Photo: AFP Photo, THE ASEAN POST

மியன்மார் இராணுவ ஆட்சி, ஏற்கனவே சிறையிலடைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, பௌத்த பிக்கு அஷின் விராத்துவை கடந்த 7ஆம் திகதி குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்தது. 969 என்கின்ற அமைப்பினூடாக தேசிய – பௌத்த அடிப்படைவாதக் கொள்கைகளையும், கருத்தியலையும் முஸ்லிம்களுக்கெதிராக மிகத்தீவிரமாக முன்னெடுத்ததாக பல முனைகளிலிருந்தும் குற்றஞ்சாட்டப்பட்டவர். Time சஞ்சிகை இவரை ‘பௌத்த பயங்கரவாதத்தின் முகம்’ (The face of Buddhist terror) என வர்ணித்திருந்தது. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போதே முக்கிய பிரபலமாக வெளிவந்தார். பௌத்த தேசிய அடிப்படைவாத அமைப்பின் நிறுவுனருமான இவரை 2017இல் மியன்மார் பௌத்த அதியுயர் பீடம்,  மத கடமைகளிலிருந்து தடை செய்திருந்தது. இராணுவ ஆட்சியை ஆதரிக்கும் போக்குக் கொண்ட பௌத்த பிக்கு ஆங்சாங் சூயிக்கு எதிராக பல பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தார்.

மேற்கூறப்பட்ட பௌத்தபிக்கு பௌத்த – பெரும்பான்மைவாத முன்கற்பித்தலிலிருந்து தனது பௌத்த அடிப்படைவாதக் கருத்தியலைக் கட்டியெழுப்பியிருந்தார். ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேசத்திலிருந்து வந்தேறிய குடிகள். அதனால் அவர்களுக்கு மியன்மாரில் உரித்துடமையை இல்லை என்பது அவரது கோரிக்கை. இங்கு குறிப்பிட்ட பௌத்த பிக்குகளிற்கும், பொதுபலசேனா அமைப்பிற்குமிடையில் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதை வாசகர்கள் நன்கறிவார்கள். இது தொடர்பில் பல கட்டுரைகள் வெளியாகியிருந்தன. முஸ்லிம் பயங்கரவாதத்திலிருந்து மியன்மாரையும், பௌத்தத்தையும் காப்பாற்றுவதே இவர்களுடைய அமைப்பின் இலக்கு என்பதை தெளிவுபடுத்தியிருந்தனர். டானியல் கென்ட்னுடைய முனைவர் பட்ட ஆய்வை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

இலங்கையில் உள்ள பௌத்தபிக்குகளின் ‘பௌத்த போர் தர்ம’ கட்டமைப்பு என்பது பௌத்த முன்வினைப்பயன் கற்பிதத்தை மீள்வாசிப்புச் செய்திருந்தது. இராணுவத்தினருக்கு பௌத்த போதனைகளை வழங்கும் பௌத்த பிக்குகள் ‘நியாயப் போர் தர்மத்தை’ முன்வைத்து பௌத்த முன்வினைப்பயன் கற்பிதத்தை கட்டவிழ்த்திருந்தார்கள். அதாவது, கொலை என்பது வெறுமனே கொலைக்காக அல்ல, மாறாக பௌத்தத்தை, சிங்கள மக்களை, சிங்கள மொழியை காப்பதற்காக நடக்கும் தர்ம இராச்சியத்திற்கெதிரான போரில், மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தியது. குறிப்பாக போரின் உள்நோக்கத்தைக் கொண்டு கொலையை, அழிவை நியாயப்படுத்தி, பௌத்த கர்மவினைப் பயனுக்கு இன்னொரு விளக்கவுரையை சிங்கள – பௌத்தம் கொடுத்திருந்தது. இதன் மூலம் போரில்  ஈடுபடும் இராணுவ வீரர்கள் கர்மவினைப் பயனிலிருந்து விடுவிக்கப்படுகின்றார்கள் அல்லது தப்பித்துக் கொள்கின்றார்கள் என்பதையும் அவதானிப்பது இன்னும் தெளிவான புரிதலைத் தரலாம்.

பௌத்த தர்மத்தைக் காப்பதே மியன்மாரிலும், இலங்கையிலும் உள்ள பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களின் நோக்கமாக இருக்கின்றது. இதைக் கொண்டு வன்முறை நியாயப்படுத்தப்படுகின்றது. மியன்மாரில் பௌத்த தேசிய அடிப்படைவாத அமைப்புக்களான 969, மா.பா.தா. போன்ற அமைப்புக்களில் பௌத்த பிக்குகளின் வகிபாகம் மிகக் காத்திரமானது. அதேபோல் இலங்கையில் பொதுபலசேனா, ஜாதிக ஹெல உறுமய, இராவண பலய போன்ற பௌத்த தேசிய அடிப்படைவாத அமைப்புக்களில் பௌத்த பிக்குகளின் வகிபாகத்தையும் மறந்து விடலாகாது.​

பௌத்த பிக்குவின் விடுதலையின் வரலாற்றியல் சூழமைவு பௌத்த தேசிய அடிப்படைவாதக் கோரிக்கைக்கு இன்னும் வலுச் சேர்க்கலாம். 969, மா.பா.தா. போன்ற அமைப்புக்கள், முஸ்லிம் தீவிரவாதத்தை, பௌத்தத்திற்கெதிரான எதிரியாகக் கட்டமைத்து பூகோள முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாதத்தின் மீது முதலீடு செய்வது, ஏற்கனவே அவ்வாறிருக்கும் செல்நெறியை வலுப்படுத்தி பயன்படுத்துவதாக அமையும். ஆப்கானிஸ்தானில் தலிபான் எழுச்சியை மையமாகக் கொண்ட சூழலில் முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாதத்திற்கெதிரான வன்முறைகளை நியாயப்படுத்துவது இலகுவாக அமையும். இலங்கையிலும் கூட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாதமே காரணமாக முன்வைக்கப்பட்டு முஸ்லிம் மக்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள்.

பௌத்தபிக்கு விராத்துவின் பௌத்த மத போதனைகள், பௌத்தத்திற்கூடாக, தேசிய வாதத்தை ஊட்டுவதாக அமைந்துள்ளது. குறிப்பாக ‘ஜாதக’ கதைகளுக்கூடாக. தேசியவாதம் மிக அண்மைய அரசியல் கருத்தியலாக இருக்கின்ற போதும், பௌத்த புராணங்களை, கதைகளை தற்கால பௌத்த தேசியவாத விவரணைகளூடு மக்களுக்கு போதிப்பதே பௌத்த பிக்குவின் தனித்துவமாக இருந்தது. இவருடைய போதனைகளைக் கேட்பதற்காக ஆயிரக்கணக்கில் ஒன்று கூடும் பக்தர்களுக்கு, பௌத்தத்திலிருந்து சமகால முஸ்லிம் அச்சுறுத்தல் வரையான பௌத்த – அரசியல் சொல்லாடல்கள் கட்டமைக்கப்பட்டிருக்கும்.

969, மா.பா.தா. போன்ற பௌத்த அடிப்படைவாத அமைப்புக்கள் கௌதம புத்தர் எவ்வாறு ஒரு தேசியவாதியாக இருந்தார் என்பதை பிரதிபலிப்பது அவர்களுடைய அரசியல் இலக்கை அடைவதற்கு உதவியது. அவர்களுடைய சொல்லாடல்களில் போதி சத்துருவாக இருந்த புத்தரும், பின்னர் வந்த கௌத புத்தரும் தனது இனத்தையும் மதத்தையும் காத்த ஒருவராக பிரதிபலித்தனர் (N.Foxeus 2019). இவ்வாறான அரசியல் சொல்லாடல்களில் மியான்மார் பௌத்த மக்களை புத்தருடைய சாக்கிய குலத்திலிருந்து வந்தவர்களாகப் பிரதிபலித்தனர். இவ்வாறான கருத்தியல் கட்டமைப்பிலிருந்து தேசியத்தை, இனத்தை, மதத்தைக் காப்பாற்றுகின்ற, பாதுகாக்கின்ற ஒரு புதிய தேசியவாத மாதிரியை வடிவமைத்தனர்.

மியன்மாரில் கட்டமைக்கப்பட்ட இன தேசியவாதம் (ethno nationalism) மத தேசியவாதத்துடன் (religio-nationalism) கூட்டுச் சேர்ந்தது. இந்த இரண்டு ஆபத்தான கூட்டு, தேசியவாதம் பௌத்த அடிப்படைகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்கின்ற அபத்த பிரதிபலிப்பை கொடுப்பதனூடு முன்வினைப் பயனுக்குரிய தகுதியையும், புண்ணியத்தையும் கொடுப்பதாக இச் சொல்லாடல் வடிவமைக்கப்பட்டது. (N.Foxeus 2019).

இதன் வரலாற்றுப் பின்ணணியல் தான் அநாகரிக தர்மபாலவின் மகாவம்ச மீள்வாசிப்பு உற்று நோக்கப்பட வேண்டும். ‘தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்’ சொல்லாடல், மத சொல்லாடல் மட்டுமல்ல ஓர் அரசியல் சொல்லாடலும் கூட. இலங்கை கௌதமபுத்தரால் தேரவாதத்தை பின்பற்றும் சிங்கள பௌத்தர்களுக்கு கொடுக்கப்பட்டது என்கின்ற பௌத்த சிங்கள தேசியவாதப்புனைவு அடையாள அரசியல் சார்ந்தது. தேசிய கருத்தியல் கட்டமைப்பு அடையாள அரசியலிலிருந்து உருவாகின்றது. அடையாள அரசியல், அடையாளத்தின் அடிப்படையில் தேசத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றது. ஒரு குறிப்பிட்ட தேசியக் கருத்தியலை ஊக்குவித்துக் கொண்டு ஏனையவற்றை முன்னையதற்கு எதிரியாக அல்லது முன்னையதின் இருப்புக்கு அச்சுறுத்தலாகக் கட்டமைக்கின்றது. தேசியவாதத்தை அடையாள கட்டமைப்பிற்கான ஒரு பொறிமுறையாக, மற்றமைகளுக்கெதிரான வெறுப்பின் அடிப்படையில் கட்டமைத்தால், அதை உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பாங்கு தன்மையிலிருந்தும், தான் தாக்குதலுக்குட்படுத்தப்படலாம் என்கின்ற அச்ச ஏது நிலையிலிருந்து உருவாவதாக நோக்கலாமா? பேராசிரியர். தம்பையா வேறு கோணத்திலிருந்து பார்ப்பதையும் உற்று நோக்கலாம், சிங்கள – பௌத்தர்களுக்குள்ளிருக்கும் பெரும்பான்மை – சிறுபான்மைச் சிக்கலின் வெளிப்பாடே சிங்கள – பௌத்த தேசிய வாதத்தின் எழுச்சியாகக் குறிப்பிடுகின்றார்.

Jaffrelot (2005) தனது ஆய்வில், தற்போது மியன்மாரில் உள்ள பௌத்த தேசிய அமைப்புக்களின் கட்டமைப்பு பௌத்த, இனத்துவ அடையாளத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டது. பின் காலனித்துவ சூழமைவில் கட்டமைக்கப்பட்ட மியன்மாரிய பௌத்த (மத) இன கூட்டு அடையாள கட்டமைப்பு ஏற்கனவே பண்பாட்டு ஏகாதிபத்தியத்தைக் கொண்டிருந்த மற்றமையை கையாளுவதற்காக கட்டமைக்கப்பட்டதாகக் கூறுகின்றார். ஒரு குறிப்பிட்ட மத – இன அடையாளக் கட்டமைப்பு மியன்மாரின் தேசிய அடையாளக் கட்டமைப்பாக தற்போது தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ ஆட்சியில் இவ் அடையாளக் கட்டமைப்பு இன்னும் வலுவடைந்து வருகின்றது. இதன் பின்ணனியில் பௌத்த பிக்கு அஷின் விராத்துவின் விடுதலை உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இரண்டாவது, அது ஏற்படுத்தப்போகும் பாதிப்பு இலங்கையையும் தாக்கக்கூடும்​

அச்சுறுத்தும் எதிரியிடமிருந்து, மதத்தை இனத்தைக் காப்பதற்காக ‘நாங்கள்’ என்னும் கூட்டு உணர்நிலையை வலுப்படுத்தும் பொறிமுறையில், வேற்றுமைகளை அடிப்படையாகக் கொண்டு எல்லைகள் வரையறுக்கப்படுகின்றன. இவ்வாறான கட்டமைப்பில் தேசம் (மாயையான) ஒற்றுமையை உருவாக்கிக் கொள்கின்றது (Finalayson 1998). மியன்மார் வரலாற்றியலில் இந்த ‘அச்சுறுத்தும் எதிரி’ காலத்திற்கு காலம் மாறுபட்டு வந்திருக்கின்றது. மிக அண்மைய எதிரியாகத்தான் ‘முஸ்லிம்’ சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய தாய்லாந்திலும் இதேபோன்ற சமூக – அரசியல் சூழல் நிலவுவதையும் அவதானிக்கலாம். அச்சுறுத்தும் எதிரிக்கெதிரான தேசிய பதிலிறுப்பு குறிப்பிட்ட சமூகத்தை தீயதாகக் கட்டமைக்கின்றது. தீயதாக பெரும்பான்மைக்கெதிராக மட்டுமல்ல பெரும்பான்மையை பிரதிபலிக்கும் தேச – அரசிற்கெதிராகவும் கட்டமைக்கும் போது, தேச – அரசின் ஜனநாயகத் தன்மை அச்சுறுத்தலுக்குள்ளாகும் போது, அரச இயந்திரம் அந்த ‘தீயதிற்கெதிராக’ நடவடிக்கை எடுக்கத் தள்ளப்படுகின்றது. அதற்கான கொள்கை வகுப்பை அரச இயந்திரம் கையிலெடுக்கும் போது, சட்டவலுத்தன்மை கொடுக்கப்படுகின்றது.

Jaflrelot (1996) தொடர்ந்து குறிப்பிடும் போது, ஓரங்கட்டப்படுவதாக நினைக்கின்ற அதிகாரம் மேலோங்கிய குழு, கற்பனை ரீதியான பழிவாங்கலை, அச்சுறுத்துகின்ற எதிரிக்கெதிராக ஆரம்பிக்கின்றது. ஆரம்பத்தில் அந்த பழிவாங்கும் படலம், எதிரியை தனிநபர்களாக அல்லது கூட்டாக, ‘தீய மற்றமையாக’ கட்டமைக்கின்றது. ‘தீய மற்றமையாக’ கட்டமைத்தல் அனைவருக்கும் ஒத்ததாக பொதுவான சொல்லாடல் கட்டமைப்புப் பொறிமுறைக்கூடாக முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளையில் ஏனையவர்களை ‘தீய மற்றமையாக’ கட்டமைப்பதன் மூலம் பெரும்பான்மை தன்னை ஒரு முற்றுகைக்குள்ளான குழுவாக விபரிக்கின்றது. அடக்குகின்ற குழுமம் தன்னை பாதிக்கப்பட்ட குழுமமாக தோற்றுவிக்க முயலுவது முரண்படு மெய்ம்மை. மியன்மாரிலும், இலங்கையிலும் தற்போது முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாதத்தை முன்வைத்து முஸ்லிம்களை ‘தீய மற்றமையாக’ அவ்வவ் அரசுகள் கட்டமைக்கின்றன. வடக்கு-கிழக்கில் தமிழ்த் தேசக்கட்டுமானத்தை வலுவிழக்கச் செய்த நிலையில் அரசுகள் முஸ்லிம் மக்கள் பக்கம் திரும்பியிருக்கின்றன.

எழில் ராஜன்