படம் | Vikalpa flickr

1978 இன் 4ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுச் சட்டம், 1981 இன் 8ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் இரண்டாம் உறுப்புரையின் கீழ் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு 2010 ஆகஸ்ட் 11ஆம் திகதி விசாரணைகளை ஆரம்பித்தது. இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பகிரங்க விசாரணைகளை மேற்கொண்டது. 2011 நவம்பர் மாதம் இவ் ஆணைக்குழுவின் இறுதியறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணை செய்து பெறப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் ஆணைக்குழு தனது அறிக்கையுடன் 285 பரிந்துரைகளை முன்வைத்தது.

இந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 285 பரிந்துரைகளில் 7 பரிந்துரைகள் நேரடியாக பெண்கள் தொடர்பான விடயங்களை முன்வைக்கின்றன. பெண்கள் தொடர்பிலான பரிந்துரைகள் இலங்கையில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பெண்கள் தொடர்பான பரிந்துரைகள் வருமாறு…

  1. 9.86 – அரச தகவல் மூலங்களின் படி 59,000 இற்கும் அதிகமான பெண்கள் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நல்வாழ்வினை உறுதிப்படுத்தி நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  2. 9.87 – அநேகமான பெண்கள் தமது கணவன்மாரை இழந்துள்ளனர் அல்லது இருக்குமிடம் தெரியாதிருக்கின்றனர். சிலர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய மனவேதனைகள் இருக்கத்தக்கதாக மேற்படி குடும்பங்களின் சிறுவர்களையும் முதியவர்களையும் பராமரிக்க வேண்டியது இப்பெண்களின் பொறுப்பாகவுள்ளது. எனவே, அவர்களுக்கான ஜீவனோபாய மார்க்கத்தையும் வருமானம் ஈட்டித்தரும் முறையையும் அமுல்படுத்த வேண்டும்.
  3. 9.88 – இந்தப் பணியில் உதவியளிப்பதற்கு சர்வதேச சமூகங்களும் சர்வதேச ஸ்தாபனங்களும் சிவில் அமைப்புகளும் தமது அறிவையும் வளங்களையும் வழங்கும் வகையில் அரசு முன்னின்று செயற்பட வேண்டும். உள்ளூராட்சி நிறுவனங்கள், அரசியல் தலைமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் பாதிக்கப்பட்டோரின் மனநலம் கருதி நடவடிக்கைகளையும் தீர்வுகளையும் மேற்கொள்வதற்கு அரசு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
  4. 9.89 – நீடித்த யுத்தம் காரணமாகவும் குடும்பத்தில் ஆண்களை இழந்த காரணத்தினாலும் கல்வியைத் தொடரமுடியாது பல பெண்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு முறைசார் அல்லது முறைசாரா கல்வி வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு தொழிற்பயிற்சி அல்லது வாழ்வாதார முறை என்பவற்றை உருவாக்க உதவ வேண்டும்.
  5. 9.90 – இப்பெண்கள் தமது பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய வகையிலும் தமது மனித கௌரவம் பாதுகாக்கக்கூடிய வகையிலும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நல்லிணக்கத்திற்கான முன் நிபந்தனையாக இத்தகைய சூழலை உருவாக்குவது அரசின் பொறுப்பாகும் என ஆணைக்குழு கருதுகின்றது.
  6. 9.91 – காணாமற்போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், எதேச்சதிகாரமாக நீண்டகாலம் தடுத்து வைத்தல், காணாமற்போகச் செய்தல் என்பன பெண்களை நேரடியாக பாதிக்கும் விடயங்களாகும். மேற்படி பாதிப்புக்கு உள்ளானவர் தமது கணவராகவோ, தந்தையாகவோ, மகனாகவோ, சகோதரர்களாகவோ இருக்கலாம். தமது அன்புக்குறியவர்கள் இருக்கும் இடம் அறியாவிட்டால் உண்மையையும் சட்டரீதியான பாதுகாப்பையும் பெறும் உரிமை அவர்களது ஜனநாயக உரிமையாகும். நல்லிணக்க முயற்சிக்கு இது முன் நிபந்தனையாகும்.
  7. 9.92 – இப்பிரச்சினைக்கு நிலைபேறான தீர்வுகளைக் காண்பதாயின் நிறுவனங்களுக்கிடையிலான முயற்சிகளும், ஒருங்கிணைந்த முயற்சியினால் மட்டுமே அதை எதிர்கொள்ள முடியும் என ஆணைக்குழு கருதுகிறது. மேற்குறிப்பிட்ட பாதிப்புக்குள்ளான அனைவரது தீர்வுகளைக் காண்பதற்கும், தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் ஒரு செயலணி தாமதமின்றி ஸ்தாபிக்கப்படல் வேண்டும்.

மேற்கூறிய ஏழு பரிந்துரைகளே பெண்கள் முகம்கொடுக்கும் நேரடியான பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகின்ற பரிந்துரைகளாகும்.

பெண்ணானவள் போரில் தனது கணவனை அல்லது குடும்பத்தின் தலைமை பொறுப்பினை ஏற்று நடக்கக்கூடிய நபரினை இழக்க நேரிடும்போது அது அவளது பொருளாதாரத்தில் பாரிய இழப்பினை ஏற்படுத்தும். இதை உளவியல் ரீதியாக நோக்கினால் இந்த இழப்பானது ஒருவரை இழவிரக்கச் செயற்பாட்டிற்கு (Greef) உட்படுத்துகிறது. இவ்வாறான இழவிரக்கச் செயற்பாட்டில் போருக்கு பின் வடக்கு கிழக்குப் பகுதியில் பல பெண்கள் காணப்படுகின்றார்கள்.

உண்மையில் பாதிக்கப்பட்டவர்களிடையே நம்பிக்கையை விதைத்தல் என்பது போருக்கு பின் முன்னெடுக்கப்பட வேண்டியதொரு விடயம். ஆயினும், வடக்கு கிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தளவில் இன்னும் இவ்வாறான உளவியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பல திட்டங்கள் முன்னெடுக்கப்படாத நிலை காணப்படுகிறது.  போருக்கு பின்னரான மீள்நல்லிணக்கமும் இடம்பெறாமையால் இந்த நம்பிக்கை விதைத்தல் நடவடிக்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. சில தனியார் நிறுவனங்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோதும் அவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுகின்றன.

இலங்கையின் வடக்கு – கிழக்குப் பகுதிகளை எடுத்துக்கொண்டால் போரின் பின்னரான வன்செயல்கள் அதிகரிப்பிற்கும் தற்கொலைகள் அதிகரிப்பிற்கும் இவையும் காரணங்களாக அமைகின்றன. வெறும் உட்கட்டமைப்புக்களை மட்டும் அபிவிருத்தி செய்வதோடு நின்று விடாமல் போருக்கு பின்னரான உளவியல் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டிய பொறுப்பு அரசிற்குண்டு. மந்தகதியில் நகர்கின்ற இவ்வாறான பரிந்துரைகள் பற்றியும் அரசின் கவனம் திரும்ப வேண்டியுள்ளமை காலத்தின் தேவை.

அறிக்கையில் 59,000இற்கும் அதிகமானோர் குடும்பத்தின் தலைமைப்பொறுப்பினை ஏற்க வேண்டியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளபோதும் அண்மைய தரவுகளின் படி இன்று இலங்கையில் 86000 பேர் போரினால் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 40,000 பேர் வடக்கிலும் 46,000 பேர் கிழக்கிலும் வாழ்கின்றனர்.

காணாமல் போனவர்களது உறவுகளை எடுத்துக்கொண்டால் தமது குடும்பப்பொறுப்பினை ஏற்று நடாத்த வேண்டியுள்ளதுடன் தம்மவர்கள் பற்றிய தகவல்களை பெறுவதற்காகவும் பெருமளவான செலவினங்களை எதிர்நோக்குகின்றனர். யுத்தத்திற்குப் பின்னர் முன்னாள் போராளிகளை சமூகத்தில் மீளிணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு காலகட்டத்தில் ஆயூதமேந்தி வலம் வந்தும் போர்க்களங்களை கண்டும் ஆயூதப்போராட்டத்தில் தலைமைப்பதவியும் வகித்த இவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளபோதும் இவர்களுக்கான வேலை வாய்ப்புகள் மிகக்குறைவாகவே காணப்படுகிறது.

ஆக மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களினால் தலைமை பொறுப்பு வகிப்பவர்களது நிலை கேள்விக்குள்ளாகும் பட்சத்தில் குடும்பத்தின் அடுத்த மட்டத்திலுள்ள பெண்கள் மீது இப்பொறுப்புக்கள் சுமத்தப்படுகின்றன. இவர்கள் குடும்ப சுமை காரணமாக சமூகத்தில் காலடிவைக்க ஆரம்பிக்கும்போது பலவித சவால்களை எதிர்கொள்ள வேண்டியவளாகின்றார்கள். இன்றைய காலகட்டத்தினை எடுத்துக்கொண்டால் கல்வித்தகைமை இன்மை, பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் என்பவற்றினை தலைமைப்பொறுப்பினை ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள பெண்கள் சந்திக்க நேரிடுகிறது.

“பயங்கரவாதத்தினை அழித்து விட்டோம்” என்று மாண்புமிகு ஜனாதிபதி அறிவித்து ஆண்டுகள் ஐந்தாகவும் போகின்றன. ஆயினும் மேற்படி பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தல் மந்தகதியிலேயே நகர்கின்றது.

கேஷாயினி எட்மண்ட்