படம் | CINEFORUM

“மச்சான் வேளைக்கு வாடா”

“ஏன்டா”

“கோயிலுக்குள்ள ஒருத்தரும் இல்லை, அவள் மட்டும் தான் நிக்கிறாள்”

“அதுக்கேன் நான், நீ போய் பாரடா”

“நீயும் வேணும் வா”

“சரி இப்ப ஏண்டா கமரா? கோயிலுக்க போட்டா எடுக்க கூடாது”

“நீ சத்தம் போடாம அங்க இருக்கிற மெயின் சுவிச் பக்கம் போய் நில்லுடா”

“ஏண்டா”

“கேள்வி கேக்காத வேளைக்கு போடா. நான் கைகாட்டேக்க மெயின் சுவிச்ச ஓப் பண்ணு”

“நீ இண்டைக்கு ஐயரிட்ட என்னை அடிவாங்க வைக்க போறாய்”

“அலட்டாம போடா வேளைக்கு”

எண்டு சொல்லிட்டு வசந்த மண்டபம் பக்கம் நிண்டு கை காட்டினான். நானும் மெயின் சுவிச்ச ஓப் பண்ணினன்.

4, 5 நிமிசம் கழிச்சு கமராவ பாத்து கொண்டு சிரித்த படி வந்தான்.

“ஒன் பண்ணி விடுடா”

“டேய்…. என்ன, அவள போட்டோ எடுத்தியா?”

“ம்ம்”

“அதுக்கு ஏண்டா லைட்ட நிப்பாட்ட சொன்னனி. இருட்டையோ போட்டோ எடுத்தனி?”

“போட்டோ எடுக்கேல மச்சான், பெயிண்டிங் ஒண்டு வரைஞ்சிருக்கிறன் பார்”

கமராவின் திரையில், இருட்டுக்க நிண்டு என் நண்பனின் ஒருதலை காதல் கோயில் விளக்கை ஏத்திக் கொண்டு நிண்டிருந்தாள். இருட்டு பின்னணியில் அந்தப் பிள்ளை முகத்தில் விளக்கின் மஞ்சள் ஒளி பட நின்றிருந்தாள்.

“ஓவியம்தான்”

மேற்படி சம்பவம் அண்டைக்கு எனக்கு ஒரு விசயத்தை புரிய வச்சுது. ஒரு கலைப்படைப்பு சில நேரத்தில இரசனை என்பதை தாண்டி வேறு ஒரு பெருநிலைக்கு மொழிபெயர்ந்து விடுகின்றது. அண்டைக்கு நண்பன் எடுத்த ஒரு போட்டோ அவனை அது ஒரு ஓவியம் என்று உணர்ச்சி வசப்படுத்தியது. அதுதான் அந்த உன்னத தருணம். அங்கே அந்த போட்டோ அவனுடய அன்பின் வடிவம்தான். ஒரு அழகான பெண் விளக்கேற்றுவது நிறைய படத்திலயும் போட்டோவிலையும் பார்த்திருப்போம். ஆனால், அந்த கணத்தில் அவனுக்கு அது மீள தருவிக்க முடியாத கணத்தை சிருஷ்டித்து கொடுத்திருக்கிறது.

உங்களுக்கும் எனக்கும் கூட அப்பிடி தருணங்கள் நடந்திருக்கும்… நடக்கும்.

இதை எழுதிக்கொண்டு இருக்கேக்க அண்மையில் படித்த நாவல் ஒன்றும், படம் ஒன்றும் ஞாபகத்துக்கு வருது.

முதலில் அந்த நாவல்.

எழுத்தாளர் Haruki Murakami இன் ‘Norwegian wood’. நாவலின் படி ‘Norwegian wood’ என்பது ஒரு இசை. நாவலின் முதல் அத்தியாயத்தில் நாவலின் நாயகன் விமான நிலையமொன்றில் வந்து இறங்குவான். அப்போது அங்கே இருக்கும் ஒலி பெருக்கியில் ‘Norwegian wood’ என்ற அந்த இசை Play செய்யப்படும். அதை கேட்டதும் அவன் தலையை பிடித்துக்கொண்டு அப்படியே இருந்திடுவான். ஏனெனில், பிரிந்து சென்ற அவனுடைய காதலியை அந்த இசை அவனுக்கு ஞாபகப்படுத்தி விடும். அந்த இடத்தில் நாவலில் வரிகள் இவ்வாறு அமையும்…. “Soft music began to flow from the ceiling speakers: a sweet orchestral cover version of the Beatles ‘NORWEGIAN WOOD’ the melody never failed to send a shudder through me, but this time it hit me harder than ever”

இங்கே அந்த இசை அவனைப் பொறுத்த வரை அவளுடைய ஞாபகங்களும் வலியுமாக மொழிபெயர்கின்றது. அதாவது, அந்த உன்னத தருணத்தை அடையின்றது.

(‘NORWEGIAN WOOD’ இன் லிங்க் தரப்படுகிறது, விரும்பினால் கேட்டு பாருங்கள்)

###

இதனைப்போலத்தான் சமீபத்தில் விரும்பி இரசித்த ஒரு படமும்.

இயக்குனர் Giuseppe Tornatore இயக்கிய The Best Offer என்ற படத்திலும் அந்த தருணம் அல்லது உணர்வு அற்புதமா காட்டப்படுகிறது.

The-Best-Offer-poster

கதைப்படி முதுமையின் ஆரம்பங்களில் இருக்கும் திருமணமாகாத ஒருவன் கலைப்பொருட்களை ஏலம் விடவும், அவற்றை மதிப்பீடு செய்யும் வேலையை செய்கிறான். அவன் தன்னிடம் ஏலம் விடுவதற்கு வரும் மிகப்பெறுமதியான ஓவியங்களை தன் சாமர்த்தியத்தால் குறைந்த விலையில் தன்னுடையதாக்கி கொள்கிறான். குறிப்பாக அழகான பெண்களின் ஓவியங்களைதான் அவன் வாங்கி கொள்கிறான். அந்தப் பெண்களின் ஓவியங்களை தன் வீட்டில் ஒரு இரகசிய அறையில் அடுக்கி வைத்திருக்கிறான், அறையின் நடுவில் அமர்ந்து கொண்டு அவ் ஓவியங்களைப் பார்த்தபடி இருக்கிறான். அதாவது, அந்த ஓவியத்தில் இருக்கும் பெண்களுடன் அவன் வாழ்கின்றான்.

இப்படி இருக்க ஒரு பெண் அவனுடைய வாழ்க்கைக்குள் சாமர்த்தியமாக நுழைகின்றாள். அவனை காதலிக்க வைக்கின்றாள். அவன் அவளுக்கு தன் இரகசிய ஓவிய அறையை காட்டுகின்றான். அவன் அவளை எதிர்பார்த்த படி வீட்டிற்கு வருகின்றான், ஓவிய அறை காலியாகக் கிடக்கிறது.

அவன், அவளைப்போல் இருப்பதாக கூறிய நாட்டியக்காரி ஒருத்தியின் ஓவியத்தை மட்டும் விட்டுச் செல்கிறாள்.

அவள் தன்னை ஏமாற்றி ஓவியங்களை களவாடி சென்று விட்டாள் என்று தெரிந்து கொள்கிறான். இறுதியில் அவன், அவள் தனக்கு பிடித்த இடம் என்று கூறிய இடத்திற்கு அந்த ஓவியத்துடன் குடியேறுகிறான். இறுதியில் ஒரு உணவு விடுதியில் அவளுக்காக அவன் காத்திருப்பதாக படம் முடியும்.

இந்த படத்திலும் அந்த ஓவியங்கள் குறிப்பாக அவள் விட்டுச்சென்ற அந்த ஓவியம் இரசிப்பு தன்மையை தாண்டி அவனுடைய பேரன்பாகவும், ஏன் அத்தனையும் ஒரு பெண்ணாகவே தருணமடைகிறது.

இதுவும் அந்த கலையின் உச்ச வரம்பிற்கு நல்ல உதாரணம்.

எனக்கு சமீபத்தில் அப்படியோரு கணத்தை ஏற்படுத்தியது பா. அகிலனின் “பதுங்குகுழி நாட்கள்” தொகுப்பின் கவிதை,

பார்க்கிறோம்,

விழிகொள்ளாத் துயரம்

உதடுகள் துடிக்கின்றன

தடுமாறி உயிராகும் வார்த்தைகளும்

காற்றள்ளப்போய்த் தொலைகிறது

நேற்று

சணற்காட்டில் மஞ்சள் மெளனம்.

இன்று

கண்களில் நீர்

போகிறாய்

மேற்கில் வீழ்ந்தணைகிறது சூரியன்.

–    பா. அகிலன் –

இந்தக் கவிதையை கடக்கும் ஒவ்வொரு தடவைகளும் எனக்குள் “சணல்காட்டில் மஞ்சள் மெளனம்” என்ற வரிகளும், “மேற்கில் வீழ்ந்தணைகிறது சூரியன்” என்பது என் கடந்தகாலத்து ஏதோ ஒரு பெரும் பிரிவை அல்லது அந்தப் பிரிவின் பெருங்காட்சியை விழிமுன் விரியச்செய்தபடியே இருக்கிறது.

இப்படிதான் காத்திரமான ஒவ்வொரு கலைப்படைப்பும் நமக்கு அற்புதமான இரசிப்பு தன்மையை ஏதோ ஒரு உன்னதத்துக்கு மொழிபெயர்க்கும். இதெல்லாம் படத்திலும் நாவலில் மட்டும் நடந்திருக்கும் என்றில்லை. இவை அனுபவத்தின் ஆவணப்படுத்தல்கள். ஒரு படைப்பாளியினதும் இரசிகனதும் ஆரோக்கியமான தொடர்பாலை ஒரு படைப்பு நிகழ்த்துகிறது எனபதற்கான குறிகாட்டி இந்த உன்னத கணம். Norwegian wood, best offer கதாநாகர்களை போல, என் நண்பனைப் போல, நமக்கும் இவை நடந்திருக்கும்… நடக்கும்!

நாங்கள் அப்படி எல்லாம் இருந்தோம், இப்படியெல்லாம் கலை வளர்த்தோம் என்று வரலாற்றை செரிக்கத் தெரியாமல் மென்று தள்ளும், குறுகிய வட்டத்திற்குள் உழலும் கலை இரசனை மிக்க நம் சமூகத்தில், முள்ளந்தண்டு நிமிர்ந்து மூளைவரை பரிணாம கூர்ப்படைந்து விட்டோம் என்பதை நம்மை ஒரு கலையால் மட்டுமே உணரச்செய்ய இயலும்.

நீங்களும் ஒரு படைப்பினை இரசிக்கும்போது அந்த இரசனை அப்படைப்பினை உங்களுக்கு அந்த உன்னத கணமாக மொழிபெயர்ந்து நிற்பதை உணர்ந்தீர்களேயானால் இதை எழுதிக்கொண்டிருக்கும் என் பேனா கை கால் முளைத்து உங்களை ஆரத்தழுவிக்கொள்ளும்.

யதார்தன்