்குரிய இடையூடாட்டங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு மொத்தம் பதின்மூவாயிரத்து நாநூற்று நாற்பத்து மூன்று கணிசமான அளவு முன்வைப்புக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் 90 வீதமானவை தனிநபர்களால் முன்வைக்கப்பட்டன. மொத்தம் இருபது இலட்சம் கையெழுத்திடப்பட்ட முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

அண்மைத்தசாப்தங்களில் அரசியலமைப்பு உருவாக்கத்தில் குடியானவர்களின் பங்களிப்பைப் பொறுத்தவரை தென்னாபிரிக்கா மிக அரிதான ஒரு முன்னுதாரணமாகும். அதன் நல்லிணக்கச் செயற்பாடுகளைப் போலவே அரசியலமைப்பு உருவாக்கமும் ஒரு புறநடைதான். அதேசமயம், கிழக்குத் தீமூரில் நாடு பிரிக்கப்பட்ட பின் அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது பொதுமக்களின் பங்களிப்பைப் பற்றிப் பேசப்பட்டது. ஆனால், அதற்குப் போதியளவு கால அவகாசமோ முக்கியத்துவமோ வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. இலங்கைத் தீவிலும் இது விடயத்தில் போதியளவு கால அவகாசம் தரப்படுமா? என்பது கேள்விக்குறியே.

பெரும்பாலான நாடுகளில் சமூகத்தின் முன்னேறிய பிரிவினரே அரசியலமைப்பு உருவாக்கப் பொறிமுறைகளில் பங்கேற்கிறார்கள். அங்கெல்லாம் குடியானவர்களை தங்களுடைய கொலுவில் ஒரு பொம்மை போல வைத்திருக்கிறார்கள். இலங்கைத்தீவின் அரசியலமைப்பை மாற்றும்போது தமிழ்க்குடியானவர்களின் பங்களிப்பு அத்தியவசியமானது. ஏனெனில், அரசியலமைப்பு மாற்றத்திற்கான முதன்மைத் தேவையே இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதுதான். அதாவது, இலங்கைத்தீவின் புதிய அரசியலமைப்பை ஆகக்கூடியபட்சம் பல்லினத்தன்மை மிக்கதாக மீளவரைவதுதான். ஆனால், இப்போதுள்ள கள யதார்த்தத்தின்படி அரசியலமைப்பை மாற்றும்போது சாதாரண தமிழ்க்குடியானவர்களின் பங்களிப்பானது வரையறைக்குட்பட்டதாகவே இருக்க முடியும். அல்லது இன்னும் கூரான வார்த்தைகளில் சொன்னால் அது ஒரு கண்துடைப்பாகவே அமைய முடியும். அதற்குப் பின்வரும் மூன்று பிரதான காரணங்களைக் காட்டலாம்.

காரணம் 01: தமிழ்க்குடியானவர்கள் தங்களுடைய அபிப்பிராயங்களை அச்சமின்றிச் சொல்லக்கூடிய ஒரு சூழல் இன்னமும் முழுமையாக உருவாக்கப்படவில்லை என்பது.

காரணம் 02: அவ்வாறு தமிழ்க்குடியானவர்கள் அச்சமின்றி வாயைத் திறந்து உண்மையைப் பேசத்தக்க ஒரு அரசியல் சூழலை உருவாக்கத் தேவையான அரசியல் திடசித்தம் ரணில் – மைத்திரி அரசாங்கத்திடம் இல்லை என்பது.

காரணம் 03: தமிழ்க்குடியானவர்கள் அரசியலமைப்பைக் குறித்து போதிய விளக்கமின்றிக் காணப்படுவது.

இம்மூன்றையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முதலாவது – இலங்கைத்தீவில் தமிழ் குடிமக்கள் தங்களுக்குச் சரியெனப்படுவதை அல்லது தாங்கள் உண்மை என்று நம்பும் ஒன்றை அச்சமின்றிப் பேசக்கூடிய சூழல் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. இதை இப்படி எழுதும்போது ஒரு கேள்வி எழும். அப்படி ஒரு சூழல் இல்லை என்பதை ஊடகங்கள் வெளிப்படையாகச் சொல்கின்றன. அரசியல் வாதிகளும், அரசியல் எழுத்தாளர்களும் அதை வெளிப்படையாக பேசுகிறார்கள் தானே. அப்படி இருக்கும்போது உண்மையை வெளிப்படையாக பேசும் ஒரு சூழல் இன்னமும் முழுமையாக உருவாகவில்லை எனச் சொல்லப்படுவது சரியா? இக்கேள்வி ஓரளவுக்குச் சரி. சமூகத்தின் முன்னேறிய பிரிவினரும் ஊடகவியலாளர்களும் ஒப்பீட்டளவில் வெளிப்படையாகப் பேசும் ஒரு சூழல் உருவாகி வருகிறது. அரசியல்வாதிகளுக்கும், நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த சமூகப்பிரதானிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் அவரவர் தொழில்சார் பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்டு. ஆனால், சாதாரண குடிமக்களின் நிலை அவ்வாறு இல்லை. “கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன் காரணம் எதுவெனும் அறிவுமிலார்” என்ற நிலைதான் சாதாரண குடியானவர்ளின் மத்தியில் காணப்படுகிறது. அவர்கள் இப்பொழுதும் காணாமல் போனவர்களைத் தேடுபவர்களாகவும், இதுவிடயத்தில் ஜோதிடர்கள் சொல்வதை நம்புகிறவர்களாகவும், இறந்துபோனவர்களை எண்ணிக் கணக்கெடுக்க முடியாதவர்களாகவும், இறந்து போனவர்களை நினைவு கூரமுடியாதவர்களாகவும், கையகப்படுத்தப்பட்ட தமது காணிகளை மீட்கமுடியாதவர்களாகவும் காணப்படுகிறார்கள்.

காணாமல் போனவர்களுக்கான ஆணைக்குழுக்களில் சாட்சியம் அளிக்கையில் மொழிபெயர்ப்பாளர்கள் சினந்து பேசும்போது பயந்து பின்வாங்கும் ஒரு நிலையே குடியானவர்கள் மத்தியில் பெரும்பாலும் காணப்படுகிறது. அல்லது “நாங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள் வேறு கதை வேண்டாம்” என்று ஆணைக்குழு கூறும் போது பயந்து தலையை உள்ளிழுக்கும் ஒரு நிலைதான் சாதாரண குடியானவர்கள் மத்தியில் காணப்படுகிறது.

தங்களுடைய பலம் என்னவென்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கே என்னவென்று சரியாகத்தெரியாத கற்பனைகளோடு அவர்கள் வாழுகிறார்கள். குருட்டு நம்பிக்கைகளினாலும், குருட்டு விசுவாசங்களாலும் அவர்கள் கட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எந்தவிதமான அச்சமுமின்றி உண்மையை ஒரு பகிரங்கத்தளத்தில் சொல்லத்தக்க ஒரு சூழல் இன்னமும் வரவில்லை.

இத்தகையதோர் பின்னணியில் அரசியலமைப்பை மாற்றும்போது தமிழ்க் குடியானவர்கள் தமது அபிப்பிராயங்களை முழுமையாகத் தெரிவிக்கத்தக்க ஒரு சூழல் இன்னமும் உருவாக்கப்படவில்லை. எனவே, அந்த மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் காட்டிக்கொள்ளும் அரசசார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூகக் குழுக்கள், தொழிற்சங்கங்கள், செயற்பாட்டு இயக்கங்கள் போன்றவைதான் சாதாரண குடியானவர்களின் கருத்துக்களைக் காவிச்செல்லப் போகின்றன. இது எந்தளவு தூரத்திற்கு சாதாரண குடியானவர்களின் கருத்துக்களை முழுமையாக வெளிக்கொண்டு வரும்? ஐ.என்.ஜி.ஓ. நிகழ்ச்சித் திட்டங்களுக்காக புறஜெக்ற் ரிப்போட் எழுதுபவர்கள் சாதாரண குடியானவர்களின் கருத்துக்களை முழுமையாகப் பிரதிபலிப்பார்களா?

இந்த இடத்தில் சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் நடந்த மூன்று நாள் செயலமர்வு ஒன்றைச் சுட்டிக்காட்டலாம். சிங்கள – தமிழ் – முஸ்லிம் சிவில் சமூகங்களில் ஒரு தொகுதியை ஒன்றுகூட்டி அரசியலமைப்பு மாற்றங்களில் அவர்களுடைய அபிப்பிராயங்களைப் பெறுவதற்காக ஒழுங்குசெய்யப்பட்ட செயலமர்வு அது. யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களுக்கும் அங்கே பிரசன்னமாகியிருந்த மூவினங்களைச் சேர்ந்த நிபுணர்குழுவின் அபிப்பிராயங்களுக்கும் இடையே ஒத்திசையைக் காண்பது கடினமாக இருந்தது என்று செயலமர்வை ஒழுங்குபடுத்தியவர்கள் கூறினார்கள். சமூகத்தின் முன்னேறிய பிரிவினராகக் காணப்படும் புத்திஜீவிகள் தமக்கேயான நிலையான நலன்களின் அடிப்படையிலேயே சிந்திக்கிறார்கள். தமது மக்களின் காயங்களுக்கூடாகவும் பயங்களுக்கூடாகவும் சிந்திக்கும் புத்திஜீவிகள் மிகக் குறைவே.

மேற்படி சந்திப்பின்போது ஒரு தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதி கேட்டார். எங்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்கிறீர்கள், இவையெல்லாம் சபையேறுமா? எங்களுடைய அபிப்பிராயங்களை அரசியல்வாதிகளும், துறைசார் நிபுணர்களும் செவிமடுப்பார்களா? என்று. இதற்கு நிபுணர் குழுவைச்சேர்ந்த ஒரு முஸ்லிம் விரிவுரையாளர் பின்வருமாறு பதிலளித்தார். “உலகப்பொதுமன்றமான ஐ.நாவில் கூட குடிமக்கள் அமைப்புக்களின் அபிப்பிராயங்களை செவிமடுப்பதற்கு என்று ஓர் ஏற்பாடு உண்டு. குடிமக்களால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை அங்கு நிழல் அறிக்கை (Shadow Report) என்று அழைக்கிறார்கள். எனவே, குடிமக்களின் குரல்களை உற்றுக்கேட்கும் ஓர் உலகச்சூழல் உருவாகி வருகிறது” என்ற தொனிப்பட. இது முதலாவது.

இரண்டாவது – உண்மையை வெளிப்படையாகப் பேசுவது என்பது ஓர் அரசியல் சூழலே. அப்படியொரு சூழலை உருவாக்குவது என்பது ஓர் அரசியல் தீர்மானமே. அப்படி ஒரு தீர்மானத்தை எடுக்கத் தேவையான அரசியல் திடசித்தம் ரணில் – மைத்திரி அரசாங்கத்திடம் உண்டா? கடந்த ஒருவருடகால ஆட்சி அனுபவத்தின் படி அவ்வாறான ஓர் அரசியல் திடசித்தத்தை அவர்கள் இதுவரையிலும் நம்பிக்கையூட்டும் விதத்தில் நிரூபித்திருக்கவில்லை.

தமிழ் மக்கள் உண்மையைப் பயமின்றிப் பேசத்தொடங்கினால் அது இப்பொழுது தென்னிலங்கையில் வெற்றி வீரர்களாக வலம்வரும் பலரையும் குற்றவாளிகளாக்கி விடும். எனவே, உண்மை வெளிப்படையாகப் பேசப்படும் ஒரு அரசியல் சூழலை தமிழ் மக்கள் மத்தியில் ஸ்தாபிப்பதற்கு இப்போதுள்ள அரசாங்கமும் தயாராக இருக்காது. தமிழ் மக்கள் வெளிநாட்டு விசாரணையாளர்களின் முன்னிலையில் உண்மையை அச்சமின்றிக் கூறுவார்கள் என்ற முன்னெச்சரிக்கை உணர்வோடுதான் இப்போதிருக்கும் அரசாங்கம் பன்னாட்டு விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு முழு வாய் திறந்து உண்மையைப் பேச முடியாத ஒரு மக்கள் கூட்டம் அரசியலமைப்பு மாற்றங்களில் தனது கருத்துக்களை எப்படி முழுமையாகத் தெரிவிக்க முடியும்? இது இரண்டாவது.

மூன்றாவது – அரசியலமைப்பு எனப்படுவது சாதாரண குடிமக்களால் விளங்கி வாசிக்கப்படும் அளவிற்கு எளிமையான ஓர் அவணம் அல்ல. அது படிப்பாளிகள் மற்றும் துறைசார் நிபுணர்களால் வாசிக்கப்படும் ஓர் ஆவணமே. எனவே, தமது தலைவிதியைத் தீர்மானிக்கப்போகும் அரசியலமைப்பு மாற்றங்களைக் குறித்து விவாதிக்கத் தேவையான நுட்ப அறிவு சாதாரண தமிழ்க் குடியானவர்களில் எத்தனை பேரிடம் உண்டு? இது விடயத்தில் குடியானவர்களை அறிவூட்டவல்ல ஊடகங்கள் எத்தனை தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? இதுவிடயத்தில் அரசியலமைப்பை சாதாரண குடியானவர்களும் விளங்கத்தக்க விதத்தில் இலகுபடுத்திக் கூறத்தக்க எழுத்தாளர்களும், புத்திஜீவிகளும் எத்தனைபேர் உண்டு? சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் நிலைமை இவ்வாறுதான் உள்ளது என்று கூறப்படுகிறது.

இங்கு மறுபடியும் தென்னாபிரிக்க முன்னுதாரணத்தை எடுத்துக்காட்ட வேண்டும். ஈழத்தமிழர்களோடு ஒப்பிடுகையில் தென்னாபிரிக்காவின் தொலைதூரக் கிராமங்கள் படிப்பால் பின்தங்கியவை. ஊடகங்களுக்கும் தொலைவில் இருப்பவை. இத்தகையதோர் சமூகப்பின்னணியில் அரசியலமைப்பைப்பற்றி சாதாரண சனங்களுக்கு கல்வியூட்டும் ஏற்பாடுகளைத் தென்னாபிரிக்கா மேற்கொண்டது. அச்சூடகங்கள், வானொலி, விளம்பரப்பலகைகள், தொலைக்காட்சிகள், தொலைபேசிகள், இணையங்கள் போன்ற எல்லா வலைப்பின்னல்களும் பயன்படுத்தப்பட்டன. பன்னிரண்டு மாதங்களில் ஆயிரம் அறிவூட்டற் கல்விச் செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால், இலங்கைத்தீவின் நிலைமை எவ்வாறு உள்ளது? இங்கு அரசியலமைப்புப் பற்றிய கலந்துரையாடல்கள் சமூகத்தின் முன்னேறிய பிரிவினர் மத்தியில் பெரும்பாலும் ஆங்கில ஊடகங்களில்தான் இடம்பெற்றுவருகின்றன. அவைகூட தொகையில் மிகச்சிறிய அளவிலானவை. குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் நிலைமை எவ்வாறு உள்ளது?

கடந்த சில மாதங்களாக நல்லிணக்கம், தேசியக் கலந்துரையாடல் நிலைமாறு காலகட்ட நீதி, கலப்பு விசாரணைப் பொறிமுறை போன்றவைகள் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் குடிமக்கள் குழுக்களுடனான சந்திப்புக்களின் போதெல்லாம் சாதாரண குடிமக்கள் மேற்படி விடயப்பரப்புக்களைக் குறித்து தெளிவின்றியும், விளக்கமின்றியும், அக்கறையின்றியும் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

அரசியலமைப்பு யோசனைகள் மற்றும் நிலைமாறுகாலகட்ட நீதி போன்றவை தொடர்பாக மக்கள் சந்திப்புக்களின் போதெல்லாம் சாதாரண குடிமக்கள் தமது கண்ணீர்க் கதைகளோடும், அபகரிக்கப்பட்ட காணி உறுதிகளோடும், தாங்கள் ஏற்கனவே அனுப்பிய முறைப்பாட்டுக் கடிதங்களின் கைபட்டுக் கசங்கிய பிரதிகளோடும் அவர்களுக்கே என்னவென்று விளங்காத ஏதோ ஒரு அரச திணைக்களத்திலிருந்து வந்திருக்கக்கூடிய கடிதங்களின் பிரதிகளோடும் வருகிறார்கள். அதாவது அவர்கள் கண்ணீரோடும், முறைப்பாடுகளோடும் சலித்துப்போன பிரார்த்தனைகளோடும் வருகிறார்கள். குறிப்பாக சாதாரண குடிமக்கள் அவர்களுக்கே இயல்பான உணர்ச்சித்தளத்தில் நிற்கிறார்கள். ஆனால், அவர்களுடைய கவலைகளையும், அபிலாசைகளையும், முறைப்பாடுகளையும், மன்றாட்டங்களையும் அறிவுபூர்வமாக மொழிபெயர்ப்பதற்கு ஆட்கள் தேவை. அவ்வாறு அறிவுபூர்வமாக மொழிபெயர்க்கப்பட்ட முறைப்பாடுகளே அரசியலமைப்பை மாற்றும்போது பங்களிப்பைச் செலுத்த முடியும்.

இவ்வாறு உணர்ச்சித்தளத்தில் நிற்கும் பொதுமக்களை அறிவுபூர்வமாக பிரநிதித்துவம் செய்யத்தக்க புத்திஜீவிகள் எத்தனை பேர் உண்டு? ஊடகங்கள் எத்தனை உண்டு? செயற்பாட்டு இயக்கங்கள் எத்தனை உண்டு?

எனவே, மேற்கண்டவை அனைத்தையும் தொகுத்துப்பார்த்தால் அரசியலமைப்பு மாற்றங்களில் தமிழ்க்குடியானவர்களின் பங்களிப்பு எனப்படுவது சம்பிரதாயபூர்வமானதாகவே இருக்க முடியும். உண்மையை அச்சமின்றிக் கூறுவது என்பது ஓர் அடிப்படை மனித உரிமை. அந்த உரிமையைப் பிரயோகிக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம் ஐ.நாவின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கையின் 25ஆவது பிரிவை மட்டும் எப்படிப் பிரயோகிக்க முடியும்?

அரசியலமைப்பு மாற்றங்களில் குடியானவர்களின் பங்களிப்பை மகிமைப்படுத்திக்காட்டும் மேற்கு நாடுகளும், ஐநாவும், உலகப்பொது மன்றங்களும் இதுவிடயத்தில் தமிழ் மக்களுக்கு உரிய விளக்கத்தைக் கொடுக்குமா?

நிலாந்தன்