படம் | Theatlantic, infocus

ஆஹா… ஹொங்கொங் மக்களும் உலக மக்கள் புரட்சி இயக்கங்களுடன் இணைந்து விட்டார்களே. சிங்கப்பூர் போன்றே அதே விதமான வர்த்தகப் பொருளாதார அபிவிருத்திக்குப் பெயர் போன ஹொங்கொங் கூட ஒரு புரட்சித்தளமாக மாறும் என நாம் நினைத்திருக்க மாட்டோம். அது புரட்சித்தளமாக மட்டுமன்றி மிகப்பண்பான எதிர்ப்பாளர்கள் (Politest Protestors) கொண்ட இடம் எனவும் பெயர் பெற்றுவிட்டது. லட்சோப லட்சமாகக் மக்கள் இரவுபகலாகக் கூடியிருந்தும், அவர்கள் பொலிஸ் தாக்குதலுக்கு முகம் கொடுத்திருந்தும், சிரித்த முகத்துடன் அமைதியுடன் எதனையும் எதிர்கொள்பவர்களாக இருக்கின்றார்கள். போகும் பாதைகளை அவர்கள் அடைக்க நேர்ந்தால் அசௌகரியத்துக்கு மன்னிக்கவும் என்று அறிவித்தல் போடுகின்றார்களாம். இரவு முழுக்க மக்கள் தங்கிய இடங்கள் காலை பார்த்தால் பளிச்சென்று சுத்தமாகக் காணப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்களும் பாடசாலை மாணவர்களும் கூடுகின்ற வேளைகளில் வெகு சிரத்தையாக அவர்கள் தங்கள் வீட்டு வேலைகளை முடிப்பதையும் வகுப்புப் பாடங்களைப் படிப்பதும் காணக்கூடியதாக இருக்கின்றது. அது உஷ்ணம் கூடிய இடம் என்பதனால் மக்களின் வியர்வை நாற்றம் ஏனையோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்கின்ற கரிசனையில் மக்களுக்கு வாசைனத் தைலங்களைத் தெளித்துக் கொண்டும் சில தொண்டர்கள் திரிவதைப் பார்த்து ஊடகவியலாளர்கள் வியந்தார்கள்.

நகர்மத்தி ஆக்கிரமிப்பு (Occupy Central) அல்லது குடைப்புரட்சி (Umbrella Revolution) எனப் பிரபலமாக அழைக்கப்படும் இந்த மக்கள் இயக்கத்தினை எகிப்து, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் எழுச்சி பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டங்களின் உலகப் போக்குகளின் ஒரு தொடர்ச்சியாகப் பார்க்கலாம். ஆனால், ஒரு வேறுபாடு. இது 1989ஆம் ஆண்டு தியனன்மென் சதுக்கத்தில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை தயவு தாட்சண்யமின்றி சுட்டுத்தள்ளிய பாரிய சீன அரசிற்கெதிரான போராட்டமாக இருக்கின்றது. கூகிள் இணையத் தளத்தைக் கூடத் தடைசெய்து சமூக ஊடகங்களையும் தணிக்கை செய்யும் சீன நிர்வாகத்திற்கு சவால் விடும் போராட்டமாக இருக்கின்றது. அதனால்தானோ என்னவோ உலகத்தின், குறிப்பாக அமெரிக்காவின் கவனத்தை இது ஈர்த்திருக்கின்றது.

ஹொங்கொங் சீனாவின் தெற்குக் கடலில் இருக்கும் ஒரு தீவாகும். 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்த ஓபியம் யுத்தத்தின் பயனாக பிரித்தானியாவிற்குச் சொந்தமான பிரதேசமாக இது மாறியது. அந்த நேரத்தில் சீன அரசுடன் மேற்கொண்ட பீகிங் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது 1997ஆம் ஆண்டு பிரித்தானிய அரசிடமிருந்து சீன அரசிற்கு கைமாறியது. ஆனால், இந்தக் காலகட்டத்திற்கிடையில் இந்த நாடு கண்ட வளர்ச்சி அபரிமிதமானது. ஒரு சிறிய மீன்பிடித் துறைமுகமாகவும் உப்பு உற்பத்தி செய்யும் களப்பாகவும் இருந்த இத்தீவு பின்பு முக்கியத்துவம் மிக்க இராணுவ துறைமுகத் தளமாகவும் பின்பு உலகிலேயே அதிக செல்வம் ஈட்டும் இடங்களில் 6ஆவது இடத்தை (Per Capita GDP) வகிக்கும் வர்த்தக மத்திய நிலையமாகவும் மாறியது. இன்று சீனாவுக்குள் கொண்டுவரப்படும் வெளிநாட்டு மூலதனத்தின் 33 வீதம் ஹொங்கிலிருந்துதான் கிடைக்கப் பெறுகின்றது. இங்குதான் இப்போது ஜனநாயகத்துக்கான போராட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா ஆண்ட காலத்திலேயே பிரதிநிதித்துவ ஜனநாயகத்துக்கான போராட்டங்கள் ஹொங்கொங்கில் பரவலாக நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் சீனாவின் கம்யூனிஸத் தலைமைத்துவம் இப்போராட்டங்களுக்கு பலத்த ஆதரவு தெரிவித்திருந்தது. “ஹொங்கொங்கின் தலைவிதியை ஹொங்கொங் மக்களே தீர்மானிக்க வேண்டும்” என்று அப்போதைய சீனத் தலைவர் சூஎன்லாய் பிரகடனப்படுத்தியிருந்தார். இப்போராட்டங்களின் பயனாக பிரித்தானிய அரசு அடிப்படைச் சட்டம் (Basic Law) என்று அழைக்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்தினை அமுலுக்குக் கொண்டு வந்தது. இதன்படி, ஹொங்கொங் மக்களுக்கு வாக்களிப்பு உரிமை தெளிவாக வழங்கப்படாவிடினும் ஒரு பொதுச்சபையினால் தெரிவு செய்யப்பட்ட பிரதான நிறைவேற்று அதிகாரியினால் ஆளப்படும் ஆட்சி வழக்குக்கு வந்தது. ஹொங்கொங் சீனாவுக்குக் கையளிக்கப்படும் வேளையில் அது ஒரு நாடு இரு கட்டமைப்புக்கள் (One Country Two Systems) என்கின்ற கொள்கையின் அடிப்படையில் நிர்வாகம் செய்யப்படும் என்பது இரு அரசுகளினாலும் அங்கீகரிக்கப்பட்டது. இதன்படி அடிப்படைச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருந்ததோடு, அது பல சர்வதேச நாடுகளின் அமைப்புக்களில் ஒரு தனிநாடாகத் தொடர்ந்து அங்கத்துவம் பெறுவதோடு சர்வதேச கடல் சட்ட ஒப்பந்தங்களில் தொடர்ந்து சுயாதீனமாகக் கைச்சாத்திடும் உரிமையையும் பெற்றிருக்கின்றது.

எப்படியிருந்தும் சீன அரசுடன் பிரச்சினை ஏற்படுவதற்கான பல காரணிகள் அங்கு பிரசன்னமாகி இருந்தன. பொருளாதாரத் தாராளவாதத்தை மிக உற்சாகமாக அமுல்படுத்தும் அதே நேரத்தில் அதனுடன் கூட தவிர்க்க முடியாமல் ஏற்படுகின்ற தாராளவாதக் கருத்தியல்கள் சீன அரசுக்கு கசப்பு மருந்தாக இருந்தது. 2002ஆம் ஆண்டு சீனாவின் பிரதான நாட்டில் இருப்பதைப் போன்றே நாட்டுப்பற்றாளர் கல்வி முறையை ஹொங்கொங்கிலும் அறிமுகம் செய்ய முயன்று தோற்றுப் போயிற்று. மிஷனரிமார்களுடைய ஆங்கிலக் கல்வி முறைமையில் பழக்கப்பட்ட மக்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா? அதற்குப் பின்பு அடுத்த கோதாவாக பொதுத்தேர்தல்கள் நடத்தப்படுகின்ற விடயம் உருவாகிற்று. சகல மக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வேண்டும் என்கின்ற கோரிக்கையின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டு தேர்தல்கள் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், ஒரு நிபந்தனையுடன். வேட்பாளர்கள் யாவரும் சீன அரசு நியமிக்கும் உயர் மட்டக் குழுவினரால் பரிசீலிக்கப்பட்ட பின்பே தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவர் என்பதே அந்த நிபந்தனையாகும். இதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தும் சீன அரசு விட்டுக்கொடுப்பதாக இல்லை. அடிப்படைச் சட்டமும் இந்த விடயத்தில் தெளிவாக இருக்கவில்லை. இதில் உண்மையாகப் பிரச்சினையான விடயம் வாக்குரிமை என்பதைவிட பெரிய கோடீஸ்வரர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் ஆதரவாக சீன அரசு செயற்படும் கொள்கைகள்தாம் என்பதே சாலப் பொருத்தமாகும். எத்தனை செல்வம் கொழிக்கும் நாடாக இருந்தும் என்ன, உலகிலேயே இரண்டாவது அதி விலை கூடிய நகரமாக இருந்தும் என்ன, உலகிலேயே மிகக் குறைந்த குறைவெல்லை ஊதியம் வழங்கும் நாடுகளில் ஒன்றாகவும் அது இருக்கின்றது. அங்கு ஒரு தொழிலாளியின் ஆகக் குறைந்த வருமானம் மணியொன்றிற்கு 3.86 டொலர்கள் மட்டுமே. “கோடீஸ்வரர்களின் பிரதிநிதிகள் எமக்கு வேண்டாம், மக்களின் பிரதிநிதிகளே வேண்டும்” என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பும் போராட்டமாக இது மாறியதும் அதனால்தான்.

இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்குபவர்களாக பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களுமே காணப்படுகின்றனர். ஹொங்கொங் மாணவர் சம்மேளனமும், அன்புக்கும் சமாதானத்துக்குமான நகர் மத்தி ஆக்கிரமிப்பு இயக்கமும் (Occupy Central for Love and Peace) இணைந்து இதனை வழிநடத்துகின்றன. இது ஒரு உண்மையான அஹிம்சைப் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதில் அவை மிக அக்கறையாக இருக்கின்றன. இந்தப் போராட்டத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னர் ‘ஒத்துழையாமைக்கான கைநூல்’ (Manual of Disobedience) என்னும் நூலினை வெளியிட்டனர். அதற்கேற்ப மாணவர் தலைவர் தலைவிகளுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டது. இந்நூலானது, அஹிம்சைப் போராட்டத்தின் கொள்கைகள், போராட்டத்தில் பங்குகொள்ளும் முறைகள், போராட்டக்காரர்களுக்கான சட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் அவர்கள் சௌகரியத்திற்காகவும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு அஹிம்சை வீரருக்கு மனதில் வெறுப்போ கோபமோ இருக்கக்கூடாது என்பதுதான் இதன் பிரதான செய்தியாகும். அன்பின் மூலமே எதிர்க்கட்சியாளர்களை வெற்றி கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. இது தியனன்மென் சதுக்கத்தின் போராட்டத்தின் சின்னமான ஜனநாயக தேவை சிலைக்கு முன்னாலேயே ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு மனிதன் வந்து அழுகிய முட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வீசித் திட்டித் தீர்க்க (பாடசாலைகள், வங்கிகள், பல்கலைக்கழகங்கள் யாவும் மூடப்பட்டு விட்ட கோபம்) அங்கிருந்தவாகள் பொறுமையுடன் அவன் கூறுவதைக் கேட்டு விட்டு பின் முட்டைக் கோதுகளை எல்லாம் சுத்தம் செய்து விட்டார்களாம். சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு மக்கள் தூக்கி வந்த குடைகள் பின்பு கண்ணீர்ப்புகைக் குண்டுகளுக்கும் மிளகு தெளிப்புக்கும் பாதுகாப்புத் தரும் கருவியாகத் திருப்பப்பட்டது. நாளடைவில் அந்தக் குடைகளே இப்போராட்டத்தின் சின்னமாக மாறின.

“ஒரு தனிநாடாக சுயாதீனமாக இயங்கிய அனுகூலம் ஹொங்கொங் மக்களுக்கு உண்டு. மிகப் பிரதானமான வர்த்தக நிலையமாகவும் உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்கள் இயங்கும் தளம் இது. தியனன்மென் சதுக்கத்தில் செய்தது போலச் செய்ய முயற்சிக்காதீர்கள். உலகமே உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது…” என புரட்சியாளர்கள் சீன அரசிற்கு எதிராகப் பகிரங்க அறிவிப்பினைச் செய்தார்கள். அவ்வாறான அனுகூலங்களைக் கொண்ட மக்கள் இப்போராட்டத்தினை முன்னெடுப்பதுதான் இதன் விசேட அம்சமாகும். இவர்கள் வழங்கும் முன்னுதாரணம் சீன மக்களுக்கும் திபெத் மக்களுக்கும் பதிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கின்றது. இங்கு விட்டுக்கொடுத்தால் ஏனைய மக்களும் அதே கோரிக்கைகளுடன் வந்து விடுவார்களே என்கின்ற நடுக்கத்தில் சீன அரசு தவித்துக் கிடக்கின்றது. குடைப்புரட்சியின் தலைவர்கள் தமது மக்களுக்கான உரைகளில் எடுத்துக் காட்டும் வரலாற்று வெற்றிகளான புதிய கலாசார இயக்கம் (1915 – 1921) மற்றும் மே 4ஆம் திகதி இயக்கம் போன்ற போராட்டங்களைப் போன்று இதுவும் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வெற்றி பெற்றாலோ உலகத் தொழிலாளர் இயக்கத்திற்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றியாக உலகம் இதனைக்கொண்டாடும்.

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.