படம் | Groundviews

ஒரு சமுர்த்தி அதிகாரியாக, ஓர் ஓய்வூதிய அரச வேலையைக் கைவிட்டு, இலங்கையை விட்டோடிய மொஹமட் இர்ஷாத், இன்று சவுதி அரேபியாவில் ஒரு வெதுப்பகத் தொழிலாளியாக தொழிலை ஆரம்பித்துள்ளார்.

இதோ அவரது கதை,

மொஹமட் இர்ஷாத்தின் பெயர் அறிமுகமற்றதாக இருக்கலாம், ஆனால், அவர் சம்பந்தப்பட்டதும் மற்றும் அவர் ஒரு பாதிக்கப்பட்டவருமாக இருந்த ஒரு சம்பவத்தை பலரும் அறிந்திருக்கலாம். அவர் ஓர் அரச ஊழியர், களனிப் பிரதேச சபைக் கட்டட வளாகத்தில், 2010, ஆகஸ்ட் 3ஆம் திகதியன்று பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவினால் மரமொன்றில் கட்டி வைக்கப்பட்டார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் முதலாம் திகதி, நடைபெற்ற  டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்ட நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவில்லை எனக் குற்றஞ்சாட்டி, அமைச்சர் அவரை மரத்தில் கட்டும்பொழுது அவர்  மௌனமாக இருந்தார். அடுத்த சில நாட்களிற்கு, சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நாடளவிலான போராட்டத்தின்போது மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் அவரது படத்தைக் காணக்கூடியதாக இருந்தது. எவ்வாறாயினும், அதன் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் நாம் அறிந்திருக்கவில்லை.  அவரது சுய உடன்பாட்டுடன், தன்னைத் தானே மரத்தில் கட்டிக்கொண்டார் எனக் குறிப்பிட்டு அவரது சொந்தக் கையெழுத்தில் கடிதமொன்று வெளிவந்தது. அவர்  ஒரு தொலைக்காட்சியில் தோன்றி,  ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதற்காக தானே இதனைச் செய்தார் எனக் கூறினார்.  மக்கள் அவரை ஏளனம் செய்தபோது அவர் மௌனமாக இருந்தார்.  ஒரு பிரஜையாக மற்றும் ஒரு அரச உத்தியோகத்தராக தனது உரிமைகளையும் மற்றும் கௌரவத்தையும் தானாக விட்டுக் கொடுத்தபோது, தொழிற்சங்கங்களும் வேறுவழியின்றி தங்களது கண்டனப் போராட்டத்தைக் கைவிட்டன.

இந்த நாடகம் சமுர்த்தி அதிகாரி மற்றும் பிரதி  அமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோரின் ஒரு கூட்டுத் தயாரிப்பு என பலரும் நம்பினர். மொஹமட் இர்ஷாத் அவமதிப்புகளுக்கு ஆளானதுடன் போகுமிடங்களில் எல்லாம் ஏளனம் செய்யப்பட்டார். இவையனைத்தையும் அவர் 3 வருடங்களாகப் பொறுத்துக்கொண்டார். அவரது மௌனத்தையும் மற்றும் அகௌரவத்தையும் உறுதிப்படுத்திய சக்தி எது?

இதோ மொஹமட்டின் உண்மையான கதை,

“இது சுப முடிவுடனான ஒரு நாடகமல்ல. மரமொன்றுடன் என்னைக் கட்டிக் கொள்வதற்கு நான் ஒன்றும் சித்த சுவாதீனம் அற்றவனுமல்ல. மூன்று வருடங்கள் நான் பொறுமையாக இருந்தேன். ஆனால், இனிமேலும் என்னால் இதனைப் பொறுத்துக் கொள்ளமுடியாது. இதனை நான் நாட்டுக்கு சொல்ல விரும்புகிறேன். இல்லாவிட்டால் உண்மையிலேயே நான் பைத்தியமாகிவிடுவேன்” என கண்களில் கண்ணீருடன் அவர் கூறினார்.

“2010, ஆகஸ்ட் 3ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை. நான் அலுவலகத்திற்குச் சென்றபோது, பிரதேச செயலகத்திற்கு வருமாறு பிரதி அமைச்சர் என்னை அழைத்துள்ளார் என முகாமையாளர் எனக்கு கூறினார். அங்கே, டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் நான் கலந்துகொள்ளாமையினால் மரமொன்றில் நான் கட்டப்படுவேன் என ஏனைய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனக்கு கூறினார்கள். நான் அதை ஒரு பகிடி என எண்ணினேன். எவ்வாறாயினும், அந்தப் பகிடி உண்மையாகியது.” இரண்டு பிள்ளைகளின் தந்தையும், மருதானை சாஹிராக் கல்லூரியின் முன்னாள் மாணவனும், ஒரு சமுர்த்தி உத்தியோகத்தராக 14 வருடங்கள் கடமையாற்றிய இர்ஷாத்தின் வாழ்க்கை தலைகீழாக மாறியது.

“எனது இரண்டு பிள்ளைகளும் சுகவீனமுற்று இருந்ததினால், நிகழ்ச்சியில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை என நான் அமைச்சரிடம் கூறினேன். ஆனால், நான் கூறியதை அவர் கவனத்தில் கொள்ளவில்லை, என்னைப் பிடித்து மரத்தில் கட்டினார். நான் உதவியற்றவனாக நின்றேன். அமைச்சரின் அதிகாரங்கள் காரணமாக அனைவரும் மௌனமாக இருந்தனர்.  இந்த அநியாயத்துக்கு எதிராக ஒரேயொரு பெண் மட்டும் பேசினார். அவருக்கும் பேச்சு விழுந்தது. ஊடகம் மற்றும் சனக் கூட்டத்திற்கு முன்பாக நடைபெறுகின்ற மோசமான அவமானத்தின் மத்தியில், எனக்கு என்ன நடைபெறுகின்றது என்பதையே மறந்து நான் விரைவில் மரத்துப் போனேன்.”

அவர் அந்த நாளின் மிகுதிப் பொழுதை அலுவலகத்தைச் சுற்றி அலைந்து திரிந்துவிட்டு மாலை இருட்டாகிய பின்னர் வீட்டிற்கு திரும்பினார். ஆனால், அந்த சமயத்தில், ஆறு மற்றும் மூன்று வயதுடைய அவரது பிள்ளைகள் உட்பட அவரது குடும்பத்திலுள்ள அனைவரும் சம்பவத்த தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்.

பாத்திமா ஷிரின் பேகம், இர்ஷாத்தின் மனைவி, கல்வியறிவுடைய ஒரு பெண்மணி. தனது கணவரையும், பிள்ளைளையும் ஆறுதல்படுத்துவதற்கு முயன்றார். “அப்பாவை ஏன் அப்படிக் கட்டிப் போட்டுள்ளனர் எனப் பிள்ளைகள் கேட்டபொழுது என்னிடம் பதில் இருக்கவில்லை”, என்று தழுதழுத்த குரலில் கூறிய மனைவி பாத்திமா “ஊடகங்களுக்கு உண்மையைச் சொல்வதற்கு நாங்கள் மிகவும் பயந்தோம். அமைச்சர் மேர்வின் சில்வாவின் அடியாட்கள் எங்ளைப் பின் தொடர்ந்தனர். வெள்ளை வான்கள் அடிக்கடி வந்து எங்களைப் பற்றி விசாரித்துச் செல்வதாக அயலிலுள்ள ஆட்கள் கூறினர்”, என்று தொடர்ந்தார்.

“இன்னமும் நாங்கள் அச்சத்துடனேயே உள்ளோம்” என ஒரு பெருமூச்சுடன் அவர் கூறினார். “இதனை எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. எனது கணவர் வீட்டிற்கு வருவதற்கு முன்பதாகவே, அவரது அலுவலகத்திலிருந்து ஒரு அலுவலகர் வீட்டுக்கு அழைப்பை ஏற்படுத்தி அவரை பிரதேச செயலகத்துக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்”.

பிரதேச செயலகத்திற்கு சென்ற பின்னர் என்ன நடந்தது என்பதை இர்ஷாத் விபரித்தார். “நான் அங்கு போன பொழுது அமைச்சரின் பெரும் எண்ணிக்கையிலான அடியாட்கள் அங்கு இருந்தனர். பிரதேச சபைத் தவிசாளர் பிரசன்ன ரனவீர,  ஜயத்திலக்க எனும் ஒரு உத்தியோகத்தரை அழைத்து பார்க் வீதியிலுள்ள அமைச்சரின் வீட்டிற்கு என்னை கூட்டிச் செல்லுமாறு கூறினார். அப்பொழுது பின் மாலைநேரம். அமைச்சர் என்னை மேல்மாடிக்கு வருமாறு கட்ளையிட்டார். அவர் இந்த சம்பவத்தை மறந்துவிடுமாறு கேட்டதுடன் பணம் தருவதாகவும் வாக்குறுதி அளித்தார். அவர் ஒரு கடிதத்தில் கையொப்பம் இடுமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். நான் அதற்கு இணங்கவில்லை. அந்த இடத்தை விட்டு உடனடியாக வெளியேறுவதற்கு நான் விரும்பினேன். பின்னர், ஜயத்திலக்க என்னிடம், நான் கையொப்பமிட மறுத்தால் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வரும் எனக் கூறி எச்சரித்தார். நான் எனது பிள்ளைகளை நினைத்துப் பார்த்தேன். பின்னர் கடிதத்தில் கையொப்பமிட்டேன். ஆனால், பணம் எதனையும் நான் ஏற்கவில்லை” என்ற இர்ஷாத் குரல் உடைந்து அழுதார்.

“ஆனால், இதற்கான பரிகாரத்தை நாடி நான் எனது மேலதிகாரியிடம் போன பொழுது. அனைவரும் இது பணத்திற்காக செய்யப்பட்ட ஒரு செயல் எனக் கூறினார்கள்.  நான் அச்சத்தின் காரணமாகவே இவ்வாறு செய்தேன். என்னால் கடவுள் முன் சத்தியம் செய்ய முடியும். மேர்வின் சில்வா யார் என்பதை அனைவருமே அறிவார்கள், அவருக்கு எதிராக என்னால் எதிர்த்து நிற்க முடியவில்லை”. இர்ஷாத் மிகுந்த சிரமங்களிற்கு இடையில் தனது குடும்பத்தை ஆதரித்து வந்தார். தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக அலுவலக நேரங்களின் பின் வாடகைக்கு முச்சக்கர வண்டி ஓட்டினார். அவரை மௌனமாக்குவதற்கு மேர்வின் சில்வா ரூ.500,000 பணமும் மற்றும் ஒரு வீடும் கொடுத்துள்ளார் என அவரது நண்பர்கள் கூட கேலி செய்தனர்.

பின்னர், அவர் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் ஆர்.பி.பந்துல திலகசிறி என்பவரைச் சந்தித்து தான் கடிதத்தில் கையொப்பமிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதை எடுத்துக் கூறினார். அந்த சிரேஷ்ட அதிகாரி பொலிஸில் முறைப்பாடொன்றைச் செய்யுமாறு கூறினார். ஆனால், இர்ஷாத்தின் குடும்பம், மேர்வின் சில்வாவின் அதிகாரத்தின் மீதிருந்த அச்சம் காரணமாக அதனை விரும்பவில்லை. “எனது மாமா ஒருவர் வழக்கறிஞர். பொலிஸில்  நாங்கள் முறைப்பாடொன்றைச் செய்தால் மேர்வின் சில்வா எங்களுக்கு பிரச்சினை தரலாம் என அவரும் கூறினார். அப்பொழுது நாங்கள் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தோம்” என்று கூறினார் பாத்திமா.

ஒரு நீண்ட இடைவெளியின் பின்னர், மேற்கொண்டு என்ன நடந்தது என்பதை இர்ஷாத் விபரித்தார். “இதற்கு முந்திய தினத்தில் அங்கே அதிக  கூட்டம் இருந்தது. நான் மாத்திரமே மேல்மாடிக்கு கூட்டிச் செல்லப்பட்டேன். என்னை நானே கட்டிக் கொண்டேன் என சொல்வதற்கு நான் கட்டாயப்படுத்தப்பட்டேன்.  நான் அச்சமடைந்திருந்ததோடு, சொல்லப்பட்டதைச் செய்வதைத் தவிர எனக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. இவ்விதமாகவே எல்லாம் நடைபெற்றது. அதன் பின்னர் இரண்டு மாதங்கள் நான் கடமைக்கு செல்லவில்லை. பின்னர் எனது வேண்டுகோளின் பேரில் கொழும்புக்கு இடமாற்றம் ஒன்று தரப்பட்டது. பின்னர் நான் ராஜகிரியவுக்கு இடமாற்றப்பட்டேன். ஆட்கள் என்னைக் கேலி செய்து அவமதித்ததினால் நான் கவலை அடைந்தேன். அமைச்சரோடு சேர்ந்து ஒரு நாடகத்தின் காட்சியை நான் அரங்கேற்றினேன் என அவர்கள் கூறினார்கள்”.

அமைச்சர் ஒரு பெருந்தொகைப் பணத்தை வழங்கியதால், வேலையை விட்டே விலகும்படி பகிரங்கமாகவே ஆட்கள் அவரிடம் கூறினர். உண்மையைக் கூறுவதற்கு அவர் ஏங்கினார், ஆனாலும் குடும்பத்தின் நலன்களை நினைத்து, வாயை மூடி மௌனம் காத்தார். எவ்வாறாயினும், அவர் ஒரு பெரும் மன அழுத்தத்தின் கீழ் இருந்தார்.

இறுதியாக, இர்ஷாத் நாட்டை விட்டு சவுதி அரேபியாவுக்கு செல்வதற்கு நவம்பர் 2012 இல் தீர்மானித்தார்.

“அமைச்சர் மேர்வின் சில்வா எனது முழுக் குடும்பத்தையுமே சிதைத்தார். எனக்கு நாட்டை விட்டுப் போவதற்கு நோக்கம் இருக்கவில்லை. ஆனால், இந்த நாட்டுக்கு இனிமேல் நான் ஒரு போதும் திரும்பப் போவதில்லை. அரசியல் கலாச்சாரம் தொடர்பில் உலகிலேயே மிகவும் மோசமான நாடு இதுதான். இந்த நாட்டிலிருந்து நீதியை நான் ஒரு போதும் எதிர்பார்க்கப் போவதில்லை” என  அவர் உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார்.

“மூன்று வருடங்களின் பின்னர் இந்த விடயங்ளை நான் கூறுகிறேன், ஏனெனில் இதைப் போன்றதொரு நிலையை வேறு எவரேனும் முகம்கொடுப்பதை நான் விரும்பவில்லை. இதனை நான் முன்னமே சொல்லியிருந்தால், மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினால் தாக்கப்பட்ட இராணுவ அதிகாரி, அவர் சொன்னதை சொல்லியிருந்திருக்க மாட்டார்”.

எங்களது நாட்டில் இன்னும் எத்தனை இர்ஷாத்துகள் உள்ளனரோ?

நிரஞ்சலா ஆரியவன்ச என்பவரால் எழுதப்பட்டு Groundviews தளத்தில் Mohammed Irshad’s story and the banality of violence in the Rajapaksa regime என்ற தலைப்பில் வெளியாகிய கட்டுரை இங்கு தமிழில் தரப்பட்டுள்ளது.

தமிழில் விக்டர்