அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் பொருட்டு ராவயவின் மக்கள் மனு
1. தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை
ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின் பொழுது அமைச்சரவை அனுமதியளிக்கப்பட்ட போதிலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் சட்டமூலமாக்காது விடப்பட்ட தகவல் பெற்றுக்கொள்ளும் சட்ட மூலத்தை சட்டமாக்க வேண்டும்.
2. சொத்து மதிப்பீடு தொடர்பான சட்டம்
சொத்து மதிப்பீடு சட்டத்தை மீறுபவர்களிற்கு வழங்கப்படும் குறைந்தப்பட்ச தண்டணையைக் காட்டிலும் அதிகப்பட்ச தண்டணையை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
அத்துடன்,
(அ) சொத்து விவரங்களை வெளியிடுவோரிற்காக வழங்கப்படும் படிவம் நவீன காலத்திற்கு ஏற்புடைய வகையில் அமைந்திருக்க வேண்டும்.
(ஆ) தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் பொழுது தங்களுடைய சொத்து விவரங்களையும் வெளியிடுவது கட்டாயமாக்கப்படல் வேண்டும்.
(இ) மக்கள் சொத்து மதிப்பீட்டை இலகுவில் பார்வையிடுவதற்காக சொத்து விவரம் வெளியிடுபவரின் அனைத்து அறிக்கைகளும் இணையத்தளத்தில் வெளியிடப்பட வேண்டும். மேலும், அதற்காக உரிய முறையிலான வலைத்தளத்தை நடாத்துவதற்கு கணக்காளர் நாயகம் அனுமதியளிக்க வேண்டும்.
3. சட்டத்திற்கு முரணான அறிவுறுத்தல்கள்
சட்டத்திற்கு முரணான அறிவுறுத்தல்களை வழங்கும் மற்றும் அவற்றை பின்பற்றுதல் குற்றவியல் குற்றச் செயலாக கருதப்படுமென சட்டம் வரையப்பட வேண்டும்.
(அ) இவ்வாறான சட்ட மீறல்களின் பொழுது நீதிபதியின் அறிவுரை இன்றி பிரஜைகளிற்கு வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
4. தேசிய ஒற்றுமைக்கு கேடு விளைவித்தல்
இன அல்லது சமய ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் வகையிலான எண்ணங்களை தோற்றுவித்தலிற்கு ஏதுவான கருத்துக்களை வெளியிடுவது தண்டணைக்குரிய குற்றமென சட்டமூலமாக்குவதற்காக வாசுதேவ நாணயக்கார அவர்களால் முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தை சட்டமாக்க வேண்டும்.
5. சுயாதீனமான ஆணைக்குழு
18ஆம் திருத்தச்சட்டத்தை இல்லாதொழித்து டியூ. குணசேகரா குழுவினால் முன்மொழியப்பட்ட முன்மொழிவுகளை கவனத்திற் கொண்டு 17ஆம் திருத்தச்சட்டத்தை மீண்டும் அதிகாரமிக்கதாக மாற்றல்.
6. தேர்தல் முறையில் மறுசீரமைப்பு
தேர்தல் முறையில் மறுசீரமைப்பை ஏற்படுத்தும் பொருட்டு தினேஷ் குணவர்தன குழுவினால் முன்மொழியப்பட்ட முன்மொழிவுகளைச் சட்டமாக்குதல் வேண்டும்.
7. ஊடகச் சுதந்திரம்
இலங்கை வானொலி மற்றும் தேசிய தொலைக்காட்சி சேவை ஆகியன அரச கட்டுப்பாட்டிலிருந்து விலகி தொழிற் சுதந்திரத்துடன் பொதுமக்களிற்கு மாத்திரம் பொறுப்புக் கூறக்கூடிய வகையில் சுயாதீனமான முறையில் மக்களிற்கு சேவையாற்றும் ஊடகங்களாக மாற்றியமைக்க வேண்டும். அதற்குத் தேவையான சுயாதீனமான தலைமைத்துவம் மற்றும் பண உதவிகளை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்று நிறைவேற்றப்பட வேண்டும்.
தம்மால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் அரசியல்யாப்பிற்கு உட்பட்டு செயல்படும் முறை மற்றும் நிதியைக் கட்டுப்படுத்தும் முறையினை மக்கள் அறிந்துக்கொள்ளத்தக்க முறையில் நாடாளுமன்றத்தின் வாத விவாதங்களை இணைய ஊடகங்கள் மூலமாகவோ அல்லது நாடாளுமன்ற வலைத்தளத்தின் மூலமாகவோ ஒளிப்பரப்பட வேண்டும். நாடாளுமன்றினது அனைத்து நிலைப்பாடுகள் மற்றும் தேர்வுக்குழு கூட்டங்களின் செயற்பாடுகளை பொதுமக்களிற்கு அறிக்கையிடுவதற்குத் தேவையான வசதிகளை ஊடகவியலாளர்களிற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்.
8. கணக்காய்வு
அமைச்சரவை அனுமதியிலிருந்து விலக்கப்பட்டுள்ள, அதாவது, எ.சி. மாயாதுண்ண அவர்களால் 2004ஆம் ஆண்டு ஒழுங்கமைக்கப்பட்ட கணக்காய்வாளரின் ‘தேசிய கணக்காய்வாளர் சட்ட மூலம்’ சட்டமாக்கப்படல் வேண்டும்.
9. கல்வி
கல்வித்துறையில் துரிதகதி அபிவிருத்தி இருந்தபோதிலும், இந்த நாட்டில் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி இரத்தம் சிந்தும் சட்ட ஒழுங்கற்ற மற்றும் ஊழல் ஆட்சிப்புரியும் நிலை ஏற்பட்டிருப்பது, ஜனநாயக மற்றும் பன்முக மனோபாவம் கொண்ட அரசியல்வாதிகளை, அரச அதிகாரிகளை மற்றும் பொது மக்களையும் உருவாக்குவதற்கு தற்போதைய கல்வி முறைமை தவறியுள்ளது என்பதாகும். புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பில் சர்வதேச தரம் வாய்ந்த முன்னனி திட்டங்கள் உள்ளப்போதிலும் கவலைக்குரிய விடயம் யாதெனில், எங்கள் தேசமோ இன்றும் பின்னடைந்தே காணப்படுகிறது. கல்வி முறைமை தொடர்பில் விமர்சன ரீதியிலான காரணிகளை தேடிப்பார்த்தல் மற்றும் கல்வித்துறையில் ஏற்படுத்த வேண்டிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐவர் கொண்ட ஆணைக்குழுவொன்றினை நியமிக்க வேண்டும்.
மேற்படி ஆணைக்குழு பிற காரணிகளைப் போன்றே கீழ்வரும் காரணிகளிலும் அவதானம் செலுத்த வேண்டும்.
(அ) பாடசாலை முறைமையிலுள்ள சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் மற்றும் அவற்றை தடைச்செய்யும் பொறிமுறை.
(ஆ) முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்கும் பொழுது கேட்கப்படும் இலஞ்சப் பணம், சட்டத்திற்கு முரணான செயற்பாட்டினை தடைச்செய்யும் பொறிமுறை.
(இ) பழைமையான கற்பித்தல் முறையினை நீக்குதலும், அவற்றை வெற்றிக்கொள்ளும் பொறிமுறையும்.
(ஈ) மாணவர்கள் வர்க்க முரண்பாடுகள், சமய மற்றும் சாதி வேறுபாடுகளின்றி நவீன முறையில், அதாவது, ஜனநாயக முறையில் திடமாக சிந்தனைச்செய்யும் மாணவ சமூகமொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
(உ) கலை சார்ந்த பாடங்களில் விருப்பமற்ற அல்லது ஆர்வமற்ற மாணவர்களை செயற்திறனான தொழில்நுட்பப் பாடங்களின் மீது அவதானத்தை செலுத்த நடவடிக்கை எடுத்தல்.
(ஊ) ஆசிரியர்கள் தொடச்சியாக, செயற்திறனான முறையில் தகவல்களை உள்வாங்கக் கூடிய இளம் ஆசிரியர் சமூகமொன்றை உருவாக்குதல்.
(எ) பாடசாலை கல்வி முறையிலும், பல்கலைக்கழக கல்வி முறையிலும் செயற்திறனாக செயற்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
(ஏ) உயர்க் கல்வியின் நன்மதிப்பினை வளர்ப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
(ஐ) பாடசாலை கல்வி முறை மற்றும் உயர் கல்வி முறையென ஏற்றுக்கொள்ளத்தக்கதான உயர் தரத்தினை பேணுவதற்காக வரவு – செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படும் வரப்பிரசாதங்கள் தொடர்பில் நடவடிக்கை யெடுத்தல்.
10. பொதுச் சுகாதாரம்
ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலிருந்த பொது மக்களிற்கான சுகாதாரச் சேவை இன்று மிகவும் மோசமானதோர் நிலையிலுள்ளது. இது தொடர்பில் விமர்சன ரீதியிலான காரணிகளைத் தேடிப்பார்த்து தேவையான முடிவுகளை வழங்கக்கூடிய ஆணைக் குழுவொன்றை நியமிக்க வேண்டும். அவ் ஆணைக்குழு பிற் காரணிகளைப் போன்றே கீழ்வரும் காரணிகளிலும் அவதானம் செலுத்த வேண்டும்.
(அ) சுகாதாரச் சேவை குழுச்செயற்பாடாகும். இக்குழுவில் வைத்தியர்கள், வைத்தியத்துறை சேவையாளர்கள, தாதியர் மற்றும் சிற்றூழியர்கள் ஆகியோர் உள்ளடங்குவர். இக்குழுவில் எந்நேரமும் குழப்பகரமான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால், பொதுமக்களிற்கு ஒழுங்கான சேவையை வழங்க முடியாமல் உள்ளது. இதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிற்கு பரிந்தரைக்கப்பட்ட மருந்து வகைளில் பெரும்பாலானவற்றை அல்லது முழுமையை வெளியிலிருந்து கொள்வனவுச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரச வைத்தியசாலைகளுக்கு போதுமான அளவு வளங்கள் ஒதுக்கப்படுவதில்லை. அவ்வாறு ஒதுக்கப்பட்டாலும் அவற்றில் பெருந்தொகுதி ஊழல்மிக்கவர்களின் பைகளிற்குள் செல்லும் நிலையே காணப்படுகின்றது. இதன் காரணமாக மருந்துப் பொருட்களிற்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்த பின்னர் நிகழும் ஊழலைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
(இ) கட்டாயமாக சத்திரச்சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய இருதய மற்றும் சிறுநீரக நோயாளர்கள் நீண்டகாலம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையிலுள்ளார்கள். இந்த நீண்டகால காத்திருப்பு முறையில் உண்மையாகவே மாற்றங்களை மேற்கொள்ள இயலாதா அல்லது நோயாளர்களைச் சுரண்டுவதற்காகவே இருக்கின்ற வணிக முறைமையா எனத் தேடிப்பார்த்து, இந்த நீண்டகால காத்திருப்பு முறையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஈ) காலி மாவட்டத்தின் தூர பிரதேசங்களிலுள்ள நோயாளர்களை ஏற்றிக்கொண்டு இலங்கை போக்குவரத்து சபையிற்குச் சொந்தமான பஸ்கள் காலி கராப்பிட்டிய வைத்தியச்சாலையிற்கு நாள்தோறும் வருகின்றன. இவ்வாறு வருகைத்தரும் நோயாளிகள் மறுநாளே வீடுதிரும்புகின்றனர். இது தென் பகுதிக்கு மாத்திரம் உரிய விடயமல்ல, நாட்டின் எல்லாப் பாகங்களிலும் இந்நிலை தொடர்கின்றது. இதன் மூலமாக மாவட்ட ஆதார வைத்தியச் சாலைகளின் செயற்திறனற்ற தன்மையே புலப்படுகின்றது. இம்முறையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(உ) ரஜரட்ட பகுதியில் பரவலாகக் காணப்படுகின்ற சிறுநீரக நோய் தொடர்பில் தேசிய ரீதியாக விசேட அவதானம் செலுத்தப்படல் வேண்டும், என்ற போதிலும் இன்று இது தொடர்பில் குறைந்தளவு அவதானமே செலுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பட்ட காரணியை விட குறைந்தளவு அவதானம் செலுத்தப்பட வேண்டிய பெல்லன்வில வனப்பகுதியில் அரைவாசிக்கு மேற்பட்ட பகுதியை அழித்து நாளாந்த உடற்பயிற்சிகளைச் செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள நடைபாதை அபிவிருத்திச் செயற்பாட்டிற்காக ரூ.14,200 மில்லியன்கள் செலவிடப்பட்டுள்ளன. இதன் மூலமாக புலப்படுவது யாதெனில், தேவையற்ற காரணிகளிற்கு அநாவசியமாக பணம் செலவிடப்படுவதுடன் அத்தியாவசிய காரணிகள் தொடர்சியாக புறக்கணிக்கப்படும் நிலையே தொடர்கின்றது. சிறுநீரக நோயாளர்களின் நோய் தொற்று பரவும் வீதத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
11. ஓய்வுப் பெற்றோரிற்கான பாதுகாப்பு
ஓய்வடைந்தவர்களிற்காகப் பெற்றுக்கொடுக்கப்படும் ஓய்வுப்பணம் அல்லது ஊழியர் சேமலாப நிதியினை பாதுகாப்பான முறையில் வைப்பிலிடுவதற்கும், அவற்றிற்கு வங்கி வட்டி வீதத்தைக் காட்டிலும் கூடியளவு வட்டி வீதத்தினை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போலியான முதலீட்டு நிறுவனங்களிடம் பெரும்பாலும் இவ்வாறான ஓய்வுதாரிகளே ஏமாறுகின்றனர். அவர்களின் மிகுதி வாழ்க்கைக்காக உள்ள ஒரே பணத்தை இலாபம் ஈட்டும் வகையில் முதலீடுகளை மேற்கொள்ள இவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். சாதாரண வங்கி வட்டி வீதத்தைக் காட்டிலும் கூடியளவு வட்டி வீதத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முதலீடுகளை மேற்கொள்வதற்கு வரையறைகள் விதிக்கப்பட வேண்டும்.
12. இடம்பெற்றுள்ள குற்றச்செயல்கள் மற்றும் அநீதியான செயற்பாடுகள் தொடர்பில் தேடிப்பார்த்தல்
சுதந்திரம் பெற்ற நாள் முதல் இன்று வரை இந்நாட்டில் பல பாரதூரமான குற்றச்செயலகள் இடம்பெற்றுள்ளன. சோல்பரி அரசியல் யாப்பு அமுலுக்கு வந்த சில நாட்களிலேயே மலைய தோட்ட தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. அதிலிருந்து 8 ஆண்டுகள் கழிந்து தமிழ் மக்களின் மொழி உரிமை மறுக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் தொழில் வாய்ப்பை இழந்தனர். இதன் காரணமாக தொழிற்சங்க நடவடிக்கைகளின் முதுகெலும்பு உடைந்தது. 1983ஆம் ஆண்டு மிகவும் வஞ்சிக்கத்தக்க வகையிலான மக்கள் கணக்கெடுப்பின் மூலமாக நாடாளுமன்றத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு அளுத்கம, பேருவளை பகுதியில் இடம்பெற்ற இனவாத முரண்பாடுகளைப் போன்று பல இனமுரண்பாடுகள் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ளது. தெற்கில் இரு சிங்கள கலவரங்கள் ஏற்பட்டதுடன், வடக்கிலும் நீண்டகால கலவரமொன்றும் ஏற்பட்டது. கலவரக்காரர்களினால் மற்றும் கலவரத்தை கட்டுப்படுத்துவோரினாலும் பல உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 1978ஆம் ஆண்டு முதல் அரச சொத்துக்களை கொள்ளையடிப்பதனை அரச தலைவர்கள் தங்களிற்குரிய இலட்சணமாகக் கொண்டுள்ளனர். நீதித்துறை பொதுமக்களின் உரிமைகளை பாதுகாப்பதைக் காட்டிலும் மனித உரிமைகளை மீறுகின்ற ஒரு நிறுவனமாக செயற்பட்டது. நீதிமன்ற உத்தரவின் காரணமாக வேலைநிறுத்த செயற்பாடுகள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்கள் நிறுத்தப்படுவது இன்று சாதாரண விடயமாக உள்ளது. இவையெல்லாம் ஏன் இவ்வாறு நடந்தன என்று தேடிப்பார்க்க வேண்டும். அதற்காக ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க வேண்டும். அது வெறுமனே குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்கும் ஆணைக் குழுவாக அன்றி, அண்மையக் காலங்களில் இடம்பெற்ற மாபெரும் குற்றச்செயல்கள் தொடர்பாக தேடிப்பார்க்கும் ஆணைக்குழுவாக இருக்க வேண்டும். அது பொதுமக்களின் துன்பங்களிற்கு மற்றும் அவர்களால் முன்மொழியப்படும் குற்றச்சாட்டுகளிற்கு செவிசாய்த்து அதுதொடர்பில் தேடிப்பார்த்து அறிக்கை சமர்பிக்கும் ஆணைக்குழுவாகத் திகழவேண்டும்.
13. காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குதல்
வடக்கு – கிழக்கு பகுதிகளில் தொடர்சியாக யுத்தம் நிலவியது. அங்கே நீண்ட காலமாகவே இரட்டை ஆட்சி நிலவியது. அப்பகுதிகளில் வாழ்ந்த பல்வேறுப்பட்ட மக்கள் தங்களுடைய சொந்த நிலத்தை விட்டு இடம்பெயர்ந்து செல்ல நேரிட்டது. இதன் காரணமாக நிலத்தின் உரிமை தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை பாதுகாப்புப் படையினர் தங்களுடைய பாதுகாப்புத் தேவையின் நிமித்தம் பொது மக்களின் நிலங்களை பறிமுதல் செய்துக்கொண்டனர். காணி உரிமை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தேடிப்பார்த்து, அவற்றிற்கு தீர்வு வழங்கக்கூடிய காணி ஆணைக் குழுவொன்றை ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொது மக்களின் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும். பாதுகாப்புப் படையினர் தம்சவப்படுத்தியுள்ள இடங்களிற்கான நட்டயீட்டினை குறித்த நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
14. புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்காக
மக்களின் கருத்துக்களிற்கிணங்க புதிய அரசியல் யாப்பின் முதலாவது அறிக்கையை ஒழுங்கமைப்பதற்காக அரசியல்யாப்பு பற்றி நன்கறிந்த ஐவர் கொண்ட ஆணைக்குழுவினை உருவாக்குதல் வேண்டும்.
(அ) இவ் ஆணைக்குழு 06 மாதகாலப் பகுதியில் இப்புதிய அரசியல் யாப்பினை உருவாக்க வேண்டும்.
(ஆ) உருவாக்கப்பட்ட புதிய யாப்பினை மக்கள் பார்வைக்காக விடுதல்.
(இ) பின்னர் அவ்வரசியல் யாப்பினை புதிய தேர்தல் முறைமையிற்கமைய தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றிடம் சமர்பிக்க வேண்டும். நாடாளுமன்றினால் உருவாக்கப்படுகின்ற இரண்டாவது அறிக்கையையும் பொது மக்களின் பார்வைக்கு கையளிக்க வேண்டும் என்பதுடன் இதுதொடர்பான கருத்துக்களை தெரிவிக்கும் பொருட்டு யாப்பின் பிரதிகள் மாகாண சபைகளிற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
(ஈ) மாகாண சபைகளின் கருத்துக்களை கவனத்திற் கொண்டு இறுதியாக தயாரிக்கப்படும் அறிக்கையினை மீண்டும் ஒரு முறை மாகாண சபைகளின் அனுமதிக்காக அனுப்பிவைக்க வேண்டும். பின்னர் அதனை நாடாளுமன்றில் சமர்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றியதன் பின்னர், அதன் மீது பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
(உ) புதிய அரசியல் யாப்பினை ஒரு வருடக் காலப்பகுதியினுள் உருவாக்க வேண்டும்.
அரசியல் யாப்பின் முதலாவது பிரதியினை தயாரிக்கின்ற ஆணைக்குழுவானது கீழ்வரும் காரணிகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.
I அரச கொள்கைத்திட்டம்
(அ) இந்த நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் சம உரிமையும் சம கௌரவமும் உடைய மக்களென ஏற்றுக் கொள்ள வேண்டும்.
(ஆ) சாதி பேதங்களினால் ஏற்படுகின்ற துன்புறுத்தல்களை குறைத்து அல்லது அதனை பழைமையான முறையாகக் கருதி அதற்குள்ள வரவேற்பினை குறைப்பதற்கு நடவடிக்கையெடுத்தல்.
(இ) ஐக்கியமான இலங்கை மக்களை உருவாக்கும் பொருட்டு வர்க்க பேதங்கள் மற்றும் சமய பேதங்களை இல்லாதொழிக்கும் கொள்கைத்திட்டத்தின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளல்.
(ஈ) அநாதரவான அனைத்து மக்களையும் (அநாதைக் குழந்தைகள், ஆதரவற்றோர் மற்றும் அங்கவீனர்கள்) பாதுகாப்பதை அரசின் கடமையாகக் கருதுதல்
(உ) சாதாரண வரிக்கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும். வரி செலுத்தக் கூடியவர்களிடம் மாத்திரமே வரியை அறவீடு செய்தல் வேண்டும்.
(ஊ) நவீன காலத்திற்குப் பொருந்தக் கூடிய வகையிலான சுதந்திரமான கல்வி முறை மற்றும் சுகாதார வசதிகளுக்காக சுதந்திரமான சுகாதார முறையினை கொண்டு நடாத்துவது அரசின் கடமையாகும்.
(எ) ஏழ்மையை ஒழித்தல் அரசின் கடமையாகும்.
(ஏ) இலங்கை தீவு அமையப்பெற்றுள்ள அமைவிடத்தை கருத்திற் கொண்டு நாட்டிற்கு நன்மை பயக்குவிதத்திலான, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இன்றிய வெளிநாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்.
(ஐ) சுற்றுப்புறச் சூழலிலுள்ள சமநிலைத்தன்மை குழப்பமடைந்துள்ளதன் காரணமாக இவ்வுலகில் வாழ்கின்ற அனைவரும் காலநிலை மாற்றம் எனும் மாபெரும் பிரச்சினைக்கு முகங்கொடுக்கின்றோம். நாட்டின் பாதுகாப்புக்காக மட்டுமன்றி பூவுலகின் பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டு சூழல் அக்கறையுள்ள கொள்கைத் திட்டமொன்றினை வகுப்பது அரசின கடமையாகும்.
II அடிப்படை உரிமைகள்
(அ) சர்வதேசத் தரம் வாய்ந்த விளக்கங்களுடன் கூடிய மனித உரிமைகள் கொள்கைத்திட்டத்தினை அரசியல் யாப்பினுள் உள்ளடக்குதல் வேண்டும்.
(ஆ) உரிமைகள் மீறப்படும் பொழுது குறைந்தளவுச் செலவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்றும் உரிமை மீறப்பட்டவருக்கு நட்டஈட்டினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ) மனித உரிமைகள் ஆணைக்குழு, ஏற்றுக்கொண்ட சர்வதேச தரத்திற்கமைவாக மறுசீரமைத்து சட்ட உதவியின்றி முறைப்பாடுகள் செய்யக்கூடிய, அவற்றை விசாரிக்க கூடிய, வழங்கப்படும் தீர்ப்பை உரிய முறையில் அமுல்படுத்தக்கூடிய நிறுவனமாக உருவாக்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.
III அரசின் வியூகம்
(அ) இலங்கை அரசானது, மத்திய அரசு மற்றும் இரண்டாம் நிலையிலுள்ள மாகாண அரசு ஆகியன ஒன்றினைந்த சுயாதீனமான ஓர் அரசாகத் திகழ வேண்டும்.
(ஆ) இந்திய அரசின் அனுமதியுடன் மாகாண சபை அரச முறைமையின் செயற்பாட்டுத்திறன் மற்றும் ஒழுங்கான ஆட்சியினை உறுதிச்செய்யும் வகையிலும், தமிழ் மக்களின் அரசியல் தேவையினைப் பூர்த்திசெய்யக் கூடிய வகையிலும் மறுசீரமைக்க வேண்டும்.
(இ) கிராம மட்டத்திலான அபிவிருத்திச் செயற்பாடுகளை கிராமங்களிற்கு பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவில் காணப்படுகின்ற பஞ்சாயத்து முறையிற்கு ஒத்த கிராம சபை முறையினை ஏற்படுத்தல்.
(ஈ) அரசின் சுயாதீனத் தன்மை, சுயநிர்ணயத் தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டினை பாதுகாத்துக்கொள்ளக் கூடிய, ஜனநாயகத் தன்மையை பாதுகாக்கக் கூடிய, பல இன மக்கள் வாழும் இலங்கையில் பல் சமய, பன் மொழி மற்றும் பல் கலாச்சார முறைமைகளை பாதுகாத்துக்கொண்டு இலங்கையர் என்ற தனித்துவ அடையாளத்துடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான பிரதான பொறுப்பு அரசையே சாரும்.
(உ) அரசின் தன்னிச்சையான அதிகாரம் மக்களிடையே இருக்க வேண்டும். மக்களிற்கு மறுக்கப்படவியலாத உரிமையாகக் காணப்பட வேண்டும்.
(ஊ). அரசானது லௌகீக காரணிகளிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட உலக நிறுவனமாக இருத்தல் வேண்டும்.
IV அரசியல் யாப்பின் சுபாவம்
(அ) ஜனாதிபதி ஆட்சி முறையினை முற்றாக ஒழித்து, ‘வெஸ்மினிஸ்டர்’ அல்லது ஜெர்மனி, நெதர்லாந்து, சுவிடன் ஆகிய நாடுகளில் காணப்படுகின்ற ‘கூட்டாட்சிக் குடியரசு’ முறையிலான நாடாளுமன்ற ஆட்சி முறையினை உருவாக்க வேண்டும்.
(ஆ) அரசியல் அமைப்பு
(இ) நாடாளுமன்றினால் தெரிவுசெய்யப்படுகின்ற பிரதமர், அரசின் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் தேர்தல் குழு ஒன்றின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் ஐனாதிபதி அரசின் நிறைவேற்று அதிகாரியாகவும் இருக்க வேண்டும்.
(ஈ) குறித்த காலம் வரை பிரதமர் பெரும்பான்மை இன மக்களிலிருந்து தெரிவுச்செய்யப்படுவதனால் ஜனாதிபதி சிறுபான்மை மக்களிலிருந்து தெரிவுச்செய்யப்பட வேண்டும்.
(உ) ஜனாதிபதியின் அனைத்து அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் பிரதமரின் அறிவுரைக்கேற்பவே நடைப் பெறுதல் வேண்டும். மிகவும் முக்கியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் விசேட அதிகாரத்தினை உபயோகிக்கும் சந்தர்பத்தினை ஜனாதிபதிக்கு வழங்குதல்.
(ஊ) முற்று முழுதாக தேர்தல் மூலமாக தெரிவுச்செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய, நாடாளுமன்றித்திலிருந்து தெரிவுச்செய்யப்படுகின்ற பிரதமர் உள்ளடங்களான அமைச்சரவை உறுப்பினர்கள் அரச அதிகாரத்தின் கேந்திர நிலையமாக செயற்படுதல் வேண்டும்.
(எ) அமைச்சரவை உறுப்பினர்கள் மொத்த தொகை 25ஆக இருக்க வேண்டும். பிரதி அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை 30ற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
(ஏ) நாடாளுமன்றம் உள்ளடங்கலாக அனைத்து மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை முன்னேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
V நீதித்துறை
(அ) நீதித்துறையினுள் இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநியாயங்கள் தொடர்பில் ஆராய்ந்துப் பார்த்து மறுசீரமைப்பிற்குத் தேவையான பரிந்துரைகளை மேற்கொள்வதற்காக மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்தல் வேண்டும். அவ்வாலோசனைகளின் அடிப்படையில் நீதித்துறையானது பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற, சட்டத்திட்டங்களிற்கு அமைய செயற்படுகின்ற மற்றும் சுயாதீனமாக செயற்படுகின்ற நீதித்துறையாக மாற்றியமைக்க வேண்டும்.
(ஆ) புதிய அரசியல் யாப்பினுள் உள்ளடக்கப்படும் நீதித்துறையானது நிறைவேற்று அதிகாரத்திற்குள்ளோ அல்லது அரசியல் அமைப்பின் வரைமுறைகளிற்குள்ளோ சிக்காது வேண்டும்.
(இ) சட்டத்திற்கு முரணாக செயற்படும் அதிகாரத்தை இல்லாதொழிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு இருக்க வேண்டும்.
(ஈ) நீதிமன்றிற்கு முழுமையான அதிகாரம் இருக்க வேண்டும்.
(உ) குற்றப் பிரேரணைகள் மூலமாக உயர் நீதிமன்ற நீதியரசர்களைப் பதவி விலக்குவதற்காக சர்வதேச தரம்வாய்ந்த செயன்முறையொன்றை உருவாக்க வேண்டும்.
(ஊ) ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ள சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான ஒப்பந்தத்தை உள்நாட்டிலும் அதிகாரமிக்கதாக்க வேண்டும்.
லஞ்சம் மற்றும் ஊழல்
(அ) லஞ்சம் மற்றும் ஊழலை அதிகாரத்திற்குட்பட்டு உரிய முறையில் இல்லாதொழிப்பதற்காக தற்போதுள்ள லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பதிலாக ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலுள்ள ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினை முன்னோடியாகக் கொண்டு அரசியல் தலையீடுகளிற்கு இடமளிக்காது, சுயாதீனமாக செயற்படக்கூடிய ஜனாதிபதியினால், நாடாளுமன்றினால் மற்றும் மக்களினால் தொடர்ச்சியாக பரிசீலனைக்கு உட்படுத்துகின்ற, நாடாளுமன்றிற்கு மாத்திரம் பொறுப்புக் கூறக்கூடிய இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவொன்றை உருவாக்குதல் வேண்டும்.
(ஆ) அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரசியல்யாப்பிற்கு உட்பட்ட மன்றங்கள், நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் மாகாண சபை திணைக்களங்களில் நடைபெறுகின்ற அனைத்து கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்ற அரசியல்வாதிகள், நீதிதுறை மற்றும் அரச அதிகாரிகள் இவ்வாணைக்குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கையொப்பமிடும் நான் அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பாக ‘ராவய’வினால் முன்மொழியப்பட்டுள்ள மக்கள் மனுவில் உள்ளடக்கப்பட்டுள்ள காரணிகளுடன் ஒருமைப்படுகின்றேன்.
பெயர் –
கை.தொ. இலக்கம் –
மின்னஞ்சல் முகவரி –
தொழில் –
தேர்தல் தொகுதி –
கையொப்பம் –
பின்வரும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை அனுப்பி வைக்கவும்.
மனுவை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம்.
மனுவை சிங்களத்தில் இங்கு வாசிக்கலாம்.