படம் | விகல்ப  flickr

இலங்கையின் பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனமானது இன்று அடையாள வேலை நிறுத்தமொன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசுடன் அது நடத்தி வரும் தொடர் பேச்சுவார்த்தைகளினதும் முன்னெடுத்த போராட்டங்களினதும் அடுத்த கட்டம் இது என நாம் கருதலாம். எமது நாட்டின் கல்வித்துறையில் வளப்பகிர்வு மற்றும் முகாமைத்துவம் போன்ற அம்சங்களில் சீர்திருத்தங்களைக் கோருவதே இந்த அமைப்பின் நோக்கமாகும். கல்வியின் முக்கியத்துவத்தினை நாமெல்லோரும் அறிவோம். அந்த வகையில் எம்மெல்லோருக்கும் அத்தியாவசியமான விடயத்தினை இப்போராட்டம் கையெடுத்துள்ளது.

எமது கல்வித்துறையில் என்னென்ன சீர்திருத்தங்கள் தேவை என்பதைப் பார்க்க முன்னர் அக்கல்வித்துறை என்னென்ன நோக்கங்களுடன் இயங்க வேண்டும் என்பதை சற்றே நோக்குவது அவசியமானது. முதல் முக்கியமாக எமது நாட்டின் சகல பிள்ளைகளுக்கும் கிட்டுவதாய் கல்வி அமையவேண்டும். அதற்காகவே கட்டாயக்கல்விக்கான சட்டங்களும் இலவசக்கல்வியும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அடுத்ததாக, மாணவர்கள் சுதந்திரமாக சிந்தித்து தேடிக்கற்கும் பண்பினை ஊட்டும் கல்வியினை விருத்தி செய்யவேண்டும். சுதந்திரமாகச் சிந்திக்கும் பண்புடைய மனிதர்களே தமது தொழிலிலும் வாழ்விலும் புத்தாக்கமான தீர்வுகளை நாடுவர். தமது கருத்துக்களை மற்றவர்கள் மதிப்பதை எதிர்பார்ப்பது போலவே ஏனையோர் கருத்துக்களுக்கும் அவர்கள் மதிப்பளிப்பதனால் முரண்நிலைகளை உருமாற்றும் ஆற்றல் கொண்ட சமூகத்தினை வளர்த்தெடுப்பர். அத்துடன், சுதந்திர சிந்தனையானது கூடவே தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் வளர்க்கின்றது. தன்னம்பிக்கையுடைய மனிதர்கள் ஆற்றலுடைய ஏனைய மனிதர்களைப் பார்த்துப் பொறாமைப்படவோ பயப்படவோ மாட்டார்கள். அதனால், அவ்வகையான மனிதர்களைத் திட்டமிட்டு அகற்றுவதை விட்டு (எமது மொழியில் கூறப் போனால் அறுப்பதை விட்டு) அவர்களை மனமகிழ்வோடு ஊக்குவிப்பார்கள்.

மூன்றாவதாக, எமது கல்வித்துறையானது, கற்றல் பிரச்சினைகள் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களும் ஏனையோரைப் போலவே எண்ணறிவு எழுத்தறிவு ஆகிய திறன்களைப் பெறுவதற்கு வழிவகுக்க வேண்டும். பொதுவாகவே எமது பாடசாலைகளில் திறமையான பிள்ளைகளுக்குத்தான் முதலிடம் வழங்கப்படுகின்றது. ஆரம்ப வகுப்பிற்கு அனுமதிகோரி வரும் பிள்ளைகளிடமே பரீட்சை வைக்கப்படுகின்றது. அதில் தேர்ச்சிபெறும் பிள்ளைகளுக்கே அனுமதி வழங்கப்படுகின்றது. இதனைவிட சிரிப்புக்கிடமான விடயம் வேறிருக்க முடியாது. கற்கக்கூடியவர்களுக்குத்தான் கல்வி வழங்கப்படும், மற்றவர்கள் ஒதுக்கப்படுவர் என்றால் பாடசாலைகளே தேவையில்லையே. எனவே, ஒவ்வொரு மாணவரும் தேர்ச்சி பெறக்கூடிய தரமான கல்வி ஊட்டப்படவேண்டும் என்பதில் இரு கருத்துக் கிடையாது.

நான்காவதாக, அன்பு, கருணை, நேர்மை, வாய்மை போன்ற மனிதப் பண்புகளை ஊட்டுவதான கல்வியை எமது கல்வித்துறை வழங்க வேண்டும். என்னதான் பட்டங்கள் இருந்தும் உயர்ந்த இலட்சியங்கள் இல்லாத, சக மனிதருக்கு உதவாத வாழ்க்கையினால் ஒரு பயனும் கிடையாது. அதே போன்றே, கற்பவர்களின் பன்முகத் திறமைகளை இனங்கண்டு அவற்றை வளர்த்துவிடும் பூரணத்துவமான கல்வி முறையும் வேண்டும். இதனால், ஒவ்வொரு கல்வி நிறுவனமும் படிப்போடு மட்டும் நின்று விடாமல் கலைத்திறன்களையும் விளையாட்டுத் திறன்களையும் வாழ்க்கைத் திறன்களையும் வளர்க்கும் திட்டத்தினைக் கைக்கொள்ள வேண்டும்.

கல்வித்துறையானது மேற்கூறிய நோக்கங்களுடன் செயற்பட்டால் ஆளுமையும் ஆற்றலும் கொண்ட சந்ததியினரை உருவாக்கலாம் என்பது உறுதியாகத் தெரிகின்றது. ஆனால், இவற்றைச் செயற்படுத்துவதற்கு, இக்கல்விப் பண்பாட்டினை உள்வாங்கிய அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் குழாம் தேவை. ஒவ்வொரு மாணவரினதும் வளர்ச்சியில் கவனம் செலுத்திக் கற்கவைக்கும் அளவுக்கு ஆசிரியர்கள் எண்ணிக்கை அவசியம். விசேடமாக, மாற்றுத் திறனாளிகளின் கற்றல் விடயங்களை ஊக்குவிக்கும் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் குழாம் தேவை. இந்த அலுவலர்களும் ஆசிரியர்களும் சுதந்திரமாக இயங்குவதற்கு அரசியல் தலையீடுகள் இல்லா சூழல் தேவை. ஒவ்வொரு பாடசாலையும் கலை, விஞ்ஞானப் பாடங்களை கற்பிப்பதற்கும், விளையாட்டுத்துறை கலைத்துறையினை வளர்ப்பதற்குமான வசதிகளைக்கொண்டிருக்க வேண்டும். இதே போலவே எமது பல்கலைக்கழகங்களும் செயற்படவேண்டும். அவை ஒவ்வொரு துறையிலும் சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் வண்ணம் அதற்குரிய உட்கட்டுமானங்களைக் கொண்டிருக்க வேண்டும். இந்தப் பண்புகளையெல்லாம் கொண்டு எமது கல்வி நிறுவனங்கள் செயற்படுகின்றனவாவென்றால் இல்லையென்றுதான் கூறவேண்டும்.

பெயருக்குத்தான் இலவசக்கல்வி ஆனால், ஆரம்ப வகுப்புக்களிலிருந்தே பெற்றார் தமது பிள்ளைகளை டியூஷன் கல்விக்கு அனுப்பவேண்டியதாயிருக்கின்றது. அந்த அளவுக்கு வகுப்பறைகளில் சொல்லிக்கொடுக்கும் தரத்தைப் பற்றிய அவநம்பிக்கை பெற்றோர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகின்றது. டியூஷனுக்குப் போக முடியாத வறிய பிள்ளைகளோ வகுப்பில் பின்தங்கி நிற்க வேண்டியதுதான். ஒரு சில நகர்ப்புறப் பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகளில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், ஏன், வர்த்தகத் துறைக்கே ஆசிரியர்கள் கிடையாது. இசைப்பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர்களோ இசைக்கருவிகளோ இல்லாத பாடசாலைகளே அதிகம். பல்கலைக்கழகங்களிலும் இதே நிலைமைதான். அரசியல் தலையீடுகளினால் தரமற்ற கல்விமான்கள் பதவிகளில் அமர்த்தப்படுகின்றனர். அதன் பின்பு கேட்கவா வேண்டும். முழு நிறுவனமும் நிர்வாகம், கல்வித் தரம் எல்லாவற்றிலும் கீழ்நிலையை அடைகின்றது. விரிவுரையாளர்களுக்கான கொடுப்பனவுகள் குறைவு. ஆய்வுகள் மேற்கொள்ளவதற்கான ஒதுக்கீடுகள் கிடையாது. இதனால், நல்ல கல்விமான்கள் யாவரும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை நாடுகின்றனர். இது எமது பல்கலைக்கழகங்களின் தரத்தினை மேலும் குறைக்கின்றது.

தரமில்லாதவர்கள் கல்வி நிறுவனங்களில் நிறையும்போது அதற்குரிய வேறு நடத்தைப் பண்புகளும் வந்து சேருகின்றன. விரிவுரையாளர்களின் மனம் கோணாமல் நடந்தால்தான் பரீட்சைகளில் புள்ளிகள் வாங்கலாம் என்கின்ற வெட்ககரமான நிலைமை. பேராசிரியாகள் சொற்படி நடக்காவிட்டால் அல்லது அவர்களைக் கேள்வி கேட்டால் தமக்கு சிறப்புத் தேர்ச்சி தரப்படாமல் போய்விடுமோவென்ற அச்சத்தில் மாணவர்கள் வாழுகின்றனர். பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அமைப்பாகும் அவர்கள் உரிமை செயலிழக்கப்பட்டிருக்கின்றது. விரிவுரையாளர்களே மாணவிகள் மீது பாலியல் இம்சைகளையும், தமது பதவிகளை உபயோகித்து பலாத்காரங்களையும் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகரித்தல் என இந்த நிரல் நீண்டு கொண்டே போகின்றது.

தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களை விடவும் வட கிழக்கில் அமைந்த பல்கலைக்கழகங்களில்தான் இந்த மாதிரியான அராஜகங்கள் அதிகமாக நடக்கின்றன என அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர். ஒரு சமூகத்தின் கல்வி நிறுவனங்களே அதன் கண்ணாடியாகும். எமது கல்வி நிறுவனங்களின் தராதரங்களை நோக்கினால் எமது சமூகத்தைப் பற்றிய என்ன அபிப்பிராயத்திற்கு நாம் வரமுடியும்? நாம் சுயாட்சி பெற்றுக்கொண்டாலும் கூட இத்தகைய கல்விமான்களுடன்தானே எமது கல்வி நிறுவனங்களை நடத்த வேண்டும்? சிங்கள அரசு தலைமைகளிடமிருந்து நாம் கற்றுக்கொண்ட இந்தத் தீய நடத்தைகளையெல்லாம் புறந்தள்ளி புத்தூக்கம் மிகுந்த கல்வி நிறுவனங்களை உருவாக்கி வளர்ப்பதற்கான காலம் வந்து விட்டது.

தரமான கல்வியினை வழங்குவதற்கு ஒவ்வொரு அரசும் குறைந்தபட்சம் தனது வருடாந்த வருமானத்தின் 6 வீதத்தினை செலவழிக்க வேண்டும் என்பது சாவதேச நியதியாக எற்றுக்கொள்ளப்படுகின்றது. அத்தகையதொரு யுனெஸ்கோ அமைப்பின் சமவாயத்தில் எமது அரசும் கைச்சாத்திட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தான் வாக்குறுதியளித்திருப்பது போலவே வள ஒதக்கீடு செய்ய வேண்டும் என்பதும், அரசியல் தலையீடு இல்லாது சுதந்திரமாகச் செயற்படும் நிறுவனங்களை உருவாக்கவேண்டும் என்பதே பல்கலைக்கழக ஆசிரிய சம்மேளனத்தின் பிரதான கோரிக்கைகளாகும். இவர்கள் தமது போராட்டத்தினை ஆரம்பித்தபோது 2012ஆம் ஆண்டில் எமது அரசு, ஆரம்ப இடைநிலைக்கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்விக்கு மொத்தமாக செலவழித்த தொகை என்ன தெரியுமா? தனது வருடாந்த வருமானத்தின் 1.4 வீதம் மட்டுமே! அதனை குறைந்தபட்சம் 6 வீதமாக்க வேண்டும் என்றெல்லாம் பேரம்பேசி முடிந்த பின்பு இன்று, 2014ஆம் ஆண்டு கல்விக்கு ஒதுக்கியிருக்கும் தொகை என்ன தெரியுமா? தனது வருடாந்த வருமானத்தின் 1.2 வீதம் மட்டுமே. அதற்குள்ளேயே .2 வீதத்தினால் இது குறைந்துவிட்டது. இதே சமயம், கிட்டத்தட்ட 21 வீதத்திற்கு அதிகமான நிதி பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்படுகின்றன. இங்குதான் பிரச்சினையே ஆரம்பமாகின்றது. அடுத்து, குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சியின் மீதும் குறுகிய தேசியவாதத்தின் உதவியுடனும் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் இந்த அரசுக்கு புத்திஜீவிகள் தேவையற்றுப் போய்விட்டனர். அடிவருடிகள்தாம் தேவையென வந்துவிட்டனர். இது ஆரம்பித்த பிரச்சினையை பூதாகாரமாக்க உதவுகின்றது.

இந்நிலைமையை நாம் மாற்ற வேண்டுமாகில், பெற்றார், ஆசிரியர், மாணவரென எல்லோரும் ஒன்றாக இப்போராட்டத்தில் இணைந்தாலன்றி முடியாது.

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.