“வீட்டில் நாங்கள் மூன்று பேர். அம்மாவும் தங்கையும் நானும். அப்பா 2002ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அப்பா பெரிதாக வேலையொன்றும் செய்யவில்லை. விவசாயம், கூலிவேலைகளைத்தான் செய்தார்” பிரபாத் இவ்வாறுதான் எம்மோடு கதைக்க ஆரம்பித்தார். கதிரையின் ஓரத்தில் அவர் உட்கார்ந்திருந்தார். அவருக்கு இடப்புறமாக நிலத்தில் பெரிய படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் இருந்தவர் தங்கை, திலினி யசோமா ஜயசூரிய. இப்போது எல்லோருக்கும் தெரிந்த ஹங்வெல்ல விடுதியொன்றில் கொலைசெய்யப்பட்ட பெண்தான் அவர். அவருடைய உடலம் அடக்கம் செய்யப்பட்டு பல வாரங்களாகிவிட்டன. பிரதேச சபை உறுப்பினர் என்று கண்டுபிடிக்க முடியாதளவுக்கு எளிமையாக இருக்கிறார் பிரபாத். தங்கையின் இழப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை தெளிவாக எம்மால் பாரக்கக்கூடியதாக இருக்கிறது.

கொழும்பு இரத்தினபுரி வீதியில் குருவிட்ட நகரத்தைக் கொஞ்சம் கடந்தவுடன் வலது பக்கமாக சுமார் 4 கிலோமீற்றர்கள் சென்றால் தெப்பனாவ கிராமத்தை அடைந்துவிடலாம். பிரபாத்தின் வீடு, தெப்பனாவ கிராமத்தின் மனநந்தனாராம விகாரைக்கு அருகில் செல்லும் வீதியில் இருக்கிறது. துணிகளால் ஜன்னல் மூடப்பட்டிருந்த முழுமையடையாத வீடு அது. எப்போதாவது ‘டைல்’ புடிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் கொங்ரீட் போடப்பட்டிருந்த தரை. இருள் சூழ்ந்துகொண்டிருந்த அந்த மாலை நேரத்தில் அயலவர்கள் வீட்டின் வெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் வருகிறார்கள். எந்த வார்த்தையுமின்றி சிறிய புன்முறுவலோடு இன்னும் சிலர் போகிறார்கள்.

நாங்கள் பிரபாத்துடன் பேசிக்கொண்டிருந்த அந்தநாள் வரை திலினியில் உடலம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. அம்மாவினதும் பிரபாத்தினதும் டி.என்.ஏ. மாதிரிகள் எடுக்கப்பட்டிருந்தபோதிலும் உடலத்தின் டி.என்.ஏயுடன் பொருந்திப் போகிறதா என்ற முடிவறிக்கையும் அதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை. அதனால், மரண பரிசோதனையும் இடம்பெற்றிருக்கவில்லை. பிரபாத் ஜயசூரிய, குருவிட்ட பிரதேச சபையில்  ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர். இந்த இடத்திலிருந்து தன்னுடைய தங்கையைப் பற்றி பேசுவதற்கு பிரபாத்துக்கு இடமளிப்போம்.

“தெப்பனாவ குமார மகா வித்தியாலயத்தில் சாதாரணதரப் பரீட்சை மட்டுமே தங்கை படித்திருக்கிறார். அதன் பிறகு அவிஸ்ஸாவளையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்தார். அங்கிருந்து விலகி ஆர்பிகோ காப்புறுதி நிறுவனத்திலும் தொழில் புரிந்தார்.

படிப்பை முடித்துவிட்டு கொழும்பில் சில நிறுவனங்களில் நான் வேலை செய்தேன். 2014ஆம் ஆண்டின் பின்னர்தான் அரசியல் செயற்பாடுகளில் இறங்கினேன். பாடசாலை செல்லும் காலத்திலிருந்து இளைஞர் சங்கங்களிலும், ‘எடிக்’ (குடிபோதை பற்றிய தகவல் நிலையம்) என்ற நிறுவனத்துடன் இணைந்தும் பணியாற்றியிருக்கிறேன். வேலை செய்தாலும் தங்கையும் என்னுடன் சேர்ந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவார். இந்தப் பொதுப் பணிகளில் என்னையும் விட அவர் முன்னோக்கி சென்றிருந்தார் என்றே நான் நினைக்கிறேன்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் கிராமத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் இலங்கை முழுவதிலும் இருந்து எனது தொலைப்பேசிக்கு அழைப்பெடுத்து தங்கைப் பற்றி கேட்கிறார்கள், அவர் பற்றி கூறுகிறார்கள். நான் அரசியல்வாதியாக இருந்தபோதிலும் எனக்கு தெரிந்தது, இந்த குருவிட்ட, இரத்தினபுரி மட்டும்தான். ஆனால், எனது தங்கை அப்படியல்ல. அவர் இளைஞர்களுடன் வயதானவர்களுடன் நெருக்கமாகப் பழகிவந்தார். நாங்கள் இருக்கும் இந்தப் பிரதேசத்தில் வெள்ளம் அடிக்கடி ஏற்படும். வருடத்துக்கு இரண்டு முறை இந்தப் பகுதி நீரில் மூழ்கிவிடும். தெப்பனாவ கிராமத்தைச் சுற்றி எல்லையாக இருப்பது ‘குரு கங்கை’. வெள்ளம் ஏற்பட்டதும், “நாங்கள் எப்படியாவது மக்களுக்கு உதவிவேண்டும், முடிந்​ததை செய்யுங்கள்” என்று எல்லா இடத்திலும் இருக்கும் நண்பர்களைத் தொடர்புகொண்டு தங்கை உதவிகேட்பார். 2017 பெருவெள்ளம் வந்தபோது கண்டி, பதுளை, அம்பாந்தோட்டை பகுதிகளில் எல்லாம் உதவிகளைப் பெற்றிருந்தார். அரசியல்வாதியாக இருந்தபோதிலும் என்னால் கூட தெப்பனாவைக்கு எதுவும் செய்யமுடியாமல் போனது.

‘எடிக்’ உடனும், இளைஞர் சங்கத்துடனும் இருந்த தொடர்பைக் கொண்டு பாரியளவில் மக்களுக்கு வேலை செய்துவந்தார். இளைஞர் சங்கம் சார்பாக மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்து தேசிய மட்டம் வரை சென்றார்.

30 வயதுதான், ஆனால் வயதுக்கு சம்பந்தமில்லாத தலைமைப் பண்பு அவரிடமிருந்தது. ஏதாவது ஒரு வேலையை அவரிடம் ஒப்படைத்தால் ஒரு குறையும் இல்லாமல் செய்து முடிப்பார். இதை நான் செய்யவேண்டும் என்று நினைத்திருப்பேன், அதற்கிடையில் அதை அவர் செய்துமுடித்திருப்பார். அதேபோன்று, அநீதிக்கு எதிராக குரல்கொடுப்பவர். அரசியல் செய்யும்போது எனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதைப் பொருட்படுத்தாமல் இருப்பேன். ஆனால், அவர் அவ்வாறு இருக்கமாட்டார். அப்படி இடம்பெற அனுமதிக்க முடியாது என்று யாராக இருந்தாலும் பார்க்காமல் முகத்துக்கு நேராக கூறிவிடுவார். பெண் பிள்ளையாக இருந்தாலும் ஆண் போன்றுதான் செயற்படுவார். தன்னம்பிக்கை மிகுந்தவர். யார் என்ன சொன்னாலும் அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதனையே செய்வார். பிறப்பிலிருந்தே அந்தக் குணம் அவருக்கிருக்கிறது. நீ தேர்தலில் போட்டியிட்டதற்குப் பதிலாக தங்கை போட்டியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கிராம மக்கள் கூறுவார்கள்.

பாடசாலை செல்லும்போது மாணவர் தலைவி என பல தலைமைப் பதவிகளை வகித்திருக்கிறார். விளையாட்டுகளில் திறமையானவர். தடகளப் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருக்கிறார். சீதாவக தொழில் வலயத்தில் உள்ள ஹய்ட்ராமனி நிறுவனத்தில் வேலை செய்யும்போது பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடினார். அந்த நிறுவனத்தில் 5 வருடங்கள் பணிபுரிந்தார். இரண்டு, மூன்று வருடங்களானபோது ஐந்தாறு வருடங்களில் கிடைக்கப்பெறும் பதவியுயர்வு தங்கைக்கு வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆர்பிகோ காப்புறுதி நிறுவனம். நான் அரசியலுக்கு வந்தவுடன் வேலையிலிருந்து விலகி எனது அரசியல் செயல்பாடுகளுக்கு தங்கை உதவினார். ஆனால், அரசியலில் ஈடுபடுவதற்கான எண்ணம் அவருக்கு இருக்கவில்லை. எனக்குப் பக்கபலமாக இருக்கவேண்டும் என்றே எண்ணமே இருந்தது. என்னை விட இந்த மாவட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுடன் அவரே இணைந்து பணியாற்றியிருந்தார். கடிதமொன்றைக் கொடுத்து சேர், மெடம் என்றுதான் நான் யாரையாவது அணுகுவேன். அவர் அப்படியில்லை. நேரடியாக எம்.பிக்களை, அமைச்சர்களைச் சந்தித்து, “இந்த விடயங்களைச் செய்து முடிக்கவேண்டும், எப்படியாவது செய்து தாருங்கள்” என்று கேட்பார். அரசியல்வாதிகள் என்றாலும் சொல்லவேண்டியதை முகத்துக்கு நேராக சொல்லிவிடுவார், மனதில் வைத்துக்கொண்டிருக்கமாட்டார்.

வீட்டில் நாங்கள் இருவர் என்பதால் அண்ணன் என்ற அடிப்படையில் மரியாதையாக நடந்துகொள்வார். என் மீது கொஞ்சம் பயமும் இருந்தது. நகைச்சுவையாகவும் பேசிக்கொள்வோம். தவறுகளைச் சுட்டிக்காட்டினாலும் பிறகு அண்ணா என்று வழமைப் போன்று பாசமாகப் பேசுவார். அம்மாவுக்கும் உதவுவதோடு வீட்டு வேலைகளையும் செய்துகொண்டிருந்தார். அம்மாவினதும் எனதும் உடைகளை அவர்தான் கழுவுவார். வீட்டினுள் சிறு மணல் கூட மிதிபடக்கூடாது. அவ்வளவு சுத்தம், நேர்த்தி.

சுற்றிலுமுள்ள வயல்களில் வேலை நடக்கும்போது அதற்கு உதவுவார். உணவு தயாரிப்பார். வயலுக்கு உணவு கொண்டுசெல்வார். நான் போகமுடியாத சிரமதான பணிகளுக்கு அவர் போவார்.

பொலிஸாரின் பக்கம் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து நான் திருப்தியடைகிறேன். குறுகிய காலப்பகுதியில் நிறைய தகவல்களைக் கண்டறிந்துள்ளார்கள். ஆரம்ப நாட்களில் நான் பார்த்த ஊடகங்களின் செயல்பாடு பிறகு அப்படியே தலைகீழாக மாறியிருந்தன. குறிப்பாக சமூக ஊடகங்கள். ஒவ்வொருவரும் சொல்கிறார்கள், ஆனால், இதுவரை நான் போனைப் பார்க்கவில்லை. அவற்றை என்னால் பார்க்க முடியாது. சிலர் என்னிடம் பேசினார்கள், தங்கையின் நண்பர்களும் பேசினார்கள். “தங்கையையும் உங்களையும் அவமானப்படுத்தும் வகையில் எழுதுகிறார்கள். அந்த நபர் (தற்கொலை செய்துகொண்டவர்) எழுதிய கடிதம் மற்றும் இன்னும் சிலர் கூறியவற்றைக் கொண்டுதான் இவ்வாறு எழுதுகிறார்கள்” என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

நேற்றும் ரி.வி. செனல் ஒன்றிலிருந்து ஒருவர் வந்திருந்தார். உண்மையைச் சொன்னால், அவரை ஏசி துரத்திவிட்டேன். ஒருபோதும் எனது தங்கை சரி என்று நான் சொல்லவில்லை. யாரும் தவறு என்றும் கூறவில்லை. இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற ஏதாவதொரு காரணம் இருக்கும்தானே. இதைத்தான் அவர்களிடம் சொன்னேன். எப்படியிருந்தாலும் இடம்பெற்றிருப்பது ஒரு கொலை. இதை நியாயப்படுத்தவேண்டாம், இப்போது நான் தங்கையை இழந்திருக்கிறேன். அந்த வேதனையில் நானும் குடும்பத்தாரும் இருக்கிறோம். இந்தச் சம்பவம் கடைசியாக இருக்கட்டும். நாட்டில் இதுபோன்றதொரு சம்பவம் இடம்பெறக்கூடாது என்ற எண்ணத்துடன் ஊடகங்கள் செயற்படவேண்டும்.

என்னுடைய தங்கை பற்றிய தகவல்களைத் தேடுகிறார்கள். முன்பிருந்த காதல் தொடர்புகள் பற்றி தேடுகிறார்கள். அவர் எங்கு போனார், வந்தார் என்ற விவரங்களைத் தேடுகிறார்கள். அந்த நபர் எழுதிவைத்த கடித்ததின் உள்ளடக்கத்தைக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். அது அவர் தரப்பிலிருந்து எழுதப்பட்டது. கொலைசெய்ததன் பின்னர் எழுதப்பட்ட கடிதம் அது. அதேபோன்று தற்கொலை செய்துகொள்வதற்கான முடிவை எடுத்த பின்னர் எழுதப்பட்ட கடிதம் அது. அவர் தனக்கு வேண்டியதை எழுதலாம். “என்னை அடிக்க வந்தார்கள், கொலை செய்ய ஒரு குழு வந்ததது” என்று எழுதியிருந்தால் பொறுப்புக்கூறவேண்டியது எனது தங்கையா? அதில் உள்ளவற்றுக்கு பதில் வழங்க அந்த நபர் இப்போது உயிரோடு இல்லை. அதனால், அந்தக் கடிதத்தைக் கொண்டு எனது தங்கைப் பற்றி எழுதுவது தவறுதானே? பதில் வழங்க எனது தங்கையும் இப்போது இல்லை.

தங்கையைப் பற்றியோ அல்லது அந்த நபரைப் பற்றியோ ஊடகங்கள் தேடாமல் விசாரணைகளுக்காக பொலிஸாருக்கு உதவிசெய்வதே பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எங்கள் வீட்டில் இடம்பெற்ற ஒரு மரணத்தை வைத்து வியாபாரம் செய்யவேண்டாம். ரி.வி. செனல் நபருக்கும் இதைத்தான் சொன்னேன். மேலிருந்து சொல்வதைத்தான் நாங்கள் செய்கிறோம் என்று அவர் என்னிடம் சொன்னார். அண்ணன் சொல்வது உண்மை, எனக்கும் தங்கையொருத்தி இருக்கிறார் என்று அந்த ரி.வி. நபர் கூறினார். “கொலையை நியாயப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன, அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று அந்த நபர் என்னிடம் கேட்டார். அதற்கு நான், “உண்மைதான் தம்பி, இத்தனை நாட்களாக அதைதானே நீங்கள் செய்தீர்கள். இவ்வளவு நாளும் தங்கையின் பக்கமாக அத்தனை குப்பையையும் தள்ளிவிட்டு இப்போதுதானே எங்கள் தரப்பு பற்றி கேட்க வந்திருக்கிறீர்கள். இவ்வளவு நாளும் தங்கைப் பற்றி வெளியான அத்தனையும் மக்களின் தலைக்குள் போனபிறகு அவற்றை மீளப்பெறுவது அவ்வளவு சுலபமல்ல. செய்தியாளர் மாநாடு ஒன்று நடாத்தி சொன்னாலும் ஒன்றும் நடக்காது, நடந்தது நடந்துமுடிந்துவிட்டது” என்று கூறினேன்.

அப்பாவின் தங்கை நேற்று வந்திருந்தார். யாரோ ஒருவர் பத்திரிகை ஒன்றை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். தங்கை பற்றிய சம்பவம் பிரதான தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது. அவர்கள் வயதானவர்கள். உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள்.

என்னுடைய தங்கையின் பக்கம் யாரும் பேசவில்லை. ஊடகங்களின், முக்கியமாக சமூக ஊடகங்களின் பெரும் தவறு இது. தங்கைப்பற்றி தகவல் கிடைத்தது என்று வைத்துக்கொள்வோம். பொறுப்புள்ளவர்கள் எடுத்த எடுப்பில் அதை அப்படியே வெளியிடமாட்டார்கள். எங்களிடம் பேசி உறுதிப்படுத்தியிருக்கவேண்டும். அப்படி செய்யவில்லை. ஆக, ஊடக ஒழுக்கநெறி என்ன என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் நினைப்பதை எழுதுகிறார்கள். அவ்வாறு நடக்கக்கூடாது. கொழும்பில் இருந்து எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் எழுதுகிறார்கள். குறைந்தபட்சம் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு கோல் எடுத்து பேசியிருக்கலாமே?

என்னுடைய தங்கையின் நடத்தையில் பிழை என்ற கோணத்திலேயே ஊடகங்கள் செயற்பட்டன. அவருக்கு ஒருவருடன் தொடர்பிருந்தது என்றெல்லாம் செய்தி வெளியிட்டிருந்தன. நாங்கள் அவ்வாறானதொரு இயல்பை தங்கையிடம் பார்க்கவேயில்லை. போன் அழைப்பென்றாலும் எங்கள் முன்பிருந்துதான் பேசுவார். ஓரமாகச் சென்று குசுகுசுவென்று பேசும் பழக்கம் அவருக்கு இருக்கவில்லை. எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை. இரவுவேளை போஸ்டர் ஒட்டவேண்டும் என்றால் ஆண் நண்பர்களுடன்தான் செல்வார். யாருக்கும் பயப்படமாட்டார். குறைந்தபட்சம் அவருடைய குணத்துக்காக, திறமைக்காகவாவது நியாயம் கிடைக்க வேண்டும்.”

..ඒ මගේ නංගි – දිලිනිගේ අයියාට කියන්නට තිබෙන කතාව என்ற தலைப்பில் கே. டபிள்யு. ஜனரஞ்சன எழுதி அனித்தா பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்