படம் | Sampath Samarakoon Photo, Vikalpa

அனுராதபுரத்தைச் சேர்ந்த மயூரி இனோகா ஜயசேன மூன்று பிள்ளைகளின் தாயாராவார். 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்ட இவர் பின்னர் கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் விடப்பட்டிருந்தார். காணாமல்போயுள்ள கணவர் மதுஷ்கவை தேடிக்கண்டுபிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை தான் இந்த சூழ்நிலைக்கு அவர் முகம்கொடுத்துள்ளார்.

அநுராதபுரம் புதிய பஸ் நிறுத்தும் இடத்தில் பழக்கடை ஒன்றை நடத்தி வந்த மதுஷ்க ஹரிஸ் த சில்வா 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி கடத்திச் செல்லப்படுகிறார். நண்பர்கள் இருவருடன் முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதோரால் மூவரும் கடத்தப்படுகின்றனர். இருப்பினும் பின்னர் நண்பர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட, அன்றிருலிருந்து இன்று வரை மதுஷ்க தொடர்பில் எதுவிதத் தகவலும் இல்லை.

மதுஷ்கவை தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி மயூரி உட்பட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கடந்த காலங்களில் பல போராட்டங்களை நடத்தியிருந்தனர். அனுராதபுரம் நீதிமன்றம், பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் பாதையில் இரு பிள்ளைகளுடன் மயூரி அமர்ந்தவாறு தனது கணவரை மீட்டுத்தருமாறு போராடினார். இருப்பினும், ஆசியாவின் ஆச்சர்யமான இந்த நாட்டினது பெருமையுடைய தந்தையின் நீதிமன்றமோ, பொலிஸோ மயூரியை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்ததே தவிர அவரிடம் எதுவும் கேட்கவில்லை. கடந்த காலம் இந்த இரு துறைகள் அந்தளவுக்கு மோசமானதொரு நிலையில் இருந்ததற்கு இதுவும் ஓர் உதாரணமாகும்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னர் மயூரிக்கும் அவரோடு இணைந்து போராடியவர்களுக்கும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்புடன் 2015 மார்ச் மாதம் தனது பிள்ளைகளுடன் நேரடியாக ஜனாதிபதிக்கு தனது கணவர் குறித்த விடயத்தை தெரிவிக்க ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் கணவரின் படத்துடன் அமர்ந்திருந்தார். அதன் பின்னர் இதுவரை ஜனாதிபதி மற்றும் பிரதமர் காரியாலயத்திலிருந்து கடிதங்கள் வருகின்ற போதிலும், தனது கணவர் தொடர்பாக முக்கியமான விடயம் எதுவும் அதில் இல்லை என்று மயூரி கூறுகிறார்.

“மனுஷ்கவுக்கு நிகழ்ந்த அநியாயத்துக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றே நான் ஜனாதிபதி காரியாலயம் முன்பாக அமர்ந்திருந்தேன். காலத்தை வீணடிக்கும் பதிலே எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. கடிதங்கள் ஜனாதிபதி காரியாலயத்திலிருந்தும் பிரதமர் காரியாலயத்திலிருந்தும் வந்துகொண்டிருக்கின்றன. அந்தக் கடிதங்களில், எனக்கு வீடொன்று தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்கு இருப்பதற்கு வீடொன்று இல்லை என்றால் ஒரு மரத்தின் கீழ் தங்கிவிடுவேன், உணவு இல்லையென்றால் பட்டினிக் கிடப்பேன், நான் எனது கணவரைத் தேடித்தருமாறுதான் கேட்கிறேன்” என்று கூறுகிறார் மயூரி.

மயூரியின் கணவர் கடத்தப்பட்டு இன்றோடு 1010 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்றும் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் தனது கணவர் காணாமல்போனமைக்கு நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட, தாஜுதீன் தொடர்பாக விசாரணை நடத்திவரும் இந்த அரசாங்கம், தன்னுடைய கணவர் விடயத்தில் மட்டும் ஏன் பாராமுகமாக செயற்படுகிறது என்று கேள்வி எழுப்புகிறார் மயூரி.

மயூரியுடன் எமது சகோதர இணையதளமான விகல்ப மேற்கொண்ட நேர்க்காணல் இங்கு தரப்படுள்ளது.