பட மூலம், Selvaraja Rajasegar Photo

இலங்கையின் பொருளாதாரம் ஒரு பெரும் நெருக்கடிக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் போது இலங்கை முழுவதுமிருக்கும் கடற்றொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். இங்கு வடக்கு கடற்றொழிற்துறையில் வந்திருக்கும் நெருக்கடியென்பது ஏற்கனவே இலங்கையின் கடற்றொழில் கட்டமைப்பில் இருக்கும் பலவீனங்களையும் கருத்தில் கொண்டுதான் பகுப்பாய்வு செய்யமுடியும். குறிப்பாக கடற்றொழில் சார்ந்த ஏற்றுமதி இறக்குமதி, அதாவது திறந்த பொருளாதாரத்தினுடைய தாக்கம், நீண்டகால யுத்தத்ததின் பாதிப்பு, அதன் பின் வந்த இந்திய இழுவைப்படகுகளின் சுரண்டலால் ஏற்பட்ட இழப்புக்கள் தென்னக இடப்பெயர் மீனவர்களின் முரண்பாடு மற்றும் கடற்றொழில் கூட்டுறவுச்சங்கங்களின் வீழ்ச்சி போன்றவற்றை கவனத்தில் எடுக்க வேண்டும். இந்த நிலையில் தேசிய பொருளாதாரக் கட்டமைப்பின் மாற்றம் பிராந்தியத்தையும் உள்ளூரையும் முதன்மைப்படுத்துகையில் வடமாகாணத்தின் கடற்றொழிலாளர்களுடைய எதிர்கால நிலைமை பற்றி ஆராய்வது அவசியம்.

தேசிய பார்வையில் கடற்றொழில்

அண்மையில் பலநாள் கடற்றொழில் படகுகளால் இறக்கப்பட்ட அதிக பெறுமதியான கடலுணவுகள் வீசப்படுவது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்றுமதி அபிவிருத்தி சபையினுடைய தலைவர் பின்வரும் விடயங்களை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். சித்திரை மாத தொடக்ககாலத்தில் இலங்கையினுடைய கடலுணவு ஏற்றுமதியென்பது 25% தான் செயற்பட்டது. மேலும் அவர் கூறுவது விமானங்கள் ஊடாக உடன் மீனாக ஏற்றுமதி செய்யும் போக்குவரத்து செலவு தற்போது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இலங்கையினுடைய கடலுணவு ஏற்றுமதிப் பெறுமதியென்பது ஏறத்தாழ 300 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். அதாவது, கடலுணவுகளான இறால், நண்டு, சிங்க இறால், பெரிய சூரை மீன் (Yellow Fin Tuna) போன்ற உணவுகளே ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் குறிப்பிடுகிறார். இங்கு உடன் மீனின் ஏற்றுமதி 1Kg  20 அமெரிக்க டொலராக (ரூபா. 4,000) இருந்த ஏற்றுமதிச்சந்தை எதிர்காலத்தில் 6-7 அமெரிக்க டொலருக்கான (ரூபா. 1200 – 1400) குளிரூட்டப்பட்ட கடலுணவுக்கான சந்தையாக மாறப்போகிறது என்கிறார்.

இங்கு நாங்களும் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ளலாம். வட மாகாணத்திலிருந்து அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ளும் ஒரு பெரும் துறையாக கடலுணவுகளின் ஏற்றுமதியே அமைகிறது. ஆயினும், அதற்கூடாக திரட்டப்படும் வருமானத்தில் கடற்றொழிலாளர்களுக்கு கிடைக்கும் பங்கைவிட இடையிலுள்ள வர்த்தகர்களுக்கே இலாபம் சென்றடைகிறது.

இலங்கையினுடைய கடலுணவுகள் சார்ந்த பிரச்சினை என்பது ஏற்றுமதி சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல இறக்குமதியுடனும் தொடர்புபட்டது. வேடிக்கையான விடையம் என்னவெனில் எம் நாடு ஒரு தீவாக இருக்கும் போது கூட கடலுணவை பெரியளவில் இறக்குமதி செய்கிறது. 2018ஆம் ஆண்டு நிதியமைச்சின் ஆண்டறிக்கையின் படி பின்வரும் விடயங்கள் குறிப்பிடத்தக்கவை.

ஆண்டு கடலுணவு ஏற்றுமதி
(அமெரிக்க டொலர்கள்)
கடலுணவு இறக்குமதி (அமெரிக்க டொலர்கள்)
2015 163 மில்லியன் 218 மில்லியன்
2016 169 மில்லியன் 234 மில்லியன்
2017 240 மில்லியன் 214 மில்லியன்
2018 265 மில்லியன் 192 மில்லியன்

இவ்வாறு இலங்கையில் கடலுணவின் ஏற்றுமதிக்கு சமமாக இறக்குமதி இருக்கிறது. நாளாந்தம் மக்கள் உட்கொள்ளும் கடலுணவுகளுக்கு கூட ஒட்டுமொத்த இறக்குமதியில் ஒரு நெருக்கடி வரும்போது சில பிரதேசங்களில் தட்டுப்பாடு உருவாகலாம்.

வடக்கு கடற்றொழிலின் சவால்கள்

யுத்தத்தின் போது இடப்பெயர்வாலும், வன்முறையாலும் பெரியளவில் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு கூட போக முடியாது நலிவடைந்திருந்தார்கள். யுத்தம் முடிவடைந்த பின்பும் கூட இந்திய இழுவைப்படகுகளின் சுரண்டல் அவர்களை பெரியளவில் தாக்கி பல வருடங்களாக ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே தொழிலுக்குச் சென்றனர். திங்கள், புதன், சனிக்கிழமைகளில் இந்திய ரோலர் படகுகள் வருவதால் வடமாகாணத்தின் சிறு கடற்றொழிலாளர்கள் தங்கள் வலைகள் ரோலர் படகுகளால் சேதப்படுத்தப்படும் எனும் அச்சத்தில் தொழிலுக்கு செல்வதில்லை. உண்மையில் கோடிக்கணக்கான பெறுமதியான வலைகள் சேதமடைந்துள்ளன. கடலுக்கு போகாது பெருமளவில் வாழ்வாதாரங்கள் பாதிப்படைந்தன. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தமிழ் அரசியல்வாதிகளோ தமிழ் புத்திஜீவிகளோ தமிழ் நாட்டினுடைய அரசியல் ஆதரவை இழக்கலாம் என்று அஞ்சி வடக்கு கடற்றொழிலாளர்களை நீண்டகாலம் கைவிட்ட நிலைமை நீடித்தது. 2015ஆம் ஆண்டுக்கு பின்பு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தனும் சுமந்திரனும் மட்டுமே இதைத் தீர்ப்பதற்கு முயற்சித்தார்கள். 2016ஆம் ஆண்டில் கடற்றொழிலாளர்களின் அழுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மத்தியில் இந்தியா மற்றும் இலங்கையினுடைய வெளிவிவகார, கடற்றொழில் அமைச்சர்களுக்கிடையில் முதன்முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஓரளவு பிரச்சினை கட்டுப்படுத்தப்பட்டது.

அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்பகுதி இடப்பெயர் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளால் உள்ளூர் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். முல்லைத்தீவின் கடற்றொழிலாளர்கள் 72 இடப்பெயர் கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி கொடுத்திருந்த போதும் பல நூற்றுக்கணக்கான இடப்பெயர் மீனவர்களின் அத்துமீறல் முல்லைத்தீவு மீனவர்களின் உற்பத்தியைப் பாதித்தது. இந்தப் பிரச்சினையை கடந்த ஆண்டுகளில் நல்லாட்சி அரசாங்கம் இலகுவாகத் தீர்த்திருக்கலாம். ஆனால், அதற்கான அரசியல் விருப்பு இருக்கவில்லை.

இவ்வாறான பிரச்சினைகளுக்கூடாக வடக்கு கடற்றொழிலாளர்களுடைய வருமானம் பாதிக்கப்பட்டபோது அவர்களுடைய வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட அளவிலான பங்களிப்பில் இயங்கும் கடற்றொழில் சங்கங்களும் நலிவடைந்தன. மேலும், 2010ஆம் ஆண்டு கடற்றொழில் அமைச்சு கிராம மட்டத்தில் கடற்றொழில் அமைப்புக்களை உருவாக்கியதால் கிராமங்களில் இயங்கிக்கொண்டிருந்த கூட்டுறவு சங்கங்களின் செயற்பாடு பலமிழந்தது. அதாவது, ஒரு கிராமத்தில் ஒரு துறைக்கு இரு அமைப்புகள் வழிகாட்டும் போது குழப்பங்கள் உருவாகும். அந்த விதத்தில் இந்தக் கிராமிய கடற்றொழில் அமைப்புக்களை அரசாங்கம் நீக்க வேண்டும்.

வட மாகாணத்தில் யுத்தத்திற்குப் பின் பல சர்வதேச அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் ஏற்றுமதி கடலுணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஊக்குவித்தார்கள். இங்கு இந்தியாவின் பிரபல கிராமிய பொருளாதார பேராசிரியரான உட்சா பட்நாயக் (Utsa Patnaik) ஏகாதிபத்தியத்திற்கும் அபிவிருத்தி அடையாத நாடுகளின் உணவுப் பாதுகாப்பிற்கும் உள்ள முரண்பாட்டை பகுப்பாய்வு செய்துள்ளார். அபிவிருத்தியடையாத நாடுகளில் மேற்கு நாடுகளுக்கான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதனால்தான் பெருமளவு உணவுப் பாதுகாப்பு பிரச்சினையும் பட்டினியும் உருவாகிறது.

உணவுப் பாதுகாப்பும் கடற்றொழிலும்

வட மாகாணத்தினுடைய கடற்றொழில் மற்றும் கடலுணவுகளின் முக்கியத்துவம் தொடர்பாக நெதர்லாந்தைச் சேர்ந்த கலாநிதி யூரி ஷோல்ரன் (Joeri Scholtens) இன் கலாநிதி பட்டத்திற்கான ஆய்வு ‘விளிம்புநிலையில் மீன்பிடி’ பல முக்கியமான விடயங்களை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக இலங்கை மக்களினுடைய 65%மான விலங்கு புரதச்சத்து கடலுணவுகளை உட்கொள்வதிலிருந்து கிடைக்கிறது என்று கூறுகிறது. மேலும், அவருடைய ஆய்வு இலங்கையிலிருக்கும் 270,000 கடற்றொழிலாளர்களுள் 41,000 தொழிலாளர்கள் வட மாகாணத்தை சேர்ந்தவர்கள். அதாவது, இலங்கையின் சனத்தொகையில் வட மாகாணத்தின் சனத்தொகை 5% மாக இருந்தபோதும் கடற்றொழிலாளர்களின் தொகை 15% ஆக அமைந்து வட மாகாணத்தில் ஐந்தில் ஒரு குடும்பங்கள் கடற்றொழில் வாழ்வாதாரத்தில் தங்கியுள்ளன என்று காட்டுகிறது.

நெருக்கடியுடன் பெரும் பெறுமதியான ஏற்றுமதி கடலுணவு வகைகள் குறிப்பாக நண்டு, இறால் போன்றவற்றிற்கான கேள்வி குறையும் பட்சத்தில் உள்ளூரில் விற்கப்படும்  மீன் வகைகளை பெரியளவில் உற்பத்தி செய்து நாடுமுழுவதும் விற்பதற்கான ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. இவ்வாறான மாற்றம் என்பது கடற்றொழிலாளர்களுடைய வருமானத்தை அதிகரிப்பது மட்டுமல்ல மக்களுடைய போசாக்கிற்கு முக்கியமாக அமையும்  கடலுணவுகளை இலங்கை முழுவதும் விநியோகிப்பதற்கான ஒரு வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது.

ஆண்டுதோறும் இறக்குமதி செய்யும் கடலுணவுகள் எனும்போது அமெரிக்க டொலர்களில் ரின் மீன் 57.7 மில்லியன், மாசி 9.5 மில்லியன், நெத்தலி 54.8 மில்லியன், வேறுவகைக் கருவாடுகள் 22.1 மில்லியன்கள் ஆகும். நெருக்கடியின் மத்தியில் அரசாங்கம் இந்த இறக்குமதியைக் குறைக்கும் அல்லது நிறுத்தும் சந்தர்ப்பத்தில் வருடாந்த உள்ளூர் சந்தை ரூபா. 3,000 கோடியால் விரிவடையும். இவ்வாறான ஒரு சந்தையை வைத்துக்கொண்டுதான் உள்நாட்டு யுத்தத்திற்கு முன்பு 1982ஆம் ஆண்டில் வட மாகாணக் கடற்றொழிலாளர்கள் இலங்கையினுடைய மொத்த கடலுணவு உற்பத்தியில் 41.5% உற்பத்தியைச் செய்தார்கள். தற்போது வந்திருக்கும் நெருக்கடி மத்தியில் மீண்டும் கடற்றொழிலாளர்கள் அவ்வாறான ஒரு சந்தையை வென்றெடுக்க முடியுமா?

அவ்வாறு அந்தச் சந்தையை கைப்பற்றுவதாக இருந்தால் பல வகையான உட்கட்டுமானங்கள் தேவைப்படும். கருவாடு பதனிடும் ஆலைகள், குளிரூட்டப்பட்ட வாகனங்கள் ஏன், புகையிரதத்தில் கூட குளிரூட்டி அமைப்புக்கள் இருந்தால்தான் வட மாகாண கடலுணவுகளை நாடெங்கிலும் விநியோகப்படுத்த முடியும். தற்போது வடமாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட கடற்றொழில் சங்கங்கள் 202 உள்ளன. அவற்றில் 152 சங்கங்கள்தான் தற்போது செயற்பாட்டில் உள்ளன. மேலும், கடலோரத்திலிருக்கும் இச்சங்கங்களை வழிகாட்டுவதற்கு பத்து கடற்றொழில் சமாசங்களும் இருக்கின்றன. இயங்காத சங்கங்களை மீண்டும் இயங்கவைக்க வேண்டும், இயங்கும் சங்கங்களை பலப்படுத்த வேண்டும். மேலும், வடக்கு கடற்றொழில்துறையின் மேம்பாடும் வளர்ச்சியும் தொழிலாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுடைய பொருளாதாரக் கட்டமைப்பில் வரும் மாற்றம் சம்பந்தமமான தூரநோக்கில் தங்கியிருக்கிறது.

கலாநிதி அகிலன் கதிர்காமர்
சிரேஷ்ட விரிவுரையாளர்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்