படம் | ALJAZEERA

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களிக்குமாறு கேட்டால், அனேக தமிழர்கள் புண்படக்கூடும். அவ்வாறு கேட்கின்றவர் மீது ஐயமுறக்கூடும். அதே நேரத்தில் – அதே அனேக தமிழர்களிடம் எழுந்திருக்கின்ற கேள்வி – மைத்திரிபாலவுக்கு வாக்களிப்பதால் ஆகப்போகின்ற பயன்தான் என்ன…?

மைத்திரிபாலவின் வரவோடு – ரணில், சந்திரிகா, பொன்சேகாவுக்கு வரக்கூடிய தனிப்பட்ட நலன்களுக்கு அப்பால் – ஒட்டுமொத்தமான இலங்கையில் குடும்ப ஆட்சி ஒன்றின் வீழ்ச்சியும், ஜனநாயகத்தின் எழுச்சியும், நீதித்துறையின் உயர்ச்சியும் எதிர்பார்க்கப்பட்டாலும், குறிப்பாகத் தழிழர்களுக்கு என்று கிடைக்கப்போகின்ற அரசியற் செழிப்பு என்ன…?

போர் நிகழ்ந்த காலத்தின் கடைசி மூன்று ஆண்டு கொடூரங்களை உலக சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. பல பத்தாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட தகவல்கள் அங்கீகாரம் பெற்ற தரவுகள் ஆகிவிட்டன. போரின் வெற்றிக்கு உரிமை கோரும் மஹிந்தவும், அவரது சகோதரர் கோட்டாபயவுமே இதற்கும் நேரடிப் பொறுப்பாளிகள். விடுதலைப் புலிகளை அழித்த பின்னர் தமிழர்களது அரசியல் அபிலாசைகளை எல்லாம் தீர்த்து வைப்பதாக, போருக்குத் துணை நின்ற பல உலகத் தரப்புக்களுக்கு அந்த நேரத்தில் அவர்கள் வாக்குறுதிகளை அளித்திருந்தனர். ஆனால், அந்தச் சொற்களைத் திருப்தியளிக்கக்கூடிய அளவுக்கு அவர்கள் செயலாக்கவில்லை. இவையனைத்துமே தமிழர்களாகிய எங்களுக்கு ராஜபக்‌ஷ சகோதரர்கள் மீது கோபம், வெறுப்பு, ஏமாற்றம் என ஒரு பன்முக விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சினம் நியாயமானது.

இப்போதைய கேள்விகள் எவையெனில் – ஆட்சி ஆசனத்திலிருந்து ராஜபக்‌ஷ குடும்பத்தை அகற்றி விடுவது, தமிழ் பேசும் மக்களது எல்லாக் காயங்களையும் ஆற்றுமா…? அல்லது மைத்திரிபால குழுமம் தமிழரது வலிகளை எல்லாம் நிச்சயமாகவே நீக்குமா…? அல்லது, ராஜபக்‌ஷ குடும்பத்தையே தொடர்ந்தும் ஆள விடுவது பௌத்தர் அல்லாத இனத்தாருக்கு சாதகமாக அமையக்கூடிய ஏதும் சாத்தியங்கள் உண்டா…?

கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழர்களுக்குள் தீராத தீயாக வளர்ந்து கொண்டிருப்பது ராஜபக்‌ஷக்களைப் போர்க்குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற வேட்கை. மூன்று ஆண்டுகளாக ஐ.நா. பேரவையில் முன்வைக்கப்பட்ட அமெரிக்கப் பிரேரணைகளும் எரிகிற அந்த நெருப்பில் நெய் வார்த்து வார்த்தன. ஆனால், இப்போது கவனிக்க வேண்டியது என்னவெனில் – ராஜபக்‌ஷ சகோதரர்களை எவ்விதமான சர்வதேச விசாரணைகளுக்காகவும் தான் கையளிக்கப் போவதில்லை என மைத்திரிபால தரப்பு தெளிவுபடுத்திவிட்டது. இது வெறுமனே ஒரு தேர்தற் காலக் கூற்று அல்ல; அவரும் கூட்டாளிகளும் விரும்பினாலும் கூட அவ்வாறு கையளிக்க முடியாது. இந்த நாட்டின் இனவாத அரசியற் சூழல் அதற்கு ஒருபோதும் இடமளிக்காது. கையளிக்கும்படி எவராவது அழுத்தம் கொடுத்தாலும், உள்நாட்டு விசாரணை செய்வதாகக் கூறி, மைத்திரிபாலவே சமாளித்துவிடுவார். பிரபாகரனைக் கொன்றமைக்கான குறைந்தபட்ச நன்றிக்கடனாக ராஜபக்‌ஷக்களைப் பாதுகாப்பதையே மைத்திரிபாலவிடமிருந்து பௌத்த இனம் அதிகபட்சமாக எதிர்பார்க்கும். ஆகவே, நுணுக்கமாகப் பார்த்தால் துலங்குகின்ற கேள்வி என்னவெனில், ஆட்சியில் நிலைப்பதை விடவும், ஆட்சியிலிருந்து அகலுவதே ராஜபக்‌ஷ குடும்பத்திற்குப் பாதுகாப்பானது என்று ஆகிவிடாதா…? ஏனெனில், ஆட்சியிலிருந்து இறங்கிவிட்டால், சர்வதேச விசாரணை என்ற மேற்குலகத் தொல்லையைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அவர்களுக்கு இருக்காது, அல்லது அதற்குப் பயந்து தமிழர்களுக்கு ஆட்சியதிகாரங்கள் வழங்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்காது. ஆகவே, ராஜபக்‌ஷ குடும்பத்தைத் தண்டிக்கவோ, அல்லது தண்டனையைக் காட்டிப் பயமுறுத்தி நிலைக்கக்கூடிய அரசியல் நன்மைகள் எதனையும் தமிழர்களுக்குப் பெறவோ இருக்கின்ற சிறந்த வழி என்ன…?

இந்த போர்க்குற்ற விவகாரம் ஒருபுறம் இருக்க இனப் பாகுபாட்டிற்கான தீர்வு தொடர்பாக போரை நடத்திய காலத்திலிருந்தே பல வாக்குறுதிகளை இந்தியாவுக்கும் இதர நாடுகளுக்கும் ராஜபக்‌ஷக்கள் வழங்கியுள்ளனர். சம்பந்தன் ஐயாவும் இந்த விடயம் தொடர்பாகப் பல இடங்களில் அடிக்கடி வலியுறுத்தியுமுள்ளார். இப்போது சிக்கல் என்னவெனில் – தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி அந்த நாடுகள் ராஜபக்‌ஷக்களிடம் மட்டும்தானே கேட்க முடியும்…? மைத்திரிபாலவிடம் அல்லவே…? மன்மோகனிடம் வழங்கிய வாக்குறுதிகளைச் செயற்படுத்தும்படி மஹிந்தவிடம் மோடி கேட்கலாம். ஆனால், மஹிந்த வழங்கிய வாக்குறுதிகளுக்குப் பொறுப்பு ஏற்கும்படி மைத்திரிபாலவிடம் மோடி கேட்க முடியுமா…? எனவே, பதில் சொல்ல வேண்டிய – பொறுப்பு ஏற்க வேண்டிய – செயலில் காட்ட வேண்டிய – அழுத்தங்களுக்கு உட்படக் கூடிய – இடத்தில் மஹிந்தவை வைத்திருப்பது தானே தமிழர்களின் வெற்றியாக அமைய முடியும்…?

ஆனால், மைத்திரிபால மீது எத்தகைய மேற்குலக மற்றும் இந்திய அழுத்தமும் இருக்கப் போவதில்லை. அவரால் ஆட்சிப்பீடம் ஏற முடிந்தால், அவ்வாறு ஏறும் போதே அவர்களுடைய ஆளாகத்தான் அவர் ஏறப் போகின்றார். தமிழர்களுக்காகத் தான் எதையும் வெட்டி அடுக்கப்போவதாக அவர்களுக்கு அவர் எந்த வாக்குறுதியும் வழங்கப் போவதில்லை. அவ்வாறு ஏதும் வாக்குறுதிகளை அவர் இரகசியமாக வழங்கினாலும், அவற்றைக் கட்டாயம் நிறைவேற்றுவார் என்பதற்கு ஏதும் சான்றுகள் வரலாற்றில் உள்ளனவா…?

பௌத்த சிங்களக் கட்சிகளின் ஆதரவுகளைத் திரட்டுவதற்காகவும், சிங்கள மக்களின் வாக்குகளை வெல்வதற்காகவுமே ஏனைய இன மக்களுக்கான ஆட்சியுரிமைகள் தொடர்பில் மைத்திரிபாலவால் பகிரங்கமாக எதனையும் பேச முடியாமல் இருக்கின்றது என்ற ஒரு வியாக்கியானம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் தலைவர்களாலேயே முன்வைக்கப்படுகின்றது. இதன் அர்த்தம் என்ன…? இனவாத மனோபாவம்தான் இந்த நாட்டில் தொடர்ந்தும் செல்வாக்கோடு இருக்கின்றது என்பதும், இருக்கப் போகின்றது என்பதும் தானே…? அப்படியானால், சிங்கள இனத்தின் மனங்களை வென்று தமிழ் தேசிய இறையாண்மைப் பிரச்சனைக்குத் தீர்வைப் பெறலாம் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படை அரசியல் நிலைப்பாடும் அடிபட்டுப் போகின்றது அல்லவா…? தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் வேறு மூன்றாம் தரப்புக்களுக்கும் இரகசியமாக ஏதும் வாக்குறுதிகளை வாய் மூலமோ, அல்லது எழுத்து மூலமோ வழங்கினாலும் கூட, இதே சிங்கள இனவாதக் கூட்டுக் கட்சிகளைக் காரணம் காட்டி, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மைத்திரிபால மறுத்தால், யார்தான் அவர் மீது என்ன நடவடிக்கைதான் எடுக்க முடியும்…? அவர் மீதோ, அல்லது அவரது குழுமத்தினர் மீதோ அழுத்தங்கள் போட வேண்டிய தேவைகளோ, அல்லது போடக்கூடிய பிடிகளோ வெளிச் சக்திகளிடம் இருக்கின்றனவா…? அப்படித்தான் ஏதும் பிடிகள் அவர்களிடம் இருந்தாலும் கூட, சைனாவின் நீர்மூழ்கிக் கலன்கள் இலங்கைத் துறைமுகங்களில் நங்கூரமிடுவதை மைத்திரிபால நிறுத்திவிட்டால், அந்த வெளிச் சக்திகள் தமிழர்களைக் கைவிட்டுவிடமாட்டார்கள் என்பதற்கு ஏதும் உத்தரவாதங்கள் உண்டா…? இவ்வாறான எல்லா நிச்சயமின்மைகளையும் மீறி, மைத்திரிபால ஆட்சியிடமிருந்து ஏதும் உருப்படியான தீர்வைப் பெற்றுக்கொள்ளத் தமிழர் தரப்பிடம் ஏதாவது திராணி இருக்கின்றதா…?

ஆனால், ராஜபக்‌ஷக்களின் நிலை அவ்வாறானது இல்லை. அரசியல் ரீதியாகத் தற்போது தமிழர்களின் பலமும், அவர்களுக்கு இருக்கும் பிடியும் ராஜபக்‌ஷக்கள் இழைத்ததாகச் சாட்டப்படுகின்ற போர்க்குற்றங்களும், மேற்குலகோடு மல்லுக்கு நிற்கும் அவர்களது கடும்போக்கு நிலைப்பாடும் தானே…? ராஜபக்‌ஷக்கள் ஆட்சியில் இருக்கும் வரைக்கும்தான் மேற்குலக அழுத்தங்கள் இந்த நாட்டு அரசின் மீது இருக்கும். அதன் விளைவாக – நாங்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகச் சொல்லுகின்ற மேற்குலக ஆதரவும் எங்களுக்கு இருக்கும். மேற்குலக அழுத்தங்கள் எவ்வளவுக்குக் கடுமையானதாக இருக்கின்றதோ, அந்த அளவுக்குத்தான் தமிழர்களுக்கு ஆட்சியதிகாரங்களை வழங்குவதற்கான நிர்ப்பந்தமும் அரசின் மீது கடுமையானதாக இருக்கும். அந்த நிர்ப்பந்தத்தின் விளைவாக – ஆட்சியதிகார விடயத்திலும், பொருளாதார மேம்பாட்டு விடயத்திலும் தமிழ் பேசும் மக்களிற்கு மேலும் நற்பயன்கள் ஏதும் விழையாதா…?

நாடாளுமன்ற ஜனநாயகத்தால் இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு ஆன நன்மை எதுவுமில்லை. ஆகப்போகின்ற நன்மையாக எதுவும் தென்படவும் இல்லை. இன ரீதியாகப் பிளவுபட்டுக் கிடக்கின்ற ஒரு நாட்டில், வெறும் 15 – 20 வீதமே இருக்கின்ற ஒரு மக்கள் சமூகத்திற்கு ஜனநாயக ரீதியில் அரசியல் நன்மைகள் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் கிடையவே கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்போடு பகிரங்கமாகச் பேசப் பின்னடித்து ஒரு கள்ள உறவைப் பேணிக் கொள்ளவே மைத்திரிபால குழு விரும்புவதானது, அவர்களது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சமத்துவ நேர்மையில் அவர்களுக்கே நம்பிக்கையில்லை என்பதைத் தானே காட்டுகின்றது…?

இனப் பாகுபாட்டினைப் போக்குவதற்கான வழிகளைக் கண்டறிய, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் வந்து இணையுமாறு மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்ச்சியாக விடுத்த அழைப்புக்களைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்ததன் முதன்மைக் காரணமே நாடாளுமன்ற ஜனநாயகம் இந்த நாட்டில் நேர்மையான சமத்துவத்தோடு இயங்குவதில்லை என்பதுதானே…? ஒற்றையினவாதச் சிந்தனையுடையோரால் நிறைந்திருக்கும் ஒரு மன்றத்தில், வேற்று இனத்தாருக்கு நியாயம் கிடைக்காது என்பது தானே…? அவ்வாறு அந்த அழைப்பை நிராகரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசுடனேயே நேரடியாகப் பேச வேண்டும் என வலியுறுத்தி வந்ததன் காரணம், மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இருந்த நிறைவேற்று அதிகாரத்தின் மீதும், அதனைப் பயன்படுத்துவதற்கு அவருக்கிருந்த தற்துணிவின் மீதுமான ஏதோவொரு நம்பிக்கை தானே…?

ஆட்சியதிபராகப் பொறுப்பை ஏற்றவுடன் தான் முதன்மையாகச் செய்யப் போவதாக மைத்திரிபால தந்துள்ள உறுதிமொழி, சிறீலங்காவில் நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகார ஆட்சியதிபர் முறைமையை இல்லாமற் செய்து, நாடாளுமன்ற ஆட்சி முறையை மீளவும் நிலைநாட்டுவதாகும். அவ்வாறு அவரால் செய்ய முடிந்தால், அது நாட்டுக்கு மிக நல்லது; ஆனால், அதனால் தமிழர்களுக்கு ஆகப்போகின்ற நற்பயன் என்ன…? நிறைவேற்று அதிகார ஆட்சியதிபர் முறை நிலைத்திருப்பதனால் தமிழர்களுக்கென்று பிரத்தியேகமாக ஆகிவிட்ட அல்லது ஆகப்போகின்ற தீமைதான் என்ன…?

முழுமையான நிறைவேற்று ஆட்சியதிகாரத்தைத் தன்னகத்தே கொண்டவர் மஹிந்த ராஜபக்‌ஷ. எதனைக் கொடுப்பதற்கும் அல்லது கொடுக்காமல் விடுவதற்கும் அடுத்தவர்களைக் காரணம் காட்ட வேண்டிய தேவை ஒப்பீட்டளவில் அற்றவர். தனித்து முடிவெடுத்துத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வொன்றைத் தரவல்ல தைரியமும் வளமும் உடையவர் என்று தமிழ் கூட்டமைப்பின் உயர் தலைவர்களாலேயே தனிப்பட்ட உரையாடல்களில் ஒப்புக்கொள்ளப்பட்டவர். அப்படியான ஒருவரால் கூட்டப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மீதே நம்பிக்கை இல்லாமல் அதனோடு இணைய மறுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சியதிபரின் நிறைவேற்று அதிகாரம் இல்லாமற் செய்யப்பட்டதன் பின்னான ஒரு நாடாளுமன்ற ஆட்சி முறையில் எத்தகைய ஞானத்தோடு நம்பிக்கையை வைக்க முடியும்…?

ஆளுக்கொரு திசையில் இழுக்கப் போகின்ற 35 தனித் தரப்புக்களைச் சாய்த்துச் செல்ல வேண்டிய நிலையில் மைத்திரிபால இருப்பார். அவற்றுள் முதன்மையானவை பௌத்த ஒற்றையினவாதக் கொள்கையையே தமது அரசியல் மூலதனமாகக் கொண்டவை. செய்ய வேண்டியவற்றைச் செய்வதை விடவும், செய்யாது விடுவதற்கு அடுத்தவர்களைக் காரணம் காட்டக் கூடிய வாய்ப்புக்களே மைத்திரிபாலவிடம் அதிகம் உள்ளன. ராஜபக்‌ஷ குடும்பத்தை வீழ்த்துவதற்காக இப்போது கூட்டுச்சேர்ந்துள்ள கட்சிகள், நாளை மீண்டும் தமது இனவாதச் சுயத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்த தொடங்கினால், நெஞ்சை நிமிர்த்தித் தமிழருக்காக நியாயம் கதைக்கும் தினாவெட்டு உள்ளவரா மைத்திரிபால…? அவர் ஒருபுறம் இருக்க, அவரை இயக்குகின்ற சந்திரிகாவும், ரணிலும், பொன்சேகாவும் என்ன செய்வார்கள்…?

20 வருடங்களுக்கு முன்னர், “பிராந்தியங்களின் ஒன்றியம்” என்று ஒரு தீர்வை முன்வைத்தார் சந்திரிகா. அந்தத் தீர்வுப் பொதிதான் நீலன் திருச்செல்வத்தின் உயிரைக் காவு கொண்டது. அந்த தீர்வுப் பொதிதான் சம்பந்தன் ஐயாவுக்கும் துரோகச் சாவைக் கொடுக்க இருந்தது. மைத்திரிபால ஆட்சியதிபர் ஆகினால், அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் சென்று, “பிராந்தியங்களின் ஒன்றியம்” என்ற தனது பழைய தீர்வு யோசனையை அவர் மூலமாக இப்போது நடைமுறைப்படுத்துவாரா சந்திரிகா…?

12 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் தான் எழுதிய புரிந்துணர்வு உடன்பாட்டில் ஒத்துக்கொண்டது போல, அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் சென்று, ஒரு கூட்டாட்சி முறைமையை இந்த நாட்டில் ஏற்படுத்துவது என்ற யோசனையை மைத்திரிபால மூலமாக இப்போது முன்னெடுப்பாரா ரணில்…?

சந்திரிகாவின் “பிராந்தியங்களின் ஒன்றியம்” தீர்வுப் பொதியை நடு நாடாளுமன்றில் வைத்து அன்றே தீயிட்டு எரித்தவர் ரணில். கூட்டாட்சி முறைமை பற்றி விடுதலைப் புலிகளோடு உடன்படிக்கை செய்தமைக்காக ரணிலின் ஆட்சியையே பின்னர் கவிழ்த்தவர் சந்திரிகா. இன்னொரு புறத்தில் – தமிழர்களுக்கு எதிரான போரின் தலைமைத் தளபதியாய் திகழ்ந்த வேளையில், “இலங்கை ஒரு பௌத்த நாடு. ஏனைய இனங்கள் இங்கு வாழலாம்; ஆனால், உரிமைகள் எதுவும் கேட்க முடியாது” என்று சொன்னவர் பொன்சேகா. ராஜபக்‌ஷ குடும்பத்தை வீழ்த்துவதற்காக இப்போது கூட்டுச் சேர்ந்துள்ள இவர்கள், நாளை அது கைகூடிய பின்னர், தமிழ் பேசும் மக்களுக்கு ஏதும் உருப்படியான நன்மைகளைச் செய்வார்கள் என்று எதனை வைத்து நம்ப முடியும்…?

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு மைத்திரிபால குழுமத்தினர் சில வாக்குறுதிகளை வழங்கியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இராணுவ மயமாக்கலைக் குறைத்தல், சிங்களக் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்துதல், உயர் காப்பு வலயங்களை அகற்றுதல், இடம்பெயர்ந்திருக்கும் தமிழர்களை மீளக் குடியேற்றுதல் போன்றவை அவை. இவையெல்லாமே தமிழர்கள் இன்று எதிர்நோக்கும் தலையாய பிரச்சினைகள்தான். சொன்னபடியே அவர்கள் செய்வார்களெனில், நிச்சயமாக அது தற்காலிக நிம்மதியைத் தரும். ஆனால், எழுகின்ற கேள்விகள் என்னவெனில் –

முதலாவது – சொன்னபடியே இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, அவர்கள் தமக்கிடையே ஆளுக்கு ஆள் ஒத்துழைப்பார்கள் என்பதற்கு அவர்களது கடந்த கால வரலாற்றில் ஏதும் சான்றுகள் உண்டா…?

இரண்டாவது – அப்படித்தான் இந்த விடயங்களுக்குத் தீர்வு கண்டாலும், அதன் பின்னர் இனப் பாகுபாடு என்ற ஒன்றே இந்த நாட்டில் இல்லாமற் போய்விட்டது என்றும், அரசியற் தீர்வு என்ற ஒன்றே இனி அர்த்தமற்றது என்றும் மைத்திரிபால அரசு சொல்லிவிடாது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதங்கள் உண்டா…?

மூன்றாவது – சொன்னபடியே அவர்கள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்பு, இனப் பாகுபாடே இந்த நாட்டில் இனி இல்லை என்றும் கூறிவிடுவார்களானால், கிடைத்தது வரையும் போதும் என்று பழையவற்றையெல்லாம் மறந்துவிட்டு வாழத் தமிழ் மக்கள் தயாரா…?

மைத்திரிபாலவின் வெற்றி இந்த நாட்டில் ஓர் இராணுவ ஆட்சிக்கான சாத்தியத்தை உருவாக்கும் என்று அனேகர் பேசுகின்றார்கள். வெல்லுவதற்கான திருகுதாளங்கள் பயனளிக்காது போனால், மஹிந்தவின் தம்பி அதனை அரங்கேற்றுவார் என்று பலர் கருதுகின்றார்கள். அதனைத் தொடர்ந்து கட்டவிழக்கூடிய சிலபல நிகழ்வுகள் – தமிழர்கள் வயிறுகளில் பால் வார்க்கக்கூடிய அரசியல் விளைவுகளைக் கொண்டு வரும் என்று அவர்கள் நம்புகின்றார்கள். அதனால், மைத்திரிபாலவை வெல்ல வைப்பது நன்மையளிக்கும் என்று கருதுகின்றார்கள். ஆனால், ஒரு மாயப் பொருள் மீது வைக்கின்ற ஆசை போன்றதே இது. என்னைப் பொறுத்தவரையில் – இராணுவ ஆட்சியைச் செரிமானித்துக்கொள்ளும் அகப்பண்பு இந்த நாட்டிலும் இல்லை, இந்த நாட்டில் ஓர் இராணுவ ஆட்சியைச் சகித்துக்கொள்ளும் புறச்சூழல் இப்போது இந்தப் பிராந்தியத்திலும் இல்லை. அதற்கு இந்தியா விடாது; அமெரிக்கா விடாது; சைனா விடவே விடாது. அப்படித்தான் ஓர் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டாலும், விரைவிலேயே அது ஒரு ஜனநாயகத் தன்மைக்குள் மாற்றப்பட்டுவிடுமே அல்லாமல், வரலாற்றைப் புரட்டக் கூடிய பெரும் நிகழ்வுகளுக்குள் அது இட்டுச் செல்லப்படமாட்டாது என்பது எனது கணிப்பு.

மஹிந்த ராஜபக்‌ஷவோடு மையல் கொள்ளுவதற்குத் தமிழர்களுக்குப் பிரத்தியேகக் காரணம் எதுவுமே கிடையாது. ஆனால், தமிழர் தரப்பின் இராஜதந்திரம் எதில் இருக்க வேண்டுமெனில் – தங்கள் நலன்களுக்காக எங்கள் நலன்களைப் பணயம் வைத்த பின்னர், எங்களைக் கைகழுவி விட்டுச் சென்றுவிடுகின்ற வெளிச் சக்திகளை, விட்டுவிலக முடியாமல் இங்கு சிக்க வைப்பதில் இருக்க வேண்டும்; எனவே, மேற்குலகத்திற்கும் இந்தியாவிற்கும் பிரச்சினைகள் கொடுப்பவரை ஆட்சியில் வைத்திருப்பதில் இருக்க வேண்டும்; அதன் மூலமாக – அவர்களுடைய தொல்லைகளுக்கு உள்ளாகக்கூடியவரை ஆட்சியில் வைத்திருப்பதில் இருக்க வேண்டும்; அதன் விளைவாக, அவர்களிடமிருந்து தப்புவதற்காக எங்களைத் தேடி வரக்கூடியவரை ஆட்சியில் வைத்திருப்பதில் இருக்க வேண்டும்; அதன் முடிவாக, எங்களுக்கான தீர்வை, அவர்கள் எல்லோரும் சேர்ந்தே தரக்கூடிய ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்குவதில் இருக்க வேண்டும்; அதன் காரணமாக – அடுத்தவர்களில் தங்கியிருக்காமல், தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவரை ஆட்சியில் வைத்திருப்பதில் இருக்க வேண்டும். அத்தகைய ஓர் இராஜதந்திர வெற்றி, யாரை ஆட்சியில் வைத்திருப்பதன் மூலம் சாத்தியமாகும்…?

கடைசிக் கேள்வி என்னவெனில் – தமிழர்களைப் பொறுத்தவரையில் மஹிந்தவும் மைத்திரிபாலவும் ஒன்றேதானா என்பதாகும். மஹிந்த, மைத்திரிபால மற்றும் கூட்டாளிகள் எல்லோரும் ஒரே இனவாதப் பட்டறையின் உற்பத்திகள் என்பதால், எவர் வென்றாலும் தமிழர்களுக்கு எதுவுமேயில்லை என்றும் வாதிடப்படுகின்றது. ஆனால், அது அடிப்படையற்றது. அந்த வாதம், சுயநம்பிக்கையினதும் சாதுர்யத்தினதும் பற்றாக்குறையின் வெளிப்பாடு. உண்மையில் இருவரும் ஒன்றல்ல. இயைந்துபோய் எதுவும் பெற முடியாது போனால், மஹிந்தவை வளைத்தோ முறித்தோ கூட எதுவும் சாதிக்க வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், மைத்திரிபாலவை வளைக்கவோ முறிக்கவோ தமிழர்களிடம் எதுவும் இல்லை. அவராகவே எதுவும் தரவில்லையென்றால், வெறுமனே கெஞ்சிக்கொண்டு இருப்பதைத் தவிர வேறு வழி உண்டா…? எனவே, இந்த இருவரில் ஒருவரால் மட்டும்தான் நின்று நிலைக்கக்கூடிய அரசியற் தீர்வு தமிழர்களுக்குச் சாத்தியமாகும்.

இலங்கை அரசியலில் உள்ள நுட்பம் என்னவெனில் – மைத்திரிபாலவை வெல்ல வைக்க வேண்டுமென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபாலவுக்காகப் பிரச்சாரிக்க வேண்டும்; ஆனால், அதனை இரகசியமாகச் செய்ய வேண்டும்; தமிழர்களும் அவருக்கு வாக்களித்தே ஆக வேண்டும். மஹிந்த ராஜபக்‌ஷவை வெல்ல வைக்க வேண்டுமென்றாலும் மைத்திரிபாலவுக்காகவே தமிழ் கூட்டமைப்பு பிரச்சாரிக்க வேண்டும்; அதனை அவர்கள் பகிரங்கமாகச் செய்ய வேண்டும்; ஆனால், தமிழர்கள் அவருக்கு வாக்களிப்பதைத் தவிர்க்க வேண்டும். கனிகள் இரண்டு தான்; ஆனால், கல்லு ஒன்றே தான். ஒருவர் வென்றுவிட்டால், “உங்களுக்காகத்தானே வேலை செய்தோம்” என்று அவரிடம் சொல்லிவிடலாம்; ஒரு வேளை, அடுத்தவர் வென்றுவிட்டாலோ, “உங்களுக்காகத்தான் இப்படியாக வேலை செய்தோம்” என்று இவரிடம் சொல்லிவிடலாம்.

செயல் மட்டும் அல்ல, செயலின் தன்மையும்தான் இங்கே தமிழர் இராஜதந்திர வெற்றியின் தீர்மானிக்கும் புள்ளி.

திருச்சிற்றம்பலம் பரந்தாமன், தினக்குரல் வார இறுதி ‘புதிய பண்பாடு’ இதழுக்காக.