பட மூலம், TIME, இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக வஸீம் தாஜூதினின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டபோது தெஹிவளை பள்ளிவாசல் முன்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார்கள்.

2012 மே 17ஆம் திகதி இரவு இலங்கையின் ரக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜூதீன் கொழும்பு 05, பார்க் வீதியில் சாலிக்கா மண்டபத்திற்கு அருகில் எரிந்து கொண்டிருந்த காரில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மரணம் அச்சந்தர்ப்பத்தில் கொடூரமான மற்றும் மர்மமான ஒரு கொலைச் சம்பவமாக தென்பட்டது. ஆனால், ஓர் விபத்தின் விளைவாகவே தாஜூதீனின் மரணம் நிகழ்ந்திருந்தது என நாராஹேன்பிட்ட பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறிருப்பினும், விளையாட்டுத் துறையின் தலைசிறந்த ஒரு வீரரின் மரணம் குறித்த வதந்திகள் தொடர்ந்தும் உலாவி வந்தன. குறிப்பாக, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூன்று மகன்மாரினதும் அபிமான விளையாட்டாக இருந்து வந்த றக்பி விளையாட்டுடன் அவர் தொடர்புபட்டிருந்த காரணத்தினால் இந்த வதந்திகள் பரவின. அத்துடன், அருவருப்பூட்டும் காதல் முக்கோணம் ஒன்று காரணமாக நாட்டின் வலிமை மிக்க ஆளும் குடும்பத்தின் பாதையில் குறுக்கிட வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டிருந்தது என்றும் கூறப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தேர்தலில் ராஜபக்‌ஷ தோற்கடிக்கப்பட்டதுடன், வஸீம் தாஜூதீன் உண்மையிலேயே கொலை செய்யப்பட்டிருப்பதாக இறுதியில் ஒரு நீதிபதி தீர்மானித்தார்.

அவருடைய கொலை தொடர்பான புலன் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்களின் பின்னர் இந்தக் கொலையை மூடிமறைக்கும் செயலுடன் சம்பந்தப்பட்ட நபர்களில்  ஒருவர் இப்பொழுது வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகின்றார். கடந்த மாதம் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு சட்டமா அதிபர் ஒரு குற்றப்பத்திரத்தை வழங்கியிருந்தார். இந்த நிலையில், 2012ஆம் ஆண்டு கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையை சந்திக்கும் முதலாவது நபராக சேனாநாயக்க இருந்து வருவார்.

சேனாநாயக்க  மீதான குற்றப்பத்திரம் ஜூன் 27ஆம் திகதி வழங்கப்பட்டதுடன், அவர் இப்பொழுது தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 198 கீழ் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருக்கின்றார். இந்த வழக்கு 2015ஆம் ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் வரையில் “மோட்டார் வாகன விபத்தொன்றாக” கூறப்பட்டு வந்த விளையாட்டு வீரரின் மரணத்தை மூடிமறைப்பதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக வலுவான வகிபங்கொன்றினை வகித்து வந்திருந்த ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கும் 90 பக்க குற்றப் பத்திரிகை பின்வருமாறு குறிப்பிடுகின்றது: “ஒரு குற்றச்  செயல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதனை அறிந்த நிலையில் அல்லது அவ்வாறு நம்புவதற்கான காரணங்கள் இருந்த நிலையில், குற்றத்தை நிகழ்த்திய நபரை சட்ட ரீதியான தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கு உள்நோக்கத்துடன் கூடிய விதத்தில் சாட்சியங்களை முன்வைத்தமை அல்லது இந்தக் குற்றச்செயல் தொடர்பான பொய்யானது என தான் அறிந்திருந்த அல்லது நம்பிய எவையேனும் தகவல்களை வேண்டுமென்றே வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.” சேனாநாயக்கவுக்கு எதிரான வழக்கு அக்டோபர் மாதத்தில் விசாரணைக்கு வரவிருக்கின்றது.

சேனாநாயக்கவுக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்திற்கு அடுத்த நாள் –  ஜூன் 24ஆம் திகதி – விளையாட்டு வீரரின் கொலைச் சம்பவத்தை மூடி மறைத்த விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் மற்றொரு முக்கியமான நபருக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் தாஜூதீன் கொலைச் சம்பவம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தாஜூதீனின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை பொய்யாக வழங்கியமை மற்றும் வழக்கு தொடர்பான சாட்சியங்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில்  2017 அக்டோபர் மாதம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் பேராசிரியர் ஆனந்த சமரசேகர கைது செய்யப்பட்டார். ஹவ்லொக் விளையாட்டுக் கழகத்தின் றக்பி விளையாட்டு வீரரின் கொலைச் சம்பவம் இடம்பெற்ற போது சமரசேகர சட்ட மருத்துவ அதிகாரியாக (JMO) பணியாற்றி வந்தார்.

தாஜூதீனின் சடலத்தின் குறிப்பிட்ட சில பாகங்களையும், மாலபே தனியார் மருத்துவக் (SAITAM) கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த பாகங்களில் ஒரு சிலவற்றையும் சமரசேகர வேண்டுமென்றே அகற்றியிருந்தார் என குற்றப் புலனாய்வுத்துறை புலன் விசாரணையாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பேராசிரியர் சமரசேகர சட்ட மருத்துவ அதிகாரி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் இந்தத் தனியார் மருத்துவக் கல்லூரியின் உபவேந்தராக பணியாற்றினார்.

தாஜூதீன் கொலை செய்யப்பட்டிருப்பதாக 2015ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தவரின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுக்குமாறும், தடய மருத்துவ நிபுணர்கள் மூவரைக் கொண்ட ஒரு விசேட குழுவினால் ஒரு புதிய பிரேத பரிசோதனையை நடத்துமாறும் மாஜிஸ்ட்ரேட் நீதவான் உத்தரவிட்டார். வஸீம் தாஜூதீனின் நெஞ்சுப் பகுதியும், முறிவுகளை கொண்டிருந்த இரு நீண்ட எழும்புகளும் கொலை செய்யப்பட்ட றக்பி விளையாட்டு வீரரின் சடலத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கும் விடயத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

ஆச்சரியப்படத்தக்க விதத்தில் இரண்டாவது பிரேத பரிசோதனையின் விபரங்களும் மிகக் கொடூரமாக நிகழ்ந்த ஒரு தாக்குதலின் போது ஏற்பட்ட காயங்களின் விளைவாக தாஜூதீன் மரணமடைந்திருந்தார் என்ற விடயத்தை வெளிப்படுத்தியிருந்தன. விளையாட்டு வீரரின் தலை, கால்கள், மார்புப் பகுதிகள் மற்றும் கழுத்து என்பவற்றில் சிராய்வுக் காயங்களும், முறிவுகளும் காணப்பட்டன. காபர்ன் மொனோசைட் நச்சூட்டல் காரணமாக தாஜூதீன் மரணமடைந்திருந்தார் என்ற சமரசேகரவின் முதல் பிரேத சோதனை அறிக்கையின் முடிவையும் இந்த அறிக்கை நிராகரித்தது. வீதி விபத்து ஒன்றின் போது கார் ஒன்றிற்குள் அகப்பட்டுக் கொள்ளும் ஒருவர் உயிரிழக்கும் சந்தர்ப்பத்திலேயே அது சாத்தியமானது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்குப் பதிலாக, “கூர்மை மழுங்கிய ஆயுதத்தினால் (ஆயுதங்களினால்) மற்றும் தீயின் தாக்கம் என்பவற்றினால் ஏற்பட்ட பன்முக காயங்களின் விளைவாக” மரணம் ஏற்பட்டிருந்தது என முடிவாக கூறப்பட்டிருந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் வஸீம் தாஜூதீன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இரண்டாவது பிரேத பரிசோதனையும் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

“மேலே தரப்பட்டிருக்கும் அவதானிப்புக்கள் மற்றும் குறிப்புக்கள் என்பவற்றை பரிசீலனை செய்யும் பொழுது, சம்பந்தப்பட்ட விபத்து இடம்பெற்ற நேரத்தில் அல்லது தீ பரவத் தொடங்கிய நேரத்தில் மரணமடைந்தவர் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கவில்லை என நாங்கள் அபிப்பிராயப்படுகின்றோம். வலுவிழக்கச் செய்யப்பட்டிருந்த ஆள் மற்றொரு நபரினால் பயணி ஆசனத்தில் வைக்கப்பட்டிருக்க முடியும் என்பதற்கான உயர்நிகழ்தகவு காணப்படுகின்றது (P10).”

பேராசிரியர் சமரசேகரவின் நடத்தை தொடர்பாக இலங்கை மருத்துவ கழகத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு முறைப்பாட்டை அடுத்து, மருத்துவத்துறையில் தொழில் புரிவதற்கான அவருடைய உரிமம் இலங்கை மருத்துவக் கழகத்தினால் (SLMC) ஆறு மாத காலத்திற்கு இரத்து செய்யப்பட்டது. கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியாக இருந்த பொழுது தாஜூதீன் கொலைச் சம்பவம் தொடர்பாக சாட்சியங்களை மறைப்பதற்கு முயற்சி செய்த அவருடைய நடத்தை தொடர்பாகவே இவ்விதம் மருத்துவ கழகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பிரச்சினையின் பாரதூரத்தன்மையை கருத்தில் கொண்டு இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு இலங்கை மருத்துவக் கழகத்தின் தொழில்சார் நடவடிக்கை குழு (PPC) தீர்மானித்தது. இக்குழு SLMC இன் தலைவர் (பேராசிரியர் கார்லோ பொன்சேகா) மற்றும் SLMC ஆறு உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.

தொழில்சார் நடவடிக்கைகள் குழு அதன் விசாரணையின் போது, உரிய நடைமுறையின் அனைத்து அம்சங்களையும் பின்பற்றாக விதத்தில் அல்லது அவற்றுக்கு இணங்கி ஒழுகாத விதத்தில் தாஜூதீனின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது என்ற முடிவுக்கு வந்தது. அது தவிர, அக்கமிட்டி பின்வருமாறும் தீர்மானித்தது: “இலங்கை மருத்துவ கவுன்சிலில் தம்மைப் பதிவு செய்து கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் ஆகியோரின் அறநெறிகளுடன் கூடிய நடத்தை தொடர்பான வழிகாட்டுதல்கள் போரசிரியர் சமரசேகரவினால் மீறப்பட்டுள்ளன.”

அவருடைய சகபாடிகளினால் மேற்கொள்ளப்பட்ட சார்பு ரீதியில் மெல்லிய இயல்பிலான இந்த ஒழுக்காற்று நடவடிக்கை தவிர, இந்தக் கொலை சம்பவத்தை மூடி மறைப்பதில் வகித்த பாத்திரம் தொடர்பாக பேராசிரியர் சமரசேகர வேறு எந்த தண்டனைகளையும் எதிர்கொள்ளவில்லை. சட்ட மருத்துவ அதிகாரிகள் தமது கடமையை செய்யும் போது நிகழ்த்தியிருக்கும் உண்மையான குற்றச் செயல்கள் தொடர்பாக அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கும் விடயத்தில் கடந்த காலத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் தயக்கம் காட்டி வந்துள்ளது என்ற விடயத்தை மூத்த வழக்கறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். எவ்வாறிருப்பினும், தாஜூதீன் வழக்கு விவரங்களை கையாளும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிலான் இரத்னாயக்க இக்கொலை வழக்கில் இரண்டாவது சந்தேக நபர் என்ற முறையில் சமரசேகர வெகு விரைவில்  வழக்கு விசாரணையை எதிர்கொள்வார் என கொழும்பு மேலதிக மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமித் பெரேரா அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருப்பதுடன் இப்பொழுது அவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவுக்கு எதிரான வழக்கில் ஒரு சாட்சி என்ற முறையில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றார். முன்னைய ஜனாதிபதியின் குடும்பத்தைப் பொறுத்தவரையில் தாஜூதீன் கொலை விசாரணை அவர்களுக்கு மிக நெக்கமான ஒரு விடயமாக இருந்து வருகின்றது. தாஜூதீன் கொலை செய்யப்பட்ட இரவில் அவரை கடத்திச் செல்வதற்காகப் பன்படுத்தப்பட்டதாக குற்றவியல் புலனாய்வுத் துறையினால் நம்பப்படும்  WP KA  0647 இலக்கத் தகட்டைக் கொண்ட டிபென்டர் ரக வாகனம் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவினால் நடத்தப்பட்டு வரும் சிரிலிய சவிய தொண்டு நிறுவனத்திற்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்‌ஷவின் கட்டளையின் பேரில் கொள்ளுப்பிட்டியில் ஒரு கராஜில் வைத்து அந்த வாகனத்துக்கு நீல நிற பெயின்ட் பூசப்பட்டதாகவும், அதன் பின்னர் கறுப்பு நிற பெயின்ட் பூசப்பட்டதாகவும் குற்றவியல் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு அறிக்கையிட்டிருந்தார்கள்.

இந்த விடயம் தொடர்பாக 2018 செப்ரம்பர் மாதம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்ட புலன் விசாரணையாளர்களின் பிரகாரம், டீன் என்று அழைக்கப்பட்ட ஒரு நபர் இந்த டிபென்டர் ரக வாகனத்தின் நிறத்தை மாற்றுமாறு அந்த கறாஜூக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். அவர் யோஷித ராஜபக்‌ஷவினால் நடத்தப்பட்ட தொலைக்காட்சியான Carlton Sports Network இன் சந்தைப்படுத்தல் அதிகாரியாக தொழில் புரந்து வந்தார்.

கொலைச் சம்பவத்தை மூடி மறைத்த குற்றத்திற்காக வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் ராஜபக்‌ஷவுக்கு நெருக்கமான மூத்த பொலிஸ் அதிகாரி

ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தின் போது மூத்த அதிகாரிகளுடன் மிக நெருக்கமான விதத்தில் இணைந்து செயற்பட்டு வந்த முன்னைய உயர் பொலிஸ் அதிகாரியான அநுர சேனாநாயக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றப்பத்திரிகை றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜூதீன் கொலைச் சம்பவத்தை மூடி மறைக்கும் விடயத்தில் அவர் வகித்து வந்த பாத்திரம் தொடர்பான அப்பட்டமான, விரிவான தகவல்களை வழங்குகின்றது.

தாஜூதீன் தனது காரில் உயிரிழந்திருக்கும் விடயம் கண்டுபிடிக்கப்பட்டதனை அடுத்து, அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை, இந்த மரணம் வாகன விபத்தொன்றின் விளைவாக நிகழ்ந்துள்ளதாக முடிவு செய்ததுடன், அதனை அடுத்து இந்த விடயத்தை அப்படியே மூடி மறைத்துவிட்டது. 2015ஆம் ஆண்டில் இந்த வழக்கு குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, அது தொடர்பான விடயங்கள் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்ட பின்னர் தாஜூடீனின் மரணம் ஒரு கொலைச் சம்பவமாக இருந்து வருகின்றது என்பதனை நம்புவதற்கு போதிய சான்றுகள் இருந்து வருவதாக கொழும்பு மேலதிக மாஜிஸ்ட்ரேட் நீதவான் நிஷாந்த பீரிஸ் முடிவுக்கு வந்தார். மூன்று பேர் கொண்ட சட்ட மருத்துவ அதிகாரிகளின் குழு ஒன்றினால் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை நடத்துவதற்கென விளையாட்டு வீரரின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட வேண்டுமென அவர் கட்டளை பிறப்பித்தார்.

விளையாட்டு வீரர் கொலை செய்யப்பட்டுள்ளார் மற்றும் அவ்வாறு நம்புவதற்கு போதியளவில் சாட்சியங்கள் இருந்து வருகின்றன என்பதனை அறிந்திருந்த சேனாநாயக்க, ஒரு ‘விபத்து’ என்ற முறையில் இந்த மரணம் தொடர்பாக விசாரணையை நடத்துமாறும், சந்தேகத்திற்கிடமான கொலைச் சம்பவம் என்ற முறையில் விசாரணை நடத்தத் தேவை இல்லை என்றும் நாராஹேன்பிட்ட பொலிஸாருக்கு கட்டளையிட்டிருந்தார்.

நாராஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா 2016 ஜூன் மாதம் 10ஆம் திகதி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழங்கிய ஒரு வாக்குமூலத்தில் ‘தான்’ முன்னைய சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரினால் வழங்கப்பட்டிருந்த திட்டவட்டமான அறிவுறுத்தல்களின் பிரகாரம் செயற்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

“குறிப்பாக இந்த விசாரணை தொடர்பாக மித மிஞ்சிய அளவில் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியமில்லை என சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எனக்கு அறிவுறுத்தல் வழங்கினார். நான் அவருடைய அறிவுறுத்தல்களை மீறிச் செயற்பட்டிருந்தால் தாஜூதீனுக்கு நேர்ந்த அதே கதி எனக்கும் நேர்ந்திருக்க முடியும். நான் இரண்டு குழந்தைகளின் தந்தை. ஆகவே, எனது பிள்ளைகள் தனது தகப்பனாரை இழப்பதனை நான் விரும்பவில்லை. எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் பிரகாரம் நான் நடந்து கொண்டேன்.” நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலத்தை வழங்கும் பொழுது சுமித் பெரேரா இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், தன்னைச் சந்திப்பதற்கு தாஜூதீனின் தந்தையை அழைத்து வருமாறு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சேனாநாயக்க தன்னிடம் கூறியதாகவும் பொலிஸ் பரிசோதகர் பெரேரா குறிப்பிட்டார்.

“நான் 2012 மே 18ஆம் திகதி அல்லது 19ஆம் திகதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் சேனாநாயக்காவைச் சந்தித்தேன். சம்பவம் நடந்த தினத்தின் போது தாஜூதீன் பயணித்த வாகனம் சென்ற பாதைகள் தொடர்பாக புலன் விசாரணை நடத்துமாறு எனக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மேலும், தன்னைச் சந்திப்பதற்கு தாஜூதீனின் தந்தையை அழைத்து வருமாறும் எனக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. நான் அவ்வாறு செய்தேன்.”

பெரேராவின் சாட்சியின் பிரகாரம் அடுத்த தினம் தாஜூதீனின் தந்தை சேனாநாயக்காவின் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.

தான் சேனாநாயக்கவின் அலுவலகத்திற்குள் பிரவேசித்து, தன்னால் நடத்தப்பட்ட புலன் விசாரணைகள் தொடர்பான விடயங்களை அவரிடம் தெரிவித்ததாகவும், அதற்கு சுமார் மூன்று நிமிடங்கள் மட்டுமே எடுத்ததாகவும் பொலிஸ் பரிசோதர் பெரேரா மேலும் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர், தாஜூதீனின் தந்தை வெளியில் அமர்ந்திருப்பதாக பொலிஸ் பரிசோதகர் பெரேரா சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் சொன்னார்.

“நான் அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, ஏற்கனவே கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் SSP ரணவீர ஆகியோர் இருந்தார்கள். அச்சந்தர்ப்பத்தில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தாஜூதீனின் பணப்பை கிருலப்பனை பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது என்ற விடயத்தை தனக்கு ஏன் தெரிவிக்கவில்லை எனக் கூறி கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை வசைபாடிக் கொண்டிருந்தார்” என தனது வாக்குமூலத்தில் பெரேரா மாஜிஸ்ட்ரேட் நீதவானிடம் தெரிவித்தார். அதன் பின்னர் சேனாநாயக்க தனது அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து, அங்கு அமர்ந்திருந்த தந்தையிடம் உரையாடுவதற்காக சென்றதாகவும் பொலிஸ் பரிசோதகர் பெரேரா தனது சாட்சியத்தில் குறிப்பிடுகின்றார். வஸீம் தாஜூதீனின் தந்தையை அணுகிய அநுர சேனநாயக்க, அவருடைய மகன் ஒரு விபத்தில்  உயிரிழந்திருப்பதாகவும், அது கொலைச் சம்பவமாக இருந்து வரவில்லை என்றும் புலன் விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக அவரிடம் கூறுவது தனக்கு கேட்டதாக சொன்னார்.

தாஜூடீன் கொலைச் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நாராஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியாக இருந்து வந்த இன்பெஸ்க்டர் திஸ்ஸ சரத்சந்திர குற்றவியல் புலன்விசாரணை திணைக்களத்திற்கு வழங்கிய தனது வாக்குமூலத்திலும், அதேபோல மாஜிஸ்ட்ரேட் நீதவான் எதிரில் வழங்கிய வாக்குமூலத்திலும் இந்தச் சம்பவத்தை ஒரு விபத்து மரணம் என்ற விதத்தில் விசாரணை செய்ய வேண்டும் என்றும், ஒரு கொலைச் சம்பவ விசாரணையாக அதனை நடத்த வேண்டாம் எனவும் தனக்கு சேனாநாயக்க தெளிவான விதத்தில்  அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார் எனக் கூறினார்.

“மே 17ஆம் திகதி காலை 6.30 மணி அளவில் சம்பவ இடத்திற்கு நான் வந்த பொழுது, அவ்விடத்தில் நாராஹேன்பிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டேமியன் பெரேரா மற்றும் (குற்றப்பிரிவு) இன்ஸ்பெக்டர் சுமித் பெரேரா ஆகியோரையும் உள்ளடக்கிய விதத்தில் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கிருந்தார்கள்” என சரத்சந்திர கூறினார்.

மேலும், அச்சம்பவ இடத்தில் SSP சஞ்சீவ தர்மரத்தின, SSP சந்தன அத்துகோரள, SSP ரணவீர, கொழும்பு DIG குணவர்த்தன மற்றும் சிரேஷ்ட DIG அநுர சேனநாயக்க ஆகியோரும் அச்சம்பவ இடத்தில் இருந்ததாக சரத்சந்திர மேலும் குறிப்பிட்டார். சேனாநாயக்க ஒரு வெள்ளை நிற டிபென்டர் ஜீப்பில் அந்த இடத்திற்கு வந்ததாகவும், தாஜூதீனின் சடலத்தை பரிசோதனை செய்ததாகவும், அந்த இடத்திலிருந்து வெளியேறிச் செல்வதற்கு முன்னர் அவர் எத்தகைய அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் சாட்சி வாக்குமூலத்தின் பிரகாரம், வீதி விபத்துக்கள் தொடர்பான விசாரணைகள் போக்குவரத்து பிரிவினால் நடத்தப்பட்டு வந்த போதிலும், ஏதோ ஒரு காரணத்திற்காக தாஜூதீனின் மரணம் தொடர்பான விசாரணை, ஒரு மரணத்தை ஏற்படுத்திய விபத்து என்ற விதத்தில் குற்றப்பிரிவினால் நடத்தப்பட்டிருந்தது.

“என்னுடைய சேவைக் காலத்தின் போது, ஒரு விபத்தின் விளைவாக வாகனங்கள் இவ்விதம் தீப் பிடிக்கும் ஒரு சம்பவத்தை இதுவரையில் நான் பார்த்திருக்கவில்லை. அச்சம்பவம் நடந்திருந்தாலும் கூட, அது தொடர்பாக அப்பிரதேசத்தின் போக்குவரத்துப் பிரிவினரே புலன் விசாரணைகளை நடத்தியிருக்க வேண்டும். எவ்வாறிருப்பினும், இக்குற்றம் நிகழ்ந்த இடத்தில் பெரும்பாலான மூத்த அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தார்கள். அது சந்தேகத்தைக் கிளப்பியது” என சரத்சந்திர குறிப்பிட்டார்.

The Thajudeen saga: Murder cover-up trial set to begin in October என்ற தலைப்பில் அநுராங்கி சின்ங் மற்றும் ஆண்யா விபுலசேன எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.