படம் | AP, dw

1948ஆம் ஆண்டின் போலிச் சுதந்திரம் முதல் தமிழ் மக்கள் தென்னிலங்கைக்கு தெரிவித்த செய்தியினையே கடந்த மாகாண சபைத் தேர்தலின்போதும் தெரிவித்துள்ளனர். அதாவது, “கௌரவமாகவும் மாறுபட்டதொரு நாகரிகமான மானுட பிரிவினராக ஏனைய அனைத்து மக்களுடனும் எம்மை வாழ விடுங்கள்” என்பதாகும். இச்செய்தியைப் புறக்கணித்தலானது அனைவருக்கும் ஆபத்தினை விளைவிக்குமென்பதை கடந்தகால யுத்தத்திலிருந்து மிகத் தெளிவாகக் காண முடியும். ஆயினும், தமிழ் மக்களது எதிர்பார்ப்பு மிகவும் மேலோங்கிய சந்தர்ப்பங்களில் அரசுகள் அதனை விரோதத்துடனேயே நோக்கின. அதனைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டின் மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகள் காரணமாக அந்நோக்கம் இரண்டு முனைகளில் அடக்குமுறைக்குட்படுத்தப்பட்டது. தற்போது அவை யாவும் அண்மைய வரலாறாக மாறியுள்ளன.

ஆயினும், இதுவொரு யதார்த்தம் என்பதனை ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளாமையானது ஒரு துன்பியலாகும். ஆட்சியிலிருந்தவர்களது தவறான செயற்பாடுகளை வாய்விட்டுரைத்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் அந்த அதிகாரத்தை அதிகரித்துக்கொள்வதற்கு செய்யாத அநீதிகளில்லை, மீறப்படாத சட்டங்களில்லை. மனித உரிமைகள், சர்வதேச சமவாயங்கள் என்பன உரைப்பவைகள் அவர்களுக்குக் கேட்பதில்லை. இவர்கள் புரிகின்ற செயல்கள் பற்றி நேரடியாகக் கூறினாலும் அவர்களுக்கு வெட்கமென்பது கிடையாது. ஆனால், சொல்லாமலிருக்கவும் முடியாது. உண்மையில் நீங்கள் அனைவரும் கொள்ளை கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், கொள்ளையை சுட்டிக்காட்டுபவர்கள் அடக்கப்படுகின்றனர். நீங்கள்தான் யுத்தத்தை ஏற்படுத்துகின்றீர்கள், அதனை இல்லாதொழிக்கும் வழிகள் பற்றிப் பேசுவதற்கு இடமளிப்பதில்லை. வெறும் கொள்ளையடிப்பு மாத்திரமே உங்களது அபிவிருத்தியாகும். அதன் மூலம் பொதுமக்களுக்கு போய்ச் சேரும் ஏதாவதொரு நன்மையைச் சுட்டிக் காட்ட முடியுமா? இனங்களுக்கிடையேயும் பொருளாதாரத்திலும் அனைத்து பிரச்சினைகளையும் இவர்கள்தான் ஏற்படுத்துகின்றார்கள். அவற்றுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக அனைத்து சுமைகளையும் பொதுமக்கள் மீதே சுமத்துகின்றனர்.

அரசியல் மூலம் தமது அன்றாட வாழ்வினை உயர்ந்த நிலைமைக்குக் கொண்டு வருவதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆயினும், சிங்கள அரசியல்வாதிகள் கூறுகின்ற விடயங்களுக்கு தமிழ்-முஸ்லிம் அரசியல்வாதிகள் பதிலளிக்கின்றனர். அதிகார மோகம் பிடித்தவர்கள் ஏனைய அதிகார மோகம் பிடித்தவர்களுக்கு பதில் கூறுவதையே அரசியலாக மேற்கொள்கின்றனர். அனைத்து அரசியல்வாதிகளும் மக்களது தேவைகள் முன்னே குருடர்களாவர்.

ஆகவே, மக்களிடம் புதியதோர் அரசியல் தொலைநோக்கு தேவையாகவுள்ளது. இவ்வாறான அரசியல்வாதிகளிடம் ஏமாறுவதிலிருந்து விடுபடல் அதன் முதற்கட்டமாகும். பின்னர் அவர்களை முடக்கக்கூடிய செயன்முறைகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

தற்போது எம்மால் தீர்த்து வைக்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. நாட்டின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவேண்டிய நிலையில் தனது அதிகாரத்திற்காக தேசியப் பிரச்சினையை அனைத்து அரசுகளும் உருவாக்கின. ஆகவே, தேசிய பிரச்சினையே தற்போதுள்ள பிரதான பிரச்சினையாகும். குறிப்பாக நல்லிணக்கம் அல்லது தேசிய ஒற்றுமையினை ஏற்படுத்துவதன் மூலமே அதனைத் தீர்க்க ஆரம்பித்தல் வேண்டும். தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த அரசியல் பாரபட்சங்கள் தேசிய பிரச்சினையாக மாறியது. அதனைத் தீர்ப்பதற்கு யுத்தம் பிரயோகிக்கப்பட்டதனால் தற்போது அது உள்நாட்டு எல்லையை மீறி சர்வதேசமயமாகியுள்ளது. ஆகவே, முன்பு பிரயோகிக்கப்பட்ட மிதித்தொதுக்கும் முறைமை தற்போது செல்லுபடியாகாது. வன்முறையினால் ஒழிக்கப்பட்டது வன்முறையே.

பிரச்சினைக்குரிய வேர் இன்னமும் அவ்வாறே காணப்படுகிறதென்பது வடக்கின் மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது. அரசினதும் தெற்கினதும் ஒரு சில பண்டிதர்கள் தமிழ் மக்களது விருப்பமின்றி தீர்வுகளை முன்மொழிகின்றனர். நடந்து முடிந்த தேர்தலை தமிழ் மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பாகக் கருதலாம். தற்போது ஆட்சியாளர்களிடம் அரசியல் ராஜதந்திரம் காணப்படல் வேண்டும். அவர்களிடம் இல்லாததும் அதுவே. அதற்குப் பதிலாக அகம்பாவமே காணப்படுகின்றது. அவர்கள் தமது பலாத்காரத்தினையே ஒருமைப்பாடு எனக் கூறுகின்றனர். கொள்ளையடிப்பதற்கும் அடக்கு முறையை பிரயோகிப்பதற்கும் அவர்களுக்குள்ள சுதந்திரத்தினையே ஜனநாயகம் எனக் கூறுகின்றனர். மக்களிடம் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே இவை மாற்றமடையும். அது வரையில் இம்முறைமையின் கீழ் பதவி வகிக்கும் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களானாலும் திருட்டுக் கும்பல்களாக மாறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அரசு தாம் கையாளும் ஒரு சில அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கே மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டன. அது வடக்கு-கிழக்கு தொடர்பான தேசிய அடையாளத்தை ஏற்றுக்கொள்ளத் தேவைப்பட்டது. ஆயினும், அவை ஏற்படுத்தப்பட்ட போதே எட்டு மாகாணங்களுக்கு அது வழங்கப்பட்டு அத்தேசிய அடையாளம் நிராகரிக்கப்பட்டது. பின்னர் மாகாணங்களின் அதிகாரங்கள் காலத்திற்குக் காலம் மீளப் பெறப்பட்டன. சிலவற்றை நடைமுறைப்படுத்துவது தடுக்கப்பட்டன. இணைந்த பட்டியல் மூலமும் மாகாணங்களின் அதிகாரக் குறைப்பே மேற்கொள்ளப்பட்டன. மாகாண அரசியலுக்கு வழிவிடாது அதனை வழிப்பறி அரசியலுக்கு அடிபணிய வைக்கப்பட்டன. அவ் அரசியலுக்கு முழு நாட்டையும் அடிபணிய வைப்பதற்காக 17ஆவது திருத்தத்தினை இல்லாதொழித்து 18ஆவது சர்வாதிகார திருத்தத்தினைப் பிரயோகிக்க உயர் நீதிமன்றம் பயன்படுத்தப்பட்டது. 13ஆவது திருத்தத்தின் கீழுள்ள அதிகாரங்களை வடக்கிற்கு வழங்காதிருக்க இனவாத அரசியலும் நடுநிலைமையற்ற நீதிமன்றமும் உபயோகிக்கப்பட்டன. தற்போது மீண்டும் காணி அதிகாரங்கள் மாகாண சபைக்குக் கிடையாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அது இறந்தகால வழிப்பறி அரசியலினதும் இனவாதத்தினதும் தொடர்ச்சியாகும். அனைத்து மாகாணங்களினதும் காணி உரிமை அரசிடமே உள்ளது. அதனைக் கூறுவதற்கு வழக்குத் தீர்ப்பு தேவையில்லை. தனியார் மற்றும் அரசின் காணிகள் தவிர்ந்த ஏனைய காணிகளை பயன்படுத்தல் மற்றும் பயன்படுத்த விடுதல் என்பவற்றுக்கான அதிகாரம் 13ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டது. அச்சிறு அளவைக் கூட வழங்காமலிருப்பதே காணிக் கொள்ளையர்களுக்கும் இனவாதிகளுக்கும் தேவைப்பட்டது. அத்தேவைப்பாடே புதிய வழக்குத் தீர்ப்பினால் நிறைவேற்றப்படுகிறது. செய்யாமலிருக்கும் நீண்டகாலத் தவறை மூடி மறைப்பதற்கு வழக்குத் தீர்ப்பொன்று போதுமானதாக இல்லை. இதுவரை காலமும் சட்டத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளையும் புறக்கணித்துச் செயற்படுவதற்கு நிறைவேற்று அதிகாரத்திற்கு முடியுமாயிருப்பின் இங்கும் அதுபோன்று செய்ய முடியாமலிருப்பதற்கான காரணம் யாது? காணிகளைக் கொள்ளையிடும் அரசின் தேவைப்பாடுகளுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பின்பற்றுவதும் பாதகமான தீர்ப்புகளைப் பின்பற்றாமலிருப்பதும் சட்டத்திற்கு தலை வணங்குதல் ஆகுமா? அரசியலமைப்புச் சட்டம் மாற்றமடைய வேண்டுமென்பதும் உறுதியாக இருக்கவேண்டுமென்பதும் தேவையாகவுள்ளது என்பதே இதன் மூலம் மீண்டும் தெளிவாகிறது.

அரச சேவைகள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றிலிருந்து கிடைக்கும் தரகுக் கூலி (கமிஷன்), ஒப்பந்தம், கழிவுகள் மற்றும் பரிசுப் பொருட்கள் என்பன பகிரப்படும் என்பதாலேயே இவர்கள் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்காதிருக்கின்றனர். அதனாலேயே இனவாதத்தையும் தூண்டுகின்றனர். மாகாண சபைகள் மூலம் பொது மக்களுக்குக் கிடைக்கும் ஜனநாயக ரீதியிலான அனுகூலம் யாது? பதவியிலுள்ளவர்கள் தனது எதிர்காலத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மாகாண சபையினைப் பயன்படுத்துகின்றனர். தந்தைகளிடமிருந்து, கணவன்மார்களிடமிருந்து மகன், மகள்மார்களுக்கு, மனைவிகளுக்கு மற்றும் உறவினர்களுக்கு வழிப்பறி அரசியலில் பிரவேசிக்க மக்களது நிதியைப் பயன்படுத்தி நடாத்தப்படுகின்ற பயிற்சி முகாமொன்றாக இன்று மாகாண சபை பயன்படுத்தப்படுகிறது. வட மாகாண சபை மட்டுமே அதிலிருந்து ஓரளவாவது மீள்வதாகத் தெரிகிறது. அதன் வேட்பாளர்களைப் பெயரிடல், முதலமைச்சரை நியமித்தல் என்பன அம்மாற்றத்திற்கான ஆரம்பமாகும். பின்னர் அது இனவாத மற்றும் வழிப்பறி அரசியலுடன் இணைவதா என்பதனை அவர்களே தீர்மானிப்பார்கள்.

நாட்டில் வாழும் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையே நல்லுறவு பாதுகாக்கப்படவில்லை. அரசியல்வாதிகளே அதனை மிகவும் சிக்கனப்படுத்துகின்றனர். ஆயினும், அதிகாரத்திலுள்ள அரசுதான் ஒற்றுமை நிலைத்திருப்பதற்கான அத்திவாரத்தினை இடுதல் வேண்டும். அத்துடன், அரசை பதவியில் அமர்த்தும் பெரும்பான்மையினரான சிங்கள மக்களிடமும் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான பாரியதொரு பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. மீள் இணக்கத்தினை – நல்லிணக்கத்தினை ஏற்படுத்தவேண்டும் என்பதே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் வற்புறுத்தலாகும். இதுவரை அவ்வாறான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மேற்கொள்ளப்பட்டதாகக் கூறும் நடவடிக்கைகள் மூலம் நாம் விடுதலை பெறுவதற்காக உலகிற்குக் காட்டும் விடயங்கள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் – சிங்கள – முஸ்லிம் சாதாரண பொது மக்கள் மூன்று வேளை ஏதோவொரு உணவை உட்கொண்டு வாழ்கின்றனரா? பிள்ளைகள் உறவினர்கள் சகிதம் தனக்கே உரிய வீடொன்றில் மகிழ்ச்சியாக உள்ளனரா? எனக் கண்டறிவதே அதன் முதற்கட்டச் செயற்பாடாகும். சிறந்த சுகாதாரம், கல்வி என்பன குறைவின்றி வழங்கப்படுகின்றனவா? அவர்களுக்கு நீதி வழங்கப்படுகின்றனவா? என்பது பற்றித் தேடியறிவது அரசின் கடமையாகும். ஆயினும், அதற்குப் பதிலாக மோதல்களுக்கு வித்திடப்படுகிறது. சந்தேகத்துடனும், பகைமையுடனும் குறை கூறப்படுகிறது. இனவாதம் இரு புறத்திலும் ஆயுதமாக உருவெடுத்துள்ளது. ஒரு தரப்பு மற்றவரை அடக்குவதற்கும் மற்றைய தரப்பு அடக்குமுறையிலிருந்து மீள்வதற்கும் தமது உன்னதத் தன்மை பிரயோகிக்கப்படுகிறது. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஒரு தரப்பு அர்ப்பணிப்புடன் மற்றைய தரப்பிற்கு குறித்த தவறினை நிவர்த்தி செய்ய உதவுதல் வேண்டும். பதவியிலுள்ள தரப்பிற்கு அதன்போது கூடுதலான பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

ஜனவரி மாதம் வௌியாகிய ‘சமாதான நோக்கு’ சஞ்சிகைக்காக  சட்டத்தரணி எஸ்.ஜீ. புஞ்சிஹேவா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.