படம் | AP Photo/ Eranga Jayawardena, CTV NEWS

மஹிந்த மீண்டும் வரப்போகிறார் என்பதுதான் இன்றைய நிலையில் தெற்கின் சூடான அரசியல் தகவல். ஆனால், அவர் எந்தக் கட்சியின் வழியாக வருவார் என்பது தொடர்பில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரை உறுதியான தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை. ஆனால். மஹிந்த அரசியலில் இருந்து சாதாரணமாக ஒதுங்கக் கூடிய ஒருவராக தெரியவில்லை. ஒதுங்கக் கூடிய ஒருவர் என்றால் அவர் தேர்தலில் தோல்வியடைந்ததும் முன்னைய ஜனாதிபதிகள் போன்று அமைதியாக இருந்திருப்பார். மஹிந்தவை முன்னைய ஜனாதிபதிகள் போன்று சாதாரணமாக ஒதுங்கிச் செல்லாதவாறு தடுக்கும் காரணிகள் என்ன அல்லது இன்னொரு வகையில் அவ்வாறு ஒதுங்கிச் செல்லாது மீண்டும் தன்னால் அரசியலில் பிரகாசிக்க முடியும் என்று மஹிந்த எண்ணுவதற்கான காரணங்கள் என்ன?

மஹிந்த கணிசமான காலத்திற்கு இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்க முடியுமென்பதில் ஜயமற்ற நிலைப்பாட்டை கொண்டிருந்த ஒருவர். அது எவ்வளவு காலம் என்பதையும் தன்னால் தீர்மானிக்க முடியுமென்று நம்பியிருந்தவர். அந்த அடிப்படையில்தான் தான் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பதற்கு ஏற்றவகையில் அரசியல் அமைப்பில் திருத்தங்களை உள் நுழைத்தார். மஹிந்த அவ்வாறு செய்தபோது இன்று நல்லாட்சிக்கான அரசு ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக பேசிவரும் அனைவரும் மஹிந்தவின் எண்ணத்திற்கு குறுக்காக நிற்கவில்லை. இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால உட்பட அனைவரும் மஹிந்தவின் விருப்பங்களுக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவுமே இருந்தனர். இவ்வாறானதொரு சூழலில்தான் தன்னுடைய சாத்திரக்காரனின் ஆலோசனையுடன், இரண்டு வருடங்களுக்கு முன்னரே மஹிந்த தேர்தலை அறிவித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னதாக தேர்தல் இடம்பெற்றால் வெற்றி நிச்சயமானதென சாத்திரகாரன் கூறியதிலிருந்து பின்னர் இடம்பெற்றவை அனைத்துமே தன்னை தோற்கடிப்பதற்கான இந்திய மற்றும் மேற்குலக உளவுத்துறைகளின் சதி முயற்சியென்பதே மஹிந்தவின் திடமாக வாதமாக இருக்கிறது.

பாகிஸ்தானிய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே மஹிந்த முதன்முதலாக இவ்வாறானதொரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து சீன ஊடகமொன்றிற்கும் அதே அபிப்பிராயத்தை தெரிவித்திருந்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வேளையில், இந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், மிகவும் வெளிப்படையாகவே இந்திய உளவுத் துறையை குற்றஞ்சாட்டியிருந்தார். எனவே, மஹிந்தவை பொறுத்தவரையில் தான் தோற்கவில்லை, மாறாக தோற்கடிக்கப்பட்டேன் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார். மஹிந்தவின் உறுதிக்கு வலுச் சேர்க்கும் வகையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளும் அமைந்திருக்கின்றன. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் மஹிந்தவிற்கே வாக்களித்திருந்தனர். எனவே, மஹிந்தவின் பார்வையில் தன்னை சிங்கள மக்கள் வெறுக்கவில்லை. மாறாக, சிறுபான்மை மக்களான தமிழர்களும் முஸ்லிம்களும் தனக்கு எதிராக வாக்களித்ததன் காரணத்தினால்தான் தான் தோற்க நேர்ந்திருக்கிறது. எனவே, சிங்கள மக்களின் ஆதரவுடன் தன்னால் மீண்டும் அரசியலுக்குள் வலுவாக காலூன்ற முடியுமென்றே மஹிந்த உறுதியாக நம்புகிறார். மஹிந்தவின் நம்பிக்கைக்கு ஆதரவாக பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பக்கபலமாக இருக்கின்றனர். குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அவ்வாறு ஆதரவாக இருக்கின்றனர்? இதற்கும் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் மஹிந்தவிற்கு ஆதரவாக வாக்களித்தமையே காரணமாகும். தனித்து சிங்கள மக்களின் வாக்குகளை மட்டுமே தங்களின் வெற்றிக்காக எதிர்பார்க்கின்ற தெற்கின் அரசியல்வாதிகள் மஹிந்தவுடன் இருப்பதன் மூலம்தான் தங்களின் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமென்று கருதுகின்றனர். இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படும் வரை அவர்களின் மஹிந்த ஆதரவு மாறப் போவதில்லை. ஆனால், மஹிந்தவுடன் கைகோர்த்திருக்கும் அனைவருமே வெறும் தேர்தல் வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு நிற்கவில்லை. மாறாக கொள்கை நிலைப்பட்டு நிற்பவர்களும் இருக்கின்றனர். மஹிந்த சிங்கள தேசிய வாதத்திற்கு புத்தெழுச்சியூட்டிய ஒருவர். இதனை சிலர் சிங்கள தேசிய வாதத்தின் மூன்றாவது எழுச்சியென வர்ணிக்கின்றனர். அனாகரிக தர்மபால பின்னர் எஸ்.டபிள்யு.ஆர். பண்டாரநாயக்க தற்போது கடந்த முப்பது வருடங்களாக சிங்கள தேசியவாத்திற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த பிரபாகரனை வீழ்த்தியதால் சிங்கள தேசிய வாதத்தின் மூன்றாவது எழுச்சிக்கு வித்திட்டவராக மஹிந்தவை அவ்வாறானவர்கள் கொண்டாடுகின்றனர். எனவே, அவ்வாறானவர்களுக்கு மஹிந்தவின் வீழ்ச்சி ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று. மேலும் அவர்களும் இந்திய, மேற்குலக சக்திகள் தங்களின் தேவைக்காக தங்களின் தலைவரை தோற்கடித்துவிட்டதாகவே கருதுகின்றனர். அவ்வாறானவர்கள் மஹிந்தவுடன் இணைந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென்பதில் குறியாக இருக்கின்றனர்.

மஹிந்த எதிர்பார்ப்பது போன்றும், மஹிந்தவிற்கு பக்கபலமாக நிற்பவர்கள் எண்ணுவது போன்றும் மஹிந்தவின் மீள்வருகை இலகுவான ஒன்றா? கடந்த தேர்தல் முடிவுகளின் படி நோக்கினால் பெரும்பாலான சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்த தொடர்ந்தும் மதிக்கப்படும் ஒருவராகவே இருக்கின்றார். இந்த நிலையில் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாவிட்டாலும் கணிசமான ஆசனங்களை பெறக் கூடிய வாய்பிருக்கிறது. மஹிந்த தோதலில் போட்டியிட்டால் அவர் தலைமையிலான அணியினர் குறைந்தது முப்பது ஆசனங்களையாவது கைப்பற்றக் கூடிய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் தேசிய அரசு அமையுமிடத்து, மஹிந்தவே எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார். மஹிந்தவின் ஆதரவாளர்கள் எண்ணுவது போன்று நிகழ்ந்தால் எதிர்க்கட்சியில் இருந்தவாறு, ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் மஹிந்த ஈடுபடக் கூடும். அவர் ஆட்சியை கைப்பற்றுகின்றராரோ இல்லையோ, ஆனால், அவரது மீள்வருகை தெற்கில் அரசிற்கு எதிரான ஒரு கலகக் குரலாக இருந்துகொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், மஹிந்தவின் மீள் வருகை தொடர்பில் இப்படியான கணிப்புக்கள் நிலவுகின்ற அதேவேளை, மஹிந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர் நிலையில் நின்றால்தான் ஜக்கிய தேசியக் கட்சி பலத்துடன் அரசை அமைக்க முடியும். ஏனெனில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மஹிந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவாக செயற்படுவாராயின், ரணிலின் பிரதமர் கனவு கலைந்துவிடுவதுடன் ரணிலின் அரசியல் எதிர்காலமும் சூனியமாகிவிடும். எனவே, ரணிலின் தேவையில் நின்று நோக்கினால், மஹிந்த தனித்து போட்டியிடுவது ரணிலுக்கு இலாபகரமான ஒன்றாகும். இதனை கருத்தில் கொண்டே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில மூத்த உறுப்பினர்கள் மஹிந்தவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கும் இடையில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த அடிப்படையில் ஒரு சந்திப்பும் இடம்பெற்றது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போன்று மஹிந்த – மைத்திரிக்கு இடையில் சுமூகமான உறவை கட்டியெழுப்ப முடியவில்லை. சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானிய செய்தி சேவையிடம் கருத்து தெரிவித்திருந்த மஹிந்தவின் பேச்சாளர் மஹிந்த, பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி என்றும், ஆனால், எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மஹிந்தவின் மீள் வருகையை எவ்வாறு தடுக்க முடியுமென்னும் நகர்வுகளும் இடம்பெற்றுவருகின்றன. மஹிந்த அடிக்கடி குற்றஞ்சாட்டுவது போன்று, அவருடைய தோல்வியின் பின்னணியில் இந்திய மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இருந்திருப்பது உண்மையெனின் மஹிந்தவின் மீள் வருகையை அவர்கள் அவ்வளவு இலகுவாக அனுமதித்துவிடுவார்களா என்னும் கேள்வியும் எழுகிறது. தற்போதைய சூழலில் மஹிந்தவின் மீள் வருகையை தடுப்பதற்கு அரசின் முன்னாலுள்ள ஒரேயொரு தடுப்பரன், மஹிந்தவை முன்னைய வழக்குகளில் சிக்கவைத்து முடக்குவது ஒன்றுதான். ஆனால், அதனை மிகக் குறுகிய காலத்தில் அரசால் செய்ய முடியுமா? அவ்வாறு செய்தாலும் அது சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும்? ஒருவேளை பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது? இப்படியான பல கேள்விகளுக்கான பதில்களை காணாமல், அரசு மஹிந்தவிற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஆனால், மஹிந்த அரசில் நிகழ்ந்த ஊழல் தொடர்பில் விசாரிப்பதற்கென அமெரிக்க அதிகாரிகள் இலங்கை வந்திருப்பதானது, அப்படியான சில விடயங்களிலும் அரசு கவனம் செலுத்தியிருக்கிறதா என்னும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி கூறிச் சென்றிருக்கும் ஒரு விடயம் இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது. அதாவது, அரசு கடுமையான நடவடிக்கைகள் எதனையும் எடுக்க அச்சப்பட வேண்டியதில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் அமெரிக்கா எதனை உணர்த்த முற்படுகிறது? இவ்வாறானதொரு கூற்றின் பின்னர்தான் மேற்படி அமெரிக்க அதிகாரிகள் குழுவும் இலங்கை வந்திருக்கிறது. எனவே, மஹிந்தவின் மீள் வருகையை தடுப்பதற்கு அவரை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்துவதே ஒரே வழியாகும். அந்த வழியால்தான் அரசு தற்போது பயணிக்க முற்படுகிறதா? ஆனால், இவ்வாறு விடயங்களை நோக்கினாலும் அரசியல் நிலைமைகள் எவ்வாறும் மாற்றமடையலாம். ஏனெனில், மிகக் குறுகிய காலத்தில் மஹிந்தவை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே! ஆனால், ஒன்று மட்டும் உண்மை, மஹிந்த அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சி ஒதுங்கிவிடக் கூடிய ஒரு நபரல்ல. எனவே, அவர் இறுதிவரை களத்தில் நிற்கவே முயற்சிப்பார். ஒருவேளை, அவர் இன்றைய அரசிடம் சரணைடைந்தாலும் அவரது சரணடைவும் அவரை காப்பாற்றப் போவதில்லை.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.