படம் | Asiantribune

“நம்பப்படுபவரிடம் இருந்து தமக்கு நல்ல விடயங்கள் அல்லது சாதகமான விளைவுகள் கிடைக்கப்பெரும் என்ற எதிர்பார்பே நம்பிக்கை” என்று தார்மீக தத்துவவாதி அனெட் பேயர் வரைவிளக்கணப்படுத்துகிறார். பேராசிரியர் பிபா நொரிஸ், நம்பிக்கையை சமூக நம்பிக்கை மற்றும் அரசியல் நம்பிக்கை என்று இரண்டாக வகைப்படுத்துகிறார். இங்கு ஒருவர் தனது உறவினர், நண்பர், சுற்றத்தார் தொடர்பாக கொள்வது சமூக நம்பிக்கை. ஆட்சி, அரசு, அரசியல்வாதிகள் மற்றும் அரச நிறுவனங்கள் தொடர்பில் கொள்வது அரசியல் நம்பிக்கை. இந்த அரசியல் நம்பிக்கை ஜனநாயக ஆட்சி முறையின் முக்கியமான ஒரு அம்சமாகும்.

மிக எளிமையாக ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களினால் நடாத்தப்படும் மக்களின் ஆட்சி என்று வரைவிளக்கணம் உள்ளது. மேலும், ஜனநாயக ஆட்சி என்பது பிரதிநிதித்துவ ஜனநாயக ஆட்சியையே. தகுதி உள்ள அனைத்து பிரஜைகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தம்மை ஆளும் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் பங்கெடுக்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. தாம் தெரிவு செய்யும் பிரதிநிதிகள், தமது விருப்பு – வெறுப்புகளை, அபிப்பிராயங்களை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள், தமது சார்பில் தமக்காக குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் பங்கெடுக்கிறார்கள் என்று கொள்ளப்படுகிறது.

உலக நாடுகளில் பெரும்பான்மையானவை ஜனநாயக ஆட்சி முறையினை கொண்டுள்ளன. போதிலும், அவை அத்தனையும் வேறுபட்ட வடிவிலானவை. இது ஜனநாயகத்தின் சிறப்பம்சமாக இருந்தாலும், ஜனநாயத்தின் அளவு அல்லது தரம் எனும் போது அதனை அளவிடுவது மற்றும் ஒப்பிடுவது என்பது சிக்கலான ஒரு விடயமாக காணப்படுகிறது. இருப்பினும், சில ஜனநாயக அம்சங்களை கற்பதன் மூலம் ஜனநாயகத்தினை அளவிடும் முறை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அம்சங்கள் தேர்தல் நடைமுறை, அரசியல் பங்குபற்றல், அரசியல் கலாச்சாரம், சிவில் சுயாதீனம் மற்றும் அரச நிறுவனங்களின் செயற்பாடு என்பனவாகும். இதன் அடிப்படையில், ஜனநாயக நாடுகளில் ஜனநாயகத்தை அளவிட மற்றும் ஒப்பிட பல்வேறு வகையான அளவுகோள்கள் காணப்படுகின்றன.

மலையக மக்களின் “வீட்டு வாடகை அல்லது வீட்டுக்கான கொடுப்பனவு” தொடர்பான் தாக்கம் (6.4%) மிகவும் குறைவாக இருப்பதன் காரணம் அவர்களின் குடியிருப்பு, தோட்டம், லயம் என்ற ஒரு பெரிய பிரச்சினைக்குள் அவர்கள் இருப்பதே. மலையகத் தமிழர்களில் ஐந்தில் மூன்று பங்கினர் தேவைப்பட்ட போதிலும் மருந்து அல்லது மருத்துவ சிகிச்சையின்றியும், தாம் கொள்வனவு செய்யும் உணவின் அளவு அல்லது தரத்தினைக் குறைத்துக் கொண்டும் உள்ளனர். நாளொன்றுக்கு தாம் உட்கொண்டு வந்த உணவு வேளைகளைக் குறைத்த மலையகத் தமிழர்கள் ஐந்தில் இரண்டு பங்கினர்.

இலங்கையில், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கணக்கெடுப்பு ஆய்வுப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் (Social Indicator) நடாத்தப்படுகின்ற “இலங்கையில் போருக்கு பின்னரான ஜனநாயகம்” எனும் ஆய்வு இலங்கையில் ஜனநாயகத்தின் தன்மையினை அளவிடும் முயற்சியாக அமைகிறது. 2014 செப்டெம்பர் மாத இறுதியில் இந்த ஆய்வின் மூன்றாவது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வானது, 2014 ஜூன் 9 முதல் ஜூலை 31 வரையான காலப்பகுதியில 1,900 மாதிரிகளுடன் நேருக்கு நேரான பேட்டி அடிப்படையில் இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தேசிய மற்றும் இன ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ளன.

கீழே அட்டவனை – 1, அரச நிறுவனங்கள் மீதான இலங்கை மக்களின் நம்பிக்கை தொடர்பான ஆய்வு முடிவு புள்ளிவிபரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில், தேசிய ரீதியில் அரச நிறுவனங்கள் மீதான நம்பிக்கை அதிகமாகவே காணப்படுகிறது. இந்த நம்பிக்கையை இன ரீதியாக பார்க்கிற போதும், பொதுவாக சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் இடையில் அதிக வேறுபாடு காணப்படவில்லை. குறிப்பிடத்தக்க வகையில், சில நிறுவனங்கள் தொடர்பில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையை விட சிறுபான்மையினரின் நம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்த ஆய்வில் மத்திய, தேசிய அரசு, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள், அரச சேவைகள், பொலிஸ், இராணுவம், நீதிமன்றங்கள், நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகிய நிறுவனங்கள் தொடர்பில் மக்களின் நம்பிக்கை பற்றி ஆராயப்பட்டது. மலையகத் தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒப்பிடுகையில், இராணுவம் தவிர மற்றைய அனைத்து நிறுவனங்கள் மீதும் சிங்களவர்களையும் பார்க்க மலையகத் தமிழர்கள் அதிக நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Capture

நம்பிக்கை தொடர்பான அளவீடுகள் அப்படி இருக்க, இந்த ஆய்வில் அனுபவம் சார் விடயமாக கடந்த 12 மாதங்களில் நீங்களோ அல்லது உங்களது குடும்பத்திலுள்ள யாரேனுமொருவரோ செலவுகளைச் சமாளிப்பதற்காக, மருந்து அல்லது மருத்துவ சிகிச்சையின்றி இருத்தல், உங்களது வாடகை அல்லது வீட்டுக்கான கொடுப்பனவைத் தாமதப்படுத்தல், நாளொன்றுக்கு நீங்கள் உட்கொண்டு வந்த உணவு வேளைகளைக் குறைத்தல் மற்றும் நீங்கள் கொள்வனவு செய்யும் உணவின் அளவு அல்லது தரத்தினைக் குறைத்தல் போன்றவற்றை செய்ததுண்டா என்ற கேள்விக்கு மக்கள் வழங்கிய பதில்களின் இன ரீதியான முடிவுகள் வரைபு – 1 தரப்பட்டுள்ளது.

மலையகம்

மேற்படி வரைபு – 1இன் படி, ஒப்பீட்டளவில் பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களாக மலையக தமிழர் உள்ளர். மலையக மக்களின் “வீட்டு வாடகை அல்லது வீட்டுக்கான கொடுப்பனவு” தொடர்பான் தாக்கம் (6.4%) மிகவும் குறைவாக இருப்பதன் காரணம் அவர்களின் குடியிருப்பு, தோட்டம், லயம் என்ற ஒரு பெரிய பிரச்சினைக்குள் அவர்கள் இருப்பதே. மலையகத் தமிழர்களில் ஐந்தில் மூன்று பங்கினர் தேவைப்பட்ட போதிலும் மருந்து அல்லது மருத்துவ சிகிச்சையின்றியும், தாம் கொள்வனவு செய்யும் உணவின் அளவு அல்லது தரத்தினைக் குறைத்துக் கொண்டும் உள்ளனர். நாளொன்றுக்கு தாம் உட்கொண்டு வந்த உணவு வேளைகளைக் குறைத்த மலையகத் தமிழர்கள் ஐந்தில் இரண்டு பங்கினர். ஒப்பீட்டளவில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளை கவனத்தில் கொண்டால் மலையக தமிழர்களின் நிலைமை மிகவும் பின்தங்கியே காணப்படுகிறது என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. முக்கியமான அரச நிறுவனங்களுடனான தொடர்பு மிகவும் குறைந்த மக்களாக அல்லது அரச நிறுவனங்களின் சேவை மிகவும் குறைந்தளவு கிடைக்கும் மக்களாக, சில சந்தர்ப்பங்களில் கிடைக்காத மக்களாக மலையகத் தமிழ்கள் இருக்கின்றனர்.

இருந்த போதும் அரச நிறுவனங்கள் தொடர்பில் மலையக மக்களில் நம்பிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாகவே காணப்படுகிறது. இந்த முரண்பாடான நிலைமை ‘ஏன்?’ என்று பார்ப்பது முக்கியமான விடயமாக இருப்பினும், அதை அந்த விடயம் சார் ஆர்வலர்களுக்கு தற்போதைக்கு விட்டுவிடுவோம். இங்கு நாம் கவனம் செலுத்த முற்படும் விடயம் ஜனநாயகம். அரசியல் நம்பிக்கை என்பது ஜனநாயக ஆட்சியில் ஒரு முக்கியமான விடயமாக இருக்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியலில் அரசியல் நிறுவனங்கள் சட்டபூர்வ தன்மையை அடைய நம்பிக்கையே அதிக பங்கு வகிக்கிறது. ஆனால், ஜனநாயகம் மற்றும் நம்பிக்கை என்பன முரண் தொடர்பு கொண்ட வியடங்களாகும். அதிக ஜனநாயகமே அதிக நம்பிக்கையாக வெளிப்படுவதாக கொள்ளப்படுவதில்லை. தவிரவும் சிறந்த ஜனநாயகத்தின் உள்ளார்ந்த விடயமாக ‘நம்பிக்கையின்மை’, குறிப்பாக அரசியல் நிறுவனங்கள் மீதான நம்பிக்கையின்மை காணப்படுகிறது. ஆக, நம்பிக்கையின்மையே ஆரோக்கியமான ஜனநாயகம். இந்த முரண்பாடு தொடர்பில் மலையக தமிழர்கள் தெளிவு பெருதல் காலத்தின் அவசியம்.

அரச நிறுவனங்களில் அதிக நம்பிக்கையுடைய மலையகத் தமிழர் வாழும் மலையகத்தின் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான தோட்ட லயங்களில் ஏழு லயங்கள் அண்மைய கொஸ்லந்தை மண்சரிவில் அப்படியே புதையுண்டு போயின. இந்த அனர்த்தம் அனைத்து தரப்பினரது கவனத்தையும் மலையகத்தின் மீது குவியப்படுத்தியது. இதன் விளைவாக இதுவரைக்காலம் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் போன்றவற்றின் காலடியில் மலையக சமூகம் புதையுண்டு இருக்கிறது என்ற விடயத்தை மண்சரிவிற்கு பின்னரான நிலைமை சிறிது சிறிதாக வெளிக்கொண்டு வந்துகொண்டிருக்கின்றன. முக்கியமாக ஊடகங்கள், மலையக மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிக நேரம், இடம் ஒதுக்கின. அந்த வரிசையில் பி.பி.சி. தமிழ்ச் சேவை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை பேட்டி கண்டது. பேட்டியில் ஒரு இடத்தை அப்படியே பார்ப்போம்.

பி.பி.சி. தமிழ்ச் சேவை: இந்த மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் ஏன் நீங்கள் பேசுவதில்லை?

ஆறுமுகம் தொண்டமான்: பேசினால் உடனே கிடைத்திடுமா? நாடாளுமன்றத்தில் பேசுறது லேசா, ஜனாதிபதியோட பேசி வாங்குறது பெட்டரா (நல்லதா)? உங்களுக்கு காரியம் நடக்கனும். அதை எப்படி நடத்தனுங்குறத நாங்க முடிவு பன்னுவோம்.

பி.பி.சி. தமிழ்ச் சேவை: இந்த மக்கள், உங்களை தேர்தலில் தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறார்கள். அந்த நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்பச்சொல்லித்தானே?

ஆறுமுகம் தொண்டமான்: அங்க என்ன எழுப்பனுமோ அதை நாங்க எழுப்பிக்கிருவம். மக்களுக்கு எப்படி கொண்டுவந்து சேக்கனுங்குறது, தலைமைத்துவங்குறது நாங்க முடிவு பன்னுவோம்.

இந்தப் பேட்டி, மலையக தமிழர்கள் அனுபவிக்கும் ஜனநாயகத்தின் தன்மையை நன்கு வெளிப்படுத்துவதாக அமைகிறது. ஜனநாயகம், தேர்தல், நாடாளுமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர், மக்களின் பிரதிநிதி போன்ற அத்தனை கோட்பாடுகளும் செயலற்றுப் போயுள்ளன. இந்த விடயம் மலையகம் சார்ந்து வெளிப்பட்டுள்ள போதிலும், முழு நாட்டிற்கும் பொதுமையானது. மேலும், இது மிக முக்கியமான அடிப்படை கட்டமைப்புப் பிரச்சினை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், நம்பிக்கையின்மையை கொண்டு ஜனநாயகத்தை பாதுகாக்க முற்படவேண்டும்.

மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி