பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவரும் நாடகவாளரும் கவிஞரும் எழுத்தாளருமான கலாநிதி. சுமதி சிவமோகன் எழுதி தயாரித்து இயக்கியிருக்கும் முழுநீளத்திரைப்படம் ‘இங்கிருந்து’. ஐக்கிய அமெரிக்காவின் க்ளோபல் பில்ம் இனிசியேற்றிவ்வின் விதந்து குறிப்பிடத்தக்க திரைப்படத்திற்கான விருதைப் பெற்றுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் மார்ச் 2014இல் டெல்லியில் நடைபெறவுள்ள 10ஆவது ஆசியப்பெண்கள் திரைப்பட விழாவில் திரையிடவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
அரசியல் கொந்தளிப்பும் சமூக, தொழிற்சங்க, பொருளாதார, பால்நிலை, அடிப்படைவசதி மற்றும் கல்வி சார்ந்த போராட்டங்களின் நிலமுமான மலையகத்தின் ஆன்மா வாய்விட்டுக் குமுறும் காட்சிப்படிமங்களாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. மலைகளின் மீது அலைந்து செல்லும் மேகங்கள், தேயிலைச்செடிகளின் மீது படர்ந்துள்ள பனி, மலைச்சாரல்கள், நீர்வீழ்ச்சிகள் என இத்தனை காலம் மலையகத்தின் இயற்கை அழகுகளுக்காக அங்கு சென்ற படப்பிடிப்புக் குழுக்களுக்குப் பதிலாக இவற்றினிடையே உறைந்துள்ள பயங்கரமான மௌனத்தை, காலங்காலமாக ஏமாந்த மனிதர்களது கேவலை, எல்லாவிதமாகவும் சுரண்டப்பட்டவர்களது காயத்தைப் பதிவுசெய்துள்ளது இத்திரைப்படம். ஊமையாகச் சிந்தப்பட்ட குருதியினதும் குருதியாக வடிந்த வியர்வையினதும் நெடி திரைப்படம் ஓய்ந்த பிறகும் நீடிக்கிறது.
இலங்கைச் சினிமா மரபில் ‘இங்கிருந்து’ ஒரு புதிய அத்தியாயமாகவும் தமிழ்ச்சினிமா ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவமாகவும் அமைகிறது. இதையே “இங்கிருந்தின் திறமையான கலைத்துவம் அதன் தெரிவுக்குக் காரணமாக இருந்தது. ஒரு புதுமையான மற்றும் முழுமையான கதை சொல்லும் வடிவத்தை திரையினூடாக அது வெளிக்கொண்டு வருகின்றது” என க்ளோபல் இனிசியேற்றிவ் விருதுக்கான நடுவர்குழு சார்பாக சுசன் வீக்ஸ் கோல்றர் குறிப்பிடுகிறார். திரைக்கதையமைப்பின் வரிசையற்ற தன்மை, மேலோட்டமான பார்வைக்கு ஒரு காட்சியுடன் அதைத்தொடரும் காட்சி சம்பந்தமற்றது போல் காட்டும் தோற்றம் போன்ற உலகசினிமாவின் சில வளர்ச்சியடைந்த திரைக்கலாச்சாரங்களை தமிழ் சினிமா ரசிகர்களின் பரிசீலனைக்கு முன்வைக்கிறது ‘இங்கிருந்து’ திரைப்படம். திரைப்படத்தில் கதையொன்றைத் தேடிப்பழகியவர்களுக்கு, பல கதைகளாலான ஒரு கதையையும் கதைகளை வெளிப்படுத்தும் காட்சிகளுக்கிடையே ஆழத்தில் மர்மமான பிணைப்புக்களையும் இப்பிணைப்புகளுக்குள்ளே புதைந்துள்ள நீலம்பாரித்த தழும்புகளின் தணியாத வெப்பத்தையும் பெருமூச்சையும் இத்திரைப்படம் உணர்த்துகிறது. ‘இங்கிருந்து’ திரைப்படத்தின் இத்தகைய தன்மைகள் திரைப்படம் நிறைவடைந்ததும் உடனடியாக ஒரு மன இறுக்கத்தையும் பின்னர் உள்ளார்ந்ததொரு சிந்தனையோட்டத்தையும் முடிவற்ற உரையாடலையும் உருவாக்குகின்றன. இந்தவிதத்தில் சினிமாவிடம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கடந்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்புக்கொண்டுள்ள சினமாவாகவுள்ளது ‘இங்கிருந்து’.
ஒரு வாய் பேசாத பெண்ணும், கஷ்டத்துக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கும் தாயும், கொழும்பிலிருந்து வந்த ஆய்வாளர் ஒருவரும் தேயிலைத் தோட்டம் ஒன்றில் சந்திக்கின்றனர். சம்பவங்கள் குறுக்குமறுக்காக நிகழ்கின்றன. நட்பு, அன்பு, நம்பிக்கை, துரோகம் என மாறிமாறித் தோன்றி மறைந்து தோன்றுகின்றன. மலையகத்தில் இன்னும் தொடரும் அதே வாழ்க்கையும் மலையகத்துக்கு வெளியில் கொழும்பில் மற்றும் ஏனைய பிரதேசங்களில் சிதறியுள்ள மலையகத்தின் நீட்சிகளும் அங்குமிங்கும் உலாவுகின்றன. இன்றும் நாளையும் அதன் பின்னரும் இதே மனிதர்களை, பாத்திரங்களை யாரும் எதிர்கொள்ள நேரலாம். கொட்டகலையில், கொழும்பு நான்காம் குறுக்குத்தெருவில், கழிப்பறைகளில், சமையலறைகளில், ஆடைத்தொழிற்சாலைகளில், மறைவான இருட்டில், எங்கும், வேறெங்கும். இயக்குனர் சுமதி இந்த மாந்தர்களையே அவர்களது கதையில் அவர்களாக வாழச்செய்திருக்கிறார். பல ஆண்டுகள் அவர்களுடன் இயங்கி பட்டறைகளுக்கூடாக இத்திரைப்படத்தை அவர் படைத்திருக்கிறார். மலையக முன்னோடிப் பெண் ஆளுமையான மீனாக்ஷி அம்மாவின் ‘பாய்க்கப்பல் ஏறியே வந்தோம்..’ பாடல் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மலையகத்தின் மொத்த துயரத்தினதும் சாறாக அதன் வரிகளும் திரைப்படத்தின் அச்சு நெடுகிலும் இழையாக ஓடும் அப்பாடலின் குறியிசையும் மனதை உருக்குகிறது. இப்பாடலை மெட்டமைத்தவர் இசைக்கலைஞர் வி. சதானந்தன். பாடியிருப்பவர் நிர்மலா ராஜசிங்கம். திரைப்படத்திற்கான இசை இலங்கையின் நவீன இசையாளுமைகளுள் ஒருவரான அன்ரனி சுரேந்ரா. முதன்முறையாக சினிமாவொன்றுக்கு இசையமைப்பதற்குக் கிடைத்த வாய்ப்பில் தன்னை முழுமையாக நிரூபித்திருக்கிறார்.
சுமதி சிவமோகன் ஏற்கனவே ‘பிரளயம்’, ‘ஒரேஞ்சஸ்’ ஆகிய இரு குறுந்திரைப்படங்களை எழுதி இயக்கியவர். ‘பிரளயம்’ குறுஞ்சினிமா பார்சிலோனாவில் விருது பெற்றது. ‘இன்சேர்ச் ஒஃப் த ரோட்’ ஆவணப்படத்தின் பிரதியாளர் சுமதி. க்ரிஷ் கர்ணாட்டின் ‘நாக மண்டலம்’ நாடகத்தை தமிழ்பெயர்த்து நெறிப்படுத்தியவர். ‘மௌனத்தின் நிழல்’, ‘பயணங்கள்’ உள்ளிட்ட பல நாடகங்களை எழுதி, நடித்து, நெறிப்படுத்தியிருக்கிறார்.
‘இங்கிருந்து’ என அவர் தனது புதிய திரைப்படத்திற்குத் தலைப்பிட்டிருப்பது பல அர்த்தங்களையும் பரிமாணங்களையும் கொண்டிருப்பது போல் தோன்றுகின்றது. இங்கிருந்து இதன் பின்னர் மலையகம் செல்லவேண்டிய திசை எதுவென அது கோரி நிற்கிறதா அல்லது இங்கிருந்து இனிமேல் இலங்கைத் தமிழ்சினிமா மற்றும் அதன் ரசனை எதை நோக்கி நகரவேண்டியுள்ளதென கூறமுற்படுகிறதா எனவெல்லாம் இதனை எடுத்துக்கொள்ளலாம் போலுள்ளது. ஒருமுறை இத்திரைப்படத்தைத் திரையரங்கிற்கு சென்று பாருங்கள், இவற்றைவிட வேறு அர்த்தங்களும் புரியலாம் அல்லது தமிழில் சினிமா என்ற பெயரில் திரையரங்குகளில் காண்பிக்கப்படும் (நகைச்சுவை, சண்டை, பாடல், சம்பவம் என வரிசையாகத் தொகுக்கப்பட்ட காணொளிகள் கொண்ட) தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்து உயிர்ப்பிழந்துபோயுள்ள மூளையில் சிறு புத்துணர்ச்சியையாவது உணரலாம், இல்லையா!