படம் | Reuters, ALJAZEERA
அண்மையில் இலங்கைக்கு இரு நாள் விஜயமாக வந்துசென்ற இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு அமைவாக சில நிகழ்வுகளில் பங்குகொண்டிருந்தார். மோடி – மஹிந்த சந்திப்பும் அவ்வாறான நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆனால், மேற்படி மோடி – மஹிந்த சந்திப்பு ஏனைய நிகழ்வுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாவே தெரிகிறது. ஏனெனில், மோடி – மஹிந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பதாக மஹிந்த இந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், இந்திய வெளியக உளவுத் துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான அமைப்பானது (Research and Analysis Wing) அமெரிக்க வெளியக உளவுத் துறை சி.ஜ.ஏ. மற்றும் பிரித்தானிய உளவுத்துறையான எம்.ஜ6 ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்ட சதியின் மூலமாகவே தான் தோற்கடிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், இதற்கு எந்தவகையிலும் மோடி பொறுப்பல்ல, ஏனெனில், அவர் இறுதி நேரத்திலேயே ஆட்சியை பொறுப்பேற்றிருந்தார் என்றும் மஹிந்த குறிப்பிட்டிருக்கின்றார்.
மஹிந்த ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட நாளிலிருந்து, இதன் பின்னால் பலமானதொரு சக்தி செயலாற்றியதான அபிப்பிராயங்களும் உலவத் தொடங்கின. சில நாட்களில் அது தெற்காசியாவின் பலம் வாய்ந்த உளவுத்துறையான றோ என்றே நம்பப்பட்டது. எனினும், றோவின் மீதான குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்திருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் தன்னுடைய தோல்வியின் பின்னணியில் ‘றோவின் கரங்கள்’ இருந்தாக பாகிஸ்தானிய பத்திரிக்கை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார். மஹிந்த முதல் முதலாக இந்தியாவை குற்றம்சாட்டிய சந்தர்ப்பம் இதுதான். பின்னர் சீன பத்திரிக்கை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலும் மஹிந்த ராஜபக்ஷ ‘றோவின் கரங்கள்’ தன்னுடைய வீழ்ச்சியின் பின்னால் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் இந்தியாவின் மூலோபாய நலன்களுக்கு போட்டியாக அமையும் ஆசியாவின் இரு பிரதான நாடுகளை சேர்ந்த பத்திரிகைகளுக்கு வழங்கிய நேர்காணலின் போதே மஹிந்த றோவின் மீது குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், இது ஒரு நீண்டகால திட்டம் என்பதை தற்போதுதான் முதல்முதலாக மஹிந்த தெரிவித்திருக்கின்றார். அதுவும் மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில் இதனை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
இது பற்றி தெரிவித்திருக்கும் மஹிந்த, நான் எனது அரசின் மீது றோ சதிமுயற்சியொன்றை மேற்கொள்வதாக உணர்ந்த போது அந்த மனிதரை (கொழும்பு தூதரகத்தில் றோவின் இலங்கை நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தவர்) வெளியேற்றுமாறு புதுடில்லிக்கு அறிவித்தேன். அவர்களும் அதற்கு இணங்கினார்கள். ஆனால், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் அது நிகழ்ந்தது. அது காலம் கடந்த ஒன்றாகவே இருந்தது. ஆனால், றோவின் முயற்சிகள் அரசியல் வழிகாட்டல் ஒன்றின் கீழ் இடம்பெறவில்லை என்றும் மஹிந்த குறிப்பிட்டிருக்கின்றார். இதன் மூலம் மத்தியில் மிகவும் பலம்வாய்ந்த தலைவராக இருக்கும் மோடியை எந்த வகையிலும் பகைத்துவிடக் கூடாது என்னும் அவதானத்துடனேயே மஹிந்த தன்னுடைய வார்த்தைகளை செலவிட்டிருக்கின்றார். இங்கு மேலும் குறிப்பிட்டிருக்கும் மஹிந்த, அவர்கள் (றோ) சீனா தொடர்பான விவகாரத்தில் என்னை தவறாக விளங்கிக் கொண்டனர். அதனால்தான் இப்படியொரு திட்டத்தை தீட்டினர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அண்மைக் காலமாக தன்னுடைய தோல்விக்குப் பின்னால் றோவின் சதியிருப்பதாக மஹிந்த தெரிவித்து வருகின்ற சூழலில்தான் மோடி – மஹிந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மூடிய அறையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பின் போது எவ்வாறான விடயங்கள் பரிமாறப்பட்டன என்பது தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால், தெற்காசியாவில் இந்தியா மீண்டும் தன்னுடைய வலிமை காண்பித்து வருகின்ற சூழலில் இந்தியா என்றால் என்ன என்னும் தெளிவான புரிதலுடன்தான் மஹிந்த பேசியிருப்பார்.
அதேவேளை, இந்தியாவிற்கும் மஹிந்த தொடர்பில் தெளிவான சில அவதானங்கள் இருக்கின்றன என்பதும் தெளிவாகிறது. மஹிந்த தொடர்ந்தும் தெற்கில் இலகுவில் நிராகரித்துச் செல்ல முடியாதவொரு சக்தியாக இருக்கிறார் என்பதையும் றோ கணித்திருக்கலாம். அந்த அடிப்படையிலேயே மோடி – மஹிந்த சந்திப்பு இடம்பெற்றிருக்கலாம். ஏனெனில், அயல் நாடுகளுக்கு தன்னுடைய பலத்தை மென்மையாக காண்பித்து அதேவேளை பரஸ்பர ஒத்துழைப்புடன் கூடி இணக்கத்தை ஏற்படுத்தும் மூலோபாயமொன்றை நோக்கிப் பயணிக்கும் இந்தியா, உடனடி அயல் நாடான இலங்கையின் உள்விவாகரங்களில் ஏற்படும் மாற்றங்கள், தன்னுடைய நீண்டகால நகர்வுகளுக்கு இடையூறாக அமைந்துவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது. இந்த அடிப்படையிலேயே தெற்கில் மீளவும் எழக்கூடிய ஆற்றலுடன் காணப்படும் மஹிந்த ராஜபக்ஷவையும் தங்களுடைய அரவணைப்பிற்குள் வைத்துக் கொள்ள இந்தியா விரும்பியிருக்கலாம். மஹிந்தவை முற்றிலுமாக ஓரங்கட்டிச் செயலாற்றுவதானது, இந்திய எதிர்ப்பு நிகழ்சி நிரலை பிரதானமாக முன்னிறுத்தி இயங்கும் ஒருவரை தாங்களாகவே உருவாக்கிவிடுவதாகவும் அமைந்துவிடலாம் என்றே இந்தியா கணிப்பதாக தெரிகிறது.
இவ்வாறு இந்திய மூலோபாய திட்டமிடலாளர்கள் கருதுவதற்கு ஒரு தெளிவான காரணமுண்டு. இன்று பங்களாதேஷில் இந்திய எதிர்ப்பு நிகழ்சிரலை முன்னிறுத்தும் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் வலுவடைந்து வருகின்றன. தற்போது இந்தியாவின் நண்பராக இருக்கும் பங்களாதேஸின் பிரதமர் ஷேக் ஹசினாவை பாதுகாக்கும் பொறுப்பை இந்தியாவே முன்னெடுத்து வருகிறது. இந்திய ஆய்வாளர்கள் சிலரது கணிப்பின் படி பங்களாதேஷ் நிலைமைகள் மேசமடைந்ததற்கு பங்களாதேஷின் முன்னைய ஆட்சியாளர் பேஹம் கலிதா ஷியாவை இந்திய உளவுத்துறை குறைத்து மதிப்பிட்டதே காரணமாகும். தற்போது பேஹம் கலிதா ஷியாவின் ஆதரவாளர்களே ஷேக் ஹசினாவின் ஆட்சிக்கு பெரும் இடையூறாயாக மாறியிருக்கின்றனர். இப்படியொரு நிலைமை இலங்கைக்குள் உருவாகிவிடக் கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும் எனபதே அவ்வாறானவர்களது ஆலோசனையாகவும் இருக்கிறது. இப்படியொரு பின்புலத்தில் மஹிந்த போன்ற முன்னாள் ஆட்சியாளர்களையும் இந்திய அரவணைப்பிற்குள் வைத்துக் கொள்ள வேண்டிய தேவையை நிராகரித்துச் செல்ல முடியாது.
இந்தியா தெற்காசியாவின் அதிகாரம் என்னும் வகையில், அயல்நாடுகளுடன் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பலமான உறவை பேணி வருகிறது. அந்த வகையில் இலங்கை ஒரு உடனடி அயல்நாடென்னும் வகையில், அது இந்தியாவின் உடனடி மூலோபாய பங்காளியாகும். இலங்கைக்குள் ஏற்படும் எந்தவொரு முரண்பாடான நடவடிக்கையின் பிரதிபலிப்புக்களும், உடனடியாகவே இந்தியாவை பாதிக்கும். இலங்கை பதற்றங்களினதும் முரண்பாடுகளினதும் களமாக மாறுகின்ற போது இந்தியாவின் உடனடி மூலோபாய பங்காளி என்னும் தகுதியை இலங்கை இழந்துவிடுகிறது. ஏனெனில், இலங்கை கொந்தளிப்பின் களமாக மாறும் போது அது உடனடியாகவே இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு களமாக மாறிவிடுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இலங்கை அப்படியொரு புறச்சூழலால் விழுங்கப்பட்டிருந்தது உண்மை. குறிப்பாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சீனா நடவடிக்கைகள் அமைந்திருந்தன. இங்கு பிரச்சினை சீனாவின் நகர்வுகள் அல்ல, மாறாக சீனாவின் நகர்வுகளுக்கு இலங்கை அரசு இடமளித்தது என்பதே பிரச்சினையாகும். இங்கு மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுவது போல அவர்கள் (றோ) என்னை தவறாக விளங்கிக் கொண்டனர் என்பது விடயமல்ல. அவர்கள் அவ்வாறு விளங்கிக் கொள்ளுமளவிற்கு சீனா இந்தியாவிற்கான இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக இலங்கைக்குள் விழுங்கிக் கொண்டிருந்தது என்பதுதான் உண்மை. ஒருவேளை அது மஹிந்த எதிர்பார்க்காத ஒன்றாகவும் இருந்திருக்கலாம். மஹிந்த சீனாவின் தலையீட்டை வெறுமனே பொருளாதார கண்ணோட்டத்தில் மட்டும் நோக்கியிருக்கலாம். ஆனால், ஒரு எல்லைக்கு அப்பால் மஹிந்த தன்னுடைய கட்டுபாட்டு எல்லையை இழந்திருக்கலாம். ஆனால், மஹிந்த அதிகம் சீனாவை நோக்கி சாய்ந்ததற்கு மேற்குலகின் அழுத்தங்களும் ஒரு காரணமாகும். இறுதி யுத்தத்திற்கு பலமான ஆதரவை வழங்கிய மேற்குலக சக்திகள், இறுதியில் அந்த யுத்தத்தின் விளைவுகளை கொண்டே மஹிந்தவின் குரல்வளையை நசிக்க முற்பட்டனர். இதனை சீனா தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது. அந்த வகையில் பார்த்தால், இனிவரும் காலத்தில் மேற்குலக அழுத்தங்களை தொடர்வதும் கூட மூலோபாய நோக்கில் அர்த்தமற்ற ஒன்றாகலாம்.