படம் | Reuters

2009க்குப் பின்னரான ஈழ காலத்தை சில சொற்கள்தான் ஆட்சி செய்கின்றன. ஒவ்வொரு காலத்திலும் சர்வதேச அளவில் முன்வைக்கப்படுகின்ற அல்லது சர்வதேச அளவில் ஏற்கனவே அறிமுகமான சொற்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்படுகின்றன. அது சர்வதேச, உள்ளூர் அரசியல் பேச்சுக்களிலும், பந்தியிடல்களிலும், செய்திகளிலும் அதிக இடத்தைப்பிடித்து, காலவோட்டத்தில் நீர்த்துப் போகிறது. ஒரு காலத்தை ஆவணப்படுத்தல் என்கிற எழுத்து முறைமைக்குள் சொற்களுக்கு உயிர்ப்பான இடமிருக்கின்றது. நடப்பு அரசியலில் மனிதப் புதைகுழி என்ற சொல் மிக முக்கிய அரசியல் அந்தஸ்தை அடைந்திருக்கிறது.  சர்வதேச அளவில் அழுத்த அரசியலுக்கு பிரயோகப்படும் முக்கிய சொற்களுல் இதுவும் ஒன்று என்கிற தனி அடையாளமும் இச்சொல்லுக்கு உண்டு.

நடப்பு என்ன?

இனியும், இப்போதும் அரசியலாகியிருக்கின்ற  சொல் மனிதப் புதைகுழி. அதாவது திருக்கேதீஸ்வரத்திலும், இரணைப்பாலையிலும்  மனிதப் புதைகுழிகள் இருக்கின்றன என வெளிவரும் செய்திகள் இந்தப் புதிய அரசியல் பேச்சைத் தொடக்கிவைத்திருக்கின்றது.  ஒருவகையில் இது இலங்கைக்குப் புதிதில்லையாயினும், ஏற்கனவே அறிமுகப்பட்டதாயினும், புதியதொரு அரசியல் தசாப்தத்தில் பேசுபொருளாயிருக்கின்றது. இப்போதைக்கு நாற்பத்து ஏழை எட்டியிருக்கும் மனித எலும்புக்கூடுகள் இனிவரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்த மனிதப் புதைகுழி விடயத்திலும் கடந்தகால அனுபவங்கள் பின்பற்றப்படுமாயின் பேசத்தொடங்கிய மன்னார் ஆவிகளின் பேச்சும் அடக்கப்பட்டுவிடும். அதாவது, இயற்கை மற்றும் சமூக நிகழ்வுகளை காரணம்காட்டி எலும்புக்கூட்டு அகழ்வ தற்காலிகமாக நிறுத்தி, பின்னர் ஏதாவது சாக்குப்போக்கு அரசியல் செய்து மறக்கச்செய்யும் பொறிமுறை இங்கும் பின்பற்றப்படக்கூடும். அதற்கான ஆயத்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றே தெரியவருகிறது. சாதாரண மக்களுக்கும், அகழ்வுப் பணியில் ஈடுபடும் சுயாதீன செயற்பாட்டாளர்களுக்கும், உண்மையை வெளிப்படுத்தும் ஊடகக்காரர்களுக்கும் பீதியை தரவல்ல தரப்பினரிடம் மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம் கையளிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மனிதப் புதைகுழிகளுக்கும் வரலாறுண்டு

இலங்கை நீண்ட மனிதப் புதைகுழிகளின் வரலாற்றுப் பாரம்பரியத்தை கொண்ட நாடு. இந்தச் சொல்லை  ஏற்கனவே அறிந்திருக்கிறோம். சந்திரிகா காலத்தில், செம்மணி மனிதப் புதைகுழி என்கிற அரசியல் சர்வதேச கவனத்தை பெற்றிருந்தது. உள்ளூர், சர்வதேச ஊடகங்களும் சுவாரஸ்யமான தகவல்களை இங்கிருந்து திரட்டி வழங்கியிருந்தன. 600க்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என வெளியான தகவலோடு செம்மணி மனிதப் புதைகுழி பற்றிய கதைகள் மறக்கச் செய்யப்பட்டன. தொடர்ந்து நாட்டில் நிலவிய அரசியல் குழறுபடிகள் செம்மணியை நிரந்தரமாகவே மூடிவிட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி, நம் நினைவுக்கு இலகுவில் கொண்டுவருவதற்காக உதாரணப்படுத்தப்பட்ட ஒன்று. ஆனால், இலங்கைத் தீவின் பல பாகங்களிலும் மனிதப் புதைகுழிகள் இருப்பதை, இப்போது 55 வயதைக் கடந்த அனைவரும் நினைவுபடுத்துவர். அதுவும் கொழும்பு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், அங்கு தற்காலிகமாக வாழ்ந்தவர்களுக்கும் இந்த விடயம் தெளிவாகத் தெரியும். இன்னமும் நினைவில் நிற்கும். ஜே.வி.பி போராளிகள் மீது இலங்கை ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள், படுகொலைகள் எண்ணிக்கையற்ற இளைஞர், யுவதிகளை மனிதப் புதைகுழிக்குள் தள்ளியது. பாடசாலை மைதானங்கள், வைத்தியசாலைகள் என பல இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் உருவாக்கப்பட்டன. 30 வருடங்களுக்குள் அவை மறக்கப்பட்டும் போயின. ஆயினும், அவ்வாறு புதைக்கப்பட்ட குறையுயிர்களின் ஆன்மா அவ்வப்போது பேசிக்கொள்வதை எந்த ஆட்சியாளராலும் தடுக்க முடியவில்லை. அதன் ஒரு எச்சம்தான் மாத்தளை மனிதப் புதைகுழி. கடந்த வருடத்தில், இலங்கை சற்று அமைதியை அனுபவித்துக்கொண்டிருந்த வேளையில் அந்தப் புதைகுழி குரலெழுப்பியது. ஆனாலும், வழமையான காலங்கடத்தி மறக்கச்செய்யும் பொறிமுறைகளால் மறக்கச்செய்யப்பட்டன.

மூன்று தலைமுறை ஆட்சியாளர்களினதும் பொதுப்பண்பு

இவ்வாறு அண்மையிலும், சற்றுத் தள்ளியும், நெடுங்காலத்துக்கு முன்பும்  என இலங்கையின் காலத்தை நகர்த்தினால் மனிதப் புதைகுழிகள் பிரதான இடத்தில் இருப்பதை அவதானிக்கலாம். இலங்கையின் மனிதப் புதைகுழிகளின் வரலாற்றை நினைவுபடுத்துவதற்காகவே இவ்விரண்டு இடங்களும் குறிப்பிடப்பட்டன. மாறாக, இவை இரண்டும் மட்டுமே இலங்கையில் உள்ள மனிதப் புதைகுழிகள் என்று எடுத்துக்கொள்ளவியலாது.  மனிதப் புதைகுழிகள் மனித குலத்திற்கு எதிரான பயங்கர குற்றங்களில் ஒன்றாக உலக மனித உரிமை அமைப்புகளால் வரைவுபடுத்தப்பட்டிருந்தாலும், அது இலங்கையினடத்து செல்லுபடியற்றது. மூன்று பரம்பரையினரால் மாறிமாறி ஆளப்படும் இலங்கையில், மனிதப் புதைகுழி என்கிற விடயம் மட்டும், மூன்று வித ஆட்சியாளர்களின் காலத்திலும் தொடர்ந்து வந்திருக்கிறது என்ற பொதுப்பண்மையும் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒவ்வொருவர் காலத்திலும் புதைக்கப்பட்ட மனிதர்களின் மொழி வேறுபட்டதே தவிர, புதைக்கப்படுதலும், புதைக்கப்படுதலுக்கான காரணமும் ஒன்றாகவே இருந்திருக்கின்றது.

மீண்டும் பேசும் மனிதப் புதைகுழி

இப்போது மறுபடியும் மனிதப் புதைகுழி என்ற விடயம் அரசியலாகிக் கொண்டிருக்கிறது. அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான நிபுணர் ஸ்டீபன் ராப் புதிய மனிதப் புதைகுழி இடமொன்றை அடையாளப்படுத்தியிருந்தார். இரணைப்பாலை சென். அன்ரனீஸ் விளையாட்டரங்கில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொன்று புதைக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக தொடர் செய்திகளும் வந்தன. சமநேரத்தில் மன்னாரின் திருக்கேதீஸ்வரத்திலும் மனித புதைகுழி அகழ்வு நடந்துகொண்டிருந்தது.

இந்தச் செய்திகளும், அதற்குப் பின்னரான ஊடக மற்றும் அரசியல் சலசலப்புகளும் மீண்டும் மனிதப் புதைகுழிகள் பற்றிய அரசியலை பேசுபொருளாக்கியிருக்கின்றன. இதுவரை சர்வதேச அளவில் போர்க்குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்டவர்களிடம் இறுதியாக சாட்டப்படும் குற்றமாக மனிதப் புதைகுழிகளே இருந்திருக்கின்றன. உகாண்டா தொடக்கம், சேர்பியா, சூடான் வரை இதுவே யதார்த்தமாக இருந்துவருகின்றது. ஆக, போர்க்குற்றத்தின் இறுதி வடிவமாக மனிதப் புதைகுழிகள் இருப்பதை உலகம் எப்போதோ பிரகடனப்படுத்திவிட்டமைக்கு இவைகள் சான்றாக இருக்கின்றன.

இறுதிச் சொல்லா இது?

இலங்கையில் இவ்வாறு இறுதி நிலையை எட்டியிருக்கும் சர்வதேச விசாரணையொன்றுக்கான இறுதிச் சொல் யார் மேல் விழுகிறதோ, அதைப் பொறுத்தே இந்தச் சொற்களின் வீரியம் நிர்ணயம் செய்யப்படும். மன்னார், மற்றும் இரணைப்பாலை மனிதப் புதைகுழிகள் மீதான குற்றச்சாட்டு விடுதலைப் புலிகள் மீதும் வைக்கப்படலாம். எதிர்த்து நின்று விவாதிக்க களத்தில் அவர்கள்  இல்லாமையினாலும், சரியாக அரசியல் செய்யக்கூடிய தரப்பு அவர்களின் பக்கம் இல்லாமையினாலும் இலகுவில் புலிகள் பக்கம் குற்றப் பந்தை எறிய முடியும். இந்தப் பந்தை இலங்கையாலும் போட முடியும், அமெரிக்காவினாலும், ஜெனீவாவினாலும் போடமுடியும். இதுவரையான எல்லா சொற்களின் வலிமையையும் தீர்மானித்த இலங்கையே, இந்த சொல்லின் வீரியத்தையும் தீர்மானிக்கப்போகிறது.

ஜெரா

Jera