படம் | The Associated Press Photo/Eranga Jayawardena, FOX NEWS

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல், ஈழத்தமிழரின் அரசியல் தளத்தில் முக்கியமானது. இங்கு போட்டியிடும் இரு வேட்பாளர்களும் இனவாத சிங்கள மேலாதிக்கத்தினையே மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர். எதிர்கட்சி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு விமோசனமான தீர்வினை முன்வைக்கவில்லை. மாறாக சிங்கள – பௌத்த தீவிரவாதத்துடன் அதாவது, ஜாதிக ஹெல உறுமய உடன் கூட்டு வைத்து உள்ளார். இது இலங்கை அரசியல் என்பது சிங்கள – பௌத்த தேசியவாதம் என்பதனையே எடுத்துக் காட்டுகின்றது.

இன்று பெரும்பான்மை வாக்குப்பலத்தில் நிறைவேற்று அதிகாரத்தினை பெற்று அதனைத் தக்கவைக்கும் உபாயத்திற்காக இனவாதத்தினை காலத்திற்கு காலம் தக்க வைப்பதே சிங்கள அரசியல்வாதிகளின் வழமை. ஒவ்வொரு தடவையும் ஆட்சிக்கு வரும் ஜனாதிபதிகளால் தமிழ் மக்கள் அதிக துன்பத்தினை அனுபவித்தனர். இதனை ஜே.ஆர்., பிரேமதாஸ, சந்திரிகா, மஹிந்த வரிசையில் காணலாம்.

தமிழ் மக்களிற்கு மஹிந்த ராஜபக்‌ஷ அரசினால் அதி உச்ச இன்னல் ஏற்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அது உலகிற்கு ஒரு ஜனநாயக மாற்றம் போல் தென்படும். தென்னிலங்கை சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபடும். மேற்கு நாடுகளதும் இந்தியாவினதும் விருப்பமும் இதுவே. ஆனால், ஈழத்தமிழர் களிற்கான நீதி பின்னோக்கித் தள்ளப்படும்.

ஈழத்தமிழர்கள் தமது அரசியல் தேவைகளை ஐந்து அம்சக் கோரிக்கைகளாக முன்வைக்கலாம். அதுவே சிறந்த ஜனநாயகப் பண்பாகும்.

அவையாவன:

  1. சிறையில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படல் வேண்டும்.
  2. வடக்கு – கிழக்கு இணைந்த சுயாட்சி அலகு வழங்கப்படல் வேண்டும்.
  3. 2008 – 2009 அழிவுகளுக்கு நீதி வழங்கப்படல் வேண்டும்.
  4. வட கிழக்கில் உள்ள இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்களமயமாதல் விலக்கப்படல் வேண்டும்.
  5. முஸ்லிம்களுக்கும், மலையகத் தமிழ் மக்களுக்கும் நிர்வாக அலகுகள் உருவாக்கப்படல் வேண்டும்.

இதனை இரண்டு பிரதான வேட்பாளர்களிடமும் கோர வேண்டிய கடமை தமிழ் மக்களுக்கு உள்ளது. இலங்கையில் உண்மையான அமைதி ஏற்பட மேற்கூறிய 5 கோரிக்கைகளுக்கும் நீதியான தீர்வு வழங்கப்படும்.

தமிழர்களது உரிமைப் போராட்டம் ஜனநாயக ரீதியில் தொடர இத்தகைய கோரிக்கைகள் இன்றியமையாதவை ஆகும்.

இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகள் அரசியல் மாற்றத்தை விரும்புகின்றனர். சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் அரசியல் மாற்றத்தை விரும்புகின்றனர். சர்வதேச ரீதியில் இந்தியாவும் மேற்குலகும் அரசியல் மாற்றத்தை விரும்புகின்றன. ஆனால், ஈழத்தமிழர்களை பொறுத்தவரையில் அரசியல் மாற்றம் தங்களுக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதனையே உணர்கின்றனர். ஏனெனில், தமிழ் மக்கள் அதி உச்ச அடக்குமுறையிலேயே வாழ்கின்றனர். இதைவிட உச்ச அடக்கு முறையினை இனிமேல் எதிர்கொள்ள வேண்டிய நிலை இல்லை. எனவே, தமிழ் மக்கள் இத்தேர்தலில் தமது குறைந்தபட்சக்; கோரிக்கையாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை முன்வைக்கலாம்.

இத்தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்களும் சுமார் 45 வீத வாக்குகளைப் பெறக்கூடிய சூழல் உள்ளது. இந்நிலையில், தமிழ் மக்களின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்க கூடியதாக அமையும்.