படம் | படம் | The Associated Press Photo/Eranga Jayawardena, FOX NEWS

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் முதன்மையான இலக்கு, மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாகவும் அலரிமாளிகையில் அதிகாரம் செலுத்துவதை தடுப்பதாகும். இந்த ஒரு இலக்கிற்காகவே தென்னிலங்கையின் முரண்பட்ட சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டிருக்கின்றன. கடந்தமுறை சரத்பொன்சேகாவின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி இம்முறை மைத்திரிபாலவை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகிறது. மைத்திரிபால, தான் ஜனாதிபதியானால் நூறு நாட்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க உள்ளதாக வாக்குறுதி அளித்திருக்கின்றார். அரசியல்வாதிகளின் தேர்தல்கால வாக்குறுதிகளை நம்பி எந்தவொரு தீர்மானத்திற்கும் வரமுடியாது. எனவே, அதனை பொறுத்திருந்தே நோக்கவேண்டும்.

மேலும், இப்படியான வாக்குறுதிகள் இலங்கையின் வாக்காளர்களுக்கொன்றும் புதிதுமல்ல. தவிர, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்துவிடுவதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்துவிட முடியுமென்று நம்புவதும் கடினமான ஒன்றாகும். முன்னர் ஒரு முறை தனிப்பட்ட கலந்துரையாடல் ஒன்றின்போது சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டதாக ஒரு தகவலுண்டு. பிரச்சினை நபரல்ல, (அந்த நிறைவேற்றதிகார) கதிரைதான் பிரச்சினையாகும். உங்களின் சம்பந்தன் அந்த கதிரையில் இருந்தாலும் கூட, இதுதான் நடக்கும். முதலில் கதிரையை இல்லாமல்லாக வேண்டும். ஆனால், சந்திரிக்கா இரண்டு தடவைகள் தொடர்ச்சியாக அந்தக் கதிரையில் அமர்ந்திருந்தவர். ஆனால், அந்தக் கதிரையை அவரால் இல்லாதொழிக்க இயலவில்லை.

ஜே.ஆர். ஜெயவர்த்தனவால் உருவாக்கப்பட்ட அந்தக் கதிரையில் அமர்ந்திருந்த அனைவரும், அந்தக் கதிரையை முழுமையாக அனுபவிக்கவே விரும்பினர். எவரும் அதனை மாற்றியமைக்க முயலவில்லை. எனவே, இந்த நிலையில், மைத்திரிபால அதனைச் செய்வார் என்பதை எவ்வாறு நம்ப முடியும்?

எனவே, எதிரணியென்னும் பெயரில் ஒன்றுபட்டுள்ள தென்னிலங்கை சக்திகள் அனைத்தும் அந்த கதிரையை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றனரோ, இல்லையோ, ஆனால், ராஜபக்‌ஷக்களை இல்லாதொழிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றனர். ராஜபக்‌ஷக்களை இல்லாதொழிப்பதன் மூலமாகவே தங்களின் அரசியல் எதிர்காலம் உறுதிப்படுமென்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால், இந்த இடத்தில் தமிழ் மக்கள் கேட்கவேண்டிய கேள்விகள் என்ன? மைத்திரிபால அல்லது ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவார்களா? தென்னிலங்கையில் தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் உருவாக்கப்பட்டிருக்கும் நச்சு வளையத்தை இவர்களது ஆட்சியில் தகர்க்க முடியுமா? இந்தக் கேள்விகளின் அடிப்படையில்தான் தமிழ் மக்கள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில், தமிழ் மக்களின் அரசியல் அடித்தளமே இன்றைய தென்னிலங்கையின் கடும்போக்கில்தான் நிலைகொண்டிருக்கிறது. அந்த கடும்போக்கிற்கு ஆளும் மஹிந்த ராஜபக்‌ஷ, சர்வதேச சக்திகளுடன் முரண்பட்டு நிற்பது மட்டுமே ஒரேயொரு காரணமாகும். மஹிந்தவின் கடும்போக்கை கருத்தில் கொண்டே தமிழர் விவகாரம் சர்வதேச அரங்கில் பேசுபொருளானது. இதனை இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸின் வார்த்தையில் கூறுவதானால், ஒவ்வொரு வருடமும் இலங்கை, ஜக்கிய நாடுகள் சபையுடன் போராட வேண்டியிருக்கிறது. அதாவது, இலங்கை அரசு நெருக்கடியில் இருக்கிறது. அந்த வகையில் நோக்கினால் நெருக்கடிகளிலிருந்து தப்புவதற்காக பல்வேறு விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைய அரசிற்கு நிச்சயம் ஏற்படும். நெருக்கடிகள் அதிகரிக்க, அதிகரிக்க ஒரே கோட்டில் பயணிக்க முடியாது. அவ்வாறு பயணித்தால் அதன் இறுதி விளைவு அவர்களின் சர்வநாசமாகும். ஆளும் மஹிந்த அரசு இப்படியொரு நிலையில்தான் இருக்கிறது.

ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷவின் இடத்தில் மைத்திரிபால அமர்ந்தால், நிலைமைகள் அனைத்தும் முற்றிலும் மாறிவிடும். சர்வதேச சக்திகளின் விருப்பங்களுக்கு ஏற்ப புதிய அரசு நடந்துகொள்ளும் பட்சத்தில் இதுவரை இலங்கை தொடர்பில் நிலவிவந்த முரண்பாடுகள் அனைத்தும் காணாமல் போய்விடும். ஆனால், சிலர் வாதிடலாம், “புதிய அரசு ஆட்சிபொறுப்பை ஏற்றால் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும். அதன் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு” என்று. இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. அப்படியே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட, அவர்களுக்கு வழங்கும் தண்டணை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அது வெறுமனே மனித உரிமை மீறலுக்கான தண்டணை என்னும் அளவில் மட்டுமே கவனிப்பைப் பெறும். இங்கு பிறிதொரு விடயத்தையும் தமிழர்கள் கவனிக்க வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை வழிநடத்திய இராணுவத் தளபதியான பொன்சேகா, தற்போது எதிரணியில் இருக்கிறார். இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அதற்கான தண்டணையை பெறுபவர்களில் நிச்சயம் பொன்சேகாவும் இருப்பார். எனவே, பொன்சேகாவையும் புதிய அரசு சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்குமா? எனவே, விடயம் ஆட்சி மாறினாலும் கூட இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை புதிய அரசும் ஏற்கப்போவதில்லை. வேண்டுமானால் உள்நாட்டிற்குள் ஒரு நம்பகமான விசாரணையை செய்யப்போவதாக புதியதொரு வாக்குறுதியை வழங்கி, அதற்கான சில நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடும். மைத்திரிபால தான் அதிகாரத்திற்கு வந்தால், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவேன் என்று குறிப்பிட்டிருப்பது இத்தகையதொரு பின்னணியை கொண்டதென்றே நான் கருதுகிறேன். ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீண்டும் விடயங்கள் அனைத்தும் ஆரம்பத்திலிருந்து உச்சரிக்கப்படும்.

பிறிதொரு விடயத்தையும் இந்த இடத்தில் தமிழர்கள் கருத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது. தென்னிலங்கையில் ஆட்சி மாற்றம் தொடர்பான விவாதங்களில் எங்குமே தமிழர் பிரச்சினை ஒரு விடயமாக நோக்கப்பட்டிருக்கவில்லை. அதனை பின்னர் பார்த்துக் கொள்வோம் என்றவாறானதொரு கருத்தே எல்லோராலும் உச்சரிக்கப்படுகிறது. இன்றைய சூழலில் தமிழர் விவகாரம் தொடர்பில் வெளிப்படையாக பேசினால், தென்னிலங்கையின் இனவாத சக்திகளுக்கு அது வாய்ப்பாகிவிடும். எனவே, அதனை இப்போது பேசுவது உசிதமானதல்ல என்பதே எதிரணித் தரப்பினரது மறைமுக வாதமாக இருக்கிறது. தமிழர் தரப்பிலும் அப்படியொரு பார்வையுண்டு. ஆனால், தமிழர் பிரச்சினையை வெளிப்படையாகப் பேச முடியாதென்று கூறும் அனைவரும், தமிழ் மக்களின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதாவது, தமிழர்களின் வாக்குகள் தேவை, ஆனால், அவர்களின் பிரச்சினை தேவையில்லை.

இந்த இடத்தில் எழும் கேள்வி, தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தலைமையால் அல்லது தலைவர்களால் எவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க முடியும்? சிங்கள மக்களின் முன்னால் உண்மைகளை மறைத்து வாக்குகளை பெற்ற பின்னர் தமிழ் மக்களின் விவகாரம் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைளை மேற்கொள்ள முடியுமா? இதற்கு சிலர் சொல்லும் பதில், எதிரணியில் சந்திரிக்கா இருக்கிறார், அவர் விடயங்களை தமிழ் மக்களுக்கு சாதகமாக மேற்கொள்வார். ஆனால், ஒருவேளை ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் புதிய அரசில் சந்திரிக்கா தீர்மானிக்கும் ஒருவராக இருப்பார் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. எனவே, சந்திரிக்காவின் வாக்குறுதிகளை நம்பி கூட்டமைப்பு முடிவெடுப்பதும் உசிதமான ஒன்றல்ல. இங்கு முக்கியமாக குறித்துக்கொள்ள வேண்டிய விடயம், இதுவரை மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு ஆதரவு வழங்கிவந்த ஹெல உறுமய, மைத்திரிபாலவிற்கு ஆதரவு வழங்கும் முடிவை அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது ஹெல உறுமய, ராஜபக்‌ஷவின் யுத்தத்திற்கு பெரும் ஆதரவாக இருந்தது. எவ்வகையிலாவது புலிகளை அழிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தது. அதன் பின்னர் ராஜபக்‌ஷவின் ஆட்சியில் செல்லப்பிள்ளையாக இருந்துவந்த ஹெல உறுமய, தற்போது முரண்படுவதற்கு பின்னாலுள்ள உண்மையான காரணங்கள் என்வென்பதும் எவரும் அறியார். இந்த நிலையிலேயே ஆளும் அரசிலிருந்து முரண்பட்டு வெளியியேறியதுடன், ஆட்சி மாற்றத்திற்கும் ஹெல உறுமய ஆதரவு வழங்கி வருகிறது.

தற்போதிருக்கிற தென்னிலங்கை இனவாத சக்திகள் மத்தியில் மிகவும் வலுவானதும், தமிழர் விரோத சிந்தாந்த பின்னணியையும் கொண்டதுமான ஹெல உறுமயவின் பங்களிப்பில் ஒரு ஆட்சி மாற்றம் நிகழுமாயின், வரவுள்ள புதிய அரசு தமிழர் விவகாரம் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதை ஹெல உறுமய அனுமதிக்குமா? ஒருவேளை ஒரு ஆட்சிமாற்றத்திற்கான வாய்ப்பு தென்படுவதாக உணர்ந்ததன் காரணத்தினால் கூட, ஹெல உறுமய எதிரணிக்கு ஆதரவு வழங்கும் முடிவை எடுத்திருக்கலாம். ஏனெனில், வலுவான இந்திய எதிர்ப்பு, அதன் ஊடாக இந்தியாவின் அணுசரனையில் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிரான நிலைப்பாடு, அதன் மூலம் தமிழ் மக்களுக்கு சாதகமாக அதிகாரப் பகிர்வு வழங்குவதற்கான எதிர்ப்பு என்னும் வகையில் ஒரு தெளிவான அரசியல் நிகழ்ச்சி நிரலை கொண்டிருக்கும் ஒரே தென்னிலங்கை அமைப்பு ஹெல உறுமயவாகும். எனவே, ஹெல உறுமய கூட்டின் மூலம் பெறப்படும் வெற்றியின் கீழ் தமிழ் மக்களின் பிரச்சினை மீண்டும் இரண்டாம் பட்சமாக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்று கூறிவிட முடியாது. எனவே, தமிழ் மக்களை பொறுத்தவரையில் விடயங்களை பல கோணங்களிலும் அலசி ஆராய்ந்து முடிவெடுப்பதே புத்திசாதுர்யமான முடிவாகும். ஏனெனில், ஆட்சி மாறியதும் மீண்டும் தமிழ் மக்கள் புதிய தென்னிலங்கையை அன்னார்ந்து பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அத்தகைதொரு சூழலில், இன்று ஜனநாயகம், நல்லாட்சி, சட்டவொழுங்கு என்றெல்லாம் பேசும் தென்னிலங்கையின் புத்திஜீவிகள், மனித உரிமை வாதிகள் எவரும் தமிழர்களுக்காக பேசப் போவதில்லை. தமிழர்கள் நம்பவேண்டியது, தங்களின் தந்திரோபாயம், தங்களின் புத்திசாலித்தனம் ஆகியவற்றை மட்டுமே!

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.