ஹல்துமுல்ல பிரதேச செயலகப்பிரிவில் 29.10.2014இல் ஏற்பட்ட மண்சரிவு பேரழிவிலிருந்து உயிர்பிழைத்த மக்களது, குறிப்பாக பெண்களதும் சிறுவர்களதும் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தல்.
மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பினராகிய நாம் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பகுதியின் கொட்டபத்த கிராம அலுவலர் பிரிவில் நிகழ்ந்த பேரழிவின்போது உயிரிழந்தோருக்கு அஞ்சலிகளையும் பாதிக்கப்பட்டோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கின்றோம். அத்துடன், அம்மக்கள் மத்தியில் பணிபுரிகின்ற அரச, சிவில் அமைப்புக்களுக்கும், தனிநபர்களுக்கும் எங்களது பாராட்டையும் ஆதரவையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.
சீரற்ற காலநிலையாலும், ஏனைய சவால்களாலும் உடல்களை மீட்பதிலும், நிவாரணம் அளிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உயிர்பிழைத்த மக்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு சமூக அபிவிருத்தியில் அர்ப்பணிப்புள்ள அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
அனர்த்தங்கள் ஒருபோதுமே நடுநிலையானவையல்ல. பொதுவாகவே மிகவும் ஓரங்கட்டப்பட்ட வறுமைப்பட்ட மக்களையே இவ்வாறான அனர்த்தங்கள் மிகக் கொடூரமாக பாதிக்கின்றன.
இலங்கையில் மிகவும் ஓரங்கட்டப்பட்ட மக்களின் ஒரு பகுதியினரான ஹல்துமுல்ல தோட்டத் தொழிலாளர்களையே இப்பேரழிவு தாக்கியுள்ளது. இலங்கையிலும் மற்றும் உலகிலும் பேரழிவுகள் பெண்கள், ஆண்கள், சிறுமிகள், சிறுவர்கள் முதலியோரை வெவ்வேறு வகையில் பாதித்துள்ளன: பால்நிலைப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.
பாரிய சுனாமி பேரழிவின்போது மக்களுக்கும் குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் கூட்டாக இணைந்து பணியாற்றிய, ஆதரவு நல்கிய அமைப்புக்கள் என்ற வகையில் எமது அனுபவத்தின் அடிப்படையில் மிக நலிவுற்ற, உயிர் பிழைத்தோருக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைக்கும் பொருட்டு சில முக்கியமான ஆலோசனைகளை முன்வைக்க விரும்புகின்றோம்.
தகவல் வழங்கல்
- உயிர் பிழைத்தோரது பெயர்கள் ஏனைய விபரங்கள், தற்போது தங்கியிருக்கும் இடம் ஆகியவை பற்றிய தகவல்கள் கூடிய விரைவில் உறவினர்களுக்குத் தரப்பட வேண்டும். இத்தகைய தகவல்கள் உறவினர்களுக்கு இலகுவில் கிடைக்கக் கூடியவகையில் தகவல் நிலையங்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் பாதையோரங்களில் நிறுவப்பட வேண்டும்.
தேடலும் மீட்புப்பணியும்
- இன்றுவரை மிகச் சில உடல்களே மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பேரழிவின்போது தமது குடும்பத்தினரை இழந்தோருக்கு மிகுந்த ஆதரவு தேவைப்படும். கடைசி உடல் எடுக்கப்படும் வரை தேடுதல் பணி தொடர வேண்டும். ஏனெனில், இது துக்கம் அனுஷ்டிப்பதற்கு மிக முக்கியமானது என்பதுடன் உடல்களைக் காணாதிருத்தல் நீண்டகால உளத்தாக்கத்தை ஏற்படுத்துவதுமாகும்.
- இத்தகைய பேரழிவு நடந்த ஏனைய நாடுகளில் ஓரிருவராவது உயிர் பிழைத்தமைக்கான சந்தர்ப்பங்கள் இருந்தமையை அறிந்துள்ளோம். மீட்புப் பணியின்போது கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தித் தேடுவதுடன் நவீனமான, மதிநுட்பம் வாய்ந்த, தொழிநுட்பங்களையும் மாற்று முறைகளையும் கையாள்வது உயிருடன் இருக்கக்கூடியவரை கண்டுபிடிப்பதற்கு மிக முக்கியமானதாகும்.
- சமூகம், இடம்பெயர்ந்தோர் முகாம் மட்டத்தில் மீட்புப்பணி, தீர்மானமெடுக்கும் நிகழ்வுகள் ஆகியவற்றில் உள்ளூர் சமூகம், குறிப்பாக பெண்கள், ஈடுபடுவது மிக முக்கியமானது. உள்ளூர் சமூகத்தினர் அந்த இடத்தின் இயற்கைச்சூழல் பற்றி அறிந்தவர்களாகவும், ஏனைய விடயங்கள் பற்றிய அறிவு உடையவர்களாகவும் இருப்பர். மேற்கூறிய விடயங்களில் பெண்களும் (ஏனைய ஓரங்கட்டப்பட்ட குழுக்களும்) பங்குபற்றுவதை மீட்புப்பணி இணைப்பாளர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.
நிவாரணப்பணிகள்
- உயிர்பிழைத்த மக்களுக்கு உணவு, தற்காலிக தங்குமிடங்கள், உள, சுகாதார சேவைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பினும் பெண்களுக்கு உடை மாற்றவும், குழந்தைகளுக்குப் பாலூட்டவும், உறங்கவும் பாதுகாப்பான தனியான இடங்கள் ஒதுக்கப்பட்ட வேண்டும்.
- குழப்பம், பயம், வதந்திகளிலும் அதிகாரம் மிக்கோரிலும் தங்கியிருத்தல் ஆகியற்றைத் தடுக்கும் வகையில் தெளிவாகவும் உரிய காலத்திலும் தகவல்கள் பெண்கள், சிறுவர்களுக்குக் கிடைப்பதற்கான ஒழுங்குகள் வேண்டும். இவை ஆட்களைப் பதிவு செய்தல், மருத்துவ கிளினிக்குகள், உணவுப்பங்கீடு, சட்ட அந்தஸ்து, இழப்பீடு தொடர்பான விடயங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான எதிர்கால நிர்வாகத் திட்டம் பற்றிய தகவல்களை உள்ளடக்க வேண்டும்.
- ஒவ்வொரு இருப்பிடத்திலும் கிரமமான வகையில் இயலுமானவரை பெண் மருத்துவர் குழுவினால் மருத்துவ சேவைகள் – கிளினிக்குகள் பெண்களுக்குப் பிரத்தியேகமாக நடத்தப்பட வேண்டும். கர்ப்பிணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார் ஆகியோரின் தேவைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பெண்களையும் சிறுமிகளையும் பாதுகாப்பதற்கான விசேட நடவடிக்கைகள்
- பேரழிவுகளின்போது பெண்களும் சிறுமிகளும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகக் கூடியமையால் அவர்களை பாதுகாக்க விசேட பொறிமுறைகள் அமைக்கப்பட வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளரின் நலிவுற்றநிலை காரணமாக இது முக்கிய அக்கறைக்குரிய விடயமாகும். தற்காலிக தங்குமிடங்களில் மின்சார வசதியும் மின் விளக்குகளும் பொருத்தப்படல், நிவாரணம் பெறுவதற்கு வெளிப்படைத்தன்மைகள் வாய்ந்த வழிமுறைகள், நடமாடும் பொலிஸ் குழு சேவையில் ஈடுபடல் முக்கியமானவை. பெண்கள் சிறுவர் பொலிஸ் பிரிவு இங்கு இயங்குவதுடன், பெண்கள் குழுக்களும் அமைக்கப்பட வேண்டும். நிச்சயமின்மையும் மனஅழுத்தங்களும் நிகழ்கின்ற வேளைகளில் வீட்டு வன்முறை, வெளியாட்களால் சுரண்டப்படல் ஆகியவை பற்றி எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். சிறுவர்களையும் இளம் பெண்களையும் அவர்களது நம்பிக்கைக்குரிய பராமரிப்பாளர்களிடமிருந்தும் உடன் பிறப்புக்களிடமிருந்தும் பிரிப்பதானது அவர்களது நலிவு நிலையை அதிகரிக்கும். ஆகவே, இது தடுக்கப்படல் வேண்டும்.
மொழி
- இராணுவத்தினரும் அனர்த்த முகாமைத்துவ அலுவலர்களும் பெரும்பாலும் சிங்களம் பேசுபவர்களாகவே உள்ளனர். பாதிக்கப்பட்ட சமூகத்தினர் இரு மொழியும் பேசுபவர்கள். தேவை மதிப்பீடு போன்ற முக்கிய தரவுகள் சேகரித்தல், பாதிக்கப்பட்டோருக்குக் குறிப்பாக சிறுவர்களுக்கு உளவள சேவைகள் வழங்கல் ஆகியவை அவர்களுக்கு பரிச்சயமான மொழியில் அமைய வேண்டும்.
உளவள நலம்
- மண்சரிவினால் மோசமான இழப்புக்களுக்கு உள்ளான பெண்களின் உளவள நலத்திற்கு மேற்கூறிய விடயங்கள் பங்களிக்குமென்பதை அழுத்திக் கூற விரும்புகின்றோம். தீர்மானம் எடுக்கும் நிகழ்வுகளின்போது பெண்களது அக்கறைகளை மையப்படுத்துவது அவர்களது கையாளும் திறனை அதிகரிப்பதுடன் இரண்டாம்தர சமூக உளத் தாக்கங்களையும் தடுக்கும். தம்மையோ பிறரையோ பராமரிக்க முடியாதபடி மன அழுத்தங்களுக்கு உள்ளானோர் அடையாளம் காணப்படுமிடத்து அவர்களுக்கு பயிற்சி பெற்ற உளவளப் பணியாளர்கள் அல்லது அப்பிரதேசத்தில் உள்ள உளநலப்பிரிவின் அலுவலர்கள் மூலம் ஆதரவு அளிக்கப்படல் வேண்டும். ஒற்றை அமர்வு உளவள ஆலோசனை முற்றாகத் தடுக்கப்படல் வேண்டும்.
தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பு
- பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்றிய தகவல்கள் வழங்குவதும் பாதுகாப்பான இடங்களில் மீளக்குடியமர்த்துவதும் தோட்ட நிர்வாகத்தினதும் பொறுப்பாகும்.
வீடு, நில உரிமைகள்
- முக்கியமான விடயம் அவர்களது தொழிலை உறுதிப்படுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தில் நிலமும் வீடும் கிடைப்பதாகும். இம்மக்களது வாழ்வாதாரம் தோட்டத்துறையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. எனவே, நிலமும் வீடும் தோட்டத்தில் அல்லது தோட்டங்களுக்கு அருகில் கட்டடம் அமைப்பதற்கு பாதுகாப்பானவை என நிர்ணயிக்கப்படும் இடங்களில் கொடுக்கப்பட வேண்டும். இலங்கைப் பிரஜைகளான இம்மக்களுக்கு நிலம் கொடுப்பதுடன் வீடு கட்டுவதற்கான உதவியும் இழப்புகளுக்கு நஷ்டஈடும் வழங்க வேண்டும்.