படம் | கட்டுரையாளர்
எங்கட ஊரில் பென்னம்பெரிய பணக்காரர் ஒருத்தர் இருந்தவர். கட்ட, உருள மாதிரி குண்டான தோற்றம். நல்ல இருண்ட வெள்ள. அவருக்கு எங்க போனாலும் முதலிடம்தான் வேணும். இடப்பெயர்வு காலங்களில மலங்கழிக்கிறதுக்கு காலையிலயே வரிசையில நிக்கவேணும். அதில கூட வரிசையில நிக்காம, அந்தப் பணக்காரர் வந்தவுடன, உள்ளுக்கப் போகக்கூடிய சகல செல்வாக்குகளோடயும் தான் இருந்தவர். பெரிய பெரிய துப்பாக்கிகள் வச்சிருந்த பெடியள்கூட இந்த அய்யாவுக்குத் தனி மரியாத குடுப்பாங்கள். அப்படியான இந்தப் பெரியவர் ஒருக்கா முதல் முதலாப் பள்ளமடு போனவர். அதாவது, முதல்முதலா ஆமிக்காரனப் பார்க்கப் போறார்.
1995 காலப்பகுதியெண்டு நினைவு. பள்ளமடுதான் இப்ப ஓமந்தை மாதிரி வடக்கையும் தெற்கையும் பிரிக்கிற இடமா இருந்தது. இங்கால இருந்து பெடியங்கள் செக் பண்ணுவாங்கள். அங்கால இருந்து அவங்கள் செக் பண்ணுவாங்கள். பெடியங்களின்ர கட்டுப்பாட்டுப் பக்கமிருந்து போற ஆக்கள, ஏத்திக் கொண்டு போற ஆக்கள் ஆமிக்காரன்ர பொயின்ட் அடி வரைக்கும் கொண்டு போய் விட்டிட்டு, அங்கியிருக்கிற சனங்கள ஏத்திக் கொண்டு வருவாங்கள்.
எங்கட பெரியவருக்கு முதலிடம்தானே வேணும். வாகனத்திலயும் முதலிடம். ட்ரைவருக்குப் பக்கத்திலயே இருந்திட்டார். பெடியள் செக் பண்ணி அனுப்பிட்டாங்கள். வாகனம் ஆமீன்ர பொயின்ருக்குள்ள போயிட்டு. அவன் இறங்கி வேகமாத்தான் ஓடச் சொல்லுவான் (2004,2005 களில் முகமாலைப் பொயின்ட்ல நடக்கிற ஆமி செக்கிங்க கற்பனை பண்ணிக் கொள்ளுங்கோ). சனமெல்லாம் பழக்க தோசத்தில இறங்கி வேகமா ஓடிக் கொண்டிருக்கு. எண்டைக்குமில்லாம, எவரெடி பட்டரிய கண்டோஸ்க்குள்ள வச்சிக் கடத்தின மனுசிய பிடிச்ச கடுப்பில நிண்ட ஆமிக்காரர் கிழடுகட்டயளயும் அடிச்சி விரட்டிக் கொண்டிருக்கிறாங்கள். பெரியவருக்கு எல்லாம் புதுசுதானே, ஆறுதலா இறங்கி, மெல்லம பொயின்ற நோக்கி நடந்தவர். இதையெல்லாம் பாத்துக் கொண்டிருந்த ஆமிக்காரன் வந்து விட்டான் அடி. றோட்டில போட்டு, கும்மி எடுத்திட்டான். அடி தாங்க முடியாத பணக்கார ஐயா வந்த பாதையாள பெடியங்களின்ர பொயின்ற் பக்கமா ஓடத் தொடங்கிட்டார். ஆமிக்காரனும் விடுறதா இல்ல. திரத்தித் திரத்தி அடிக்கிறான். இனி வந்தா பெடியளின்ற துப்பாக்கி சூடுவிழும் எண்ட இடம் வரத்தான் துரத்திறத விட்டவன்.
ஐயா அண்டைக்கு ஓடின ஓட்டத்த ஊர் சனம் முழுவதும் பார்த்து, சிரிப்புக்கும், அழுகைக்கும் இடையிலான ஒரு உணர்வில நிண்டவையாம். ஐயா அதுக்குப் பிறகு முள்ளிவாய்க்கால் சண்ட முடியும் வரைக்கும் ஆமிக்காரன் பக்கம் தலைவச்சும் படுக்கேல்ல.
இப்பிடியான ஒரு மரண நினைவ கந்தையாண்ணைக்கு குடுத்தது தட்டிவான் (பயணிகளை சுமந்துசெல்லும் வாகனம்) தான் என்று சொல்லி சிரிக்கிறார். அந்த நினைவு கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்திருந்தது.
இன்னொன்று, சாவகச்சேரிப்பக்கம் இது அடிக்கடி நடக்கும். பயணிகள் பேருந்துக்காகக் காத்திருப்பர். தட்டிவான்கள் புறப்படும். யாரும் ஏறமாட்டார்கள். உரிய இடங்களுக்கான பேருந்து வரும். ஏறமாட்டார்கள். எல்லாப் பேருந்துகளும் போய் முடிந்ததும், அவர்கள் அங்கேயே காத்திருப்பர். கடைசித் தட்டிவான் இரவு 8 மணிக்குப் புறப்படும். எல்லோரும் பாய்ந்தடித்து அதில் ஏறிக் கொள்வர். ஏன் முதலே ஏறியிருக்கலாமே, பேருந்தில் அல்லது தட்டிவானில் என்று கேட்டால், பகலில தட்டிவான்ல போறது வெட்கமாம்…ம். இப்பிடியும் ஒரு லா..லா.. பயணம்!
இப்படித்தான் வடக்கில் வாழும் நடுத்தர வயதைத் தொட்ட பெரும்பாலானவர்கள் இந்தப் பயணத்தை மறந்திருக்க வாய்ப்பில்லை. வாழ்க்கையின் நிழற்படம் மாதிரி நினைவு வைத்துக் கொள்ளக்கூடிய ஒன்றுதான் இந்த லா..லா.. பயணங்கள்.
அதென்ன லா.. லா..பயணம்?
சில பயணங்கள் 110 வயசு ஆச்சியையும் குழந்தையாக்கிவிடும். பொக்கை கன்னங்களில் பங்கர் வெட்டும். அந்தப் பயணங்களை நினைக்கவே சந்தோச மிகுதிபொங்கும். துள்ளிக் குதிக்கச் செய்யும். அப்படி குதிக்கச் செய்யும் பயணங்களைத் தருவது தட்டிவான்கள். சிலர் இதனை தட்டிபஸ் என்று நினைவுபடுத்துகின்றனர். மகிழ்வின் உச்சத்தில் பலரும் பல சொற்களை உச்சரிப்பர். அதில் பிரபலமானது லா… லா… லல்லல்லா… ஆகவே, அதையே தட்டிவான் பயணத்துக்கும் பொருத்தி லா..லா… பயணமாக மினுக்கித் தந்தார் உடுத்துறையில் இருக்கும் துஸ்யந்தன் என்கிற தட்டிவான் சாரதி..
இனி போவோமா லா..லாவுக்குள்ள?
தட்டிவான், இதன் தாயகம் பிரிட்டன். தரமான பொருள்களைக் கொள்வனவு செய்வதில் வல்லவர்களான எம்மவர்கள் ஜப்பான் பொருள்களைக் காணமுன்பு, பிரிட்டன் பொருட்களைத்தான் கண்டனர். ஜப்பான் யமஹா மாதிரி 1980களுக்கு முதல் பிரிட்டன் தட்டிவான்தான் நம்மவர் இறக்குமதியில் முன்னிலையில் நின்றது. எங்கள் படலைகளுக்குள் மாடு வராமலும், தெருவில் செல்வோர் எட்டிப் பார்த்தால் வளவுக்குள் இருப்போர் தெரியாமல் இருப்பதற்கும் கிடுகினால் மறைப்பானாக உருவாக்கப்பட்டதே தட்டி. வெள்ளைக்காரனிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரக வாகனங்களின் இருபக்கங்களிலும், கிடுகுக்குப் பதிலாகக் கம்பியினால் அமைத்து, உள்ளே இருப்பவர்கள் தெரிந்தும் தெரியாமலும், இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. காரணப் பெயர் வைப்பதில் கில்லாடிகளான நம்மவர்கள் அதற்கு உடனே சூட்டிய திருநாமம், ‘தட்டிவான்’.
அதுக்கு மட்டுமில்ல, இதுக்கும் 30 வயசு!
தட்டிவான் அறிமுகமானதுடன் இலங்கையும் இரண்டாகப் பிளவுபட்டது. தமிழர்கள் பொருளாதாரத் தடைகளைக் கண்டனர். எரிபொருள் விலையேற்றத்தால் தேங்காய் எண்ணெயில் வாகனம் செலுத்தும் பொறிமுறையைக்கூட நம்மவர்கள் கண்டுபிடித்தனர். பஞ்சில் விளக்கெறித்தனர். பனங்காய் சவர்காரமாகியது. இப்படியாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரத்தெட்டுப் புதிய கண்டுபிடிப்புக்களில் ஒன்றுதான், தட்டிவான்களில், குறைந்த செலவில் பயணம் போகலாம் என்பது. யாழ்ப்பாணத்துக்கு உள்ளேயேதான் பரீட்சார்த்த பயணங்கள் நடந்தன. யாழ். நகரப்பகுதியிருந்து சுன்னாகம், அச்சுவேலி, சாவகச்சேரி என்றும், பின்னர் சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்தின் இதர ஊர்களுக்கும் தட்டிவான் பயணம் ஆரம்பமானது.
உள் அமைப்பு
ஆரம்ப கால தட்டிவான்களின் முன் அமைப்பு பிரமாண்டாதாக இருக்கும். பெரிய லைற் ஹெற்கள். ஆந்தையின் கண்கள்போல இருக்கும். வாகனத்தின் முன் பகுதி சதுரமாக இருக்கும். ஹோர்ன், இப்போது மீன் விற்பவர்கள் அடிப்பதுதான். கொஞ்சம் பெரியதாக இருக்கும். மாடுகளையும், சன நெரிசலையும் சைற் எடுக்க, அதை அமத்தினால் போம்பி… போம்பி… என்று சத்தம் வரும்.
தட்டிவானின் பின் பக்கம் அவரவர் வசதிக்கேற்ப அமைத்துக் கொள்வர். சிலர் கதவு யன்னல் எல்லாம் வைத்து, திறந்து ஏறக்கூடிய வசதியுடன் அமைத்திருப்பர். அதன் கீழே ஏறுவதற்கு ஒரு இரும்புப் படியிருக்கும். அதில் காலை வைத்து, மேலிருந்து கட்டித் தூக்கப்பட்டிருக்கும் கயிற்றில் பிடித்துக்கொண்டு ஏறலாம். உள்ளே இருபக்கமும் நீளமான வாங்கு வாகனத்தோடு அசையாதபடி இணைக்கப் பட்டிருக்கும். அதில் நெருக்கமாக அமர்ந்து, நடுவில் கீரைப்பிடி போல பயணிகள் அடுக்கிக் கொள்வர். ஊர்கதை, உறவுக் கதையுடன் பயணம் பறக்கும். ஊர்ப் பெரியவர்கள், மாமன், மச்சான், வாகனக்காரரின் குடும்ப அங்கத்தவர்கள் போன்றவர்கள் தட்டிவான் ட்ரைவரின் அருகில் வசதியாக அமர்ந்து கொள்வர். பின் படியில் கயிற்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு புழுதியோடு பகிடிவிட்டுக் கொண்டு வருவார் நடத்துநர். பயணிகள் அதிகமென்றால், தட்டிவானுக்கு மேலாகவும் காளையர்கள் அமர்ந்து பயணம் செய்வர். தட்டிவானுக்கு மேலிருந்து பயணம் செய்வது காளையடக்கி, காதலியை கரம் பற்றுவதற்கு சமமானது. காதலியுடனோ, காதலிக்க காத்திருக்கும் பெண்ணுடனோ பயணிக்க வாய்ப்புக் கிடைக்கும் காளையர்கள் தட்டிவான் முதுகில் பயணம் செய்து, பாடல் பாடி, தங்கள் வீரத்தை நிலைநாட்டுவதுண்டு. மேலிருந்து குண்டுகள் விழுமென்றோ, மல்யுத்தம், காளையடக்கல் நடக்குமென்றோ நினைக்கக்கூடாது. காட்டுவழியால் தட்டிவான்கள் 20 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கும்போது, மரக் கிளைகள் தலையில் அடிக்கும். அதில் அடிவாங்காமல், தப்பிப்பது அந்தக் கால காளையர்களின் வீரங்களில் ஒன்று.
சேவையும், சேவைக் காலமும்
1980ஆம் ஆண்டுகளில் தொடங்கி யாழ்ப்பாண இடப்பெயர்வு ஊடாக, சமாதானம் நெருங்கிய 2000ஆம் ஆண்டு வரைக்கும் தட்டிவான்களின் சேவை மிக முக்கியமாக இருந்தது.
யாழ்ப்பாண இடப்பெயர்வில் சிறியளவு பணியாற்றினாலும், உள்ளூரளவில் அதிக பணியை தட்டிவான்கள் ஆற்றியிருக்கின்றன. பயணிகளை, அலுவலக உத்தியோகத்தர்களை ஏற்றி இறக்குவதை விட, வியாபாரிகளை ஏற்றி இறக்கும் பணியையும் செய்திருக்கின்றன.
விடுதலைப் புலிகள் நடத்திய சண்டைகளுக்கும், காயப்பட்ட, மரணித்த போராளிகளை களமுனைகளிலிருந்து அப்புறப்படுத்துவதற்கும் தட்டிவான்களைப் பயன்படுத்தினர். புலிகளிடம் தட்டிவான்கள் இருக்கவில்லை. “டீசலுக்கு ஓட்டம்” என்ற பிரிவுக்குள் இது இடம்பெறும். முதல் நாள் பொதுமக்களை ஏற்றினால், மறுநாள் முழுதும் புலிகளுக்கு தட்டிவானை ஓடவேண்டும். அதற்குப் பணமில்லை. பயண செலவுக்கான டீசலை வழங்குவார்கள்.
மரணித்த போராளிகளை உரிய பெற்றோர்களின் வீட்டிலிருந்து துயிலுமில்லங்கள் நோக்கி எடுத்துச் செல்லும் பணியையும் தட்டிவான்கள் ஆற்றின. மனதை உருக்கும் ஒரு துயரக் கீதத்தை பிறப்பிக்கும் ஸ்பீக்கரை தட்டிவானின் மேலாகக் கட்டி, அதனைச்சுற்றியும் சிப்பு மஞ்சள் கொடிகள், வாழை மரங்கள் கட்டி, நடுவில், தட்டிவானின் நடுவில் குறித்த விடுதலைப் புலிப் போராளியின் உடலம் வைக்கப்பட்டிருக்கும். அதன் கால் மாட்டில் இரு போராளிகள் துப்பாக்கிகளுடன் நிற்பர். தலை மாட்டில் தாயும் ஏனைய உறவினர்களும் அமர்ந்து, துயிலுமில்லம் வரைக்கும் அழுதபடி வருவர். அந்தத் தட்டிவானைக் கண்டதும் மக்கள் வீதியால் பயணிப்பவர்களும், ஊர்களுக்குள் வேலை செய்கின்றவர்களும் தட்டிவான்களைப் பார்த்தபடி அமைதியாக நிற்பர். டயர்கள் தட்டுப்பாடான அந்தக் காலகட்டத்தில் வைக்கோல் அடைந்தும், மண் அடைந்தும், காற்றில்லாமலும் போரில் மரணித்தவர்களின் உடல்களைக் காவின தட்டிவான்கள்.
இப்போது உடுத்துறையில் 10 தட்டிவான்கள் இயங்கும் நிலையில் இருக்கின்றன. அவை கிளிநொச்சிக்கு மீன் கொண்டு செல்பவர்களை ஏற்றி இறக்கும் பணியைச் செய்கின்றன.
இப்படியே பொருளாதாரத் தடைகள், பாதைத் தடைகள், இடப்பெயர்வுகள் என அலைந்துழன்ற தமிழர்களைக் காவியதில் தட்டிவான்களின் பங்கு, மாட்டு வண்டில்களுக்கும், சயிக்கிள்களுக்கும் முந்திய இடத்தில் இருந்தது. 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜப்பானிலிருந்து வந்த மினி பஸ்கள் அந்த இடத்தைப் பிடித்துத் தட்டிவான்களை மறக்கச் செய்துவிட்டன.
நன்றி: உதயன், சூரியகாந்தி
ஜெரா