1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை மீது இந்திய அமைதிகாக்கும் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலால் 60இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவர்கள், தாதியர்கள், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்காக போராடிக்கொண்டிருந்தவர்கள், நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் என 60க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். நடத்தப்பட்ட கோரப் படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி நினைவுகூரப்பட்டது.

அண்மையில் – கடந்த 2015 ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி ஆப்கானிஸ்தான், குண்டூஸ் மாகாணத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை மீது அமெரிக்க வான் தாக்குதலால் 13 வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டார்கள். இதுவொரு போர்க்குற்றம் என எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு (Doctors Without Borders) தெரிவித்திருந்ததோடு, ஐ.நாவும் இந்த அமைப்புக்கு ஆதரவுக் குரல் விடுத்திருந்தது. அதன் பின்னர் பல மட்டத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன.

ஆனால், திட்டமிட்டு வேண்டுமென்றே அப்பாவி தமிழர்களைக் கொன்றொழித்த இந்தியப் படையினர் தொடர்பாக இதுவரை எதுவித விசாரணையும் நடத்தப்படவில்லை. இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுவரும் ஆணைக்குழுக்களாலும் இதுபற்றி விசாரிக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை படுகொலை சாட்சியங்களை தேடினாலும் கிடைக்காத நிலை. நேரில் கண்டவர்களில் அநேகமானோர் இப்போது உயிரோடும் இல்லை.

இந்த நிலையில், ‘மாற்றம்’ தளத்தின் கட்டுரையாளரும் ஊடகவியாளருமான ஜெரா யாழ். வைத்தியசாலைப் படுகொலையை நேரில் கண்ட சாட்சியங்களைக் கொண்டு Tears of Gandhi என்ற ஆவணப் படத்தை இயக்கியுள்ளார்.​

இந்தியாவுக்கு மிகப்பெரிய ஜனநாயக தேசம் என்ற விளம்பரம் உண்டு. அந்த விளம்பரத் தட்டியின் நிமிர்வுக்காகக் காவுகொள்ளப்பட்டவற்றுள் ஒன்றைத்தான் Tears of Gandhi தன் கதையாகக் கொண்டிருக்கின்றது.

போர் சில இடங்களைத் தன் இலக்கிலிருந்து தவிர்த்துக்கொள்கிறது. மருத்துவமனைகள், பாடசாலைகள், மதத் தலங்கள் போன்றவைதான் போர் தவிர்ப்பு இடங்கள். ஆனால், இலங்கையில் நடந்த போர், அதனை ஒருபோதும் கவனத்தில் கொள்ளவில்லை. இலங்கை போரியலின் முதன்மையான அம்சம் எதுவெனில், அப்பாவி மக்கள் தம் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளவென ஒதுங்கிய இடங்களைத் தேடித்தேடி அழித்தமைதான். அதன் முதல் தொடக்கமாகத்தான், யாழ். போதனா வைத்தியசாலை மீது இந்திய அமைதி காக்கும் படையினர் நடத்திய குரூரமான தாக்குதல் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது.

இந்தச் சம்பவம் தெளிவான சாட்சிகளுடன் பதிவுசெய்யப்படாத குறை காணப்பட்டது. அதனை, நேரில் கண்ட சாட்சியங்களுடன் பதிவு செய்து, சந்ததி கடத்தும் முயற்சிதான் Tears of Gandhi.