படம் | Indiatoday

சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகரான முஹமட் சாக்கிர் ஹுசைன் என்பவர், தமிழ் நாட்டின் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இக்கைதானது, உலகின் முன்னனி ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. ஒரு வர்த்தகராக கொழும்பிலிருந்து அடிக்கடி சென்னைக்கு பயணம் மேற்கொண்டுவந்த மேற்படி நபரின் நடவடிக்கைகளை, இந்திய புலனாய்வுத் துறை தொடர்ச்சியான கண்காணிப்பிற்கு உட்படுத்தியிருந்த பின்னனியிலேயே, இவரது கைது இடம்பெற்றுள்ளது. விசாரனைகளின்போது, குறித்த நபர் பாகிஸ்தானிய உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ (Inter-Services Intelligence)இன் முகவராக தொழிற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இயங்கிவரும் அமெரிக்கத் தூதரகம் மற்றும் பெங்களூரில் அமைந்திருக்கும் இஸ்ரேலிய தூதரகம் ஆகியவற்றை தாக்குவதற்கான ஒரு திட்டத்திற்கு இவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார் எனவும் இந்திய புலனாய்வுத் துறையின் தகவல்களை மேற்கோள்காட்டி உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் மேற்படி இரண்டு தூதரங்களையும் புகைப்படமெடுத்த போதே கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். எனினும், இந்திய புலனாய்வுத் துறையின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இது பற்றி கருத்துத் தெரிவித்திருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சிற்கு நெருக்கமானவரும், சிங்கப்பூரை தளமாகக் கொண்டியங்கிவரும் தீவிரவாத எதிர்ப்பு நிபுணருமான பேராசிரியர் றொஹான் குணரட்ண, சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத முகாம்களின் தொழிற்பாடு இலங்கைக்குள் அதிகரித்திருப்பதாக குறிப்பிடுகின்றார். இது ஒட்டுமொத்த தெற்காசிய பிராந்தியத்திற்குமே அச்சுறுத்தலான ஒன்றாகும் என்றும் றொஹான் குறிப்பிடுகின்றார். தமிழ்ப் புலிகள் அமைப்பு இலங்கை இராணுவத்தினால் தோற்கடிக்கப்பட்ட பின்னரான கடந்த ஜந்து வருடங்களில் சர்வதேச பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ டெய்பா (Lashkar-e-Taiba)தமிழ் நாட்டின் கரையோர பகுதிகளுக்குள் ஊடுருவதற்கான ஒரு தளமாக இலங்கையை பயன்படுத்திவருவதாக அவ்வப்போது சில தகவல்கள் வெளியாயிருந்தன. பாகிஸ்தானை தளமாகக் கொண்டியங்கிவரும் இவ்வமைப்பானது பாகிஸ்தானிய உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ இன் ஆதரவுடனேயே இயங்கிவருவதாகக் கூறப்படுகிறது. ஒப்பீட்டளவில் தெற்காசியாவில் மிகவும் பலம் வாய்ந்ததும் பரந்தளவிலான செயற்பாடுகளைக் கொண்டதுமான மேற்படி பயங்கரவாத அமைப்பு, இந்தியாவிற்குள் மேற்கொண்ட பல தாக்குதல்களின் பின்னனியில் பாகிஸ்தானிய உளவுத்துறையே இருந்ததாக இந்தியா குற்றம்சாட்டிவருகிறது. 2001இல் இடம்பெற்ற இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் மற்றும் 2008இல் இடம்பெற்ற மும்பாய் தாக்குதல்களின் பின்னனியிலும் மேற்படி லஷ்கர் அமைப்பே செயற்பட்டிருந்தது. இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் பாகிஸ்தானிய உளவுத்துறையினாலேயே நெறிப்படுத்தப்பட்டதாக இந்திய புலனாய்வுத் துறை தெரிவித்திருந்ததையும் இவ்விடத்தில் குறித்துக் கொள்ளலாம்.

மேற்படி தாக்குதல்களின்போது இந்தியாவில் தங்கியிருந்த ஆறு யூதர்களும் கொல்லப்பட்டிருந்தனர். அமெரிக்கர்கள் மற்றும் யூதர்களை இலக்கு வைத்துத் தாக்கும் ஒரேயொரு நோக்குடன் செயலாற்றுவது இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களின்றி வேறு எவருமல்லர். இத்தகையதொரு பின்னணியிலேயே தற்போது பாகிஸ்தானிய உளவுத்துறை இந்தியாவிற்குள் தீவிரவாத தாக்குதல்களை முடுக்கிவிடுவதற்கான ஒரு தளமாக இலங்கையை பயன்படுத்திவருவதான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பாக்கிஸ்தானின் பிரதான, அத்துடன் பரந்த வலையமைப்பைக் கொண்டுள்ளதுமான ஐ.எஸ்.ஐ 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1947இல் இடம்பெற்ற இந்தோ – பாகிஸ்தானிய யுத்தத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பாதுகாப்பு படைப் பிரிவுகளுக்கு தகவல்களை பரிமாறும் ஒரு சுயாதீன புலனாய்வு அமைப்பாகவே ஐ.எஸ்.ஐ உருவாக்கப்பட்டது. இந்தோ -பாகிஸ்தானிய யுத்தத்தின்போது பாகிஸ்தானிய இராணுவ உளவுத்துறையின் தகவல் பரிமாற்றத்தில் காணப்பட்ட பலவீனத்தைக் கருத்தில் கொண்டே ஐ.எஸ்.ஐ இன் உருவாக்கம் நிகழ்ந்தது. இக்காலத்தில் இன்று தெற்காசியாவின் பலம்வாய்ந்த உளவுத்துறையாக கருதப்படும் இந்தியாவின் வெளியக உளவுத்துறையான றோ உருவாக்கப்பட்டிருக்கவில்லை. 1962இல் இடம்பெற்ற இந்தோ – சீன யுத்தத்தைத் தொடர்ந்தே, தமக்கென ஒரு பலம்வாய்ந்த சர்வதேச உளவுப்பிரிவு அவசியம் என்று இந்தியா கருதியது. அந்த அடிப்படையிலேயே 1968இல் றோ உருவாக்கப்பட்டது. இன்றைய தகவல்களின் படி ஐ.எஸ்.ஐ சுமார் பத்தாயிரம் அளவிலான அலுவலகர்களை உள்ளடக்கிய பிரமாண்டமானதொரு வலையமைப்பைக் கொண்டுள்ளது. இதற்கு தகவல்களை வழங்கிவருவோர் கணக்கெடுப்பில் உள்ளடங்கவில்லை. ஒரு போரின் பின்னனியில் உருவாக்கப்பட்ட உளவு அமைப்பு என்னும் வகையில் இந்தியாவை பலவீனப்படுத்துதல் என்பதையே அதன் பிரதான இலக்காகக் கொண்டுள்ளது.

எனினும், 1971இல் இடம்பெற்ற இந்தோ – பாகிஸ்தானிய யுத்தத்தின்போது ஐ.எஸ்.ஐ இன் இலக்கு தோல்வியடைந்தது. பாகிஸ்தானை துண்டாடும் நோக்கில் இந்திய உளவுத்துறையால் நெறிப்படுத்தப்பட்ட யுத்தத்தின் இறுதி விளைவாக பாகிஸ்தான் துண்டாடப்பட்டது. 1971இல் இடம்பெற்ற யுத்தத்தை இந்தோ – பாகிஸ்தானிய யுத்தம் என்று கூறுவதைவிட, றோ – ஐ.எஸ்.ஐ ஆகிய உளவமைப்புக்களுக்கு இடையிலான யுத்தம் என்றுரைப்பதே சரியானது. இந்த அனுபவத்தின் பின்னர் ஐ.எஸ்.ஐ, இந்தியாவை பலவீனப்படுவது ஒன்றையையே தன் பிரதான இலக்காகக் கொண்டு செயலாற்றி வருகிறது. அதாவது, ஒரு பலம்வாய்ந்த எதிரியுடன் நேரடியாக மோதுவதை விட ஆயிரம் சிறு காயங்களை ஏற்படுத்துவதன் ஊடாக அவரை வீழ்த்திவிட முடியுமென்பதே ஐ.எஸ்.ஐ இன் தந்திரோபாயமாகும்.

இந்தியாவின் எல்லைப் புறங்களில் தீவிரவாதிகள் ஊடுருவதை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகளையும் ஆயுதங்களையும் வழங்கிவருவாக ஐ.எஸ்.ஐ மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் உண்டு. இதனை பாகிஸ்தான் தொடர்ச்சியாக மறுத்துவந்தபோதும் பாகிஸ்தான் உலகளவில் தடைசெய்யப்பட்டுள்ள பல பயங்கரவாத அமைப்புக்களின் சரணாலயமாக தொழிற்பட்டுவருவகிறது என்பதே உலகளவிலான வாதமாக இருக்கிறது. பனிப்போர்காலத்தில் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த சோவியத் படைகளை பலவீனப்படுத்தும் நோக்கில் ஐ.எஸ்.ஐ தலிபான்களுக்கு ஆதரவளித்தது. இந்தக் காலத்தில் ஐ.எஸ்.ஐ இன் இரகசிய செயற்பாடுகளுக்கான ஆற்றலை விரிவுபடுத்துவதில் அமெரிக்க மத்திய புலனாய்வு பணியம் (C.I.A) தொழிற்பட்டிருந்தது என்பதும் இரகசியமான ஒன்றல்ல.

இந்தக் காலத்தில் பாகிஸ்தான் என்பது தலிபான்களுக்கு மட்டுமல்ல, இன்னும் பல்வேறு ஜிகாதி ஆயுத அமைப்புக்களினதும் கூடாரமாகவே மாறியது. சில தீவிரவாத எதிர்ப்பு நிபுணர்கள் பாகிஸ்தானை தீவிரவாதிகளுக்கான டிஸ்னிலாண்ட் என்றும் வர்ணிக்கின்றனர். இவ்வாறான தீவிரவாத அமைப்புக்கள் பலவற்றுக்கும் பயிற்சிகள் மற்றும் நிதியாதரவுகளை வழங்கும் போசகராகவே ஐ.எஸ்.ஐ மாறியது. இந்தக் காலத்தில் பாகிஸ்தானிய உளவுத்துறை என்பது பாகிஸ்தானின் ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியாதவொரு சக்தி வாய்ந்த அமைப்பாக உருமாறியது. இதனை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பெனாசீர் பூட்டோவின் வார்தையில் கூறுவதானால், ஐ.எஸ்.ஐ என்பது ஒரு அரசுக்குள் அரசாக (State within a State)தொழிற்பட்டுவருகிறது. ஐ.எஸ்.ஐ என்பது பாகிஸ்தானின் உளவுத்துறையாக இருக்கின்றபோதும் அதனை முற்றிலும் கட்டுப்படுத்தக் கூடிய பொறிமுறை பாகிஸ்தானிய அரசுக்குள் இல்லை. அமெரிக்காவின் முதலாவது எதிரியான அல் குவைதாவின் தலைவர் ஒசாமா பின்லேடன் 2011இல் சி.ஜ.ஏயின் இரகசிய தாக்குதலில் கொல்லப்பட்டபோது, ஐ.எஸ்.ஐ இன் இரட்டை முகம் உலகிற்கு அம்பலமானது. ஐ.எஸ்.ஐ இன் ஒரு பிரிவு சி.ஜ.ஏயுடன் நெருங்கிப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, பிறிதொரு பிரிவு பின்லேடன் பாகிஸ்தானுக்குள் பாதுகாப்பாக மறைந்திருப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருக்கிறது. இதனை தெளிவாக அறிந்திருந்ததன் பின்புலத்திலேயே அமெரிக்கா ஐ.எஸ்.ஐ இற்கு தெரியாமலேயே ஒரு இரகசிய தாக்குதல் திட்டத்தை பாகிஸ்தானுக்குள் அரங்கேற்றி வெற்றிபெற்றது. ஐ.எஸ்.ஐ எல்லைதாண்டிய பயங்கரவாதத்திற்கு ஊக்குவிப்பு வழங்கிவருவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் சிந்தனைக் குழாமான பாதுகாப்பு அக்கடமி (Defence Academy, a British Ministry of Defense think tank) 2006இல் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் (London on 7/7)பின்னணியில் பாகிஸ்தானினின் ஐ.எஸ்.ஐ இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தது. இதனடிப்படையில் மேற்படி அக்கடமி வெளியிட்டிருந்த அறிக்கையில், பாகிஸ்தான் அரசு ஐ.எஸ்.ஐ அமைப்பை கலைக்க வேண்டும் என்றும் அழைப்பு விட்டிருந்தது. இப்படியான குற்றச்சாட்டுக்களின் விளைவாக பாகிஸ்தான் அரசு 2008இல் ஐ.எஸ்.ஐ இன் செயற்பாடுகளை சிவில் சட்டத்திற்குள் கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருந்தது. ஆனால், அரசு இந்த முடிவை அறிவித்து சில மணித்தியாலங்களுக்குள்ளேயே அரசு அந்த முடிவிலிருந்து விலகிக் கொண்டது. ஐ.எஸ்.ஐ இன் உள்ளார்ந்த பலத்தை எதிர்த்து அரசால் எதனையும் செய்ய முடியவில்லை என்பதையே மேற்படி சம்பவம் கோடிகாட்டியிருந்தது. அமெரிக்காவின் சில இரகசிய ஆவணங்களில் ஐ.எஸ்.ஐ ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பட்டியல்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஏலவே தகவல்கள் கசிந்துள்ளன. இத்தகைய பின்னனியைக் கொண்ட பாகிஸ்தானின் பலம்பொருந்திய அதேவேளை, பாகிஸ்தானிய அரசினால் கட்டுப்படுத்த முடியாததுமான ஐ.எஸ்.ஐ இந்தியாவிற்குள் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான ஒரு தளமாக இலங்கையை பயன்படுத்திக்கொள்ள எத்தணிக்குமாயின் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

தமிழ் புலிகள் அமைப்பு இலங்கைக்குள் அழிக்கப்பட்ட பின்புலத்தில், இலங்கையின் சர்வதேச முக்கியத்துவம் முற்றிலும் மாற்றமடைந்து செல்கிறது. இத்தகையதொரு பின்புலத்தில் ஒட்டுமொத்த தெற்காசியாவின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விடுக்கக் கூடிய தீவிரவாத அமைப்புக்கள் இலங்கையையும் ஒரு தளமாகப் பயன்படுத்திக் கொள்ள முற்படுவது உண்மையெனின், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு இலங்கை ஒரு அச்சுறுத்தலான நிலப்பகுதியாகவே நோக்கப்படும். இதனடிப்படையில் இந்திய – இலங்கை பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்ளவும், இருதரப்பு உளவு ஒத்துழைப்புக்களை மேற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் இரண்டு நாடுகளுக்குமே ஏற்படலாம். நாளுக்கு நாள் மாற்றமடைந்து செல்லும் இலங்கையின் முக்கியத்துவத்துடன் தமிழர் பிரச்சினையை ஒப்பிட்டு நோக்கினால், தமிழர் விவகாரம் என்பது மிகவும் சிறிய ஒன்றாகவே தெரிகிறது அல்லது அது மிகவும் சிறிய ஒன்றாகிக் கொண்டிருக்கிறது, இல்லாவிட்டால் சிலர் தங்கள் தேவை கருதி தமிழர் விவகாரத்தை பெருப்பித்துக்காட்ட வேண்டும்.

தினக்குரல் புதிய பண்பாடுக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

DSC_4908