பட மூலம், AsiaTimes

1988 நவம்பரில் சதிப்புரட்சி முயற்சியொன்றை முறியடிப்பதற்கு மாலைதீவிற்கு இந்தியா ஒரு பராகமான்டோ படைப்பிரிவை அனுப்பியபோது அந்தப் படைவீரர்கள் மாலைதீவுவாசிகளால் பெரிதும் வரவேற்கப்பட்டார்கள். இலங்கையிலிருந்து இயங்கிய மாலைதீவு வர்த்தகப் பிரமுகர் ஒருவர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குப் பயன்படுத்திய கூலிப்படைகளை முறியடிப்பதற்காக அன்றைய ஜனாதிபதி மௌமூன் அப்துல் கயூமிற்கு உதவ இந்தியா மேற்கொண்ட அந்த நடவடிக்கையின் பெயர் ‘கக்றஸ்’ ஆகும். அந்த நடவடிக்கை வெளியார் தலையீட்டிலிருந்து மாலைதீவின் சுயாதிபத்தியத்தைப் பாதுகாத்தது.

ஆனால், இன்று தங்களது தீவு நாட்டில் இந்திய இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக மாலைதீவுவாசிகள் கடுமையாக எதிர்த்துக்கிளம்பியிருக்கிறார்கள். இந்தியத்துருப்புக்கள் நிபந்தனையற்ற முறையில் உடனடியாக வெளியேற வேண்டுமென்று கோரிக்கைகள் அதிகரித்துவருகின்றன. தங்களது சுயாதிபத்தியத்திற்கு இந்தியாவினால் ஏற்படக்கூடியதென்று மாலைதீவுவாசிகள் கருதுகின்ற அச்சுறுத்தல் தொடர்பில் அவர்கள் சமூக ஊடகங்களில் பதிவுகளைப் பெருமளவில் செய்துவருவதுடன் வீதிகளிலும் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் #IndiaOut என்ற ஹேஷ்டெக்கினால் இந்தியாவிற்கு எதிரான உணர்வுகள் பல்கிப்பெருகியிருக்கின்றன.

கடந்த மாதம் 12 ஆம் திகதி மாலைதீவு தேசபக்த இளைஞர் இயக்கம் மாலைதீவு மண்ணில் இந்தியாவின் இராணுவப்பிரசன்னத்திற்கு எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக அமைதியான மோட்டார் சைக்கிள் பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். அண்மைய வாரங்களில் அவ்வாறு நடத்தப்பட்ட இரண்டாவது மோட்டார் சைக்கிள் பேரணி அதுவாகும். அரசாங்கத்தின் கொவிட்-19 வழிகாட்டல்களைக் கடைப்பிடித்தவண்ணம் இடம்பெற்றதாகக் கூறப்படும் அந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றார்கள். ஆனால், பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கையில் இறங்கி பெண்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட 40 இற்கும் அதிகமானோரைக் கைதுசெய்தார்கள்.

2018ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 58.4 சதவீத வாக்குகளைப்பெற்றுத் தெரிவான ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலியின் ஆட்சியின் கீழ் இவ்வாறெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. சீனாவுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுத்த அப்துல்லா யாமின் அப்துல் கயூமை தோற்கடித்த சோலி, இந்திய ஆதரவாளர் என்று பரவலாகக் கருதப்பட்டவராவார்.

அண்மைய வருடங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்ற நிகழ்வுகளினாலேயே மாலைதீவில் இந்தியாவிற்கு எதிரான வெறுப்பு அதிகரித்து வந்திருக்கிறது. மாலைதீவின் உள்விவகாரங்களில் பலவந்தமாக தலையீடு செய்யவேண்டும் என்று ஆளும் பாரதிய ஜனதா கட்சி வெளிப்படையாக வலியுறுத்தியதும் அந்த நிகழ்வுகளில் ஒன்றாகும். அதுபோக மாலைதீவில் இருக்கும் இந்திய பிரஜைகளுக்கு ஏற்பட்டதாகக் கருதப்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க நேரடி இராணுவத்தலையீடு செய்யக்கூடிய சாத்தியம் குறித்தும் பாரதிய ஜனதா கட்சி கருத்து வெளியிட்டது.

மாலைதீவில் இந்தியாவின் டோனியர் கடல் கண்காணிப்பு விமானத்தை நிறுத்திவைப்பதற்குத் தேவைப்பட்ட ‘பரிமாற்றக் கடிதம்’ ஒன்றை விநியோகிப்பதற்கு முன்னைய ஜனாதிபதி யாமீனை பலவந்தப்படுத்துவதற்கு இந்தியா எடுத்ததாகக் கூறப்படும் முயற்சியும் இந்தியாவின் மிரட்டல்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தோற்றுவித்தது. அதேவேளை, பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையை நீக்குவதற்கும் 2018 இல் கைதுசெய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல்கைதிகளை விடுவிப்பதற்கும் வசதியாக மாலைதீவு மண்ணில் இந்தியப்படைகளை நிலைவைக்குமாறு முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற (மக்கள் மஜ்லிஸ்) சபாநாயகருமான மொஹமட் நஷீட் விடுத்த கோரிக்கையும் இந்திய எதிர்ப்புச்சுவாலையை மூளவைத்தது.

மாலைதீவில் இந்தியாவின் பொருளாதார நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விவகாரங்களில் இந்திய நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்தை அனுமதிக்கும் புதிய உடன்படிக்கை ஒன்றைத் தற்போதைய ஜனாதிபதி செய்துகொண்டு நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டதும் இந்தியாவிற்கு எதிரான போக்குகள் அதிகரிப்பதற்குக் காரணமாகியது.

ஆட்சிமாற்றத்திற்கு முன்னதாக நடந்ததைப்போன்று உட்கட்டமைப்பு வசதிகள், அபிவிருத்திக்கான ஒப்பந்தங்கள் உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் உரிய காலத்திற்கு முன்னரே இரத்துச்செய்யப்படும் ஆபத்தை இல்லாமல் செய்வதே இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும். இப்போது செய்யப்படுகின்ற ஒப்பந்தங்களை இரத்துச்செய்வதையோ அல்லது முடிவிற்குக் கொண்டுவருவதையோ கடுமையாக்கக் கூடியதாக தகராறுகளுக்கு இந்திய நீதிமன்றங்களுக்கு இணக்கத்தீர்வைக் காண்பது பற்றி இந்தியா வலியுறுத்த அண்மைய உடன்படிக்கை வழிவகுக்கும் என்று 2012ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் முதலீட்டுடன் விமானநிலையம் ஒன்றைக் கட்டுவதற்கான உடன்படிக்கையை இரத்துச்செய்த முன்னைய மாலைதீவு அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருந்த ஹூசைன் செரீப் கூறினார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவுடன் புவிசார் மூலோபாய போட்டாபோட்டி ஒன்று மூண்டிருக்கும் நிலையில் மாலைதீவில் தனது மூலோபாயப்பிடியை இழப்பதற்கு இந்தியா விரும்பவில்லை என்பது தெளிவானது. இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்புக் கட்டமைப்பில் ஒரு முக்கிய அங்கமாக மாலைதீவு நீண்டகாலமாக இருந்து வந்திருக்கிறது. இருதரப்பும் கூட்டாக லாடார் வலையமைப்பையும் கண்காணிப்பு வசதிகளையும் கொண்டிருப்பதுடன் இராணுவ ஒத்திகைகளையும் பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்திருக்கின்றன. நீண்டகால இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கைகளில் கீழ் அச்சுறுத்தல்களைக் கண்டுபிடித்து அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் ஆற்றல்களைப் பலப்படுத்துவதற்காக இந்தியா மாலைதீவில் நிரந்தரமாக இரு ஹெலிகொப்டர்களையும் டோனியர் கண்காணிப்பு விமானத்தையும் நிறுத்திவைத்திருக்கிறது.

மாலைதீவை நெருங்கி வருகின்ற கப்பல்களையும் விமானங்களையும் கண்காணிப்பதற்கு மாலைதீவின் 21 தீவுகளில் தனது சொந்தக் கட்டமைப்புடன் இணைந்ததாக இந்தியா கரையோர ராடார் கொத்தணிகளை அமைப்பதற்கும் உதவியிருக்கிறது. ஆனால், இந்தியாவின் கண்காணிப்பு விமானமும் ஹெலிகொப்டர்களும் அவற்றை இயக்கிப் பராமரிக்கின்ற இராணுவ அதிகாரிகள் சகிதம் மாலைதீவில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதை சந்தேகத்துடன் நோக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. இவ்வாறு நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றமையை மாலைதீவு பிராந்தியத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கு முன்னோடியான ஒரு பிரசன்னமாக நோக்குகின்ற சதிக்கோட்பாடுகள் பற்றியும் பரவலாக சந்தேகங்கள் கிளம்புகின்றன.

ஆனால், இது எப்போதுமே அவ்வாறிருந்ததில்லை. மிகுந்த ஆபத்துக்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கக்றஸ் இராணுவ நடவடிக்கையில் பராசூட் வீரராகப் பங்கேற்ற ஓய்வுபெற்ற லெப்டினன் ஜெனரல் வினோத் பாதியா, 1988 இல் தலையீடு செய்த இந்தியப்படைகள் மீது காட்டப்பட்ட நல்லெண்ணத்தை நினைவுகூர்ந்தார்.

“மாலைதீவில் நாம் நிலைகொண்டிருந்த ஒருவருடகாலத்தில் அந்த நாட்டு மக்களின் நல்லெண்ணத்தை பிரதானமாக எமது சரியான இராணுவ நடத்தைகளின் மூலமாகவும் அவர்களது தேசிய பாதுகாப்பு சேவைக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகளின் மூலமாகவும் நாம் சம்பாதித்துக்கொண்டோம். ஆனால், நாம் வெளிப்படையாக எமது பிரசன்னத்தைக் காண்பித்துக்கொள்ளவில்லை. அந்த மக்களது கலாசாரம் மற்றும் வாழ்க்கைமுறையை நாம் மதித்து நடப்பதை உறுதிசெய்துகொண்டோம்” என்று வினோத் பாதியா கூறுகிறார்.

இருந்தாலும் தலைநகர் மாலியில் இருக்கும் முன்னாள் மாலைதீவு அரசாங்க அதிகாரி ஒருவர் இந்தியாவின் இராணுவப் பிரசன்னம் தொடர்பான அதிருப்தி ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டது என்று கூறினார். 1976ஆம் ஆண்டில் மாலைதீவிலிருந்து பிரிட்டிஷ் துருப்புக்கள் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்திருக்கும் தீவுக்கூட்டங்களில் எந்த வெளிநாடும் இராணுவத்தளங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆக இந்தியா மாத்திரமே தொடர்ந்தும் இராணுவப் பிரசன்னத்தைக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

மாலைதீவில் தரித்து நிற்கும் இந்திய ஹெலிகொப்டர்கள் முதலில் 2013 இல் ஒரு அன்பளிப்பாகவே வழங்கப்பட்டது. அந்த நல்லெண்ண சமிக்ஞை அந்த நேரத்தில் மாலியில் பெரிதும் வரவேற்கப்பட்டது என்று அரசாங்கத்துடன் முன்னர் பணியாற்றிய மாலைதீவு விமானப்போக்குவரத்துத்துறை நிபுணர் ஒருவர் தன்னை அடையாளப்படுத்த வேண்டாம் என்ற நிபந்தனையுடன் ஏசியா டைம்ஸிற்கு கூறினார்.

அந்த நேரத்தில் மாலைதீவு அதன் இராணுவ விமானசேவை ஆற்றல்களை விரிவாக்க நாட்டம் கொண்டிருந்தது. ஆனால், அதற்கான வசதிகள், வளங்கள் இருக்கவில்லை. மாலைதீவு அதிகாரிகள் பயிற்றுவிக்கப்படும் வரை உபகரணங்களை இயக்குவதற்கு இந்திய விமானிகள் இணங்கிக்கொண்டார்கள். அந்த ஹெலிகொப்டர்களை மாலைதீவிடம் கையளித்துவிட்டு இந்தியத்துருப்புக்கள் வாபஸ் பெறாமைக்கான குற்றப்பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் நிர்வாகத்திற்கே உரியது என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு மற்றும் தேசிய பந்தோபஸ்த்து அமைச்சரான அடம் ஷரீப் உமர் கூறினார்.

இந்திய இராணுவப் பிரசன்னம் தொடர்பான பதற்றங்களைத் தணிக்கும் ஒரு முயற்சியாக இந்தியக் கடற்படை அறிக்கையொன்றை விடுத்தது. அரசாங்கங்களுக்கு இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம் டோனியர் ஹெலிகொப்டர் மாலைதீவு தேசிய பாதுகாப்புப்படைக்கு செப்டெம்பர் 29 இல் வழங்கப்பட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது. அந்த ஹெலிகொப்டர் ஹனிமாதூ என்ற தீவில் அமைந்திருக்கும் வடக்கு மாலைதீவு தளத்தில் தரித்து நிற்பதாகவும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிலேயே அது இருப்பதாகவும் இந்திய அரசாங்கம் அதனை இயக்குவதற்கான செலவுகளை மாத்திரமே பொறுப்பேற்கும் என்றும் கூறப்படுகிறது.

மாலைதீவு விமானிகளும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் 2017 ஜூன் மாதத்திலிருந்து அத்தகைய ஹெலிகொப்டர்களை இயக்குவதற்கான பயிற்சியைப் பெற்றுவருகிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தில் செல்வாக்குச் செலுத்துவதற்கான சீன – இந்திய போட்டாபோட்டியினால் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் புவிசார் அரசியல் நிலைவர மாற்றத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் நவீன இராணுவ தளபாடங்களைக் கொள்வனவு செய்வதன் ஊடாக மாலைதீவு அதன் விமானப்படை ஆற்றல்களைப் பலப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது என்பது தெளிவானது.

டோனியர் ஹெலிகொப்டர் சட்டவிரோத மீன்பிடி மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மாலைதீவின் விசேட பொருளாதார வலயத்தைப் பாதுகாப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்றும் எதிர்காலத்தில் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப்பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவிடமிருந்து கடந்த காலத்தில் செய்யப்பட்ட இராணுவத்தளபாடக் கொள்வனவுகள் பிரச்சினைக்குரியவையாக இருந்தன. நஷீட் அரசாங்கம் 2010 இல் ஹெலிகொப்டரை பெறுவதற்கு இணங்கிக்கொண்ட பிறகு மாலைதீவு நிலைவரங்களுக்கு இந்திய ஹெலிகொப்டர்கள் ஏற்புடையவையா என்பதைப் பரிசோதனை செய்து பார்ப்பதற்குத் தவறிவிட்டதாக விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இரவிலோ அல்லது சீரற்ற காலநிலையின் போதோ அந்த ஹெலிகொப்டர்களை இயக்க முடியாமையினால் நஷீட் நிர்வாகம் இராணுவ விமானசேவை ஆற்றல்களை உகந்தமுறையில் நவீனமயப்படுத்தத் தவறிவிட்டது. அதனால் இந்தியப்படைகள் நிலைவைக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது என்று ஷரீப் கூறுகிறார். இந்து சமுத்திரத்தில் 800 கிலோமீற்றர்கள் தூரத்திற்குப் பரவியிருக்கும் ஆயிரத்திற்கும் அதிகமான தீவுகள் உலகின் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தில் 40 சதவீதமானவை இடம்பெறுகின்ற கடற்பாதைகள் வரை விரிந்து கிடக்கிறது. அதனால், மாலைதீவு புதுடில்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

1965 இல் சுதந்திரமடைந்ததற்குப் பின்னரான காலகட்டத்தில் பெரும்பகுதியில் மாலைதீவு இந்தியாவுடன் உன்னதமான உறவுகளைக் கொண்டிருந்த அதேவேளை, சீனாவுடன் திறந்த தொடர்புவழிகளையும் பேணிவந்தது. ஆனால், அண்மைக்காலமாக தீவுகளை இணைக்கின்ற முக்கியமான பாலங்கள் உட்பட பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலமாக மாலைதீவில் சீனா ஊடுருவல்களை செய்திருக்கிறது. அதனால் இந்தியாவின் செல்வாக்கு பாதிக்கப்பட்டது.

தற்போது மாலைதீவின் வீதிகளில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களின் ஊடாக வெளிப்படுத்தப்படும் இந்திய விரோத உணர்வுகள் நிலைவரங்களில் மாற்றத்தைக் கொண்டுவருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்திற்கு நிதியுதவியைப் பெறுவதற்காக சீனாவுடனான உறவுகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி சோலியின் அரசாங்கம் உறுதியான முறையில் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஏற்கனவே ஊகங்கள் வெளியாகியிருக்கின்றன. மாலைதீவிடம் போதுமான வளங்கள் இல்லையென்றாலும் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே தீவிரமடைந்துவரும் புதிய அரசியல் அதிகாரப்போட்டியின் மையமாக அமைந்திருப்பதால் மாலைதீவு மூலோபாய செல்வாக்கைக் கொண்டதாக இருப்பது கவனிக்கத்தக்கது.

சீமா சேன்குப்தா

India risks losing its military hold on Maldives என்ற தலைப்பில் ஏசியா டைம்ஸில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.