படம் | TAMILGUARDIAN

பல் மதங்களைக் கொண்ட சமூகத்தில் எந்தவொரு தலைவனும் தன்னுடைய மதத்தை பின்பற்றுவது முறையல்ல.

நாட்டின் ஜனாதிபதி என்பவர் அனைத்து இன மக்களினதும் பிரதிநிதி ஆவார். பௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதில் அடங்குவர். ஆகவே, இது போன்ற பல் மத மக்களைக் கொண்ட நாட்டின் ஜனாதிபதி ஒருவர் தன்னுடைய மதத்துடனான உறவை பகிரங்கமாக வெளிக்காட்டுவது சிறந்ததன்று. மதத்திற்காக நம்பிக்கையை, மரியாதையை நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளது என்று அவர் நம்பினால், அதை ஏனைய மதங்களுடனும் பகிர்ந்துகொள்வது அவசியமாகும். ஏனெனில், அவர் பௌத்தர்களின் மட்டுமன்றி, நாட்டின் அனைத்து மக்களினதும் தலைவர் ஆவார்.

எனவே, இந்த நாட்டின் பௌத்தர்களில் பெரும்பாலோனோரின் புனித மரமாக போதி மரம் இருந்தபோதிலும், நீங்கள் அந்த மரத்தை வழிபடுவதைப் பார்க்கும்போது, பௌத்தரான எனது மனம் மிகவும் வலித்தது.

மேலும், போதி மரத்தை வழிபடுவதன் மூலம் நீங்கள் பகிரங்கமாகவே புத்தரின் தர்மத்தை அவமதிக்கிறீர்கள். பொருள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள், எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத அப்பாவித்தனமான கலாசார செயற்பாடுகள் என பலர் கூறக்கூடும். பௌத்த மதத்துடன் இவை பின்னிப்பிணைந்தவை என்பதையும் நாங்கள் அறிவோம். பல் மத சமூகங்களின் தலைவர் என்ற வகையில், ஏனைய மதங்களின் செயற்பாடுகளோடு தொடர்புபடாமல், ஒரு மதம் சார்ந்த கலாசார நடவடிக்கையுடன் மாத்திரம் அதிக உறவை பகிரங்கமாகவே பேணுவது உகந்ததல்ல.

மத நம்பிக்கைகளை, தங்களது தனிப்பட்ட விவகாரமாக கருதுவோர் எம்மத்தியில் பலர் இருக்கின்றனர். அதை பகிரங்கமாக காட்சிப்படுத்தப்படுவதை மிகைப்படுத்தல் என அவர்கள் எப்போதும் எண்ணுவதில்லை. நாட்டு மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனாதிபதியாக இருக்கும் தாங்கள், இவ்வாறான உணர்வினைக் கொண்டோருக்கு தலைமைத்துவத்தை வழங்காவிட்டால், இவ்வாறானதொரு கலாசாரம் பல் மதங்களைக் கொண்ட மற்றும் பல் கலாசாரத்தைக் கொண்ட நம் நாட்டில் வேரூன்றுவதை தடுத்துநிறுத்தலாம்.

அதுமட்டுமல்ல, நீங்கள் பொதுவில் வணங்கும் போதி மரம் பௌத்த மதத்தின் சின்னமாகும். இதன் மூலம் ‘பொதுபல சேனா’ போன்ற அடிப்படைவாத அமைப்புகள் மேற்கொண்டு வரும் துன்புறுத்தல்களினால், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்கள் இன்னும் இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

உங்களுக்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்த ஜே.ஆர். ஜயவர்தன, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் உங்களுடைய, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போன்றோரிடம் இது தொடர்பாக வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்ள இன்னும் தாமதமில்லை. மதம், சரியான இடத்தில் அதை வைக்கவேண்டும். அரசாட்சியை முடிந்த வரை அதிலிருந்து தூரவிலக்கி வையுங்கள்.

உங்களை ஆட்சிபீடமேற்ற வாக்குகளைப் பயன்படுத்திய நாங்கள், உங்களுக்குள்ள பெறுமதியான நேரத்தில் மரங்களை வழிபடுவதை விடுத்து அரத்தபுஷ்டியான காரியங்களை மேற்கொள்வதன் மூலம் நாட்டை சிறந்ததொரு நிலைக்கு கொண்டுவருவதை பார்க்க ஆவலாக உள்ளோம்.

ஷார்மினி சேரசிங்க

‘விகல்ப’ இணையதளத்தில் ජනාධිපතිවරයාගේ වැරදි ආදර්ශය என்ற தலைப்பில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.