படம் | AP PHOTO/Eranga Jayawardena, Scmp
எம்மில் சட்டத்தரணிகள் அல்லாத அனேகர்களுக்கு சட்டங்கள் என்றாலே கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருக்கும். யாராவது சட்டத்தின் இந்த உறுப்புரை இந்தப் பகுதி என்றவுடனேயே தமது மூளையின் ஸ்விட்சை அணைப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். சட்டங்களை வாசித்தறிவது சாதாரண மனிதர்களுக்கு இலகுவான காரியமல்ல என்றாலும், சட்டங்கள் எமது அன்றாட சமூக அரசியல் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காரணி என்கின்ற ஒரே காரணத்தினால் நாம் எல்லோருமே அவற்றைப் படித்து விளங்கிக் கொள்வது அவசியமாகின்றது. குறிப்பாக எமது அரசியலமைப்புச் சட்டத்தினை நாம் அனைவரும் அறிந்து கொள்வது பிரஜைகள் என்ற வகையில் எமது கடமையுமாகும். எமது நாடு எவ்வாறு நிர்வகிக்கப்படவேண்டும் என வரையறுக்கும் சட்டமல்லவா அது? எமது இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாததற்கான முக்கிய காரணியாகவும் இது இருக்கின்றது. எமது அரசியலமைப்புச் சட்டத்தினை அதன் உள்ளார்ந்த உணர்வு (spirit of the constitution) உட்பட முழுமையாக மாற்றியமைத்தாலேயொழிய சிங்கள – தமிழ் – முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு கட்டியெழுப்பும் ஒரு நாடாக இலங்கை ஒருபோதும் வர இயலாது. அதிலும் ஓர் அரசியலமைப்புச் சட்டமானது, அதன் உரித்தாளர்களாகிய பிரஜைகள் அனைவரும் பங்கேற்று உருவாக்கும் ஆவணமாக இருக்க வேண்டும். அதனாலேயே அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான சகல விடயங்களிலும் நாம் அக்கறை கொள்வது அவசியமாகும்.
இந்த வாரம் அந்த அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான முக்கியமான விவாதம் ஒன்று சட்ட வல்லுனர்கள் மத்தியில் ஆரம்பித்திருக்கின்றது. இதனை ஆரம்பித்து வைத்தவர் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் சில்வா ஆகும். 2014ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த ஆண்டின் ஆரம்ப காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தக்கூடும் என்கின்ற வதந்திகள் அதிகரித்த நிலையில், எமது அரசியலமைப்புச் சட்டத்தின் 18ஆம் திருத்தச் சட்டம் ஒருவர் எத்தனை தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்பட்டிருந்தாலும் இவரால் போட்டியிட முடியாது என்கின்ற குண்டைத் தூக்கிப் போட்டார். எமது அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 31 ஜனாதிபதித் தேர்தல்கள் எப்படி நடத்தப்படவேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றது. இதன்படி இந்த உறுப்புரையின் பகுதி 2ஆனது இருமுறை ஜனாதிபதிப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட எவரும் மூன்றாம் முறையாக தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிவிக்கின்றது. சரத் சில்வா முன்வைத்த விவாதம் என்னவென்றால், 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதியாகப் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்ட போதும், பின்பு 2010 செப்டெம்பர் மாதம் 18ஆம் திருத்தத்தினை மேற்கொண்டபோது 31 (2) இனை உள்வாங்கிக் கொண்டுதான் அத்திருத்தத்தினை அவர் மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது. எனவே, இந்த ஜனாதிபதி தான் பதவிக்கு வந்தது 18ஆம் திருத்தம் இல்லாத முன்னைய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் என்றபடியால் அவர் அந்த அரசியலமைப்பினைப் பாதுகாக்கவே கடமைப்பட்டிருக்கின்றார். அப்படிப் பார்த்தால் அவரோ சந்திரிகாவோ மூன்றாம் தடவையாகப் போட்டியிட முடியாது என்பதாகும். மீறி அப்படிப் போட்டியிட்டு வென்றால் ஒரு சர்வாதிகாரியாகவே அவர் கருதப்படவேண்டும் என்று விட்டார். சிக்கலான பொருள் விளக்கம் இல்லையா? சட்டம் ஒரு கழுதை (law is an ass) என்று இதனால்தான் கூறுகிறார்களோ?
சட்டம் கழுதையாக இருந்தாலும் இந்தக் கருத்து சட்டத்தரணிகள் மற்றும் தொழில் புரிவோர் மத்தியில் பல விவாதங்களை ஆரம்பித்து வைத்தது. சரத் இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் சமயம் பார்த்து இந்தக் கதையை வெளியிட்டார் என்று சொல்லவா வேண்டும்? இது ஜனாதிபதியை பெரிய சங்கடத்துக்குள் மாட்டி விட்டது. அவர் போட்டியில் வேட்பாளராகக் குதித்தவுடன் இதனை வைத்துக்கொண்டு யாராவது அவர் முடிவினை சவாலுக்குட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க முன்வந்தால்…? அது நீதிமன்றத்தில் தீர்மானம் ஆகும் வரையில் இவருடைய வேட்பாளர் நிலைமை இடை நிறுத்தி வைக்கப்பட்டு விடுமே. அதேபோல் அவர் தெரிவான பின்பும் யாராவது சட்ட நடவடிக்கை மூலமாக சேட்டை விட்டால்…? எனவே, கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி உயர் நீதிமன்ற பதிவாளரிடமிருந்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. பத்திகைகளிலெல்லாம் வெளிவந்த இக்கடிதத்தில் ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் இரு சந்தேகங்கள் தொடர்பாக ஆலோசனை கேட்டிருக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி முன்வைத்த கேள்விகளாவன, தான் பதவியேற்ற காலத்திலிருந்து நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதித் தேர்தல்களைப் பிரகடனம் செய்வதற்கு ஏதேனும் தடைகள் இருக்கின்றனவா என்பதும், தான் மூன்றாம் தடவை தேர்தல்களில் பங்குபற்றுவதற்குத் தடைகள் ஏதேனும் இருக்கின்றனவா என்பனவாகும். யாராவது சில சட்டத்தரணிகள் கொண்டு அவசரம் அவசரமாக ஏதேனும் ஒன்றை எழுதுவித்துப் பின் பிரதம நீதியரசரைக் கொண்டு தனக்கு சாதகமாக ஒரு ஆலோசனையை எடுத்துக்கொண்டால் பிறகு என்ன சட்ட நடவடிக்கை வந்தாலும் அதனைக் காட்டித் தப்பித்துக் கொள்ளலாம் என்று ஜனாதிபதி சிந்தித்திருக்கின்றார். ஆனால், அவருக்கு சட்ட ஆலோசனை கொடுத்த வல்லுனர்கள் இவரின் சாணக்கிய தந்திரத்துக்கு ஈடாக செயற்படவில்லை போலத் தெரிகின்றது.
உயர்நீதிமன்றம் “ஏதேனும் தடைகள் இருக்க முடியுமா?” எனத் தெளிவற்ற கேள்வியை ஆராய முடியாது. குறிப்பிட்ட விடயத்தைத்தான் ஆராயலாம் என்று ஆரம்பித்தார் ஒரு சட்டத்தரணி. கலாநிதி ரீஸா ஹமீட் என்னும் சட்ட நிபுணரானவர் இன்னும் ஆணித்தரமான விவாதத்தினை முன்வைத்தார். ஜனாதிபதி கேட்கும் இந்த ஆலோசனையானது எமது அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 129 (1) இன்படி கேட்கப்பட்டிருக்கின்றது. இந்த உறுப்புரை கூறுவதாவது, பொதுமக்களுக்கு மிகவும் முக்கியமான ஏதேனும் கேள்வி பற்றி உயர் நீதிமன்றத்திடமிருந்து ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்ற சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி ஆலோசனை கேட்கலாம் என்பதே (which is of such a nature and of such public importance that it is expedient to obtain the opinion of the Supreme Court upon it). ஆனால், தான் மூன்றாம் முறையாகத் தேர்தல்களில் பங்குபற்றலாமா என்பது மகிந்த ராஜபக்ஷ என்னும் தனிமனிதரது தனிப்பட்ட சந்தேகமாகும். அது நாட்டு மக்களைப் பாதிக்கும் விடயமல்லவே. அதேபோன்றே இப்பொழுது தேர்தல்கள் நடத்தலாமா இல்லையா என்பது உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அவசியமாக ஆலோசனை கேட்கப்படுகின்ற விடயமே அல்ல. ஏனெனில், இன்னமும் இரண்டு வருடங்கள் இவரது பதவிக்காலம் இருக்கின்றதே. இதனால், தனிப்பட்ட மனிதரின் முக்கியமில்லாததும் அவசரமில்லாததும் இக்கேள்விகளுக்கு உயர்நீதிமன்றம் ஆலோசனை கூறிக்கொண்டு இருக்க முடியாது என்று கூறிவிட்டார். ஜனாதிபதியானவர் விரும்பினால் உறுப்புரை 140இன் கீழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம். இது அரசியலமைப்புச் சட்டம் தொடர்பானது எனக் காணப்படின் அந்நீதிமன்றம் அதனை உயர்நீதிமன்றத்திற்கு விடலாம் என்று விட்டார். அத்துடன், இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எவரும் எந்த சட்ட முடிவினையும் எடுக்க முடியாதென்பதும் இது சட்டத்தரணிகளுக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் விடப்படவேண்டிய கேள்வி என்பதும் இவரால் தெரிவிக்கப்பட்டது.
பலரால் முன்வைக்கப்பட்டிருக்கும் அடுத்த கருத்தானது இச்சந்தேகங்கள் மக்களின் விருப்பினை சட்ட ரீதியாகத் தடுக்கின்றது என்பதாகும். மக்கள் ஒருவரை 6 வருடங்களுக்கு ஜனாதிபதியாகத் தெரிவு செய்தால் அவர் இடைநடுவில் இராஜினாமா செய்தாலோ அல்லது இறந்தாலோ அல்லது பதவியிறக்கப்ட்டாலோதான் அங்கு மக்களின் விருப்பு தடுக்கப்படலாம். மேற்கூறிய ஒன்றுமே நடக்காமல் பதவியிலிருக்கின்ற ஒரு ஜனாதிபதி இடைநடுவில் தேர்தல்கள் நடத்தப்படலாமா எனக் கூறுவது மக்களின் விருப்பிற்கு எதிரான நடவடிக்கையாகும் என இவர்கள் வாதிடுகின்றனர். அதனை உயர்நீதிமன்றம் செய்ய முடியாது என்கின்றனர். இதேபோன்று இக்கேள்விகள் தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்களை மீறும் செயலாகும் என்கின்றனர். தேர்தல்களைப் பிரகடனம் செய்வதும் அத்தேர்தல்கள் சரியான முறையில் நடத்தப்பட்டனவா என்று தீர்மானிப்பதும் தேர்தல் ஆணையாளரின் அதிகாரத்திற்கு உட்பட்ட கடமைகளாகும். ஜனாதிபதிக்கு என்ன நோக்கங்கள் இருப்பினும், அவர் தேர்தல் ஆணையாளரின் அதிகாரத்தினை ஒரு உயர் நீதிமன்ற கருத்தினால் மட்டுப்படுத்த இயலாது. அவ்வாறானதொரு கருத்து ஆணையாளரின் தீர்மானங்களைக் கட்டுப்படுத்தும் என்பதுடன் ஏனைய கட்சிகள் அவர் முன்னிலையில் ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு எதிராக சவால் விடும் உரிமையையும் இல்லாதொழித்து விடும் என்கின்றனர்.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இணையதளத்தில் போடப்பட்டிருக்கின்றது. அதனை ஒவ்வொருவரும் மேலோட்டமாகப் பார்த்தாவது வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இனிவரும் ஆண்டுகளில் இச்சட்டத்தினை உருமாற்றி ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தினைக் கொண்டு வருவதுதான் இந்நாட்டின் சகல பிரஜைகளுக்கும் முதல் முக்கியமான கடமையாகப் போகின்றது. அந்த நாள் அம்மக்கள் இயக்கத்தில் நாமெல்லோரும் பங்கு கொள்வோம்.
தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.