“மைத்திரிபால சிறிசேனவால் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்கு 100 நாட்கள் போதுமானதாகும். அதற்கும் கூடுதலாக நாட்கள் போகலாம். ‘100 நாட்கள்’ என்பது தேர்தல் மேடையில் மார்கட் செய்வதற்கு இலகுவாக இருக்கும் என்பதால் அவ்வாறு எதிரணி குறிப்பிட்டிருக்கலாம். இங்கு விடயம் இதுவல்ல. நிறைவேற்று அதிகார நீக்கமே. 100 நாட்களுக்கும் குறைவாக அல்லது 100 நாட்கள் கடந்தாவது நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படவேண்டும். இதுதான் முக்கிய விடயமே அன்றி, 100 நாட்கள் அல்ல” என்றார் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவா.

“நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதற்கான ஆவணங்கள் தயாரிப்பதற்கு காலவிரயம் ஏற்படாது. நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவே காலம் எடுக்கும்” என அவர் மேலும் கூறினார்.

தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டவுடன் நூறு நாட்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவேன் என ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை தொடர்பாக கேட்ட கேள்விக்கே சட்டத்தரணி புஞ்சிஹேவா மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டும் இப்போது இல்லை

“நிறைவேற்று அதிகாரத்தை மக்கள் நீக்குமாறு கூறவில்லை என்று அரசு கூறுமானால், ஏன் இந்த அதிகாரத்தை அரசு வைத்துக்கொள்ள வேண்டும். அப்படியானால், அரசே நிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு, வேறு சீர்த்திருத்தத்தை கொண்டுவந்திருக்க வேண்டும் அல்லவா. நிறைவேற்று அதிகாரத்தால் மக்கள் எதிர்கொள்ளும் பாரிய விளைவுகளைக் கருத்திற்கொண்டே தற்போது இது நீக்கப்படவேண்டும் என அனைவரும் ஒன்றிணைந்திருக்கின்றனர்.

ஜனநாயக சோசலிஷ குடியரசு என்றுதான் அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கையில் இவை இரண்டும் இல்லை. ஜனநாயகமும் இல்லை, அதேபோன்று சோசலிஷமும் இல்லை.

நான் வழங்குவதுதான் சரியான தீர்ப்பு

18ஆவது சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் தனி நபரிடமே அனைத்து அதிகாரங்களும் குவிந்தன. அவரே அனைத்தையும் தீர்மானிப்பவராக இருந்தார். பெற்றோல் 100 ரூபாவுக்கு கொடுக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தால், இல்லை.. இல்லை… அது 130 ரூபாவுக்கே வழங்கப்படவேண்டும் என அவர் குறிப்பிடுவார். இது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தால், நாங்கள் அதை கவனத்தில் கொள்வதில்லை, நான் வழங்குவதுதான் சரியான தீர்ப்பு என அவர் தெரிவிப்பார்.

நினைத்தவாறு அவர் தீர்மானித்த இடத்தில் வைத்து “கேஸ் 250 ரூபாவால் குறைக்கப்படுகிறது” என தெரிவிப்பார். அதுவும் தேர்தல் மேடைகளிலேயே அறிவிப்பார், மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக.

ஸ்திரமற்ற நிலை ஏற்படுவது எவ்வாறு?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை மீண்டும் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதற்கு அமைச்சர் இரண்டு, மூன்று காரணங்களை தொடர்ந்து டிவிகளில் கூறிவருகின்றனர். அவர் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். அதன் பிறகு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தார். பாதை, அதிவேகப் பாதைகள் அமைப்பதைத்தான் அவர்கள் அபிவிருத்தி எனக் குறிப்பிடுகின்றனர். இன்னும் சில அபிவிருத்தித் திட்டங்களும் உண்டு. இவற்றை மட்டும்தான் கூறிவருகின்றனர். நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நீதிக்குப் புறம்பான விடயங்கள் குறித்து இவர்கள் பேசுவதில்லை.

தற்போது நாடு ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டுசெல்லப்படுவதாக பிரசாரம் செய்து வருகின்றனர். ஸ்திரமற்ற நிலை ஏற்படுவது எவ்வாறு? தனிமனிதர் ஒருவரிடன் அனைத்து அதிகாரங்களும் குவிந்து கிடக்கும்போதுதான் நாடு ஸ்திரமற்ற நிலையில்தான் காணப்படும். மக்களை பயமுறுத்தி வைத்திருப்பதன் மூலம் நாடு ஸ்திரமான நிலையில் இருக்குமென எதிர்பார்க்க முடியாது. மக்கள் அச்சத்துடன், சந்தேகத்துடன் ஒற்றுமையின்றி வாழ்வதால் நாடு எவ்வாறு ஸ்திரமான நிலையில் காணப்படும்? ஒவ்வொரு இன மக்களும் சந்தேகத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மதம் சார்ந்த இன மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். இந்த நிலைமையைதான் ஸ்திரமற்ற நிலை என்பது.

தற்கொலைக்கு ஒப்பானதாகும்

நிறைவேற்று அதிகாரத்தை மைத்திரிபால சிறிசேன நீக்கமாட்டார் என்று கூறமுடியாது. அவருக்கு வேறு வழியில்லை. இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் நீண்டகாலம் அவரால் அரசியலில் நிலைத்திருக்க முடியாது. அது தற்கொலைக்கு ஒப்பானதாகும்.

அவரின் பின்னால் கட்சிகள் சிலவும் உள்ளன. அந்த கட்சிகளின் நிலைப்பாடும் நிறைவேற்று அதிகார முறை நீக்கப்பட வேண்டும் என்பதே. அதனால், இவ்வாறான அழுத்தங்களைத் தவிர்த்து அவரால் விலகிச் செயற்பட முடியாது; நீக்கியே ஆகவேண்டும்” என்றார்.

சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவுடனான நேர்க்காணல் கீழ் தரப்பட்டுள்ளது.