படம் | Dinuka Liyanawatte/REUTERS, SRILANKABRIEF

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் என்ன நிலைப்பாட்டினை எடுக்கலாம் என்பது தொடர்பாக இன்று பல தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களுக்குத் தொடர்பில்லாத தேர்தல் பற்றி பெரிய அக்கறையினைக் காட்டத்தேவையில்லை என தமிழ் சிவில் சமூக அமையம் கருத்துத் தெரிவித்துள்ளது. தமிழ் டயஸ் போறாவின் ஒரு பகுதியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் கருத்துக்கணிப்பினை வெளிப்படுத்தும் வகையில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தது. ஆனாலும், சம்பந்தன் அதனை நிராகரித்து இருந்தார். ஆரம்பத்தில் பொது எதிரணி வேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என்ற கருத்தே தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. ஆனால், தமிழ் மக்களுக்கு கோரிக்கைகள் எதுவும் முன்வைக்க முடியாத நிலை வந்த பின்னர், ஆதரித்து என்ன பயன் என்ற கருத்து வளர்ச்சி கண்டுள்ளது.

முதலாவது –

இந்த விவகாரத்தை கோட்பாட்டு அடிப்படையிலும் பேரம் பேசுதல் என்ற அடிப்படையிலும் அணுகுவதே பொருத்தமானதாக இருக்கும். கோட்பாட்டு அடிப்படையில் பார்க்கும் போது இலங்கை அரசு இணைந்த பன்மைத்தன்மை வாய்ந்த அரசாக இல்லை, அது சிங்கள தேசத்திற்கான அரசாக மட்டுமேயுள்ளது. தமிழ் மக்கள் இவ் அரசிற்கு வெளியில் தான் நிற்கின்றனர். எங்களை ஒரு தேசமாக இணைத்தால் சிங்கள தேசத்துடன் இணைந்து ஒரு பன்மைத் தன்மைத்துவ இலங்கை அரசினை உருவாக்குவதற்குத் தயார் எனக் கூறி வருகின்றனர். இது வரைகால போராட்டம் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராகத்தான் இடம்பெற்றது. இந்த நிலைமை காரணமாக இலங்கைத்தீவு இன்று சமூகமளவில் உணர்வு ரீதியாக இரண்டாகப் பிரிந்திருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தல் சிங்கள தேசம் தனது தலைவர் யார் என தேர்வு செய்வதற்காக நடாத்தப்படுகின்ற தேர்தல். அதில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களில் எவரும் தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதற்கான உத்தரவாதத்தை வழங்க முடியாவிட்டாலும் தீமையாவது செய்யமாட்டேன் என்ற உத்தரவாதத்தை கூட வழங்க முடியாதவர்களாகவே உள்ளனர். இந்நிலையில், தமிழ் மக்கள் ஏன் அத்தேர்தலில் பங்கு பற்றவேண்டும் என்ற நியாயமான கேள்வி இங்கு எழுகின்றது. தமிழ்த்தரப்பு ஆதரிக்கும் வேட்பாளர் தோல்வி அடைவார் என்ற நிலையே இன்று காணப்படுகின்றது. கூட்டமைப்பு வெளிப்படையாக ஆதரித்ததன் விளைவாக போரை களத்தில் நின்று வழிநடத்திய பொன்சேகா தேர்தலில் தோல்வியடைந்தன் மூலம் அது நிரூபணமாகியுள்ளது. இது இலங்கைத்தீவு இன ரீதியாக இரண்டாகப் பிரிந்துகிடப்பதை துலாம்பரமாக வெளிக்காட்டுகின்றது. இதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய விருப்பத்தின் பேரில் எதிரணி பொது வேட்பாளரை ஆதரிப்பது எனத் தீர்மானித்த பின்னரும் அதனைப் பகிரங்கப்படுத்தத் தயங்குகின்றது. எதிரணியுடனான சந்திப்புக்களைக் கூட இரகசியங்கள் வெளிவரக்கூடாது என்பதற்காக சம்பந்தன் தனித்தே மேற்கொள்ளுகின்றார்.

இது தவிர, இராஜதந்திர அடிப்படையில் நோக்கும் போது தமிழ் மக்களின் அரசியல் வலுவாக இருப்பதற்கு தென் இலங்கையின் இரு கட்சிகளுக்கிடையே ஒரு அதிகாரச் சமநிலை இருப்பது அவசியம். தமிழ்த் தரப்பு இவ் இரு கட்சிகளிலிருந்து சம தூரத்தில் நிற்கும்போது இவ் அதிகாரச் சமநிலை உருவாகுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படும். தமிழ்த் தரப்பு ஒரு கட்சியை ஆதரித்தால் அதிகாரம் மறுகட்சிக்கு சார்பாக சரியும். எனவே, கோட்பாட்டு அடிப்படையில் பார்க்கும் போது இந்தத் தேர்தலில் இருந்து தமிழ் மக்கள் விலகி இருப்பதே அவர்களுக்கு அதிக பயன் தரக்கூடியதாக இருக்கும்.

பேரம் பேசுதல் என்ற அடிப்படையில் அணுகும் போது இத்தேர்தலில் அதற்கான சாத்தியங்கள் எதுவுமில்லை. இந்தத் தேர்தலில் வெற்றுக் காசோலையில் தமிழ்த்தரப்பு கையொப்பம் இட்டுத் தரவேண்டும் என்றே பொது எதிர்த் தரப்பு எதிர்பார்க்கின்றது. சோபித தேரர், சம்பந்தன் தலைமையிடமும், முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடமும் உங்கள் நிகழ்ச்சிநிரலுடனும், உங்கள் கோரிக்கைகளுடனும் இங்கு வரவேண்டாம் என நேரடியாகவே கூறியிருக்கின்றார். சம்பந்தனும், ரவூப் ஹக்கீமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். கள யதார்த்தமும் இதுதான். கூட்டமைப்பு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தால் அதனையே மஹிந்தர் இனவாத பிரசாரத்திற்கு பயன்படுத்தத் தொடங்கிவிடுவார். ஆதரவு கொடுப்பதற்கே இந்த நிலை என்றால் கோரிக்கைகள் வைப்பதைப் பற்றி நினைத்தே பார்க்க முடியாது. மைத்திரிபால சிறிசேன சம்பந்தனிடம் நேரடியாகவே பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பதை தாமதிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றார். சந்திரிகா 13க்கு மேலாக எதுவும் பேசுவதை தவிருங்கள் எனக் கேட்டிருக்கின்றார்.

இரண்டாவது –

தமிழ் மக்களுக்கு சார்பான புவிசார் அரசியல் நிலை பலவீனமடைதல். போரின் முடிவு தமிழ் அரசியலை பூச்சிய நிலைக்கு தள்ளியிருந்தது. ஆனாலும், இன்று வரை தமிழ்த் தேசிய அரசியலையும் அதற்கான போராட்டத்தையும் சம்பந்தன் தலைமையால் நீர்த்துப்போகச் செய்ய முடியவில்லை. அது உயிர்ப்புடன் இருக்கின்றதென்றால் இலங்கைத் தீவினை மையமாக வைத்து சீன சார்பு உலகம் – இந்தியா – அமெரிக்கா தலையிலான மேற்குலகம் ஆகிய முத்தரப்பு பிராந்திய மற்றும் உலக வல்லாதிக்க சக்திகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் போட்டியே காரணமாகும். இந்த புவிசார் அரசியல் காரணமாகவே வல்லரசுகளுக்கிடையே இலங்கையை மையமாக வைத்து அதிகாரப்போட்டி உருவாகியுள்ளது. சீனாவின் அதிகரித்த செல்வாக்கினை தடுப்பதற்கு உலக வல்லரசான அமெரிக்காவிற்கும் பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கும் இருக்கக்கூடிய ஒரே ஒரு கருவி தமிழ் மக்கள் தான். தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்ற புலிகளின் கடைசி வரை விட்டுக் கொடாத நிலைப்பாடும், உறுதியும், அவர்களும் அவர்களுடன் இருந்த மக்களும் செய்த அளப்பரிய தியாகங்களும் தான் இந்தப் புவிசார் அரசியல் போட்டியை உருவாக்கியிருந்தது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் சீன சார்பு அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான ஒரு கருவியாக மட்டுமே ஐ.நா. விசாரணை என்பதனை மேற்குநாடுகள் கையில் எடுத்துள்ளன. அதன் மூலம் சீனாவின் ஆதிக்கத்திலிருந்து ஸ்ரீலங்காவை விடுவித்து மீண்டும் தமது ஆதிக்க வட்டத்தினுள் கொண்டுவருவது அல்லது இந்திய மற்றும் மேற்கு நாடுகளுடன் ஒத்துப் போகக்கூடிய (சந்திரிகா போன்ற) ஒருவரை ஆட்சிப் பீடமேற்றுவது மட்டுமே அவற்றினது நோக்கமாகும

இந்நிலையில், வரப்போகும் தேதலில் ஏற்படக்கூடிய ஆட்சி மாற்றம் சிங்களதேசத்தின் அரசியலிலும், தமிழ்த் தேசத்தின் அரசியலிலும் எத்தகைய தாக்கங்களை உண்டுபண்ணும் என்பதனை ஆழமாக நோக்குவது அவசியமானது.

ராஜபக்‌ஷ மீண்டும் வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் மூலமான கைதுகள், சித்திரவதைகள், பெண்கள் மீதான துன்புறுத்தல்கள், காலசார அழிப்பு, கல்வி சீரழிப்பு, பொருளாதார அழிப்பு, முன்னாள் போராளிகளது வாழ்கையில் அவலம், காணமால் போனவர்களது குடும்பங்கள் மற்றும் விதவைப் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வில் அவலங்கள் தீவிரமடையும். அத்துடன், வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த மயமாக்கல், இராணுவ மயமாக்கல், பொருளாதார ரீதியான சிங்கள மயமாக்கல் என்பன அசுர வேகம் பெறும். சுமார் ஐந்து ஆண்டுகளுக்குள் தமிழ்த் தேசத்தின் இருப்பை முற்றிலும் அழிக்கக்கூடிய ஆபத்துள்ளது. அரசியல் தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

மறுபுறம் சீன ஆதிக்கம் அதிகரிக்கும். அது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பிரச்சினையை அதிகரிக்கும். அமெரிக்காவின் பூகோள ஆதிக்க கனவும், உலக வல்லரசுக் கனவும் படிப்படியாக தகர்க்கப்படும்.

இதனால், இந்தியா இலங்கையில் மீண்டும் நேரடியாகத் தலையிட வேண்டிய சூழல் தோற்றுவிக்கப்படும். இலங்கைத் தீவிலிருந்து சீனாவை வெளியேற்ற இந்தியாவுக்கு முழு ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவுக்கும் ஏற்படும். அவ்வாறு தலையிடுவதற்கான கருவியாக தமிழ் மக்களது விவகாரம் கையாளப்படும். இந்நிலையில், தமிழ்த் தரப்புக்கள் இணைந்து சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் தமிழர் விவகாரம் ஐ.நா. மட்டத்தில் தொடர்ந்தும் பேசுபொருளாக வைத்திருக்க முடிவதுடன், சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை நோக்கி நகர்த்தவும் முடியும்.

பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும்போது சுதந்திரக் கட்சி – ஐக்கிய தேசியக் கட்சி இணைந்த ஆட்சி உருவாகும்.

அமைக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள், கட்டப்பட்ட விகாரைகள் அகற்றப்படப் போவதில்லை. புதிய சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல்கள், இராணுவ மயமாக்கல்கள் நிற்கப் போவதில்லை. மாறாக ஆரம்பத்தில் தாமதமடையலாம். ஆனால், மீண்டும் தீவிரமடையும்.

புதிய ஆட்சியில் இலங்கை தொடர்பான புவிசார் அரசியல் போட்டி நிலைமாற்றம் அடையும். சீன ஆதிக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்படலாம். இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படலாம். அமெரிக்காவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதன் மூலம் அதன் பூகோள ஆதிக்க நலன் பேணப்படலாம்.

அதேவேளை, தமது நட்புசக்தியாக இருக்கக்கூடிய புதிய ஆட்சிக்கு நெருக்கடி வருவதனை தவிர்க்கும் முயற்சியில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும், இந்தியாவும் இணைந்து ஈடுபடும். அந்நாடுகளுக்கு தமிழர்கள் தேவைப்படாத நிலை உருவாக தமிழ் மக்கள் பற்றிக் கதைப்பதையும் கைவிட்டுவிடும். சர்வதேச விசாரனை இடைநடுவில் நின்று போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மூன்றாவது –

அரசியல் தீர்வு விடயத்தில் 13ஆம் திருத்தத்தினுள் நின்று கொள்ள வேண்டும் என்பதே மைத்திரிபாலவினதும், சோபித தேரரினதும், சந்திரிகாவினதும் நிலைப்பாடாகும். 13ஐயும் கொடுக்கக் கூடாதென்பது ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட பௌத்த அடிப்படைவாதிகளின் நிலைப்பாடாகும். 13ஐ தாண்டி ஏதும் கொடுப்பது பற்றி அரசுத் தலைவர் பேசுவாராகில் அவரை கதிரையில் ஏற்றிய பௌத்தவாதம் அவருக்கு எதிராக கொதித்தெழுந்து அவரை பதவியைவிட்டு தூக்கி எறியும். அவ்வாறான நிலை உருவாகினால் இந்திய மற்றும் மேற்குலக நட்புசக்தி ஆட்சியிழக்க மீண்டும் அதற்கு எதிராக சீன சார்பு சக்திகள் ஆட்சிப் பீடமேறும் நிலை உருவாகும்.

நான்காவது

ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் தமிழ் மேட்டுக்குடி அதனுடன் கொஞ்சத் தொடங்கும். தற்போது மஹிந்தர் தமிழ் மேட்டுக்குடியையும் புறக்கணித்து வருகிறார். அதனால், தமிழ்த் தேசிய அரசியலுடன் நிற்பதைத்தவிர அதற்கு வேறு தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் அது தமிழ் தேசிய அரசியலுக்கு எதிராகச் செயற்படத் தொடங்கும்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரை இன அழிப்பிற்கு நீதியும், இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணயமுடைய அரசியல் தீர்வும் மிக அவசியம். அந்த இரு விடயங்களிலும் எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்ய முடியாது. மைத்திரிபால தான் வென்றால் ராஜபக்‌ஷவிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை நடைபெற அனுமதிக்க மாட்டேன் என்று அடித்துக் கூறியுள்ளார். எனவே, புதிய ஆட்சியிலும் இனஅழிப்பிற்கு எந்த நீதியையும் எதிபார்க்க முடியாது. 13ஆவது திருத்தத்தினுள் முடக்க விரும்புவதால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் கிடைக்கப் போவதில்லை.

எந்தத் தரப்பு ஆட்சிக்கு வந்தாலும் அவர்களாக விரும்பி தமிழ் மக்களுக்கு எந்தவொரு அரசியல் தீர்வையும் வழங்கப்போதில்லை. பூகோள போட்டியூடாக சர்வதேச தரப்பு ஒன்று தமிழர்களை அங்கீகரிக்கும் நிலை ஒன்று உருவாவதன் மூலம் மட்டுமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு வழி பிறக்க முடியும்.

இந்நிலையில், சிங்கள தேசத்திற்கான தலைவர்களை தெரிவு செய்யும் தேர்தலில் தமிழ்த் தேசம் பங்கெடுப்பதன் மூலம் தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரக் கோரிக்கை நீர்த்துப் போவதைத் தவிர வேறு எதுவும் நடக்கப்போவதில்லை. இந்த யதார்த்த நிலைகளை புரிந்துகொண்டு வரப் போகும் தேர்தலில் தமிழ்த் தேசத்து மக்கள் ஒன்றில் தேர்லைப் புறக்கணிக்க வேண்டும் அல்லது தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களது அரசியல் கோரிக்கையை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும்.