படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் கருத்தில் கொள்வதாக இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி ஆட்சியை கைப்பற்றுவது பேன்ற விடயங்களில் மாத்திரமே கவனம் செலுத்துப்படுகின்றது. அபிவிருத்தி என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். ஆனால், பெருந்தெருக்கள், அதிவேகச் சாலைகள், துறைமுக நகரம் என்ற பெரிய வேலைத் திட்டங்களை நோக்கியதாகவே அபிவிருத்தி காணப்படுகின்றது. சாதாரண மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
கட்சிகளின் சந்திப்புகள்
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தினமும் சந்தித்து உரையாடுகின்றன. தங்கள் பலத்தை எப்படி நிரூபிப்பது என்பதில் அரசும் எதிரணிகளும் ஏட்டிக்குப்போட்டியாக செயற்படுகின்றன. மக்கள் தாங்கள் கூறுவதை ஏற்று வாக்களிப்பார்கள் என இவர்கள் நம்புகின்றனர். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இலங்கையில் அரசியல் கட்சிகள் தோன்றிய 1935ஆம் ஆண்டில் இருந்து இந்த அரசியல் கட்சிகள் இவ்வாறுதான் செயற்படுகின்றன என்பதற்கு உதரணங்கள் உண்டு. மக்களுக்கு வழங்கப்படுகின்ற வாக்குறுதிகளில் 70 சதவீதமானவை நிறைவேற்றப்படுவதில்லை என முன்னாள் அமைச்சர் ரொனி டி மெல் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
ஆக, மக்களை முட்டாள்களாக்கும் வாக்குறுதிகளும் செயற்பாடுகளும்தான் அரசியல்வாதிகளிடம் விஞ்சிக் காணப்படுகின்றன. இங்கு மக்கள் பிரச்சினைகள் என்பதை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று – தேசிய இனப்பிரச்சினை. இரண்டாவது – வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வாழும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள். இரண்டாவதில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் அடங்குகின்றனர். இனப்பிரச்சினை என்பது பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று வரை அது தொடருகின்றது. இரண்டாவதாக கூறப்பட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் என்பது ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற முறையில் தொடர்ந்து கொண்டே போகின்றது. ஆனால், அரசியல் கட்சிகள் எந்த காலகட்டத்திலும் தங்கள் அதிகாரத்தை தக்கவைப்பதில்தான் கவனத்தை செலுத்தி வந்தனர்.
இனப்பிரச்சினைத் தீர்வு
இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட இரண்டு அரசியல் யாப்புகளும் இந்த நாடு பல்லிண சமூகத்திற்குரியது என்பதை ஏற்றுக் கொண்டதா என்பது விவாதத்திற்குரியது. சிங்கள மக்கள் அல்லாத சமூகத்தினர் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிகளை வகிக்க முடியும் என்பதற்கான ஏற்பாடுகள் கூட சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் – முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கில் அவர்களுக்கான நிர்வாக கட்டமைப்பு முறைகளும் யாப்பில் ஒழுங்காகக் கூறப்படவில்லை. ஆகவே, தேசியக் கட்சிகள் என கூறப்படுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் மாறி மாறி ஆட்சிபுரிந்தாலும் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் மாநில அரசு ஒன்று சுயமாக இயங்க வேண்டும் என்ற கருத்தை நிராகரித்தே வந்தனர்.
அதன் வெளிப்பாடுகள்தான் இன்று அவர்கள் அரசியல் ரீதியாக எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள். ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்குவது என்ற வாக்குறுதிகளை ஏதோ ஒரு வேட்பாளர் முன்வைப்பார். ஆனால், பதவிக்கு வந்ததும் அது நடப்பதில்லை. இம்முறை மைத்திரிபால சிறிசேன தெளிவாகக் கூறுகின்றார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட எதிரணி அந்த விடயத்தில் உறுதியாக உள்ளது. ஆனால், 1994இல் நிறைவேற்று அதிகார முறையை நீக்குவேன் என சந்திரிக்கா வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவைக் கொண்டு நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்க முற்படுவது எந்தளவில் சாத்தியம் என்ற கேள்விகள் எழுகின்றன.
சம்பந்தனுடன் சந்திப்பு
இந்த இடத்தில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உறுதிமொழிகளும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா – ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் சந்திரிக்காவும், ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்துப் பேசியுள்ளனர். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும் வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபை முறையை உறதிப்படுத்துவது மற்றும் 13 பிளஸ் உள்ளிட்ட காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பான உறுதிமொழிகள் வழங்கப்பட்டது எனவும், ஆனால் தேசிய அரசில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அமைச்சுப் பதவி என்பதை சம்பந்தன் நிராகரித்தார் எனவும் தெரிய வருகின்றது.
அதேவேளை, வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் மற்றும் சிங்கள குடியேற்றங்கள் போன்றவற்றை நிறுத்த வேண்டும் என சம்பந்தன் சந்திரிக்கா – ரணில் ஆகியோரிடம் வலியுறுத்தினார் எனவும், அதற்கு தேசிய பாதுகாப்பு என்ற விவகாரம் முன்வைக்கப்பட்டதாகவும் கூறுப்படுகின்றது. பொதுவேட்பாளர் யார் என்பது தெரிவதற்கு முன்பாகவே சந்திரிக்காவும் ரணிலும் சம்பந்தனை சந்தித்து பேசினார்கள் என்றும் – மைத்திரிபால சிறிசேனதான் பொது வேட்பாளராக வருவார் என்ற விடயம் கூட முதலில் சந்திரிக்கா, ரணில், சம்பந்தன் ஆகியோருக்கு மாத்திரமே தெரியும் என்றும் – உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. ஆகவே, கடந்த காலங்களில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளைப் போலன்றி இம்முறை தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு சாத்தியப்படக்கூடிய நல்ல விடயங்கள் நடக்கும் என சம்மந்தன் நம்பக்கூடும்.
சாதாரண மக்கள் பிரச்சினை
அதேவேளை, இனப்பிரச்சினை தீர்க்கப்படாமையினால்தான் பொருளாதார ரீதியான நெருக்கடிகளை அனைத்து மக்களும் எதிர்நோக்குவதாகவும் அந்த பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்திவிட்டால் பொருளாதார அபிவிருத்தியுடன் சாதாரண மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டுவரமுடியும் என சந்திரிக்கா மூத்த அரசியல் தலைவர்களுடன் பேசினார் என்றும் அறிய முடிகின்றது. தனது 11 ஆண்டுகால ஜனாதிபதி பதவிக்காலத்தில் செய்யமுடியாத விடயங்களை மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி செய்ய முடியும் எனவும், ரணில் விக்கிரமசிங்க அதற்கு ஒத்துழைப்பு வழங்குவார் எனவும் சந்திரிக்கா அதிகமாக நம்புகின்றார் போல் தெரிகின்றது.
ஆனால், இனவாத அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற சிந்தனை இருந்தாலும், அதற்கு ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் எந்தளவுக்கு இடம்கொடுக்கும் என்ற கேள்விகள் எழுகின்றன. அதேவேளை, எதுவாக இருந்தாலும் சிங்கள அரசியல்வதிகளை காலம்காலமாக நம்பி ஏமாந்த வாரலாறு சம்பந்தனுக்கு நன்கு தெரியும். இருந்தாலும் இன்றைய சர்வதேச நிலைமை, உள்ளூர் அரசியல் செயன்முறைகளை கருத்தில் கொண்டு சில விடயங்களில் சம்பந்தன் இணக்கத்தை வெளியிட்டிருக்கலாம். ஆனாலும், தேசிய இனம் என்ற அடையாளத்தையும் தமிழ் மக்களுக்கான இறைமை அதிகாரம் என்பதிலும் அறிவு நிலைசார்ந்து மேலும் கூடுதலாக உழைக்க வேண்டிய கடப்பாடு தமிழ் தரப்புக்கு நிறையவே உண்டு.
அ. நிக்ஸன்