படம் | THE STRAITS TIMES
2005இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்தபோது இக்கட்டுரையாளர் வீரகேசரி வார இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தனாமுறை பற்றியது அக்கட்டுரை. யார் ஜனாதிபதியாக வருவதை புலிகள் இயக்கம் விரும்பும் என்பதை அந்த இயக்கத்தின் வழக்கமான சிந்தனா முறைக்கூடாக அக்கட்டுரை கணித்திருந்தது. அதன்படி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதை விடவும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருதையே அந்த இயக்கம் விரும்பும் என்றும் அந்த கட்டுரை கூறியிருந்தது.
மேற்கின் விசுவாசியாகிய ரணில் முன்னெடுக்கும் சமாதானத்தை புலிகள் இயக்கம் ஒரு தர்மர் பொறியாகவே பார்த்தது. எனவே, மேற்கிற்கு நெருக்கம் இல்லாதவரும் ஆசிய மைய வெளியுறவுக் கொள்கை ஒன்றை கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்திருந்தவருமாகிய மஹிந்தவைத் தெரிவு செய்வதன் மூலம் ரணில் உருவாக்கிய தர்மர் பொறிக்குள் இருந்து விடுபட புலிகள் இயக்கம் விரும்பியது. மஹிந்தவைப் போன்ற ஒரு கடும் போக்காளர் கொழும்பில் ஆட்சிக்கு வருமிடத்து இன ஒடுக்குமுறை அதிகரிக்கும் என்றும் – அதனால் சமாதானப் பொறி உடையும் என்றும் – புலிகள் இயக்கம் சிந்தித்தது.
எவ்வளவுக்கு எவ்வளவு இன ஒடுக்குமுறை அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்குப் பின்னால் இருக்கும் நியாயமும் நிறுவப்படும் என்றும் புலிகள் இயக்கம் நம்பியது. அதாவது, ரணிலின் தர்மர் பொறியை விட மஹிந்தவின் வீமன் பொறி நீண்ட எதிர்காலத்தில் தமக்குச் சாதகமானது என்றும் அந்த இயக்கம் நம்பியது.
இவ்வாறு அக்கட்டுரையில் கூறப்பட்டிருந்ததையிட்டு கொழும்பில் உள்ள ஓர் ஊடகவியலாளர் இக்கட்டுரை ஆசிரியரோடு தொலைபேசியில் உரையாடினார். அக்கட்டுரையின் சிங்கள மொழி பெயர்ப்பை வாசித்துவிட்டு ஒரு சிங்கள ஊடகவியலாளர் மேற்சொன்ன தமிழ் ஊடகவியலாளரிடம் கேட்டாராம். “புலிகள் எப்படிச் சிந்திப்பார்கள் என்பதை அக்கட்டூரை கூறுகிறது. ஆனால், தமிழ் மக்கள் எத்தகைய ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி அக்கட்டுரை எதையும் கூறவில்லையே?” என்று.
அதே கேள்வி இப்பொழுது சுமார் ஒன்பது ஆண்டுகளின் பின் மறுபடியும் தமிழ் மக்களின் முன் வந்து நிற்கிறது. அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்க வேண்டும்? யாரைத் தெரிவு செய்வது நீண்ட எதிர்காலத்தில் அவர்களுக்கு நன்மையாக முடியும்? வீமன் பொறியோடு நிற்கும் மஹிந்தவையா அல்லது தருமர் பொறி வைத்திருக்கும் ரணிலையா அல்லது யாரையும் தெரிவு செய்யாமல் விலகி நிற்க வேண்டுமா?
வரப்போகும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் இரண்டு விதமான சிந்தனைப் போக்குகள் உண்டு. ஒரு தரப்பு ஆட்சி மாற்றத்தை வேண்டி நிற்கிறது. ரணில் விக்கிரமசிங்கவை அல்லது ஒரு பொது வேட்பாளரை அவர்கள் தெரிவு செய்ய விரும்புகிறார்கள். மற்றைய தரப்பு ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. அதை மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரல் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இப்போதிருக்கும் ஆட்சி தொடர்ந்தும் இருப்பதே நீண்ட எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு நன்மையாக முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இவை தவிர மூன்றாவது தரப்பொன்றும் உண்டு. ஒப்பீட்டளவில் பெரிய தரப்பும் அதுதான். அரசியல் ஈடுபாடு குறைந்த சாதாரண வாக்காளர்களைக் கொண்ட இத்தரப்பு ஜனாதிபதித் தேர்தலையிட்டு அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. இதில் முதலிரு சிந்தனைப் போக்குகளையும் இன்று இக்கட்டுரை பார்க்கிறது.
ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்தால் அதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் எவை?
1. இப்போதிருப்பதை விடவும் ஜனநாயக வெளியும் சிவில் வெளியும் திடீரென்று அதிகரிக்கும். தமிழ் மக்கள் மத்தியிலுள்ள கட்சிகளும் செயற்பாட்டியக்கங்களும் ஒப்பீட்டளவில் சுதந்திரமாக செயற்படக்கூடியதாக இருக்கும். அதனால் தமிழ் மக்கள் தமது உள்ளார்ந்த பேரம் பேசும் சக்தியை இப்போது இருப்பதை விடவும் கூடுதலான அளவிற்கு கட்டியெழுப்பக்கூடியதாய் இருக்கும்.
2. மேற்கின் அனுசரணையோடு மேற்கத்தைய லிபரல் ஜனநாயகத்தின் பண்புகளைக் கொண்ட ஏதோ ஒரு தீர்வுப் பொதி தமிழ் மக்களின் முன் வைக்கப்படும்.
3. புலம்பெயர்ந்த தமிழர்கள் மீதான கட்டுப்பாடுகள் தளரும்.
4. புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதிப் பின்பலத்தோடு தாயகத்திலுள்ள தமிழர்களுடைய பொருளாதாரம் புதுப்பொலிவைப் பெறும்.
அதேசமயம் ஆட்சி மாற்றத்தால் பின்வரும் தீமைகள் ஏற்படக்கூடும்.
1. புதிய அரசும் மேற்கும் கைகோர்த்தால் அதில் முதலில் பலியிடப்படுவது தமிழ் மக்களின் இறுதி இலக்குகளாகவும் இருக்கலாம். அதாவது, இலங்கை அரசின் மீதான அழுத்தத்தை பிரயோகிப்பதற்கே மேற்கு நாடுகள் தமிழ் அரசியலை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன. அவ்வாறு அழுத்தத்தைப் பிரயோகிக் வேண்டிய தேவைகள் குறையும்போது புதிய அரசு முன்வைக்கக்கூடிய ஒப்பீட்டளவில் பரவாயில்லாத ஆனால், தமிழ் மக்களின் உச்சபட்ச அபிலாசைகளை ஏற்றுக்கொள்ளாத அரைகுறை தீர்வொன்றை மேற்கு நாடுகளும் இணைந்து தமிழ் மக்கள் மீது திணிக்கக்கூடும்.
2. இலங்கை அரசின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டிய தேவைகள் குறையும் போது சிலசமயம் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளும் கைவிடப்படக்கூடும். அதாவது, தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைக்காமல் போகக்கூடும்.
3. புதிதாக ஆட்சிக்கு வரும் ஓர் அரசு போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் எத்தகைய முடிவுகளை எடுக்கும்? தனது இனத்தின் வெற்றி நாயகர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றத் தயாராக இருக்குமா? அதாவது, இலங்கைத் தீவில் வெற்றி வாதத்தின் வீழ்ச்சி எனப்படுவது போர்க்குற்ற விசாரணைகளுக்கு வழிவகுக்குமா? இது தொடர்பில் இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் அப்படிச் சிந்திப்பதற்கான அடிப்படைகள் எவையும் தென்படவில்லை.
4. அரைகுறைத் தீர்வும் அபிவிருத்தியும் நீண்ட எதிர்காலத்தில் தமிழ் மக்களின் எதிர்ப்பை முனை மழுங்கச் செய்து நீர்த்துப் போகச் செய்து விடும்.
ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்தால் ஏற்படக்கூடிய பிரதான நன்மை, தீமைகள் இவை. அதேசமயம், இப்போதிருக்கும் ஆட்சியே தொடர்ந்தும் இருந்தால் தமிழர்களுக்கு என்ன கிடைக்கும்?
1. இப்போதிருக்கும் இறுக்கமான நிலைமைகளே தொடர்ந்தும் நீடிக்கும் அதேசமயம் அவற்றின் இயல்பான வளர்ச்சிப் போக்கில் சிறிய மிக மெதுவான மாற்றங்கள் நிகழக்கூடும்.
2. சில சமயம் வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்ட பின் இந்த அரசு மேற்குடனும் இந்தியாவுடனும் ஓரளவுக்கு தன்னை சுதாகரித்துக் கொள்ளக்கூடும். அப்படியேதும் நடந்தால் அப்பொழுதும் தமிழ் மக்கள் ஓர் அரைகுறை தீர்வுப் பொதியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
3. இப்போதிருப்பதைப் போலவே தமிழ் மககள் மத்தியில் அரசியல் இயக்கங்களும் செயற்பாட்டியக்கங்களும் வினைத்திறனோடு இயங்கமுடியாதிருக்கும். அதனால், தமிழ் மக்கள் தங்களுடைய பேரம்பேசும் சக்தியை பொறுத்த வரை அகக்காரணிகளை விட புறக்காரணிகளிலேயே அதிகம் தங்கியிருக்கவேண்டி இருக்கும். அதாவது, தமது சொந்த அரசியல் செயற்பாடுகள் மூலம் தமது பேரம்பேசும் சக்தியை கட்டியெழுப்புவதற்கு பதிலாக வெளித்தரப்புக்களுக்கு தமிழ் மக்கள் தேவை என்பதால் ஏற்படும் ஒரு பேரம்பேசும் சக்தியிலேயே பெரிதும் தங்கியிருக்க வேண்டியிருக்கும்.
2. இப்பொழுது நடப்பதைப் போலவே நில அபகரிப்பும், குடித்தொகை அடர்த்தியை மாற்றும் விதத்திலான செயற்பாடுகளும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். இதனால், தமிழ் மக்களுடைய தேசிய இருப்பு தொடர்ந்தும் பலவீனமடையும்.
3. புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் தாயகத்திற்கும் இடையிலான சட்டத்தடைகள் தொடர்ந்தும் இருக்கும். இதுவும் தமிழர்களுடைய அரசியல் அதன் முழு வீச்சை பெறுவதற்கு தடையாக இருக்கும்.
இவையனைத்தும் தீமைகள். இனி நன்மைகளைப் பார்க்கலாம்.
அவ்வாறு நன்மைகளைப் பார்ப்பதாக இருந்தால் முதலில் இந்த இடத்தில் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள ஒரு சிந்தனைப் போக்கை சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும்.
ஆயுதப் போராட்ட காலத்திலிருந்தே நிலவி வரும் ஒரு சிந்தனைப் போக்கு அது. அதாவது, எதிர்த்தரப்பு எந்தளவிற்கு நெகிழ்ச்சியற்றதாகவும் மூர்க்கமானதாகவும் காணப்படுகிறதோ அந்தளவிற்கு தமிழ் மக்களுடைய போராட்ட உணர்வும் போராட்டமும் கூர் தீட்டப்படும் என்பதே அது. வளையக்கூடிய எதிரியை வெளித்தரப்புக்கள் இலகுவாக வளைத்து விடும். அப்படி வளைந்து கொடுக்கும் ஓர் அரசை வெளித்தரப்புக்கள் இலகுவாக கையாண்டு ஓர் அரைகுறைத் தீர்வை தமிழ் மக்கள் மீது சுமத்திவிடும். மாறாக வளைய முடியாத எதிரி முறிக்கப்படுவான். அப்படி வளைக்கப்பட முடியாத ஓர் அரசு இருக்கும் போது அதை முறிக்க முற்படும் வெளித்தரப்புக்கள் தமிழ் மக்களின் உதவியில் தவிர்க்க முடியாத படி தங்கியிருக்கவேண்டி வரும். அதனால், தமிழ் மக்களுக்கு உச்சபட்ச தீர்வொன்று கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
இது ஏறக்குறைய நியுட்டனின் விதியை அரசியலில் பிரயோகிக்கும் ஒரு சிந்தனா முறை தான். தாக்கம் எந்தளவிற்கு அதிகமாயிருக்கிறதோ அந்தளவிற்கு எதிர்தாக்கமும் அதிகமாயிருக்கும்.
புலிகளின் சிந்தனா முறையும் ஏறக்குறைய இத்தகையதே. 2005இல் ரணிலை தோற்கடிப்பது என்று எடுத்த முடிவும் இப்படிச் சிந்தித்ததன் விளைவே.
இப்பொழுது ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத தரப்புக்களும் அப்படித் தான் சிந்திக்கின்றன. அதாவது, வளைய மறுக்கும் இந்த அரசை வைத்துத்தான் தமிழ் மக்கள் தங்களுடைய உச்சபட்ச தீர்வைப் பெறலாம் என்ற ஒரு நம்பிக்கை.
இந்த ஆட்சியே தொடர்ந்தும் இருந்தால் மேற்கின் அழுத்தங்களும் தொடர்ந்தும் இருக்கும். தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழ் நாட்டவர்கள் மத்தியில் தமிழ்த் தேசிய நெருப்பு அணையாது தொடர்ந்தும் எரியும்.
ஆனால், இச்சிந்தனா முறை தொடர்பான வாதப் பிரதிவாதங்களின் போது குறிப்பாக கடந்த பத்தாண்டுகளாகப் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் பின்வரும் கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது.
1. மேற்கண்டவாறு சிந்தித்து தொடக்கப்பட்ட நாலாம் கட்ட ஈழப்போர் ஏன் தமிழர்களுக்கு பாதகமாக முடிந்தது?
2. வளைய மறுத்த அரசற்ற தரப்பொன்றை வளைய மறுத்த ஓர் அரசின் மூலம் ஏறக்குறைய முழு உலகமும் ஒன்றாக திரண்டு நின்று தோற்கடித்தது. உலக சமூகமானது வளைய மறுக்கும் ஓர் அரசற்ற தரப்பை கையாள்வதற்கும் வளைய மறுக்கும் ஓர் அரசை கையாள்வதற்கும் இடையில் வேறுபாடுகள் உண்டா?
3. மேலும் இந்த அரசு வளையாது, ஆனால், முறியும் என்பது எக்காலத்திற்குமுரிய ஒரு மாறா எடுகோளா?
4. வளைய மறுக்கும் ஓர் அரசை யார் வந்து முறிப்பது? அது ஏதோ ஒரு வெளித்தரப்புத் தானே? இப்படிப் பார்த்தால் அதுவும் கூட வெளியாருக்காகக் காத்திருக்கும் ஓர் அரசியல் தானே?
எனவே, மேற்கண்டவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியும். வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் சரி நிகழாவிட்டாலும் சரி தமிழர்களைப் பொறுத்தவரை அது இறுதியிலும் இறுதியாக வெளித்தரப்புக்களின் நிகழ்ச்சி நிரலின் பாற்பட்ட ஒரு விவகாரம் தான். அதாவது, வெளியாருக்காக காத்திருக்கும் ஓர் அரசியல்தான்.
ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்தால் அங்கு ஆரம்பத்திலிருந்தே வெளித்தரப்புக்களின் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படும். அதேசமயம், வளைய மறுக்கும் இப்போதுள்ள அரசே பதவிக்கு வந்தால் அது அதன் இறுதி விளைவாக வெளித்தரப்பொன்றின் இடையீட்டிற்கு வழிவகுக்கக் கூடும். எப்படிப் பார்த்தாலும் இரண்டு தெரிவுகளின் போதும் வெளித்தரப்பின் இடையீடு இருக்கவே செய்யும்.
எனவ, வெளியாரின் தலையீடற்ற ஒரு தெரிவு என்பது இப்பொழுது தமிழ் மக்களுக்கு இல்லவேயில்லை. இதில் ஆகக்கூடிய பட்சம் உயர்ந்த ஒரு தீர்வை நோக்கி வெளித்தரப்புக்களை வளைக்கவல்ல ஒரு தெரிவு எது என்பதைக் குறித்தே தமிழர்கள் சிந்திக்க வேண்டியிருக்கும். அங்கும் கூட மேலும் ஒரு செய்முறைத் தெரிவை எடுக்க வேண்டியிருக்கும். தமது முடிவை வாக்களிப்பதன் மூலம் வெளிக் காட்டுவதா? அல்லது வாக்களிக்காமல் விடுவதன் மூலம் வெளிக்காட்டுவதா என்பதே அது.
தினக்குரல் பத்திரிகைக்காக நிலாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.