படம் | veteranstoday

ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை சர்வதேச விசாரணைக்காகவா அல்லது இனப்படுகொலை குறித்த விசாரணைக்காகவா அழுத்தம் கொடுக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், பிரேரணை சமர்ப்பிக்கவுள்ள அமெரிக்காவிடம் இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் பெரியளவில் கரிசனை இருப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளை பொறுத்தவரை இலங்கை அரசு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு ஜனநாயக ஆட்சி என்ற கருத்துநிலை காணப்படுகின்றது.

இரு வகையான சிந்தனை

மூன்றாவது தடவையாகவும் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணை இலங்கைக்கு கடும் அழுத்தங்களை கொடுக்கும் என தமிழத்தரப்பும் இது வழமையானதுதான், ஆனால் இலங்கைக்கு இது ஒரு கௌரவ பிரச்சினை என சிங்களத்தரப்பு கவலை கொள்வதும் உண்டு. இந்த இரு தரப்பு கருத்துக்களும் அமெரிக்காவுக்கு நன்கு தெரிந்த நிலையில் மூன்றாவது தடவையாகவும் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை எந்த தரப்பை திருப்திப்படுத்தப் போகின்றது என்ற கேள்விகளும் எழுகின்றன.

ஆனால், இலங்கையில் மீளிணக்கம், பொறுப்புக் கூறப்படுவது, மத ரீதியிலான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்பதைக் காட்டுவதாகவே பிரேரணை அமையும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை, இலங்கை அரசு பொறுப்புக் கூறலைச் செய்யப்போவதில்லையென்ற யதார்த்தத்தை ஒரு கட்டத்தில் சர்வதே சமூகம் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் சர்வதேச சமூகம் விசாரணையை மேற்கொள்ள வேண்டுமெனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான ஜோன் ஷிப்ரொன் தெரிவித்தார்.

ஆகவே, தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது போலவும் சிங்கள மக்கள் அச்சமடையும் அளவுக்கும் பிரேரணை அமையவில்லை. ஆனால், ஜோன் ஷிப்ரொன் கூறியது போல சர்வதேச விசாரணை என்ற விடயத்தில் அக்கறை செலுத்தப்படுமானால் இலங்கை படையினரும் விடுதலைப்புலிகளும் புரிந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளிப்படையாக பேசவேண்டிய நிலை ஏற்படலாம். இந்த நிலை இலங்கை அரசுக்கும் தமிழத்தரப்புக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். சர்வதேச மனித உரிமைகள் ஆர்வலர்கள் சிலர் வடக்கு கிழக்கிற்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதை விட மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணைகளை நடத்தி இரண்டு தரப்பையும் சர்வதேச அரங்கில் அவமானப்படுத்திவிட்டால் போதும் என கருதுகின்றனர். வேறு சில மனித உரிமை அமைப்புகள் இனப்படுகொலை என விசாரிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை பெற்றுக்கொடுக்கலாம் என விரும்புகின்றனர். இனப்படுகொலை என்ற அடிப்படையில் பிரேரணை அமையும் அல்லது விசாரணை நடத்தப்படும் என்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே கூறலாம்.

அமெரிக்கா இந்தியாவுக்கும் ஆபத்து

அதேவேளை, சர்வதேச விசாரணை ஒன்று நடைபெறுமானால் அது இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றியதாகவே அமையும் என்றும், இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கிய அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் மீதான ஒரு விசாரணையாகவும் மாறிவிடலாம் எனக் கருதுவதால் மேற்குலக நாடுகள் சர்வதேச விசாரணை என்பதில் பெரியளவில் அக்கறை காண்பிக்கவில்லை. ஆனால், இறுதிக்கட்ட போரில் இனப்படுகொலை, அதன்பின்னரான நில அபகரிப்பு போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தினால் வடக்கு – கிழக்கு பிரதேசம் பரிந்து செல்வதற்கான கருத்து நிலை ஒன்றை சர்வதேசம் உருவாக்கிக் கொடுத்ததாக அமையும். ஆகவே, எதனை தவிர்ப்பது எதனை சேர்த்துக்கொள்வது என்ற விடயங்களை கருத்தில் கொண்டுதான் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விடயங்கள் ஆராயப்படவுள்ளன.

ஜெனீவா பிரேரணை வடக்கு மாகாணம் பற்றியே கூறுகின்றது. கிழக்கு மாகாணம் பற்றிய பேச்சுக்கள் இல்லை. கிழக்கில் இரணுவ தலையீடுகள், வேலை வாய்ப்பில் சமவாய்ப்பு இன்மை, காணி அபகரிப்பு, செயற்கையான முறையில் இன விகிதாசாரத்தை குறைத்துக் காண்பித்தல் போன்ற இன ஒதுக்கல் முறைகள் கிழக்கில் அரங்கேறுகின்றன. தமிழ் தலைமைகள் அது பற்றி பேசவில்லை.

மஹிந்த ராஜபக்‌ஷ அரசை பொறுத்தவரை 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதிக்குப் பின்னர் இனப்பிரச்சினை என்பதை உள்நாட்டு விவகாரமாக மாற்றிவிட்டதால் மென்போக்கான பிரேரணை ஒன்றைக் கூட ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. மனித உரிமைகள் பற்றிய விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது என்பதில் தகவல்களை காண்பிப்பதற்கு இம்முறை அரசு எடுக்கும் முயற்சிகள் ஓரளவுக்கேனும் சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் எனக் கூறலாம். அந்த அளவுக்கு செயற்கையான முறையில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் அந்த அறிக்கைகளை அனுப்பிவைக்க ஏற்பாடு இடம்பெறுகின்றது.

ஆயர்கள் நிலை

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆயர்கள் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்துகின்றனர். விடுதலைப் புலிகள் மீதான போர்க்குற்றங்களை விட படையினரால் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் ஒரு இனத்துக்கு எதிரானவை என்ற நிலைப்பாட்டில் ஆயர்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றனர். அந்த விசாரணையின் மூலமாக இனப்படுகொலை, நில அபகரிப்புகள் பற்றிய விடயங்களும் வெளிப்படும் எனவும் ஆயர்கள் கருதுகின்றனர். கடந்த ஜெனீவா கூட்டத் தொடரில் மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து ஸ்கைப் மூலமாக உரையாற்றிய ஆயர் இனப்படுகொலை என உச்சரித்திருந்தார்.

எதிர்வரும் மார்ச் மாதமும் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையில் இனப்படுகொலை என்பது உள்ளடக்கப்பட வேண்டும் என்பதற்கான சில வழிமுறைகளை ஆயர்கள் வழங்கியுள்ளனர். ஆனால், சர்வதேச விசாரணை என பொதுவாக கூறப்பட்டால் இனப்படுகொலை என்ற கோணத்திலான விசாரணைகளுக்கான வாய்ப்பு இல்லாமல் போகும். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான ஜோன் ஷிப்ரொன் இனப்படுகொலை என்பதற்கான போதிய ஆதரங்கள் தேவை எனக் கூறியிருந்தார். இது தொடர்பாக கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்களுக்கு அவர் விளக்கமளித்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.

ஐக்கியநாடுகள் சபையின்  

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனத்தில் இனப்படுகொலை என்பதற்கான வரைவிலக்கணம் சரியான முறையில் கூறப்படவில்லை எனவும், ஆனாலும் ஆதாரங்களின் அடிப்படையில் இனப்படுகொலை என்பதை நிறுவலாம் எனவும் ஜோன் ஷிப்ரொன் கூறியிருந்தார். இறுதிப் போர் நடைபெற்ற 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இலங்கை தொடர்பான விடயம் எடுக்கப்படவிருந்த நிலையில் இறுதியில் அது தடுக்கப்பட்டது. இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவும் அதற்குக் காரணமாக இருந்தது. ஏனெனில், பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்டால் சர்வதேச தலையீட்டுடன் அரசியல் தீர்வையும் முன்வைக்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் படைகளை இலங்கைக்கு அனுப்ப நேரிடும். அவ்வாறான ஒரு சூழல் உருவானால் அது இந்தியாவுக்கு ஆபத்தானதாக இருக்கும் என இந்திய இராஜதந்திரி நிருபமா ராவ் அன்று கூறியிருந்தார்.

ஆகவே, இதன் பின்புலத்தில் இருந்து மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பாக ஆராய்வதானால் சர்வதேசம் தங்கள் பாதுகாப்பில் நின்று கொண்டுதான் இலங்கை தொடர்பான விடயத்தை நோக்குகின்றன. ஆனாலும், சர்வதேசம் கேட்கின்ற ஆதாரங்களை கொடுக்க வேண்டியது தமிழ்த்தரப்பின் கடமை.

கிழக்கில் மாகாணத்தில் 

ஜெனீவா பிரேரணையில் வடக்கு மாகாணம் பற்றியே கூறப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் பற்றிய பேச்சுகள் இல்லை. கிழக்கில் இராணுவ தலையீடுகள், வேலை வாய்ப்பில் சமவாய்ப்பு இன்மை, காணி அபகரிப்பு, செயற்கையான முறையில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை குறைத்துக் காண்பித்தல் போன்ற பல்வேறு இன ஒதுக்கல் முறைகள் அரங்கேறுகின்றன. ஆனால், இது பற்றிய தகவல்கள் ஜெனீவா மனித உரிமை பேரவைக்குத் தெரியுமா? தமிழத்தரப்பு இந்த விடயத்தில் மௌனிப்பதுதான் இனப்படுகொலை பற்றிய விசாரணைக்கான சர்வதேசத்தின் புறக்கணிப்புக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம். கிழக்கு மகாணம் பற்றி ஆயர்கள் கூறும் அளவிற்கு தமிழ் அரசியல் தலைமைகள் கவனம் செலுத்தவில்லை.

ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

Nix P0001