படம் | TEDxColombo
மனித உரிமைகள் என்பதற்குள் பெண்கள் உரிமைகளையும் இணைத்துப் பார்க்காது பிரித்துப் பார்க்கின்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்தியவர் சாந்தி சச்சிதானந்தம். ஆண் – பெண் என்ற இருவருக்கும் உரிமைகள் ஒன்று என்ற அடிப்படையில் அனைத்தும் நோக்கப்பட வேண்டும் என்ற வாதத்தையும் சாந்தி சச்சிதானந்தம் முன்வைத்திருந்தார். அரசியல் சமூக கட்டமைப்பு மற்றும் பெண்கள் நிலை தொடர்பான சமூக பிரக்ஞையுடன் வாழ்ந்தவரான சாந்தி சச்சிதானந்தத்தின் இயற்கை மரணத்தை கேள்விப்பட்டதும் அதனை ஏற்றுக்கொள்ளாத மனநிலைதான் காணப்பட்டது.
கட்டடக்கலை நிபுணர்
யாழ்ப்பாணம், ஈச்சமோட்டையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்த அவர் பம்பலப்பிட்டி சென் பிறிஜ்ஜேட்ஸ் கல்லூரியில் கல்வி கற்று மொறட்டுவ பல்கலைக்கழத்தில் பொறியியல் துறையின் நிபுணராக பட்டம் பெற்றார். ஆனால், அந்தப் பட்டத்திற்கு ஏற்ப வேலை தேடாமல் சமூக பிரக்ஞையின் அடிப்படையில் செயற்பட்டமைதான் சாந்தியினுடைய சிறப்பாகும்
சமூக பிரக்ஞைகள் என்று நோக்கும்போது தமிழ் சமூகத்தினுடைய அரசியல் பொருளாதார நிலை இங்கு முக்கியமானதாகும். தமிழ்த் தேசியம் தொடர்பான பிரச்சினைகள் எழுந்த காலத்தில் சாந்தியினுடைய சமூக நிலைப்பாடு சற்று மாறுபட்டதாகவே அமைந்திருந்தது. வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்ற அடிப்படையில் உறுதியாக இருந்த அவர் 1980களில் அதற்கான போராட்டங்களிலும் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடிய காலகட்டங்களில் சாந்தி சச்சிதானந்தம் ஆயுதம் தரிக்காத பெண் போராளியாக திகழ்ந்தார்.
இரண்டு காரணங்களின் அடிப்படை
இவ்வாறான சமூக பிரக்ஞைகள் ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் பிரதானமாகவுள்ளன. ஒன்று இவருடைய தந்தையார் சச்சிதானந்தம் இடதுசாரி அரசியல் கொள்கையை கொண்டவர். 1970இல் லங்கா சமசமாஜக் கட்சியின் சார்பில் இவரது தந்தையார் நல்லூர் தொகுதியில் போட்டியிட்டார். தேசிய விடுதலை வேண்டி போராடுகின்ற இனங்கள் மத்தியில் இடதுசாரிக் கொள்கைகளை முன்னெடுப்பது மிகக்கடினமானது. ஆனாலும், சாந்தியினுடைய தந்தையார் சச்சிதானந்தம் தான் சார்ந்த லங்கா சமசமாஜ கட்சியினூடாக அரசியில் உரிமைகளை வலியுறுத்த முற்பட்டார். ஆனால், அதை சாத்தியமாக்க முடியவில்லை.
இரண்டாவது காரணம், தமிழ் இளைஞர் யுவதிகளுக்கான தரப்படுத்தல் முறைமையில் ஏற்பட்ட பிரச்சினைகள் தமிழ் சமூகத்தினது கல்வியின் அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதை அன்று உணர்ந்து கொண்ட சாந்தி அரசியல் ரீதியான உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை தன் வசப்படுத்தி கொண்டார். ஆகவே, இவ்வாறான ஒரு களத்தில் நின்று சாந்தியினுடைய இலக்குகளை நோக்கும்போது அவர் சமூகம் சார்ந்து வாழ்ந்தார் என்பதை காணக்கூடியதாகவுள்ளது.
சங்கீதத்துறையில் ஆர்வம்
சங்கீதத்துறையில் ஆர்வம் கொண்ட சாந்தி சங்கீத கலையை சென்னை அண்ணா சேஷ்திரா கலாசாலைக்குச் சென்று கற்றார். பின்னர் அதனை இடைநிறுத்திவிட்டார். அதற்கு சாந்தி சொல்லும் காரணம் இவ்வாறு அமைகின்றது.
“சங்கீதத்தை கற்பதற்காக சென்னை அண்ணா சேஷ்திரா கலாசாலையில் என்னை எனது தந்தையார் சேர்த்து விட்டார். அங்கு நான் சங்கீதம் கற்றுகொண்டிருந்தபோது எனக்கு சங்கீதம் கற்பித்த குருவானவரின் வீட்டிற்கு செல்ல நேர்ந்தது. அங்கே இந்தியாவின் பிரபல அரசியல்வாதிகள் அவருக்கு பொன்னாடை போர்த்திய மற்றும் விருது கொடுத்த படங்கள் வீட்டின் சுவரிலே தொங்கவிடப்பட்டிருந்தன. அந்தப் படங்களைப் பாரத்தபோது எனக்கு தோன்றியது என்னவென்றால், இவ்வளவு பிரபல்யமிக்க சங்கீத வித்துவான் ஒருவருக்கு இந்த சாதாரண அரசியல்வாதிகள் வாழ்த்து தெரிவிக்கவேண்டுமா, கஷ்ரப்பட்டு படித்து பட்டம் பெற்ற ஒருவருக்கு பொன்னாடை போர்த்துவது என்றால் அப்படிப்பட்ட அரசியல்வாதியாக ஏன் நான் வரக்கூடாது என்ற சிந்தனை எனக்கு எழுந்தது. அதனால், சங்கீதத்தை கற்பதை நிறுத்திவிட்டு தாயகத்திற்கு வந்து சமூக பணிகளில் ஈடுபட ஆரம்பித்தேன் என்று அவர் கூறினார்”. அதாவது, சாந்தியினுடைய நிலைப்பாடு என்ன என்று சொன்னால், துறைசான்று கல்வி கற்று அதுவும் சங்கீத துறையில் சாஷ்திர சம்பிரதாயங்களுடன் கற்று உயர் நிலையிலுள்ள ஒருவர் அரசியல் வாதிகளின் கௌரவத்தை விரும்புவது சமூகத்திற்கான பிழையான வழிகாட்டல் என்பதுதான்.
சமூகம் பற்றிய பார்வை
இந்த இடத்திலேதான் சாந்தியின் சமூகம் பற்றிய பார்வையும் அந்த சமூகத்தினுடைய அரசியல் பொருளாதாரம் கல்வி போன்ற துறைகள் எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையும் தெளிவாக புரிகின்றது. ஆனால் இந்த அடிப்படையில் அவர் செயற்பட முற்பட்டபோது பல்வேறுபட்ட எதிர் விமர்சனங்களையும் அவர் சந்தித்தார். கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டும் என்பது பொதுவான கருத்து. ஆனால், சாந்தியை பொறுத்த வரையில் சமூக தேவைகளுக்கேற்ப கொள்கைகளில் நெகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்துடையவர். ஆகவே, தமிழ் சமூகம் சார்ந்த அவருடைய கொள்கைகளில் அவ்வப்போது ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. எவ்வாறாயினும், தேசிய இனம் ஒன்று தமது உரிமைகளை பெறுவதற்கான வழிமுறைகளை நாடகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் மூலமாக செயற்படுத்திய பெருமையும் இவருக்கு உரியது.
ஆக சாந்தியிடம் காணப்பட்ட முக்கியமான பண்பு அந்த கடும் விமர்சனங்களை எல்லாம் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டமைதான். கொழும்பில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் என்ற அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்து அதன் மூலமாக அவர் மேற்கொண்ட பணிகள் பல பரிமானங்களை கொண்டவை. கல்வி, அரசியல், ஊடகம் என்ற மூன்று தளங்களில் விழுது மையத்தின் செயற்பாடு அமைந்தது. அரசசார்பற்ற நிறுவனங்கள் சமூக மையக்கருத்துக்களை மாற்றியமைக்கின்றன என்ற கடும் விமர்சனங்கள் உள்ளன.
விமர்சனங்களுக்கு அப்பால்
ஆனாலும், சாந்தியைப் பொறுத்த வரையில் அந்த விமர்சனங்களுக்கு அப்பால் தமிழ் சமூகத்தினுடைய அரசியல் மைய கருத்திற்கு ஏற்ப செயற்பட்டார் என்று கூறினால் அது பொருந்தும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் படையினரால் பறிக்கப்பட்ட காணிகளை எப்படி மீளப் பெற்றுக்கொள்வது என்ற அடிப்படை சட்ட அறிவை சாதாரண மக்களுக்கு வழங்கினார். அத்துடன், இலங்கையின் கல்வித் திட்டத்திலுள்ள இனவாத பாடத்திட்டங்களை அடையாளப்படுத்தினார். ஆகவே, சாந்தி பெண்ணாக இருந்து கொண்டு பெண்களுக்காக மட்டுமன்றி தமிழ் சமூகத்தினுடைய வாழ்வியல் பிரச்சினைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிப்படுத்தினார்.
சாந்தியின் கணவர் மனோராஜசிங்கம் லண்டனில் தமிழ் மாணவர் பேரவையை உருவாக்கி தமிழர் அரசியல் போராட்டத்திற்கு வலுச்சேர்த்தார். அவரும் சமூக பிரக்ஞையுடன் வாழ்ந்து 2009ஆம் டிசம்பர் மாதம் இயற்கை எய்தினார். சாந்தி காலமாகவில்லை காலம் ஆனார்.