படம் | Columbian

ஜேர்ச் மரியோ பெர்கோலியோ என்ற இயற் பெயருடைய பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு எதிர்வரும் தை மாதம் பயணம் செய்யவுள்ளார். சர்வதேச விசாரணை ஒன்று நடைபெறவுள்ள நிலையில் இவருடைய பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பாப்பரசருடைய இலங்கைக்கான பயண ஏற்பாடுகளை இலங்கையின் ஆயர் பேரவையும் வத்திக்கான் பிரதிநிதிகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட ஏற்பாடுகள்

பாப்பரசரின் வத்திக்கான் பிரதிநிதி பேராயர் நுவான்வான்தொற் கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்து நிலைமைகளை அவதானித்து முதற்கட்ட நடவடிக்கைகளை நிறைவேற்றியுள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், போரின் விளைவுகளினால் ஏற்பட்ட அவலங்களையும் பாப்பரசர் நேரில் அறிந்து கொள்ள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஆனால், பாப்பரசர் யாழ்ப்பாணத்திற்கு வருவதை கொழும்பில் உள்ள அரச உயர் மட்டத்தினர் பலர் விரும்பவில்லை. மடுமாத தேவாலயத்துக்கு மாத்திரமே திருத்தந்தை செல்லவுள்ளார் எனவும், அங்கும் ஒரு மணித்தியாலம் மாத்திரமே அவர் தங்கியிருப்பார் எனவும் கூறப்படுகின்றது.

அங்கு தங்கியிருக்கும் ஒரு மணிநேரத்தில் போரின் அவலங்களை பாப்பரசரினால் எவ்வாறு அவதானிக்க முடியும் என்ற கேள்விகள், சந்தேகங்கள் மக்களிடம் எழுகின்றன. திருந்தந்தையின் வருகையின் நோக்கத்தை திசை திருப்பும் முயற்சிகள் தற்போது வெளிப்படும் நிலையில் அவரின் இலங்கை பயணத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கு இலங்கையின் ஆயர் பேரவை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆதிக்கங்கள், முதலாளித்துவங்கள் என்பதை விட சமூக மாற்றங்களும், அதனுடான சமத்துவங்களும்தான் திருச்சபையின் அடிப்படைத் தத்துவம். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் குடியேற்ற நாடுகள் சுதந்திரம் அடைந்தன. ஆனால், உள் நாட்டுக்குள் இருக்கக் கூடிய பல தேசிய இனங்கள் நசுக்கப்பட்டு அரசின் இறைமை, தன் ஆதிக்கம் என்பன ஒரு இனத்துக்கும் மட்டும் உரியதாக மாற்றப்பட்டன. இன்று பல நாடுகளில் உரிமைக்காக போராடும் தேசிய இனங்கள் எப்போது விடுதலை அடைவது என்ற கேள்விகள், ஆதங்கங்கள் உலகில் அதிகரித்துள்ளன. இலங்கைத் தமிழர் பிரச்சினையும் அவ்வாறான ஒன்றுதான்.

மறை மாவட்டங்களின் தோற்றம்

வடக்கு – கிழக்கு மாகாண குருக்கள், துறவிகளின் எதிர்ப்பார்ப்பு. யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை என வடக்கு – கிழக்கு மாகாணம் இன்று நான்கு தமிழ் ஆயர்களை கொண்டிருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகளை செய்தவர்கள், முன்னைய பாப்பரசர்கள். வடக்கு – கிழக்கு மாகாணத்தின் எல்லைகளை கோடிட்டுக்காட்டிக் கொண்டிருப்பது கத்தோலிக்க திருச்சபையின் இந்த நான்கு தமிழ் மறை மாவட்டங்களும் தான்.

யாழ். மறை மாவட்டம் பிரித்தானியர் காலத்தில் உருவாக்கப்பட்டது. 1981ஆம் ஆண்டு மன்னார் மறை மாவட்டமும், 1984இல் திருகோணமலை – மட்டக்களப்பு மறை மாவட்டமும், 2012ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு மறைமாவட்டம் தனியாகவும் உருவாக்கப்பட்டன. இந்த நான்கு மறை மாவட்டங்களையும் எந்த அரசு நினைத்தாலும் மாற்ற முடியாது. பாப்பரசரின் அங்கீகாரத்துடன் இந்த நான்கு மறை மாவட்டங்களும் உருவாக்கப்பட்டன. தற்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை இணைந்து வன்னி மறை மாவட்டம் என ஒரு புதிய மறை மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என அந்த மாவட்டங்களில் உள்ள அருட்தந்தையர்கள் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர். அது குறித்த எற்பாடுகள் தொடருகின்ற சந்தர்ப்பத்தில் பாப்பரசரின் இலங்கைக்கான வருகை அமைந்துள்ளது.

வன்னிக்கு புதிய மறை மாவட்டம்

எனவே, வன்னி பிரதேசத்தை தனி மறை மாவட்டமாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் ஐந்தாவது தமிழ் மறை மாவட்டத்தையும் உருவாக்க வேண்டும் என்ற கனவு நனவாக பாப்பரசர் ஒத்துழைப்பு வழங்குவார் என்ற நம்பிக்கையும் உள்ளது. பாப்பரசரின் பிரநிதிநிதி கடந்த மாதம் கொழும்புக்கு வந்தபோது யாழ்ப்பாணத்திற்கும் சென்றிருந்தார். யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் உட்பட குருக்கள் பலரையும் அந்த பிரதிநிதி சந்தித்து உரையாடினார். இப்போது வடக்கு – கிழக்கு மாகாணத்தை இணைத்து தனியான ஒரு தமிழ் மறை மாநிலம் ஒன்றை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக பாப்பரசரின் பிரதிநிதி உறுதியளித்துள்ளார். குறிப்பாக, கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்களை இணைத்து புதிய ஒரு மறை மாவட்டத்தை உருவாக்கிய பின்னர் வடக்கு கிழக்கில் உள்ள ஐந்து மறை மாவட்டங்களையும் இணைத்து தனியான ஒரு மறை மாநிலம் ஒன்றையும், அந்த மாநிலத்திற்கு பேராயர் ஒருவரையும் நியமிப்பதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

யாழ். ஆயர் மேற்படி ஐந்து மறை மாவட்டங்களுக்கும் பேராயராக பதவி வகிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. கத்தோலிக்க திருச்சபையின் விதிகளின் பிரகாரம், ஒரு நாட்டுக்கு தேவையான எத்தனை மறை மாவட்டங்களையும் உருவாக்கலாம். ஆனால், அத்தனை மறை மாவட்டங்களுக்கும் பொதுவாக ஒரு பேராயர் மாத்திரமே நியமிக்கப்படுவார். ஒரு நாட்டுக்கு இரண்டு பேராயர்கள் நியமிக்கப்படுவதில்லை. இலங்கையில் உள்ள 14 மறை மாவட்டங்களுக்கு பேராயராக மல்கம் ரஞ்சித் பதவி வகிக்கின்றார். இந்த நிலையில், இலங்கையில் அதுவும் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் தற்போது உள்ள மேற்படி நான்கு மறை மாவட்டங்களுடன் வன்னி பிரதேசத்திற்கும் தனியான ஒரு மறை மாவட்டத்தை உருவாக்கி ஐந்து மறை மாவட்டங்களுடன் தனி மறை மாநிலம் ஒன்று உருவாக்கப்படவுள்ளமை தமிழ் கத்தோலிக்க மக்களுக்கு பெருமையாக இருந்தாலும், வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பது நிறுவப்பட்டுள்ளது.

பாவங்களை கழுவக்கூடாது

வடக்கு கிழக்கில் காணிப்பறிப்பு, சிங்கள குடியேற்றங்கள் என்று தமிழர்களின் பாரம்பரியங்களையும், அடையாளங்களையும் மாற்றியமைக்கும் வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வடக்கு – கிழக்கு இணைந்த மறை மாநிலம் குறைந்தபட்சமேனும் இலங்கை அரசுக்கு சவாலாக அமையும் என எதிர்ப்பார்க்கலாம். எவ்வாறாயினும், வடக்கு – கிழக்கு இணைந்த மறை மாநிலம் ஒன்று உருவாக்கப்படுவதை தடுப்பதற்காக இலங்கை அரசு பேராயர் மல்கம் ரஞ்சித்தை அணுகக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. அதேவேளை, பாப்பரசரின் வருகை இலங்கை அரசின் பாவங்களை கழுவுவதற்கான பயணமாக அமைந்து விடக்கூடாது என்பதும் பலரின் எதிர்ப்பார்ப்பு.

தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

Nix P0001