பட மூலம், The Guardian

இருபத்தைந்து வயது யுவதியாகிய நாடியா முராத் 2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசினை பெற்றுக் கொண்டவராவார். யுத்தித்தின் போது பெண்கள் பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றமைக்கு எதிரான அமைப்பின் பங்குதாரராகவே அவர் அப்பரிசினை வென்றார். பாட்டியாகிய எலிஸ் கொடிதுவக்கு கடந்த வாரம் மீளாத்துயிலை பற்றிக் கொண்டார். 1971 ஏப்ரல் போராட்டத்தின் தோல்வியின் பின்னர் விதவைப் பெண்ணாக ஐந்து தசாப்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அது அமைந்தது.

உலகின் தொலைதூர இரு திசைகளில் வாழ்ந்து வந்த இவ்விருவருக்கும் இடையில் எவ்வித தொடர்புகளும் இல்லாதிருந்த போதும் இவ்விரு பெண்களுக்கும் இடையில் ஒரு உறவு அல்லது ஒற்றுமை காணப்பட்டது. அதாவது ஒட்டுமொத்த மானிட வரக்கத்தின் சாபமாகிய யுத்த வன்முறையில் சிக்குண்டவர்கள் என்பதேயாகும்.

 “The last girl” – “கடைசி யுவதி” என்ற தலைப்பில் நாடியாவால் எழுதப்பட்ட அவளது வாழ்க்கை சுயசரிதத்தை நான் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் வாசித்தேன். அடிப்படைவாத இஸ்லாமிய ஐ.எஸ். இராணுவத்தினரால் தமது யாஷிதி எனப்படும் சமூகத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் இனப்படுகொலை செய்தும் இளம் யுவதிகளை பாலியல் அடிமைகளாக சிறைப்படுத்திய அக்கொடூர அனுபவங்களை நாடியா அதில் குறிப்பிட்டுள்ளார்.

நானறிந்த வகையில் எலிஸ் கொடிதுவக்கு பற்றி எழுதப்பட்டுள்ள ஒரே குறிப்பாக இருப்பது தமது வாழ்க்கையின் இறுதிக் காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் தோழர் பியசிறி குணரத்னவினால் எழுதப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்ட “எனது நினைவுக் குறிப்புகள்” எனும் பெறுமதியான புத்தத்தில் மாத்திரமே. மக்கள் விடுதலை முன்னணியை (ஜேவிபி) கட்டியெழுப்பும் ஆரம்பகால அரசியல் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட நால்வருள் இன்று உயிருடன் இருக்கும் ஒரே தோழர் பியசிறி குணரத்ன மட்டுமே.

எலிஸ் கொடிதுவக்கு என்பவர் 1971இல் மக்கள் விடுதலைமுன்னணியின் இரண்டாம் தலைமைத்துவத்தை தாங்கிய விஜேசேன ஜீ வித்தான எனப்படும் சனத் பொரலுகருகெட்டியகே என்பவரது வாழ்க்கைத் துணையாவார். சிங்கராஜ வனாந்திரத்தினூடாக பின்வாங்கிச் சென்ற சனத் உட்பட சிறு குழுவொன்று 1971 ஏப்ரல் மாதம் 24 அல்லது 25 ஆகிய திகதியில் நெலுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொடூரமான சித்தரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர் வெட்டப்பட்ட கிடங்கில் போட்டு புதைக்கப்பட்டனர்.

நாடியா முராத் வட இராக்கின் நிவே மாநிலத்தின் சின்ஜார் எனும் பிரதேசத்தில் வாழ்ந்து வந்தார். மயிலாக இறைவன் வந்தார் என வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த சுமார் ஐந்து இலட்சம் அளவிலான சிறு மக்கள் தொகையைக் கொண்ட அமைதியான யாஷிதி சமூகத்தைச் சார்ந்தவரே இந்த பெண். இஸ்லாமியரல்லாத அனைத்து தரப்பினரையும் கொன்றழிப்பதற்கு சமயத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதென இஸ்லாம் சமயத்தினை வரைவிலக்கணம் செய்யும் ஐ.எஸ். இராணுவத்தினரால் அவளது கிராமம் அடிமைப்படுத்தப்படுகின்றது. அதன் பின்னர் அவளது தாய் உட்பட முதியோர்கள் கொலை செய்யப்பட்ட விதத்தினையும் ஐ.எஸ். அமைப்பினராலும் அதன் தலைமைத்துவ அதிகாரிகளாலும் தாம் உட்பட யாஷிதி இன யுவதிகளை ஒருவருக்கொருவர் வியாபாரம் செய்து இதற்கு முன்னர் கேட்டிறாத வகையிலான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டமை தொடர்பில் நாடியா தமது சுய வசனங்களுடாக எழுதி வெளியிட்டுள்ளார்.

நாடியா முராத்தின் வாழ்க்கை சுயசரிதத்தில் மிகவும் பெறுமதியான சந்தர்ப்பமாக அமைவது அக்கொடூர துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் தமது வாழ்க்கை தொடர்பான எதிர்பார்ப்பினை கைவிடாது கொடூரமான ஐ.எஸ். அமைப்பிடமிருந்து தப்பித்துச் செல்வதற்கும் தமது சகோதரிகள் உட்பட இனத்தின் யுவதிகளை காப்பாற்றுவதற்கு எடுக்கும் முயற்சியானது எம்மால் நம்பவும் முடியாத தைரியமே. ஒரு தடவை தப்பித்துச் செல்ல மேற்கொண்ட முயற்சியின் போது தோல்வியடைந்ததன் பின்னர் அவளுக்கு வழங்கப்பட்ட தண்டனையானது அவளுக்கு பின்னே ஒருவர் ஒருவராக வருகைதந்த ஐ.எஸ். இராணுவ வீரர்களால் பாலியல் ரீதியாக தன்புறுத்தலுக்கு ஆளாக்கியமையே. அப்போது அவளுக்கு வயது இருபத்தி ஒன்றாகும்.

அவள் இவ்வாறு எழுதுகின்றாள்.

“எனது வாழ்க்கையில் எடுத்த மிகவும் கடினமான தீர்மானமாவது (நடந்ததை அவ்வாறே தெரிவிப்பதற்கு) உண்மையாக நடந்து கொள்வதற்கு எடுத்த முடிவாகும். அதேவேளை எனது வாழ்க்கையில் எடுத்த முக்கியமான முடிவும் கூட அதுவாகும்.

இரவாகும் போது அடிமைச் சந்தை ஆரம்பமாகியது. போராளிகள் தமது பதிவை மேற்கொண்டு தயாராகும் ஓசை கீழ்தளத்திலிருந்து கேட்கக் கூடியதாக இருந்தது. முதலாவது ஆண் அறைக்குள் நுழைந்த உடனே அனைத்து யுவதிகளும் அடித்தொண்டையில் கூக்குரலிட ஆரம்பித்தனர். அது சரியாக வெடிப்பொன்று நிகழ்ந்ததற்கு சமமானதொன்றாகும். ஒருவர் மீது ஒருவர் வீழ்ந்து சத்தி எடுத்தவாறு காயமடைந்தவர்களைப் போல நாம் மரண ஓலமிட்டோம். ஆயினும், அவ்வகையான எந்தவொரு செயற்பாட்டினாலும் போராளிகள் பின்வாங்கவில்லை. நாங்கள் அழுது மன்றாடிய வேளையில் அவர்கள் எம்மை முறைத்துப் பார்த்தவாறு சுற்றி வந்தனர். “உனக்கு என்ன வயது?” எனக் கேட்டவாறு தலைமயிரையும் முகத்தையும் தடவி அவர்கள் மிகவும் வடிவானவள் எனக் கருதிய யுவதிகளிடம் முதலில் கவரப்பட்டு சென்றனர். “இவர்கள் கன்னிப் பெண்கள் தானே?” அவர்கள் பாதுகாவலனை வினவினர். “இல்லையென்றால், சத்தியமாக” என அவன் பதிலளித்தது என்னவோ தமது உற்பத்தி தொடர்பில் பெருமைப்படும் ஒரு வியாபார நிலைய உரிமையாளரைப் போலவே. “தொடர்ந்து போராளிகள் அவர்களது விரல்களை எமது மார்புகள் மற்றும் தொடைகளுக்குள் விட்டு தமது விருப்பம் போல தடவிச் சென்றனர். அதாவது நாங்கள் காட்டு விலங்குகள் என்று நினைத்து.”

மனித இனத்திற்கே தாங்க முடியாதென உணரும் வகையிலான அளவிற்கு இவ்வனைத்து துன்பங்களையும் தாங்கி தமது ஆத்ம நம்பிக்கையுடன் தொலைதூர நோக்கத்தினைக் கைவிடாத இந்த யுவதி இன்று பெண்கள் வன்புணர்வுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் பாலியல் நல்லெண்ண விசேட தூதுவராக பணியாற்றுகின்றார்.

எலிஸ் கொடிதுவக்கும் கடுமையான நிலைமைகளின் கீழ் தமது வாழ்க்கை தொடர்பான நம்பிக்கையை கைவிடாத ஒரு பெண்ணாக இருந்தார். 1971 மக்கள் விடுதலை முன்னணியின் உயர் தலைமைத்துவ குழுவில் உறுப்பினராக திருமணம் முடித்திருந்த ஒரே நபர் சனத் மாத்திரமே. அவருக்கும் கொடிதுவக்குவிற்கும் மூன்று புதல்வியரும் ஒரு புதல்வனும் இருந்தனர்.

அவளைப் பற்றி பியசிறி குணரத்ன இவ்வாறு விபரிக்கின்றார்.

“போராட்டக் களத்தினுள் சனத் தோழரால் தலைமைத்துவத்தினை ஏற்று செயற்படக்கூடிய ஆற்றல் கிடைக்கக் காரணம் அவரது மனைவியாகிய எலிஸ் கொடிதுவக்கு சகோதரியிடமிருந்து கிடைத்த உச்ச கட்ட ஒத்துழைப்பே ஆகும். கிடைத்த ஒரே வருமான வழியையும் தொலைத்துவிட்டு வீட்டு நடவடிக்கைகள் மற்றும் பிள்ளைகள் நால்வரதும் கல்வி நடவடிக்கைகள் வீழ்ச்சியடைய இடம் கொடுக்காமலும் சனத் தோழரை சந்திக்க வருகின்ற தோழர்களுக்கும் சகோதரிகளுக்கும் அவசியமானவற்றை முடிந்தளவு நிறைவேற்றி, அவர்களையும் ஊக்கப்படுத்தி சனத் தோழரையும் ஊக்கப்படுத்தியது அளப்பரியது.”

நாம் அவரை கொடி அக்கா என்றே அழைத்தோம். அவருக்கு நான் தம்பி ரஞ்சி ஆனேன். அது பெரும் பொருள் நிறைந்த ஒரு பெயராகும். முகத்தில் புன்முறுவலின்றி ஒருநாள் கூட அந்தப் பெயரைக் கொண்டு அவர் அழைத்ததில்லை.​அவ்வாறான ஆடம்பரமில்லாத வஞ்சனையில்லாத சிரிப்பைப் போன்ற பரிசு வேறெங்கும் உளதோ?

சனத், ஆசிரியரான எனது தந்தையின் மாணவனாக இருந்ததோடு பிற்காலத்தில் எனது அரசியல் ஆசானாக அவரே மாறிவிட்டார். யுத்தமானது உயிர்களை எவ்வித சாட்சியுமின்றியே அழித்துவிடும். சனத் கொல்லப்பட்டார் என நாமறிந்தாலும் கண்களால் கண்ட சாட்சி என எதுவுமில்லை. அவரை கொலை செய்த உப பொலிஸ் பரிசோதகர் பிற்காலத்தில் இலங்கை சுதந்திர கட்சியின் அரசியல்வாதியாக மாறிவிட்டார்.

இருந்தபோதிலும் கொடி அக்கா சனத் இறந்துவிட்டதனை சில காலம் வரையிலும் நம்பவில்லை. 1977 இறுதிக் காலப்பகுதியில் சிறையிலிருந்து விடுதலையாகிய நான் ஹிக்கடுவை, பன்விலயில் அமைந்துள்ள அவர்களது வீட்டுக்கு வந்து போவதனை பழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போது இரண்டு பிள்ளைகளுடனும் புரட்சியின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட எனது தாய்க்கும் கொடி அக்காவிற்கும் இடையில் உறவினராகும் வகையிலான தொடர்புகள் வேரூன்றியிருந்தன.

இன்று வடக்கில் தாய்மார் தமது பிள்ளைகள் மீண்டும் திரும்பி வருவார்கள் என பத்து வருடங்களுக்கு பிறகும் காத்திருப்பதைப் போன்றே கொடி அக்காவும் சனத் மீண்டும் வருவார் என நம்பிக்கை வைத்திருந்தார். சனத் உயிருடன் தான் இருக்கின்றார் என ஜோதிடக்காரர்கள் பலரிடமிருந்து அவள் பெற்ற தகவல்களின் அடிப்படையில் நான் அவருடன் பதுளை மற்றும் அம்பாறை ஆகிய இடங்களுக்கு இரண்டு தடவை சென்றது அவரை தனிமைப்படுத்த முடியாத காரணத்தினாலாகும். பிறகு அவர் தன்னை மாற்றிக் கொண்டார். தமது பிள்ளைகளை வளர்த்தெடுப்பதே தமது வாழ்க்கையின் மகிழ்ச்சியான வியடம் என்பதனைப் புரிந்து கொண்டார்.

அரசியலில் விசேடமாக நாம் வலது சாரிகள் என்று கூறுகின்ற பரந்துபட்ட அரசியலானது உள்ளக ரீதியல் மிகவும் கொடுமையானது. அதில் மனித பெறுமதியானது கருத்துக்களுக்குள் மாத்திரமே உள்ளது. விஜேவீரவின் சாம்பல் தட்டை (கிண்ணத்தை) கொண்டு செல்ல ஆர்வம் காட்டாத மக்கள் விடுதலை முன்னணி, தமது இரண்டாவது தலைவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருக்கின்றனரா இல்லையா என்பதனைக் கூட அறிய முயற்சிக்கவில்லை. கட்சியோ அல்லது அமைப்போ இல்லையெனில் அந்த மனிதன்  வெறுமனே. அவனோ அவளோ அதற்கு மேலும் அறியாத ஒரு நபரே. இடது சாரி அரசியலுக்கு நட்பு என்ற மனித பெறுமதி புரியாது.

எலிஸ் கொடிதுவக்குவின் பெறுமதி என்பது அதன் தவறான பண்புகளுக்கு பலிக்கடாவாகினும் அதற்கு அடிபணியாது மனிதாபிமானத்தையும் கருணையையும் நட்பினையும் பாதுகாத்துக் கொள்வதில் வெற்றி கொண்டார். அவர் சுகமான நித்திரையில் ஆழ்ந்துள்ளார்.

நாடியா முராத் எமக்கு கூறுகின்ற கதையிலும் அதே பெறுமதிகள் உள்ளன. அதாவது மற்றையவர் தொடர்பில் கருணை காட்டுவதன் பெறுமதியையேயாகும். அன்றாடம் அடிப்படைவாதிகளது கொடூரமான பாலியல் வன்புணர்வுகளுக்கு ஆளாகிய வண்ணம் இருந்த போதும் அவள் தம்மைப் பற்றி மாத்திரம் சிந்திக்காது தமது சகோதரிகளையும் தோழிகளையும் மீட்பதற்காக எவ்வாறு தப்பிச் செல்வதென நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சிந்தித்தாள்.

அவளது அனுபவத்தை இவ்வாறு வரையறுத்துக் கூறுகின்றாள்,

“சிஞ்ஜார் கிராமத்தைத் தாக்கி யுவதிகளை பாலியல் அடிமைகளாக வைத்திருக்கும் பேராசையானது இராணுவத்தினரால் சுயமாக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமல்ல. அது ஐ.எஸ். இஸ்லாமிய அரசால் திட்டமிடப்பட்டதொன்றாகும். “சபாயா” (பாலியல் அடிமை) என்ற சமய எண்ணக்கருவை அவர்கள் இராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தும் ஒன்றாகவே பயன்படுத்தினர். புதிய இராணுவ வீரர்களை இணைத்துக் கொள்ளும் ஓர் உத்தியாகவே. டபீக் எனப்படும் அவர்களது வர்ணமயமான இதழில் அது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், அது ஐ.எஸ். நினைத்திருந்த விதத்தில் அது அவர்களது கண்டுபிடிப்பல்ல. பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தும் செயற்பாடானது வரலாற்றின் அனைத்து யுத்தங்களிலிலும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.”

1971 பிரேமவதி மனம்பேரி தொடக்கம் 2019 சோபனா தர்மராஜா எனப்படும் இசைப்பிரியா வரையில் நாமும் கூட அந்த அந்த அனுபவத்தை அறியாதிருப்போமா? 1971 தொடக்கம் இது வரையில் இந்த நாட்டிலும் கூட பெண் பாலியல் துன்புறுத்தல்கள் யுத்தத்திலும் சரி அரசியலிலும் சரி ஓர் ஆயுதமே.

நாடியா முராத் தமது கண்ணீரைத் துடைத்து இன்று எழுந்து நிற்பது யுத்தத்தின் கொடூரமான ஆயுதமொன்றுக்கு எதிராகவே. அவள் எமது காலத்தின் வீராங்கனையே.

சுனந்த தேசப்பிரிய எழுதி ‘அனித்தா’ பத்திரிகையில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம்