சிவா ஐயா ஒரு பொக்கிஷம். புரட்சிகர செயற்பாட்டாளர், மொழிபெயர்ப்பாளர், பயிற்றுவிப்பாளர் என்ற பன்முக அடையாளத்தைத் தாண்டி மானுட நேயத்திற்கு முன்னுதாரனமான அவரைப் பற்றிய முழுமையான மதிப்பீடு செய்வதென்பது பட்டப்படிப்பின் ஆய்வினைப் போன்றதொடு கனதியான செயற்பாடாகும். எம்மில் சிலர் இக்காரியத்தை எடுத்துச் செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன். உரத்த சத்தமின்றி, அநாவசிய சலனங்களின்றி, தன்பால் கவனக்குவிப்பை எதிர்பார்க்காத சாதனைச் செயல்வாதத்தின் இந்த அரிய முன்னுதாரணத்திடமிருந்து சமூகத்திற்கான படிப்பினைகள் ஏராளமாக இருக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் ஓரிரு விடயங்களை மட்டும் கோடிட்டுக் காட்ட விளைகிறேன்.

சிவகுருநாதனின் சேவையைப் பாராட்டி அவரை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. அதன்போது இலங்கை சிவில் சமூக கூட்டிணைவால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌவிக்கப்பட்டார்.

சில வருடங்களுக்கு முன் பயிற்சி பட்டறை ஒன்றில் அவரை அறிமுகம் செய்யும்போது “இலங்கையில் நல்லிணக்கம் என்ற ஒன்று ஏற்படுவதாக இருந்தால் அது சிவகுருநாதனின் இன்றியமையாத பங்களிப்பினூடாகத்தான் சாத்தியப்படும் என்று கூறினேன். இது மிகை நவிற்சியன்று. அரசு, அரசு சாரா என நல்லிணக்கம் சார்ந்த எல்லா முன்னெடுப்புகளிலும் மொழிப்பாலமாக சில தசாப்தங்களாக செயற்பட்ட அவரது ஈடுபாடு இக்கூற்றினை ஏற்றுக்கொள்ளும் ஒன்றாக ஆக்கியிருந்தது.

பொது நிகழ்ச்சிகளில், பயிற்சிகளில், கருத்தரங்குகளில் சில ஆயிரம் மணித்தியாலங்கள் சிவா ஐயாவின் மொழிபெயர்ப்பினால் பயனடைந்திருக்கிறேன். ஆரம்பத்தில் அறிமுகமானதும் அவ்வாறுதான். 1990 களின் இறுதியில் மின்சாரமற்ற மட்டக்களிப்பில் பேராசிரியர் அர்ஜுன பராக்கிரமவின் பயிற்சிகளுக்கும், கள விஜயத்திற்கும் மொழிபெயர்ப்பாளரான இவருடன் பலமுறை இணைந்து வேலை செய்திருக்கிறேன். பேராசிரியரின் நீண்ட சிக்கலான எண்ணக்கருக்களின் விவரிப்பை அதன் நுணுக்கங்களுடன், முக்கிய விடயங்கள் ஒன்றையும் விட்டுவிடாது மொழிப்பெயர்ப்பதை கேட்டு வியந்திருக்கிறேன். அந்த நுட்பத்தை, சூட்சுமத்தை பயில இன்றளவும் முயற்சிசெய்து கொண்டிருக்கிறேன்.

தீவிர இடதுசாரி செயற்பாட்டாளராக இருப்பினும் ஏனைய சில மொழிபெயர்பாளர்களைப் போல் கொள்கைகள், கோட்பாடுகளை மொழிபெயர்ப்பில் திணிக்காமல் மூலத்தின் உள்ளடக்கத்தினை நேர்மையாக தொனியிலும், விடயத்திலும் கடத்தும் ஒழுங்கினைக் கொண்டிருந்தார். ஜனாதிபதியின் சொற்பொழிவை மொழிபெயர்க்கும் அதே சிரத்தையுடன் திம்புலாகல ஆதிவாசிப் பெண்ணின் கருத்துகளையும் மதிப்பளித்து மொழிபெயர்க்கும் தொழில்வாண்மை இவரிடமிருந்தது. அது மட்டுமன்றி தனி ஒருவராக மூன்று, நான்கு நாட்கள் வரை தொடர்ச்சியாக தாக்கு பிடிக்கும் திறன் அவரிடமின்றி வேறொருவரிடம் நான் கண்டதில்லை. 20 வருடத்திற்கு முந்தைய சிவகுருநாதனிடம் இவ்வாறு நாம் பயில வேண்டிய பல விடயங்கள் இருந்தன. அத்திறமையின் கீற்றுகள் இன்றும் காணக்கிடைக்கும் தருணங்கள் மகிழ்ச்சி பயப்பன.

நான் சிவா ஐயாவை முன்னுதாரணமாகக் கொள்வது அவரது சமரசமின்றி எல்லைகளைக் கடந்த மனிதநேயப் பண்பின் நிமித்தம் தீவிர கருத்தியல் வித்தியாசங்கள் இருப்பினும் அவை வெறுப்புக் கோட்டைத் தாண்டி பாதிப்பு ஏற்பாடுத்தா வண்ணம் நடந்துகொள்வது இலகுவானதல்ல. தன் நிலைப்பாடுகள் குறித்த நம்பிக்கையும், பற்றுதலும் மானுடம் குறித்த விசாலமான தரிசனமும் கொண்ட ஒருவரால்தான் இத்தகைய நடத்தையை கைக்கொள்ள இயலும். 1970, 1980 களில் பிரதான இடதுசாரி ஆளுமைகள் பல 1990, 2000 களில் நடைபிறழ்ந்து போன சூழலில் தேசியவாதங்களும்​இனவாதமும் மேலோச்சும் சூழலிலும் வெறுப்பிலும் விரக்தியிலும் சரண்புகா தனது செயற்பாடுகளை கர்மயோகியாக தொடர இத்தகைய தரிசனம், மன விலாசம் அவசியம்.

இன்னும் பல வருடங்கள் எங்களுடன் இருந்து இந்த மனித நுட்பத்தை எம்மில் பலருக்கு கற்றுத் தருவார் என்று நம்புகின்றேன். ஏனெனில், “இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவதாயின் அது சிவகுருநாதன் போன்றவர்களின் பங்களிப்பினால்தான் சாத்தியமாகும்.”

கௌதமன் பாலசந்திரன்