பட மூலம், UN Aids

ரஞ்ஜன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் பதிவுகளானது நாட்டின் நிர்வாகத் துறை குப்பையாகியுள்ள நிலையினை மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற ஒரு திரைப்படமாக மாறியிருக்கின்றது எனலாம். நாட்டின் அரசியல் சார்ந்தவர்களும் நாட்டின் பொது மக்களும் குறைந்த அளவிலேயே வாசிப்புப் பழக்கம் இருப்பவர்களாக இருக்கின்றனர். அதன் காரணமாக புத்தகங்கள் மூலமாக செய்ய முடியுமான மாற்றங்கள் சொற்ப அளவானதாகவே இருக்கிறது. ரஞ்ஜன் குரல்கள் உள்ளடக்கப்பட்ட சிறிய வீடியோ பதிவுகள் இலகுவில் விளங்கிக் கொள்ள முடியுமானவைகளாக இருக்கின்றன. மக்கள் விரும்புகின்ற சாக்கடைச் சுவையும் அதில் அதிகமாகவே அடங்கியிருக்கின்றன. இந்த வீடியோ பதிவுகள் நாட்டின் நிர்வாணத்தை வெளிச்சம்போட்டுக் காட்டிக்கொண்டிருப்பதுடன் அதிலிருந்து வெளியாகும் துர்நாற்றத்தினையும் நுகரச் செய்து விடுவதாக இருக்கின்றது. இந்த வீடியோ பதிவுகளானது தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாட்டின் வேகத்தை இன்னும் அதிகரிப்பதாக இருக்கின்றது.

இந்த ஊழல் மிக்க நிலையிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக கட்டமைப்பு மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து மிக நீண்டகாலமாக நான் குறிப்பிட்டுக்கொண்டு வருகின்றேன். இந்த விடயம் தொடர்பாக அதிகளவிலான கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியிருக்கின்றேன். தவறான ஒரு விடயம் இடம்பெறும் போது அது மிக அவசரமாக சரி செய்யப்படாதவிடத்து அது கடினமானதாக மாறிவிடுவதற்கான வாய்ப்பிருக்கின்றது. ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய முடியுமான விடயங்கள் காலப் போக்கில் கோடாரியினால் கூட அகற்றிவிட முடியாத நிலை ஏற்பட்டுவிடலாம். இலங்கையின் அரசியல் துறையின் செயற்பாடுகள் காரணமாக நாடு ஊழல் மிக்கதாக மாறியிருக்கின்றது. நீதித்துறை குறித்து எனது அனுபவங்கள் சிலவற்றை இந்தக் கட்டுரை ஊடாக பகிர்ந்துகொள்ள நினைக்கின்றேன். இலங்கையின் நிறுவனங்களின் பின்னடைவு தொடர்பிலும் ரஞ்ஜனின் சிறிய வீடியோப் பதிவுகள் தொடர்பிலும் புரிந்துகொள்வதற்கு இந்தக் கட்டுரை உதவியாக அமையும். ஆயினும், ஆழமான அறிவினை இது பெற்றுத் தருவதாக அமையப் போவதில்லை. இலங்கை தற்போதிருக்கும் நிலையிலிருந்து மீட்கப்பட வேண்டுமெனில் ஆழமான அறிவு பெற்றுக்கொள்ளப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கல்டூனின் பார்வை

இலங்கையின் பேராசிரியர்களில் ஒருவரான யொஹான் கல்டூன் என்பவருடன் மேற்கொண்ட கலந்துரையாடல் ஒன்று குறித்து இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அவர் ஒரு கணிதவியலாளரும் சமூக விஞ்ஞான ஆய்வாளருமாவார். பிரச்சினைகளைத் தீர்த்தல் தொடர்பான பாடப்பரப்பில் தற்போதைய உலகில் வாழ்கின்ற சிறந்த ஆய்வாளராக அவரைக் குறிப்பிடலாம். 70 வயது மதிக்கத்தக்க அவர் இது வரையில் 100 புத்தகங்கள் வரை எழுதி வெளியிட்டிருக்கின்றார். “பிரச்சினைகள் தீர்த்தல் தொடர்பிலான சம்பவக் கற்கை என்ற தலைப்பில்” சிங்கள மொழியில் அவரால் வெளியிடப்பட்ட புத்தகமானது நான் அவரிடம் விடுத்த கோரிக்கையொன்றின் வெளிப்பாடாக இடம்பெற்றது என்பதாக குறிப்பிட முடியும்.

அவர் இலங்கைக்கு 20 தடவைகளுக்கு மேல் வந்திருக்கின்றார். 2005ஆம் ஆண்டு இலங்கையை சுனாமி தாக்கிய போது அவர் வந்திருந்தார். அவரது அழைப்பின் பேரில் ஒரு நாள் மாலை நேரம் கொழும்பில் அவரது இருப்பிடத்திற்கு நான் சென்றிருந்தேன். “முடிவில்லாத போராட்டம்” என்ற எனது புத்தகத்தை மையமாக வைத்து இலங்கை குறித்து மிக நீண்ட நேரம் அவரது கருத்துக்களை முன்வைத்தார்.

அவர் அந்தப் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேடிப்பெற்று அதன் பாதியளவு வாசித்ததாகவும் அதன் ஊடாக இலங்கை குறித்த அவரது எண்ணப்பாட்டினைக் குறிப்பிட்டார்.

“நான் உங்களது புத்தகத்தை முழுமையாகப் படிக்கவில்லை, பாதியளவுதான் படிக்கக் கிடைத்தது. எந்த நாட்டிலும் உயர் நீதிமன்றம் என்பது மலையுச்சி போன்று உயர்ந்த இடத்திலேயே இருக்கின்றது. அரசாங்கத்தின் மற்றைய அனைத்து நிறுவனங்களும் அதன் கீழ்தான் அமைந்திருக்கவேண்டும். உயர் நீதிமன்றம் வெள்ளத்தில் மூழ்கிவிடுமானால் அதற்கு கீழ் இருக்கின்ற மற்றைய அனைத்து நிறுவனங்களும் வெள்ளத்தில் மூழ்கியதாகவே இருக்கவேண்டும்” என்றார்.

பேராசிரியரின் கருத்து முற்றிலும் உண்மையானது.

பெண்களை துன்புறுத்தும் நீதிபதி

எனது தொழில் சார்ந்த விடயங்களில் நான் முகம் கொடுத்த சம்பவம் ஒன்றினை அடிப்படையாக வைத்தே நீதிமன்றம் குறித்து அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

நீதவான் ஒருவர் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட வழக்கு ஒன்றின்போது குற்றம் சாட்டப்பட்டவர் சட்டத்துக்கு முரணான அடிப்படையில் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருந்தார் என்ற காரணத்தினால் குறித்த நீதிபதி சம்பந்தமாக தேடிப்பார்க்க வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது. குறித்த நீதிபதி ஆரம்ப காலங்களில் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்து பண மோசடிக் குற்றச்சாட்டொன்றின் பேரில் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டதனால் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பது அவர் குறித்து தேடிப்பார்த்ததில் அறியக்கிடைத்தது.

இது குறித்த தகவல்களை நான் பத்திரிகையில் வெளியிட்டேன் என்ற காரணம் காட்டி சட்டமா அதிபர் சரத் சில்வாவின் ஆலோசனைக்கு அமைவாக குற்றப் பரிசோதனைத் திணைக்களத்தில் எனக்கெதிராக முறைப்பாடொன்று குறித்த நீதிபதியினால் பதிவு செய்யப்பட்டது. குறித்த விசாரணை எனக்கு எதிராக நடத்தப்பட்ட போதிலும் அதனூடாக வெளியான விடயங்கள் காரணமாக விசாரணையானது குறித்த நீதிபதிக்கு எதிரானதாக மாறிவிட்டது. குறித்த விசாரணையின் போது நீதிபதியினால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பெண்களின் சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. இந்த நீதிபதி காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டது.

குறித்த விசாரணையின் முடிவில் அறிக்கையினை மேலதிக ஆலோசனை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குற்றப் பரிசோதனைத் திணைக்களத்தினால் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீதவான் சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் மோசடி, பண மோசடி என்பன தொடர்பான விடயங்களை அறிந்துகொண்ட உடனேயே தாமதமின்றி நீதவான் பதவியிலிருந்து குறித்த நபரை நீக்கிவிடுவதற்கான நடவடிக்கைகளை சட்டமா அதிபர் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் குறித்த அறிக்கை இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது.

சட்டமா அதிபரின் செயற்பாடுகள்

அதன் பின்னர் குறித்த விடயம் தொடர்பாக அப்போதைய நீதி அமைச்சராக இருந்த ஜீ.எல் பீரிஸ் அவர்களிடம் முறையிட்டேன். இது குறித்து அமைச்சர் சட்டமா அதிபரிடம் காரணம் கேட்டார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக சட்டமா அதிபர் அமைச்சருக்கு இரகசிய அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தார். அதன் ஊடாக பரிசோதனை அறிக்கைகளை மூடி மறைத்து பெண்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்திய நீதவான் பாதுகாக்கப்பட்டார். சட்டமா அதிபர் சரத் சில்வாவும் நீதவான் லெனின் ரத்னாயக்க போன்றே ஊழல் பேர்வழியாவார் என்பதே எனது அபிப்பிராயமாகும். எனவே, சட்டமா அதிபர் குறித்தும் தேடிப்பார்க்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. அந்த புலனாய்வு நடவடிக்கைகளின் பயனாக இரசாயன பொறியியலாளர் ஜயசேகர தனது மனைவிக்கு எதிராக பதிவுசெய்த விவாகரத்து வழக்கு குறித்த விபரங்கள் கிடைக்கப்பெற்றன.

சரத் சில்வா இந்த வழக்கின் நீதிபதியான உபாலி அபேரத்னவைப் பயன்படுத்தி வழக்குத் தாக்கல் செய்த ஜயசேகரவை சட்டத்திற்கு முரணான அடிப்படையில் சங்கடங்களுக்கு உள்ளாக்கியிருக்கின்றார். இது தொடர்பில் ஜயசேகரவினால் நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டதுடன் அதன் விளைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் ஊடாக நீதிபதி குற்றம் புரிந்துள்ளார் என்பதான அறிக்கையொன்றைத் தயாரித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. உயர் நீதிமன்ற நீதிபதிகளான திஸ்ஸ பண்டார மற்றும் மார்க் பெர்ணாந்து ஆகியோரே இந்த விசாரணையினை மேற்கொண்டிருந்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக கடமையாற்றிய சரன் சில்வா 1994ஆம் ஆண்டு அரசியல் மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி சந்திக்கா பண்டாரநாயக்கவினால் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டதானது இந்தக் காலப்பகுதியில்தான் நிகழ்ந்தது. அவர் சட்டமா அதிபராக நியமனம் பெற்றதும் குறித்த விவாகரத்து வழக்கில் தமது ஆலோசனையின் பிரகாரம் செயற்பட்ட நீதிபதியை பாதுகாப்பதற்காக குறித்த அறிக்கையை மறைத்துவிட்டார்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலையீடு

குறித்த தகவல்கள் சேகரித்துக் கொண்டதன் பிற்பாடு அதுவரையிலும் நீதிபதி லெனின் ரத்னாயக்கவுக்கு எதிராக குரல்கொடுத்துக்கொண்டிருந்த எனக்கு நீதிபதி உபாலி அபேரத்னவுக்கும் சட்டமா அதிபர் சரத் என் சில்வாவுக்கும் எதிராக குரல் எழுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டது. இறுதியில் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக கடமையாற்றிய ரொமேல் த சில்வா, நீதிபதிகள் இருவரினதும் சட்டமா அதிபரினதும் செயற்பாடுகள் தொடர்பில் நீதிபதிகள் சங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து கலந்தாலோசிப்பதற்காக சட்டத்தரணிகள் சங்கத்தின் ஓய்வு பெற்ற தலைவர்களை அழைத்து கூட்டமொன்றை நடாத்தினார். குறித்த கூட்டத்திற்கான அழைப்புக் கடிதங்களுடன் சட்டமா அதிபர் மற்றும் நீதிபதிகள் இருவர் குறித்து என்னால் எழுதப்பட்ட அறிக்கைகளின் பிரதிகளையும் இணைத்து அனுப்பியிருந்தார். சட்டத்தரணிகளின் நன்மதிப்பினைப் பெற்றிருந்த எச்.எல் த சில்வா என்பவரது வீட்டிலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றது. அந்த ஒன்று கூடலின் போது கீழ்வருகின்ற தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

  1. இரண்டு நீதிபதிகளுக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும்.
  2. நீதிபதிகள் இருவர் குறித்த குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படுமாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் சட்டமா அதிபரின் நடவடிக்கைகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.

இந்த முடிவுகளின் பயனாக நீதிபதிகள் இருவர் தொடர்பிலும் நான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை ஒன்றினை மேற்கொள்வதற்காக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய பரிசோதனைக் குழு ஒன்றினை நியமிக்க வேணடிய நிலை நீதியரசர் தலைமையிலான நீதிமன்ற ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டது.

இரண்டு விசாரணைகள்

லெனின் ரத்னாயக்க குறித்த விசாரணையானது எனது சாட்சியம் பெற்றுக் கொள்வதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. நீதிபதி மூலமாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிய பெண்கள் இருவரையும் அவர்களது துணைவர்களையும் சாட்சியமளிப்பதற்காக அழைக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக கம்பளை வாடிவீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு பெண் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டிருந்தார். அடுத்த பெண் நீதிபதியின் சேம்பரில் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். சேம்பருக்கு உட்செல்வதற்கான வாயிலில் பிரதிவாதியின் சார்பாக முன்னின்ற சட்டத்தரணி காவல் நிற்பதற்காக பயன்படுத்தப்பட்டார். தனது முன்னிலையில் விசாரிக்கப்படுகின்ற வழக்கொன்றுடன் தொடர்புடைய பெண் ஒருவர் அவருக்காக வாதாடுகின்ற சட்டத்தரணி காவலுக்காக நிறுத்தப்பட்டு நீதிபதி ஒருவரினால் தனது சேம்பரில் வைத்தே பிரதிவாதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விடயம் குறித்து இதற்கு முன்னர் யாருமே கேள்விப்பட்டிருக்க முடியாது. இந்த சம்பவம் குறித்த உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக அந்த நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் இருவர் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டனர். பிற்காலப்பகுதியில் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட திரு பலகல்ல என்பவரும் அவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் ஒவராவார்.

லெனின் ரத்னாயக்க முதல்தர ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரின் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஒன்று புடை சூழவே விசாரணைக் குழுவின் முன்னால் வருகை தந்திருந்தார். பின்தங்கிய கிராமிய பின்னணியுடைய, போதிய அளவு படிப்பறிவுகூட இல்லாத இந்த இரண்டு பெண்களினதும் அவர்களது கணவன்மார்களினதும் சாட்சியங்களை பொய்யாக்குவதற்கு இந்த பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளுக்கு முடியாமல் போனது. நீண்ட குறுக்கு விசாரணைகள் அந்தப் பெண்களின் சாட்சியங்களுக்கு இன்னுமின்னும் பலம் சேர்த்தது. இந்த இரண்டு பெண்களின் கணவன்மார்களில் ஒருவர் தனது மனைவி பாலியல் ரீதியாக வல்லுறவுக்கு உட்பட்டதற்கு பழி தீர்த்துக்கொள்வதற்காக நீதிமன்ற மண்டபத்தில் வைத்து மலம் நிரம்பிய பொலித்தீன் பை ஒன்றினை நீதிபதியின் தலையை நோக்கி வீசி எறிந்திருந்தார். அடுத்தவர் நீதிபதியைக் கொலை செய்ய முயற்சித்திருந்தார்.

லெனின் ரத்னாயக்க விசாரணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்த போதிலும் குறுக்கு விசாரணைகளிலிருந்து நழுவும் நோக்கில் குழுவின் முன்னிலையில் வராமலிருந்தார். அதன் பின்னர் விசாரணை ஒரு பக்கமாக மாத்திரமே மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் குழு லெனின் ரத்னாயக்கவை நான்கு குற்றங்களுக்காக குற்றவாளியாக்கியது.

நீதிபதி உபாலி அபேரத்ன குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவிக்காமையினால் விசாரணைகள் எதுவுமின்றி நீதிபதியை நீதிமன்ற சேவையிலிருந்து உடனடியாக ஓய்வு பெறச் செய்யவேண்டும் என்பதாக நீதி மன்ற சேவைகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

சட்டமா அதிபரை வலைத்துப் பிடித்தல்

குறித்த இரண்டு விசாரணைகளின் வெற்றியின் பின்னர் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களின் பரிந்துரைக்கேற்ப சட்டமா அதிபர் சரத் என் சில்வாவுக்கு எதிரான விசாரணை நடாத்தப்படவேண்டிய நிலை ஏற்பட்டது. லெனின் ரத்னாயக்க தொடர்பான சம்பவத்தில் அவரது விடயங்களை மறைத்து குறித்த நீதிபதியை பாதுகாக்க முற்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுக்காக சட்டமா அதிபர் சரத் சில்வாவின் சட்டத்தரணி அந்தஸ்தை நீக்கிவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டேன். எனது முறைபாடானது நீதியரசரினால் (ஜீ.பீ.எஸ் த சில்வா) விசாரணை மேற்கொள்ள வேண்டுமா என்பது குறித்த அபிப்பிராயம் தெரிவிக்குமாறு கோரி பதவி மூப்பின் படிமுறைக்கு அமைய உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் அனுப்பி வைக்கப்பட்டது.

பிரியந்த பெரேரா, டீ.பீ.எஸ். குணசேகர, எல்.ஜீ.எச் வீரசேகர ஆகிய நீதிபதிகள் மூவர் மாத்திம் அவ்வாறான பரிசோதனை அவசியமில்லை என்பதாக குறிப்பிட்டிருந்தனர். மற்றைய நீதிபதிகள் அனைவருமே பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என்பதாக குறிப்பிட்டிருந்தனர். இதற்கிடையில் இரசாயன பொறியியலாளர் ஜயசேகர சரத் சில்வாவின் சட்டத்தரணி அந்தஸ்த்தை நீக்கிவிடக் கோரி மனுவொன்றினை உயர் நீதிமன்றத்திடம் முன்வைக்கின்றார். இறுதியாக எனது முறைப்பாடு குறித்த விசாரிக்கும் பொறுப்பை திரு அமீர் இஸ்மாயிலிடமும், ஜயசேகரவின் மனு குறித்து விசாரிக்கும் பொறுப்பு திருமதி சிரானி பண்டாரனாயக்கவிடமும் இந்த இரண்டு விசாரணைகளை நெறிப்படுத்துகின்ற பொறுப்பு மார்க் பெர்ணாந்துவிடமும் நீதியரசர் மூலமாக வழங்கப்படுகின்றது.

நீதியரசர் ஜீ.பீ.எஸ் த சில்வா, குறித்த இரண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்படுகின்ற காலப்பகுதியிலேயே நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றார்.

சந்திரிக்கா அரசாங்கம் சட்டத்திற்கு முரணாக மேற்கொண்ட செயற்பாடுகள் பலவற்றுக்கும் எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமையினால் உயர் நீதிமன்றமானது அரசாங்கத்திற்கு விரோதமான நீதிமன்றமாக ஜனாதிபதியினால் கருதப்பட்டது. இரண்டாவது பதவிக்காலத்துக்காக நடைபெறவுள்ள ஜனதிபதித் தேர்தல் குறித்தும் புதியதொரு அரசியல் யாப்பு குறித்தும் அவர் சில எதிர்பார்ப்புக்களுடன் இருந்தார். குறித்த இரண்டு தடைகளையும் தாண்டிக்கொள்வதற்காக உயர் நீதிமன்றத்தினை தான் கட்டுப்படுத்தும் விதமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதாக எண்ணினார். சட்டமா அதிபர் சரத் சில்வா ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தமையினால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலிருக்கும் சரத் சில்வாவை காப்பாற்றி உயர் நீதிமன்றத்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமான சிறந்த வழி சரத் சில்வாவை நீதியரசராக நியமிப்பதே என்பதாக அவர் தீர்மானித்தார்.

உயர் நீதிமன்றத்தின் முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் குற்றம் சாட்டப்பட்டவரே உயர் நீதிமன்றத்தின் தலைவராக நியமிப்பதானது அரசாங்கமொன்றின் தலைவர் ஒருவரினால் மேற்கொள்ளப்படக்கூடாத ஒரு விடயமாக கருதவேண்டும். அவரது சட்ட ஆலோசகர்களாக கடமையாற்றிய எச்.எல். த சில்வா, ஆர்.கே.டபிள்யூ.குணசேகர ஆகியோர் அவ்வாறு செயற்படவேண்டாம் என்பதாக ஆணித்தரமாக வேண்டிய நிலையிலேயே ஜனாதிபதி இந்த நியமனத்தினை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நீதிமன்ற விடயங்களுக்குப் பொறுப்பாக இருந்த உயர் அதிகாரி பரம் குமாரஸ்வாமி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.

நீதியரசர் சரத் சில்வா

ஜனாதிபதியின் அந்த முறைகேடான நடவடிக்கையின் பயனாக சட்டமா அதிபர் சரத் சில்வாவுக்கு எதிராக நான் மேற்கொண்டு வந்த போராட்டம் அதலபாதாளத்தில் தள்ளப்பட்டுவிட்டது. புதிய சட்டமா அதிபர் ஜனாதிபதி முன்னிலையில் பதிவிப்பிரமானம் செய்கின்ற படத்தினை தலைகீழாக ராவய பததிரிகையின் முதல் பக்கத்தில் பிரசுரித்து “நீதிமன்ற சுதந்திரத்தின் இறுதியாத்திரை” என்பதாக தலைப்பிட்டு எனது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தேன்.

அதன் பின்னர் நான் உட்பட மூவர் இணைந்து நீதியரசரின் நியமனத்தை எதிர்த்து நீதியரசருக்கு எதிராக வழக்கொன்றினைக் பதிவு செய்திருந்தோம். சரத் சில்வாவினால் நிர்வகிக்கப்படுகின்ற நீதிமன்றமொன்றில் நியாயம் கிடைக்கும் என்ற நோக்கில் அந்த வழக்கினைப் பதிவு செய்யவில்லை. அராஜகத்துக்கெதிரான போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது என்பதனை சுட்டிக்காட்டவே அந்த வழக்கினைப் பதிவுசெய்தோம். அது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துக்கொண்ட வழக்கொன்றாக மாறியது. சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தினால் வழக்கினைக் கண்காணிப்பதற்காக கேரளாவிலிருந்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரை வழக்கு விசாரிக்கப்படும் தினங்களில் அனுப்பி வைத்தது.

அதிகாரம் பெற்றுக்கொண்டதன் பின்னர் நீதியரசர் நீதிமன்றத்தை தலைகீழாக மாற்றினார். முதலாவதாக உபாலி அபேரத்னவை பாதுகாப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டார். கட்டாய ஓய்வுபெறுவதற்காக தீர்ப்பளிக்கப்பட்டவர் இறுதியில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவராக ஓய்வுபெற்றுச் சென்றார். லெனின் ரத்னாயக்கவை பாதுகாக்க முயன்றபோதும் அது வெற்றியளிக்கவில்லை.

நீதிமன்றத்திற்கு ஏற்படுத்திய சேதங்கள்

நீதியரசர் நீதிமன்றத்திற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றார். நீதிமன்றத்திற்கு இருக்கின்ற கௌரவத்தினை இல்லாமலாக்கிவிட்டார். அவருக்கு கட்டுப்படாத நீதிபதிகளை நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றினார். வெளியேற்ற முடியாத நீதிபதிகளை பணிகளற்ற நீதிபதிகளாக்கினார்.

நாட்டின் அரசியல் யாப்பை சிக்கலாக்கினார். நாடாளுமன்ற உறுப்புரிமை நீங்காத விதத்தில் எதிர்க்கட்சியிலிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கக் கட்சியுடன் சேர்ந்துகொள்ளும் முறையை நீதிமன்றத் தீர்ப்பு மூலமாக உருவாக்கினார். நீதிமன்ற அதிகாரத்தினைப் பயன்படுத்தி அப்பாவி மக்களுக்கு சிறைத் தண்டனை பெற்றுக்கொடுத்தார். நாட்டின் நீதியரசருக்கு பாதாள உலக சண்டியர்களின் தொடர்புகள் இருந்துவந்துள்ளது. அவர்கள் தொலைபேசி ஊடாக நீதியரசரைத் தொடர்புகொண்டனர். அதேபோன்று நீதியரசரும் தொலைபேசி ஊடாக அவர்களைத் தொடர்பு கொண்டுள்ளார்.

தியவன்னா ஆற்றின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றினுள் சட்டமா அதிபர் திருமணமான பெண் சட்டத்தரணி ஒருவருடன் அரை நிர்வாணமாக இருந்த சந்தர்ப்பத்தில் பொலிஸரால் பிடிக்கப்பட்டனர். அந்தச் சந்தர்ப்பத்தில் நீதியரசர் மேல் சட்டையுடன் கழுத்துப் பட்டியும் அணிந்திருந்திருந்த நிலையில் கீழ் பகுதி கால்சட்டை அணியாத நிலையில் இருந்திருக்கின்றார். இது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய செய்தியாக இருந்த போதிலும் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இது பொழுது போக்குக்கான பேசு பொருளொன்றாக இருந்ததே தவிர நாட்டின் நீதிமன்றத் துறையின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற தேவை அவர்களிடம் இருக்கவில்லை.

நாட்டின் செல்வாக்குள்ளவர்களும் முக்கியமானவர்களும் நீதிமன்றத் துறைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானகரமாக செயல்கள் குறித்து கண்டுகொள்ளமால் இருந்திருக்கின்றார்கள். அவரால் நீதிமன்றத் துறைக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்களை சரி செய்ய வேண்டிய தேவை எவருக்கும் இருக்கவில்லை. அரசியல் கட்சிகள் அவரிடமிருந்து முடியுமான அளவில் பயன்களைப் பெற்றுக்கொண்டன. ஹெல உறுமய, மக்கள் விடுதலை முன்னனி என்பன கூட அவரைப் பயன்படுத்தி அவர்களது கட்சிகளின் மதிப்பினை அதிகரிக்கும் அமைப்பிலான தீர்ப்புக்களைப் பெற்றிருக்கின்றன. இக்கட்டான நிலைகளில் அவருக்கு ஆதரவு வழங்கிய ஊடக நிறுவனங்கள் அவர்களுக்கிருந்த வழக்குகளை பின்கதவுகள் ஊடாகத் தீர்த்துக்கொண்டன. நீதிமன்றத்தை மாசுபடுத்திய இந்த மனிதனை பலரும் பாதுகாத்தனர். அதன் பின்னர் பல நீதியரசர்களும் நியமனம் பெற்று ஓய்வும் பெற்றனர். நீதிமன்றத்தின் மேன்மையான அந்த ஆசனத்தில் படிந்திருந்த அழுக்குகளை எவருமே சுத்தப்படுத்த முன்வரவில்லை.

நீதிமன்றம் மாத்திரமன்றி அனைத்து அரச நிறுவனங்களுமே குப்பை நிறைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. அந்த அனைத்து நிறுவனங்களும் அழுகிய விதம் குறித்து குறிப்பிடுவதற்கான கதைகளும் இருக்கின்றன. அந்த அனைத்து நிறுவனங்களிலும் திரைச்சீலை மூலமாக மறைத்து வைத்திருக்கின்ற குப்பைகளை வெளியில் தெரிகின்ற அமைப்பில் திரைச்சீலைகளை நீக்கிவிடுகின்ற வேலையையே ரஞ்ஜன் ராமநாயக்க செய்திருக்கின்றார். எங்காவது ஓரிடத்தில் பராதூரமான தவறு ஒன்று நிகழும் போது அது உடனடியாக சரிசெய்யப்படுவதற்காக நடவடிக்கைகள் எடுப்பதற்கான திறமை இலங்கையின் அரசியல் தலைவர்களிடம் காணமுடியவில்லை. அதன் காரணமாக அனைத்து நிறுவனங்களினதும் தவறுகள் உறைந்து முழு நிறுவனத் துறைகளும் அழுகிவிடுகின்ற நிலை உருவாகியிருக்கின்றது. இலங்கை இந்த நிலையிலிருந்து மீட்டெடுக்கப்பட வேண்டுமாயின் அனைத்து நிறுவனங்களும் உள்ளடங்கும் அடிப்படையில் கட்டமைப்பு மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும். அது அரசியல் கட்சிகளினால் மாத்திரம் மேற்கொள்ள முடியுமான விடயம் ஒன்றல்ல. அது மக்களின் கரங்களினாலும் மேற்கொள்ளப்படவேண்டிய மக்கள் பணியாக முன்னெடுக்கப்படவேண்டும்.

விக்டர் ஐவன்

හෙළුව පෙනීම என்ற தலைப்பில் ராவய பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை. தமிழில் மொழியாக்கம் செய்தவர் ராஃபி சரிப்தீன்.