டித்வா பேரிடர் நிகழ்ந்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. காலம் கடந்துவிட்ட போதிலும், புஷ்பராஜ் ஆனந்தரஞ்சனி போன்ற நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்வில் இன்னும் விடியல் பிறக்கவில்லை. தங்களின் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் மண்ணுக்குள் புதைத்துவிட்டு, இன்னும் இருண்ட, குறுகிய முகாம்களின் தற்காலிகக் கூரைகளுக்குள் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சிதைந்துபோன தங்களின் வாழ்க்கையை எப்படி, எங்கிருந்து மீண்டும் கட்டியெழுப்புவது என்று தெரியாமல் எதிர்காலம் குறித்து அவர்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளார்கள்.
அரசின் மெத்தனப் போக்கும், அலட்சியமும் இந்த மக்களின் துயரத்தை இன்னும் பலமடங்கு அதிகரித்துள்ளது. முறையான மாற்று நிலமோ, பாதுகாப்பான இருப்பிடமோ வழங்கப்படாததால், அதே நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளுக்கே சில குடும்பங்கள் வேறு வழியின்றி மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
முகாம்களிலும் தற்காலிக குடியிருப்புகளிலும் வாழும் மக்களுக்கு இன்னும் அடிப்படை மனிதத் தேவைகள் கூட முழுமையாகக் கிடைக்கவில்லை. முறையான மின்சார வசதி இன்னும் வழங்கப்படவில்லை. பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லை. முறையான கழிவறை வசதிகளோ அல்லது சுகாதாரக் கட்டமைப்புகளோ இல்லாததால், குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும் அன்றாடம் பெரும் அவஸ்தைக்குள்ளாகி வருகின்றனர்.
தங்களுடைய கண்ணியம், சமத்துவம் மற்றும் நீதிக்கான கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு சமூகம் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் ஓரங்கட்டப்படுதலுக்கு டித்வா பேரிடர் ஒரு அண்மைக்கால உதாரணம் மட்டுமே.
‘SILENT WALLS’ என்ற தலைப்பில் ராஜசேகர் பரிமலாகாந்தியால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் வெறும் ஆனந்தரஞ்சனியின் தனிப்பட்ட கண்ணீர் அல்ல; மாறாக, தலைமுறை தலைமுறையாக உழைப்புச் சுரண்டலுக்கும், நிலமற்ற அவலத்திற்கும், அரசியல் ரீதியான புறக்கணிப்புக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் ஒட்டுமொத்த மலையகத் தமிழ் மக்களின் கூட்டுக்குரலாகும்.
ஆசிரியர் குறிப்பு: இந்த ஆவணப்படத்திற்கான வீடியோக் காட்சிகள் 2026 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பதிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.