படம் | AP Photo/Jeff Widener, Theatlantic
தியனன்மென் சதுக்கத்தில் சீன இராணுவம் அசுரத் தாண்டவம் ஆடி இன்றோடு 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன. சீனாவில் ஜனநாயகத்தை வலியுறுத்தியும், அரசியல் சீர்த்திருத்தத்தையும் வேண்டியும் இலட்சக்கணக்கான எதிர்ப்பாளர்களால் 6 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த போராட்டம் சீன இராணுவத்தின் நசுக்கப்பட்ட நாள் நேற்றாகும். அன்றைய தினம் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை. இருப்பினும், பல நூற்றுக்கணக்குக்கும் – பல ஆயிரக்கணக்குக்கும் இடைப்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கின்றனர் என சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. 25ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ‘மாற்றம்’ தரும் பதிவிது.
###
மக்களை காப்பாற்றியாகவேண்டும், ஜனநாயகத்தை நிலைநாட்டியே தீரவேண்டும் என்ற இலக்குடன் அந்த இளைஞன் முன்னோக்கி நடந்துகொண்டிருந்தான். சூழ நடக்கும் சம்பவம் எதுவும் அவனது கண்ணுக்குத் தெரியவில்லை, காதுக்கும் எட்டவில்லை. எப்படியாவது இந்த யுத்தத் தாங்கி தொடரணியை நிறுத்தியாகவேண்டும் என்ற வேட்கையே அவனது மனதில் இருந்தது.
1989 ஜூன் 5ஆம் திகதி காலை சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சில மணிநேரமே அவனால் யுத்தத் தாங்கிகளை நிறுத்த முடிந்தது. அந்த இளைஞனின் பெயர், யுத்தத் தாங்கி செலுத்துனரோடு என்ன பேசினான், சம்பவத்தின் பின்னர் அவனுக்கு என்ன நேர்ந்தது போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியவில்லை. ஆனால், இந்தச் சம்பவம் ஜனநாயக அடக்குமுறைக்கு எதிரான அடையாளமாக உலகளவில் பிரபலமானது.
1989 ஜூன் 5ஆம் சீன மக்களாலும் ஜனநாயகத்தை நேசிக்கும், ஆதரிக்கும் உலக மக்களாலும் இலகுவில் மறக்க முடியாத தினமாகும். சீன தலைநகர் பெய்ஜிங் தியனன்மென் சதுக்கத்தில் மக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு அறவழி போராட்டம் சீன இராணுவத்தால் 23 வருடங்களுக்கு முன்னர் இந்த மாதமே அடக்கி ஒடுக்கப்பட்டது. சீன பொதுவுடமைக் கட்சியின் பொருளாதார கொள்கைகளுக்கும், அரசியல் கொள்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, அரசியல் சீர்த்திருத்தங்களைக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள், தொழிலாளர்கள், உயர் துறைகளில் இருப்பவர்கள் அறவழிப் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டம் 1989 ஏப்ரல் 15ஆம் திகதி முதல் ஜூன் 5ஆம் திகதி வரை நடந்தது. உலகிலேயே மிகப்பெரிய தியனன்மென் சதுக்கத்தில் சுமார் 10 லட்சம் பேர் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். பெருமளவில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள், போராட்டத்தை தேசியமயமாக்க ஆரம்பித்தனர். நாடுபூராகவும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள், அவரவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களில் போராட்டத்தை விஸ்தரித்தனர்.
சுமார் 45 நாட்கள் உட்கார்ந்த இடம் அசராமல், மக்களின் எண்ணிக்கையும் குறையாமல் தொடர்ந்து போராட்டம் வலுவடைந்து செல்வதை அவதானித்த சீன அரசு கொஞ்சம் கலக்கமடைந்தது. இதுவரை மக்களுக்கு எதிராக ஆயுதத்தை உயர்த்தாமல் இருந்த இராணுவம், அதிகாரவர்க்கத்தின் துணையுடன் அதற்கு தயாரானது.
ஜனநாயகத்தை வலியுறுத்தி தியனன்மென் சதுக்கத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட ‘ஜனநாயகத்திற்கான கடவுள்’ என்ற சிலையின் வேலைப்பாடுகள் 1989 ஜூன் 3ஆம் திகதியன்று பூர்த்தியடைந்தது. அன்றையதினம் இரவு வழமையைவிட பெரும்திரளான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அழகு ஆடைகளுடன் அவர்களின் குழந்தைகளும் சிலையை காணவந்திருந்தனர். மாலை சீன அரசு எச்சரிக்கை அறிவிப்பொன்றை விடுத்திருந்தது. “வீட்டில் இருந்தவாறு உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என்ற அறிவிப்பை அரச தொலைக்காட்சிகளும், வானொலிகளும் ஒளி, ஒலிபரப்பின. இந்த அறிவிப்பை கவனத்தில் கொள்ளாமல் மக்கள் தங்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
தொடர்ந்து இடம்பெற்றுவரும் இந்த மாபெரும் போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்கவும், படமெடுக்கவும் உலகின் பிரபல பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையதளங்களிலிருந்து பெய்ஜிங்கிற்கு படையெடுத்திருந்தனர். கொடுத்துவைத்தது போல் சதுக்கத்தை தெளிவாக அவதானிக்கக்கூடியவகையில் பெய்ஜிங் நட்சத்திர ஹோட்டல் அந்தப் பகுதியில் அமைந்திருந்தது. அவர்களும் அங்கேயே அறைகளை எடுத்து தங்கியிருந்தனர்.
சீன அரசு அறிவித்தது போல் விடிகாலை தியனன்மென் சதுக்கத்தை இராணுவம் சுற்றிவளைத்தது. இந்தக் காட்சியின் சாட்சிகளாக பல உள்நாட்டு, வெளிநாட்டு செய்தியாளர்கள் உள்ளனர். சீன இராணுவம் மேற்கொண்ட மனித குலத்துக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை பல செய்தியாளர்கள், படப்பிடிப்பாளர்கள் பெய்ஜிங் ஹோட்டல் பெல்கனியிலிருந்தவாறு தெளிவாக அவதானித்துள்ளனர். ‘குளோப் அண்ட் மெய்ல்’ பத்திரிகையின் சீன நாட்டுக்கான பெண் செய்தியாளர் ஜென் வோங்கும் அவர்களுள் ஒருவர். இவர் சீன நாட்டு பிரஜையாவார். இவர் அந்த சந்தர்ப்பத்தை இவ்வாறு விவரிக்கிறார்.
“1989 ஜூன் 3ஆம் திகதி இரவு வழமையான முந்தைய நாட்கள் போலில்லாமல் போராட்டக்காரர்கள் அனைவரும் கண்விழித்தே இருந்தனர். நானும் அவர்களுள் ஒருவராக இருந்தவாறு குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். திடீரென இராணுவ ட்ரக் வாகனமொன்று வந்து நின்றது. பின்னர் தொடர்ந்து வரத்தொடங்கின. அதிலிருந்து இறங்கிய இராணுவத்தினரின் முகத்தில் சிரிப்பை காணமுடியவில்லை. முகம் ஏதோ இறுக்கமாக காணப்பட்டது. உடனே அவர்கள் போராட்டக்காரர்களை நோக்கி சுட ஆரம்பித்தனர். ஒருவாறு பின்வாங்கி நான் தங்கியிருந்த ஹோட்டலை நோக்கி ஓட ஆரம்பித்தேன்.”
“ஆனால், ஹோட்டல் வாயிற்கதவில் இராணுவத்தினர் பலத்த சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைத்து செய்தியாளர்களையும் நிறுத்தி விசாரணை நடத்தியதோடு, அவர்களிடமிருந்த குறிப்புப் புத்தகம், வீடியோ, ஓடியோ பதிவுகள் என்பனவற்றையும் கருவிகளையும் பறிமுதல் செய்துகொண்டிருந்தனர். சுதாகரித்துக்கொண்ட நான் எனது குறிப்புப் புத்தகத்தை பின்பக்க காற்சட்டையினுள் மறைத்துக்கொண்டேன். சீன பிரஜை என்பதால் அந்த சூழ்நிலை எனக்கு கொஞ்சம் சாதகமாகவே இருந்தது. தான் இந்த ஹோட்டலில் வேலைசெய்யும் பணிப்பெண் என்றும் – இரவு நேர வேலைக்காகவே இப்போது வந்திருக்கிறேன் என்றும் – இராணுவத்தினரிடம் தெரிவித்து உள்நுழைந்தேன். அங்கு செய்தியாளர்கள் தங்களது நிறுவன ஆசிரியர்களை தொடர்புகொண்டு நடந்தவற்றை கூறிக்கொண்டிருந்தனர். இதனை மோப்பம் பிடித்த புலனாய்வுப் பிரிவு கத்தரிகோல்களைக் கொண்டு தொலைபேசி இணைப்புகளை துண்டிக்க ஆரம்பித்தது.”
“உடனே ஹோட்டல் பெல்கனியை நோக்கி விரைந்தேன். அவ்வேளை சதுக்கத்தின் நாலாபுறமிருந்தும் இராணுவம் உள்நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தது. போராட்டக்காரர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடத்தொடங்கினர். அப்பாவி சிவிலியன்களை இராணுவம் மிருகங்களை சுட்டுக்கொல்வது போல் சுட்டுக்கொன்றது. அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை. கைகளைக் கொண்டே இராணுவத்தினருடன் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். மேலங்கிகளை அணிந்திருந்த சிலர், இராணுவம் ரப்பர் ரவைகளை கொண்டுதானே எங்களை பயமுறுத்துகிறது. அதனால், தங்களுக்கு ஒன்றும் நேராது என எண்ணியிருந்தனர். ஆனால், இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் தங்களை துளைத்தவுடன்தான் அவை உண்மையானவை என அவர்கள் உணர்ந்தனர்.”
“4ஆம் திகதி விடிகாலை வரை நான் ஹோட்டல் பெல்கனியில் இருந்தவாறு அனைத்தையும் கண்காணித்துக்கொண்டிருந்தேன். போராட்டக்காரர்களுக்கு உதவ ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடிக்கடி வந்துசென்றன. இருப்பினும், அவை பற்றாக்குரையாகவே இருந்தன. வாடகைக் கார்களும் களத்தில் இறங்கி போராட்டக்காரர்களுக்கு உதவத் தொடங்கின. விடிகாலை 4 மணிவரை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்த வீதியோர விளக்குகள் அணைக்கப்பட்டு உடனடியாக போராட்டக்காரர்கள் சதுக்கத்தை விட்டு வெளியேறவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும், மாணவர்கள் கலைந்துசெல்லவில்லை. அனைவரும் முன்னாள் தலைவர் மாவோ சேதுங்கின் கல்லறை அமைந்திருக்கும் பகுதிக்கு பின்வாங்கினர். குறிப்பிட்ட சில மாணவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த யுத்த தாங்கிகளில் இருந்த இராணுவத்தினரைப் பார்த்து கூச்சலிட்டனர். உடனே இயக்கப்பட்ட அந்த தாங்கிகள் சுமார் 10, 11 மாணவர்களை நசுக்கியது. இந்தச் சம்பவம் விடிகாலை 6 மணியளவில் இடம்பெற்றது.”
“இதன் பின்னர் பலரை ஓடவிட்டு பின்புறமாக இராணுவம் சுட்டுக்கொன்றது. வைத்தியர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், தொழிலாளர்கள், தாதியர்கள் என பாராது அனைவரையும் இராணுவம் சுட்டுக்கொன்றது. காயப்பட்டவர்களை வைத்தியசாலைகளில் சேர்க்க முயலுவோரையும் இராணுவம் விட்டுவைக்கவில்லை. போராட்டக்காரர்களை ஒன்றுசேரவிடாது இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக்கொண்டே இருந்தது”- என தான் நேரடியாக கண்டவற்றை ‘ப்ரொன்ட் லைன்’ எனும் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தமுனையில் எதிரிகளை அழித்தொழிப்பதற்கு பயன்படுத்தும் ஆயுதங்களையே தனது சொந்த நாட்டு மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு சீன இராணுவம் பயன்படுத்தியுள்ளது. ஏகே-47, தானியங்கி துப்பாக்கிகள், யுத்தத்தாங்கிகள் பயன்படுத்தப்பட்டன. அடையாளம் தெரியாத சில ஆயுதங்களின் ரவைகள் கால் கட்டை விரல் அளவுடையது என சில போராட்டக்காரர்கள் பின்னர் தெரிவித்திருந்தனர்.
சீன இராணுவத்தின் மிருகத்தனமாக தாக்குதலில் 300 – 800 வரையிலான மக்கள் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுறது.
ஜூன் 5ஆம் காலை 25இற்கும் மேற்பட்ட யுத்தத் தாங்கிகள் சதுக்கத்தை நோக்கி அணிவகுத்து வந்துகொண்டிருந்தது. துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மக்களின் உடலங்கள், எரியுண்டு கிடந்த வாகனங்களை நசுக்கியவாறு இன்னும் பல உயிர்களை மாய்ப்பதற்காக அந்த தாங்கிகள் வந்துகொண்டிருந்தன. திடீரென உயர்ந்த மனிதர் ஒருவர் அணிவகுத்து வந்த யுத்தத்தாங்கிகளை வழிமறித்து நின்றார். பல உயிர்களை காப்பாற்ற தன்னாலானதை செய்யவேண்டும் என நினைத்து அவர் முன்வந்தார். இந்தச் சந்தர்ப்பம் குறித்து ஜென் வோங் இவ்வாறு விவரிக்கிறார்.
“அந்த துணிகர செயலில் இளைஞரொருவரே ஈடுபட்டார் என நான் நினைக்கிறேன். வயதானவர் போன்று அவர் நடக்கவில்லை. கிட்டத்தட்ட 20 வயது இருக்கும். ஒரு கையில் பை ஒன்றையும், மறு கையில் மேலங்கி ஒன்றையும் அவர் வைத்திருந்தார். இயங்கிய நிலையில் இருந்த யுத்தத் தாங்கி இளைஞனை நசுக்கிவிட்டுச் செல்ல முயலவில்லை. அதன் செலுத்துனர் தாங்கியை கொஞ்சம் திருப்பிச்செல்ல முயன்றார். உடனே அந்த இளைஞன் தாங்கி செல்லும் பக்கம் தாவிச் சென்று நின்று கொண்டான். மீண்டும் தாங்கி மறுபக்கம் திரும்ப இளைஞனும் தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டான். சில தடவைகள் இவ்வாறு இடம்பெற்றது.”
“உடனே தாங்கியின் இயக்கம் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருந்த 20இற்கும் மேற்பட்ட தாங்கிகளின் இயக்கமும் நிறுத்தப்பட்டது. அவ்வேளை, அந்த இடத்தில் மயான அமைதி நிலவியது. சுதாகரித்துக்கொண்ட அந்த இளைஞன் தாங்கியின் மேல் ஏறி உள் இருந்த இராணுவ சிப்பாயை தொடர்புகொள்ள முயற்சி செய்வதைக் கண்டேன். வெளியில் தலைகாட்டிய ஒரு சிப்பாய்க்கும் அந்த இளைஞனுக்கும் இடையே உரையாடல் ஒன்று இடம்பெற்றது. அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்று தெரியாது. உரையாடலை அடுத்து இளைஞன் கீழிறங்கியதும் அனைத்து தாங்கிகளும் இயங்கத் தொடங்கின. மீண்டும் தன்னை கடந்துசெல்ல முற்பட்ட தாங்கியை தடுத்துநிறுத்தினான் அந்த இளைஞன். கவசத் தாங்கி, இளைஞனை நசுக்கிக் கொல்லப்போகிறது என நான் அஞ்சினேன். ஏதேனும் விபரீதம் நடக்கப்போகிறது என எண்ணி நான் அழுதுவிட்டேன். வீதியின் ஓரத்தில் இருந்த இருவர் ஓடிவந்து அந்த இளைஞனை பலவந்தமாக அழைத்துச்சென்றனர். இந்தக் காட்சியை நான் மட்டும் காணவில்லை. அங்கிருந்த அனைவரும் இதை கண்ணுற்றனர். ஆனால், அந்த இளைஞனின் முகத்தை என்னால் காணமுடியவில்லை” என்றார் அவர்.
சீன அரசின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இளைஞனை புலனாய்வுப் பிரிவே அழைத்துச் சென்றது என்றும் – 19 வயதான வேங் வெய்லின் என்ற மாணவனே இந்த துணிகர நடவடிக்கையில் ஈடுபட்டான் என்றும் – பின்னர் தெரியவந்தது. அத்தோடு, அந்த இளைஞன் தொழிலாளியொருவரின் மகன் என்றும் – வெளி மாநிலத்திலிருந்து ரயில் மூலம் இங்கு வந்தார் என்றும் தெரியவந்தது. ஆனால் இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
1989ஆம் ஆண்டு சம்பவத்தின் பின்னர் சீன மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவர் பதவி வகித்த ஜியாங் செமின்னிடம் (தியனன்மென் சதுக்க எதிர்ப்புப் போராட்டங்களை சரியான முறையில் கையாளாததால் அப்போதைய தலைவரான சாவோ ஜியாங் நீக்கப்பட்டு இவர் நியமிக்கப்பட்டார்)அமெரிக்க செய்தியாளர் ஒருவர், யுத்தத் தாங்கிகளை வழிமறித்த இளைஞனுக்கு என்ன நேர்ந்தது என வினவினார். “அந்த இளைஞன் கொல்லப்படவில்லை” என ஆணைத் தலைவர் அதற்கு பதலளித்தார்.
இந்தச் சம்பவம் பெய்ஜிங் ஹோட்டலின் முன்னுள்ள வீதியிலேயே இடம்பெற்றது. சார்லி கோல் (நிவ்ஸ்வீக் சஞ்சிகை), ஸ்டுவர்ட் ப்ரேங்க்ளின் (டைம் சஞ்சிகை), ஜெவ் விட்னர் (ஏ.பி.), ஆர்தர் சங் ஹின் (ரொய்டர்ஸ்) ஆகியோர் ஹோட்டல் பெல்கனிகளில் இருந்தவாறு இந்தக் காட்சியை படமெடுத்தனர். இவர்கள் நால்வரும் ஒரே காட்சியை பல்வேறு கோணமாக படம் பிடித்திருந்தனர். ஏ.பி. செய்திச் சேவையின் மற்றுமொரு படப்பிடிப்பாளரான டெர்ரில் ஜோன் சதுக்கத்தில் இருந்தவாறு பிறிதொரு கோணத்தில் படம் பிடித்திருந்தார். இவர்களால் எடுக்கப்பட்ட அந்தப் படங்கள் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த புகைப்படங்களாக தெரிவுசெய்யப்பட்டன.
ஐந்து புகைப்பிடிப்பாளர்களுக்கும் இந்தப் படங்களுக்காக பல விருதுகளும் கிடைத்துள்ளன. இந்தப் புகைப்படத்தின் 20ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ‘தி நியூயோர்க் டைம்ஸ்’ இதழ் 2009ஆம் ஆண்டு ஐந்து புகைப்பிடிப்பாளர்களின் அப்போதை அனுபவத்தை வெளியிட்டிருந்தது. ஏ.பி. புகைப்படப்பிடிப்பாளரான ஜெவ் விட்னர் தனது அனுபவத்தை இவ்வாறு பகரிந்தளித்திருந்தார்.
“பெய்ஜிங்கின் இராஜதந்திர வளாகத்தில் அமைந்திருந்த ஏ.பி. அலுவலகத்தினுள் நுழைந்தவுடன் நியூயோர் தலைமையகத்திலிருந்து எமக்கு தகவலொன்று அனுப்பப்பட்டிருந்தது. ‘எமது ஊழியர்கள் தேவையற்ற ஆபத்துக்களை சந்திப்பதை நாங்கள் விரும்பவில்லை. இருப்பினும், தியனன்மென் சதுக்க போராட்டத்தை யாராவது புகைப்படமெடுத்தீர்களேயானால் அவர்கள் பாராட்டுக்குரியவர்களாவர்’ என தலைமையகத் தகலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.”
“உடனே அங்கிருந்த ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு சதுக்கத்தை நோக்கி விரைந்தேன். கமராவை மறைத்தவாறு இராணுவத்தை கடந்து பெய்ஜிங் ஹோட்டலின் 6ஆவது மாடியிலுள்ள பெல்கனியை அடைந்தேன். பல காட்சிகளை படமெடுத்துக்கொண்டிந்தேன். என்னிடம் இருந்த புகைப்படச் சுருள் தீர்ந்துபோவதை உணர்ந்த நான் அங்கிருந்த ஒரு மாணவனிடம் உதவி கோரினேன். கர்ட் அல்லது கிர்க் என்பதே அவனது பெயர். ஒரு மணித்தியாலத்துக்குள் படச்சுருள் கிடைக்கும்படி செய்தான் அந்த மாணவன்.”
“பல யுத்தத் தாங்கிகள் நகர்ந்துவரும் சப்தம் எனது காதை எட்டியது. பலரைக் கவர்வது போன்று அந்தக் காட்சி அமைந்திருந்தது. படமெடுக்க சரியான தருணத்துக்காக காத்திருந்தேன். திடீரென வெள்ளை ஷேர்ட் அணிந்த ஒருவர் முதலாவதாக வந்துகொண்டிருந்த யுத்தத் தாங்கி முன் சென்று நின்றார். என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு உதவிய அந்த மாணவன், அவனை கொல்ல போகிறார்கள் என சத்தமிட்டான். அந்தக் காட்சியை அப்படியே க்ளிக் செய்தேன். அவ்வேளை, சீன இராணுவப் புலனாய்வுப் பிரிவு உள்நாட்டு, வெளிநாட்டு செய்தியாளர்களிடம் சோதனை நடத்திக்கொண்டிருந்தது. அனைத்தையும் பறிமுதல் செய்துகொண்டும் இருந்தது. எனது படச்சுருளை கர்ட் அல்லது கிர்க் என்ற அந்த மாணவன் அவனது உள்ளாடையினுள் ஒழித்தவாறு ஏ.பி. அலுவலகத்துக்கு கொண்டுசேர்த்தான். அவனது உதவியின் மூலமே அந்தத் தருணம் உலகத்துக்கு வெளிச்சமானது” என்றார் அவர்.
1989ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்ற ஒவ்வொரு சம்பவத்தையும் ஜனநாயகத்தை ஆதரிக்கும் சீன மக்கள் மறவாமல் அந்த வலிதரும் நினைவுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அதற்கு ஒரே சாட்சி இன்றளவும் அன்றைய தினம் நினைவுகூறப்படுவதாகும். 1989ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தும் சீன அரசின் அராஜக செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று வரை மக்கள் தியனன்மென் சதுக்கத்தில் ஒன்றுகூடுகின்றனர்.
இன்றளவும் சீன பல்கலைக்கழக மாணவர்களால் ‘கவச தாங்கிக்காரன்’ (Tank Man/ பின்னர் தாங்கியை வழிமறித்த முகம் தெரியாத நபரை குறிக்கும் சொல்லாக மாறியது) ஒரு மாபெரும் வீரனாக போற்றப்படுகின்றான்.
செல்வராஜா ராஜசேகர்
###
தியனன்மென் சதுக்க 25ஆவது வருட நினைவுதினத்தை முன்னிட்டு சிறந்த புகைப்படங்களை வௌியிட்டுள்ளது. அவற்றை Theatlantic தளத்தின் ஊடாக காணலாம்.
இந்த இணைப்பின் ஊடாக ‘Tank Man’ இன் துணிச்சல் மிக்க செயலை காணலாம்.