சுன்னாகம்; தகிக்கும் தண்ணீர் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டதன் நோக்கம் என்ன? இதனை உருவாக்குவதற்கு இரண்டு நோக்கங்கள்தான் இருந்தன.

  1. சாதாரணர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்துதல்
  2. இந்த அழிவை சக நேரத்தில் பதிவுசெய்தல்

சுன்னாகம் பகுதிகளில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலந்தமை தொடர்பில் பெருங்குழப்பம் ஒன்று மக்கள் மத்தியில் இருந்தது, அது இன்றும் அப்படியே இருக்கிறது. காரணம் ஊடகங்களும், அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் இந்த விடயத்தை கையாளும் முறைதான். எப்போதும் அறிக்கைகளின் படி இயங்கக் கற்றுப் பழகிய தமிழர்கள் இந்தவிடயத்திலும் அறிக்கையை எதிர்பார்த்தார்கள். ஆனால், வெளியான அறிக்கைகளோ குழப்பத்தை ஆழ்த்தின.

இன்னொரு விடயம், பல்வேறு தரப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளும் சுன்னாகம் கிணற்று நீரில் ஒயில் உண்டு என நிரூபித்த பின்னரும், அதனை பருகுவதால், நாளாந்த தேவைகளுக்குப் பயன்படுத்துவதால் நீண்டகால நோக்கில் ஏற்படப் போகும் விளைவுகள் குறித்தும் கவனமின்றி இருந்தனர். குழந்தைகள் அந்த நீரை பருகுவதால் ஏற்படப்போகும் உடலியல் விளைவுகள் குறித்து போதுமான அக்கறை செலுத்தப்படவில்லை.

மேலும், இந்த விடயத்தை சர்வதேச ரீதியான கவனம் பெறும் ஒன்றாக மாற்றவேண்டும் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டது. ஒரு விடயத்தை எழுதி விளங்கவைப்பதற்குப் பதிலாக, காட்சியாக, பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியாக உலகின் முன்வைக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவும் இதனைக் கொள்ளவேண்டும். இவ்வாறு பல்வேறுபட்ட தளங்களில் தாக்கத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையிலேயே இந்தப் படத்தின் உருவாக்கம் நிகழ்ந்தது.

இதுமாதிரியான ஒரு அனர்த்தம் ஆசிய நாடுகளுக்கு புதிது. அதாவது, நிலத்தடி நீருக்குள் கழிவுப் பொருள்கள் கலத்தல் என்கிற விடயமே ஆச்சரியமான ஒன்றாக நோக்கப்பட்டது. ஆனால், இது குறித்த தேடலை செய்யும்போதுதான் நைஜீரியாவிலும் இப்படியொரு பிரச்சினை முன்பொரு காலத்தில் நடந்தமையையும், கிரேக்க நாகரீகம் சிதைந்து அழிந்து போனமைக்கு இப்படியான ஒரு பிரச்சினை காரணமாக இருந்தததையும் அறிய முடிந்தது. எனவே, இதனை பலரும் அறியத் தொடங்குபோது இதற்கான தீர்வு குறித்த உரையாடல்கள் அதிகமாகும். அது மாற்று வழிமுறைகள் குறித்த செயற்பாடுகளை துரிதமாக்கும் எனவும் நம்பப்பட்டது.

இரண்டாவது நோக்கமான, மனிதப் பேரழிவொன்றை சக நேரத்தில் பதிவிடும் முயற்சியும் இதன் வழியில் மேற்கொள்ளப்பட்டது. உலகில் தமிழர்கள் அதிகளவான அழிவுகளை சந்தித்திருக்கின்றார்கள். போரழிவுகள் பற்றி ஏதாவது ஒரு வகையில் பதிவுகள் இருந்தாலும் இயற்கைசார்ந்த பேரழிவுகள் குறித்த பதிவுகள் எங்கும் ஒழுங்காக இடம்பெறவில்லை. உதாரணமாக, சுனாமி பேரழிவுக்குப் பி;ன்னரான தமிழர் மனவியல் குறித்த பதிவுகள் எங்கும் இடம்பெறவில்லை. எனவேதான் சுன்னாக சுற்றுசூழல் பேரிடரை நேரடி சாட்சியங்களுடனான பதிவாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இந்த இரண்டு நோக்கங்களையும் அடைவதற்காக, சில விடயங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டிய தேவையும் ஏற்பட்டது. காரணம், இதில் பேசப்படும் விடயம் தீவிரமான, ஆழமான, நீண்டகால நோக்கிலான அரசியல் ஆனபோதிலும், அதனை படத்தின் எந்தப் பாகத்திலும் பிரதிபலித்துவிட முடியாது. முழுக்க முழுக்க இதுவொரு சுற்றுச்சூழல் சார்ந்த அழிவுப் பிரச்சினையாகவே படம் முழுவதும் பேச சிந்திக்கப்பட்டது. அதற்காகவே பல்வேறு தடவைகள் எழுத்துருவை மாற்றியமைக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஆவணப்படம் என்பது ஆராய்ச்சிகளின் முடிவாக வரைவுபடுத்தப்பட்டிருப்பதால் இதனையும், ஒரு ஆராய்ச்சியாகவே நிஜப்படுத்தப்பட்டது.

ஜெரா

“சுன்னாகம்; தகிக்கும் தண்ணீர்” ஆவணப்படத்தின் இயக்குனர்

ஆவணப்படத்தை கீழே பாரக்கலாம்.