படம் | Theguardian
,உங்களுக்கும் அந்த நாயைத் தெரிந்திருக்கும். உங்கள் தெருக்களிலும் அது உலவி இருக்கும். மிகக்கரிய நிறத்தில் உடல் இளைத்து என்பு தெரிய அலையும். அதன் கண்கள் மட்டும் வேட்டையாடும் ஓநாயினுடைய தீர்க்கமான பார்வையைப் பெற்றிருக்கும். எனக்குத் தெரிந்து அந்த நாயின் முழுநேர வேலை உலாத்துதல்தான். கடந்த 2 நாளில் என்னையும் என் தோழர்களையும் போல் அதுவும் உலவுவதை நான் கண்டு கொண்டேன். ஒருவேளை அந்த நாய் எங்களை பின் தொடர்ந்திருக்கவும் கூடும். பழைய தமிழ் சினிமாவில் வரும் இச்சாதாரிநாகம் போல, எனக்குப் புரியவில்லை. அந்த ஓநாயின் பார்வை கொண்ட கருநாயின் 5 பெரும் தென்படுதல்களை நான் உங்களுக்கு சொல்லப்போறன்.
தென்படுதல் ஒன்று: நகைக்கடைகாரருக்கு பிறகு.
“வணக்கம் சேர். நாங்கள் யாழின் கரங்கள் அமைப்பின் மாணவர்கள். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீங்கள், பதுளை மாவட்டத்தில ஏற்பட்ட பாரிய மண் சரிவு ஒண்டால நிறைய மக்கள் பாதிக்க பட்டு இருக்கினம்.”
“ஓம் அதுக்கென்ன”
“அதுக்காக நாங்கள் யாழ்ப்பாணத்தில இருந்து உதவிகளை திரட்டி வாறம் உங்களால இயன்ற உதவியை செய்யுங்கோ”
“ஏன் தம்பி, முதல் எங்கட சனம் சண்டை நேரம் சாகேக்கையும் இடம்பெயரேக்கையும் அங்கத்த சனம் ஏதும் கவலைபட்டதே, ஏதாவது உங்களுக்கு தந்ததே?”
“ஐயா அதுகள் தேயிலை தோட்டத்தில உழைக்கிறதே அதுகளுக்கு காணாது, இதில உங்களுக்கு எப்பிடித்தாறது”
“ம்ம்”
“சரி அவையள் உஙகளுக்கு ஏதும் செய்யேல, உங்களுக்கு ஏதும் தரேல்ல, உங்கள பற்ரி கவலைப்படேல்ல எண்டு வச்சுக்கொள்ளுவம். அப்பிடி என்டா இப்ப அவவையளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?”
அதற்கு பிறகு அவர் மறுபேச்சின்றி உண்டியலில் போட்ட பணத்தை வாங்கிக்கொண்டு திரும்பிய போதுதான் நகைக்கடை வாசலின் ஓரம் சுருண்டு படுத்திருந்த அந்த கரு நாயை முதல் முதலில் பார்த்தேன். நிமிர்ந்து எங்களைப் பார்த்து விட்டு மீண்டும் கண்ணை மூடிக்கொண்டது.
தென்படல் இரண்டு: கெளசல்யாவின் தொலைபேசி உரையாடலுக்கு பிறகு,
“ஹலோ சொல்லடி”
“என்ன செய்றடா?”
“யாழ்ப்பாணம் டவுனுக்க நிக்கிறன்.”
“ஏன்?”
“யாழின் கரங்களால பெடியளெல்லாம் சேர்ந்து, அந்த மண்சரிவால பாதிக்கப்பட்ட சனத்துக்கு உதவியள் சேகரிக்கிறம்.”
“வன்னிப்பக்கம் வரமாட்டினமோ டா?”
“ஏனடி?”
“இல்லையடா, நானும் கொஞ்ச பொருட்கள் எடுத்து வச்சிருக்கிறன். அதுதான்…”
“வன்னி ஏற்கனவே பாதிக்கப்பட்ட பிரதேசம் எண்டதால ஒருவேளை வரமாட்டினம் போல…”
“கஸ்ரமெண்டாலும் வன்னி சனமும் உதவு செய்யும். வந்து வாங்கி பாருங்கோ யாழ்ப்பாணத்தை விட கூட தருவம்..
“சரி கோவப்படாத…”
“ம்ஹிம்….நான் குடுத்து விடுறன்”
“சரியடி”
ஏன் இத பற்றி நேற்றே நான் கெளஷிக்கு சொல்லாம விட்டன் என்று நினைச்சு கொண்டு நிமிர்ந்தபோது ஒரு சிறு சந்திற்குள் இருந்து அந்த கரிய நாய் வெளிப்பட்டது.
தென்படல் மூன்று: அந்த பெரிய நிறுவனத்தின் முதிய காவலாளியின் பிறகு,
“என்ன வேணும் தம்பி?”
“ஐயா, நாங்கள் பதுளைல நடந்த மண்சரிவால பாதிக்கப்பட்ட சனங்களுக்கு உதவியள் சேகரிக்கிறம்.”
“ஓம் தம்பி பேப்பர்ல பாத்தனான். சரி உள்ளுக்கு போங்கோ, முதலாளி நிக்கிறார்.”
………………..
“என்னடா மச்சான், பெரிய இடம்…. அரை மணித்தியாலம் நிண்டதுக்கு எவ்வளவு தந்தவை?”
“டேய்… எனக்கு வாய்ல ஏதும் வந்திடப்போகுது…”
“ஏனடா?”
“அவர் இல்லையாம், கொஞ்சத்தால வரட்டாம், இப்ப காசு இல்லையாம், மனிசிக்காரிதான் ஏசில இருந்து சொல்லுது.”
“தம்பி எங்க போறியள், இஞ்ச வராம…”
“ஏன் ஐயா?”
“என்னட்ட ஒண்டும் வாங்காம போறியள்? இந்தாங்கோ.”
இந்த நிறுவனத்தின் கட்டடத்தை விட ஐயா உயரம் மச்சான் என்டு சொல்லிட்டு ரோட்டு பக்கம் திரும்ப மிக வேகமாய் கடந்து போனது அந்த நாய்.
தென்படல் நான்கு : நிஷ்மாவின் வைபர் அரட்டைகளின் பின்னர்.
யாழ் நகரின் புறநகரின் ஒரு நீண்ட வீதியொன்றில் நடந்து கொண்டிருக்கும் போது போனை எடுத்து நோண்டத் தொடங்கினேன். பதுளை தோழி நிஷ்மாவுடனான வைபர் அரட்டை கண்ணில் பட்டது.
“காம்புக்கு போனனியோ?”
“ஓமடா…”
“ம்ம்…”
“அந்த பிள்ளையளும் செத்து இருக்கலாம் எண்டு தோணுதடா. அண்டைக்கு அதுகள் பள்ளி கூடம் வராம இருந்திருக்கலாம்…”
“ஏன் அப்பிடிச்சொல்லுற?”
“தாய் தகப்பன் இருக்கேக்கையே அதுகளின்ர வீட்டில கஷ்டம். இப்ப அவங்களும் செத்திட்டாங்கள். இனி அந்த பிள்ளையள் என்னடா செய்யும்?”
“ம்ம்…”
“நான் முகாமுக்கு போன டைம் ஒரு பையன், அக்கா அம்மா, அப்பாவ காணேல்ல, நான் தேடிட்டு வாறன் எண்டு சொல்லிட்டு போனான்டா… வீட்ட வந்து டீவிய போட்டா, அவன் அம்மா, அப்பா செத்திட்டாங்க என்டு அழுதளுது பேட்டி குடுக்கிறான்”
“ம்ம்…”
“நீங்கள் வார் டைம் அங்கை இப்பிடி ரொம்ப கஸ்ர பட்டிருபீங்கள் என்னடா?”
“ம்ம்… உதவியள் கிடைக்குதா அந்த சனத்துக்கு?”
“பெரிசா இல்லைடா. யாழ்ப்பாணம் யுனிவர்சிட்டில இருந்து உதவி வரும் எண்டு கதைச்சவை”
“ம்ம் நாளைக்கு நாங்களும் உதவி சேகரிக்கிறம். சேகரிச்சு யுனிவர்சிட்டியால தான் குடுத்து விடப்போறம்”
“வார் டைம் நாங்கள் ஏண்டா இத யோசிக்கேல்ல?”
“ம்ம்”
போனை வச்சிட்டு நிமிர்ந்தபோது அதே வீதியில் எங்களை நோக்கி அந்த கரிய உருவம் வேகமாய் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
தென்படல் ஐந்து: காசு எண்ணிய பிறகு.
“பரவாயில்ல மச்சான், நான் எதிர்பார்த்தத விட கூட சேர்ந்திருக்கு.”
“யாழ்ப்பாணத்தில இன்னும் மழைபெய்யும் மச்சான், நல்ல சனம் இன்னும் இருக்கு.”
“ஓம்டா கடைக்காரர், அரச வேலைல இருக்கிறவை, டியூசன்சன், பள்ளிகூட பிள்ளையள், அம்மாமார் எண்டு எல்லாம் காசு போடேக்க சந்தோசமா இருந்ததுடா.”
“சிலதுகள் ஏன் இப்பிடி இருக்கு எண்டு நினைக்க வச்சுத்துகளா?”
“விடுடா எல்லாரும் ஒரே மாதிரியே?”
ஒருமனுசன் சொல்லிச்சுடா யாழ்ப்பாணாத்தார் மலைநாட்டு தமிழ்ச்சனத்தை இந்தியா காறர், வடக்கத்தயான் எண்டு பழிக்கிறவை. இண்டைக்கு இந்த நிலமைல இவையள் கிடக்க அந்த பழிதான் காரணம். இண்டைக்கு அதுகளுக்கு ஒரு கஸ்ரம் எண்டு யாழ்ப்பாணாத்து பெடியள் வெளிக்கிட்டு இருக்கிறியள் சந்தோசமா இருக்கடா தம்பி எண்டு.
எண்டாலும், பேஸ்புக்கில வரச்சொல்லி போட்ட ஸ்டேட்டசுக்கு கீழ நாங்கள் வாறம் எண்டு வாளை உருவிக்கொண்டு கமண்ட் அடிச்ச பேஸ்புக் போராளியள நினைச்சா பத்திகொண்டு வருகுது.
“அது தெரிங்சதுதானே விடுடா…”
“இப்ப காசு எண்னி முடிச்சதும், சந்தோசமாவும் மனநிறைவாயும் இருக்கு என்னடா?”
“உண்டியல்ல சேர்ந்தது காசில்ல… அதெல்லாம் இதயங்கள்.”
“கவித கவித”
ஹா ஹா ஹா……..
நாங்கள் சிரித்து கொண்டு இருக்கும் போதுதான் கவனித்தேன், அந்த கரிய உருவம் நாங்கள் இருந்த பாடசாலை மண்டபத்தின் வாசலில் நின்மதியாக உறங்கிக்கொண்டிருந்தது.
யதார்தன்