படம் | AFP, Ishara Kodikara, Foreign Correspondent’s of Sri Lanka’s Facebook Page

சீன ஜனாதிபதி ஜின்பிங் (Xi Jingping) இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதானது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக பிராந்திய சக்தியான இந்தியாவின் வெளிவிவகார நிபுணர்கள் மத்தியில் விவாதங்களை தோற்றுவித்துள்ளது. இந்திய ஊடகங்கள் அனைத்தும் சீன ஜனாதிபதியின் விஜயத்தை வரலாற்று விஜயம் (Historic visit) என்றே வர்ணித்திருக்கின்றன. சீன – இலங்கை உறவு 1952ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட றப்பர் – அரிசி உடன்பாட்டுடன் (Rubber – Rice Pact) ஆரம்பமாகிறது. அந்த வகையில் நவீன சீன – இலங்கை உறவிற்கு சுமார் 62 ஆண்டுகள் வரலாறுண்டு. 1986ஆம் ஆண்டு அப்போதைய சீன ஜனாதிபதி லி ஸியன்னியான் (Li Xiannian) இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அதன் பின்னர் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் ஒரு சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

சீனா, இலங்கைக்குள் வேகமாக காலூன்றி வருவதான பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலேயே சீன ஜனாதிபதியின் மேற்படி விஜயம் இடம்பெற்றுள்ளது. சீனா இலங்கைக்குள் வலுவாக காலூன்றி வருவது குறித்து உடனடி கவலைகள் இந்தியாவிற்குரியதாகும். இதனை சில இந்திய ஆய்வாளர்கள் சீனா இலங்கையை நோக்கி படையெடுப்பதாகவும், இந்தியாவின் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிவருவதாகவும் குறிப்பிட்டுவருகின்றனர். இப்படியானதொரு பின்புலத்தில்தான் சீன ஜனாதிபதி ஜின்பிங்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் நிகழ்ந்துள்ளது என்பதே அவ்வாறானவர்களின் வாதம். சீன ஜனாதிபதியின் விஜயம் திடிரென்று நிகழ்ந்த ஒன்றல்ல. ஜனாதிபதி ராஜபக்‌ஷ, சீன ஜனாதிபதியை இலங்கைக்கு வருமாறு பல தடவைகள் அழைத்திருந்தார். கடந்த ஆண்டு சீனாவிற்கு விஜயம் செய்திருந்த போதும் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய பங்களிப்பிற்கான ஒத்துழைப்பு (Strategic Cooperative Partnership (SCP) உடன்பாட்டிலும் ஜனாதிபதி ராஜபக்‌ஷ கைச்சாத்திட்டிருந்தார். இதனைத் தொடர்ந்தே சீன ஜனாதிபதி தனது பயண நிகழ்சி நிரலில் இலங்கையையும் சேர்த்துக் கொண்டிருந்தார். மேற்படி உடன்பாட்டின் ஊடாக இருதரப்பு வர்த்தகம், முதலீடு, நிதியுதவி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு ஆகியவை மேலும் வலுவடையும். இந்த உடன்பாட்டின் அடிப்படையிலேயே திருகோணமலையில் இலங்கை கடற்படையினருக்கான விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்கவுள்ளதான தகவல்கள் வெளியாகியிருந்தன. அதாவது, திருகோணமலை துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள சீனக்குடா பகுதியில் 1,200 ஏக்கர் நிலப்பகுதியை நீண்டகால குத்தகை அடிப்படையில் சீனாவிற்கு வழங்கப்பட உள்ளதாகவும், இது பாதுகாப்பு தொடர்பான அபிவிருத்தி (Defense-related development) என்னும் அடிப்படையில் சீனாவினால் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் வரையில் இது பற்றி மேலதிக தகவல்கள் ஏதும் வெளியாகியிருக்கவில்லை.

ஆனால், தற்போது இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் சீன ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி ராஜபக்‌ஷவிற்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவது (strengthen defense cooperation) தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கடல் கண்காணிப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கப்பல் மற்றும் கடல் வலய முகாமைத்துவம் ஆகியவற்றில் இருநாடும் இணைந்து பணியாற்றுவதற்கான ஏற்பாடுகள் உள்ளன. மேலும், 15ஆம் நூற்றாண்டில் சேதமடைந்ததாக நம்பப்படும் சீனத் தளபதி செங்கின் (Zheng He (1371–1433) கடற்படைக் கப்பலை இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள கடல் எல்லைக்குள் தேடுவதற்கான ஏற்பாட்டிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது. சீனத் தளபதி செங், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்கா ஆகிய பகுதிகளுக்கான சீன கடற்படையின் பிரதான தளபதியாக செயற்பட்டவராவார்.

மேலும், சர்வதேச சட்டவிதியான, நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாக் கொள்கை கடைப்பிடிப்பது மற்றும் இரு நாடுகளினதும் சுதந்திரம், ஒருமைப்பாடு ஆகியவற்றிற்காக பரஸ்பரம் ஒத்துழைப்பது பற்றியும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

மொத்தத்தில் சீனா – இலங்கை உறவு மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இது பற்றி கருத்துத் தெரிவித்திருக்கும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் துனைத் தலைவர் வங் ஜாங், சீனா ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது, இலங்கை – சீன உறவில் ஒரு இராஜதந்திர மைல்கல்லாகும் (Zheng He (1371–1433) என்று வர்ணித்திருக்கின்றார். அவ்வாறாயின், இது இந்திய – இலங்கை இராஜதந்திர உறவில் என்ன வகையான உரசல்களை ஏற்படுத்தக் கூடும்? சீனா சமீபகாலமாக இலங்கையுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தி வருவதானது, நிச்சயமாக புதுடில்லிக்கு மகிழ்சியளிக்காது என்பதில் சந்தேகமில்லை. புதுடில்லியை தளமாகக் கொண்டியங்கிவரும் வெளிவிவகார நிபுணர்கள் பலரும் அப்படியானதொரு கண்ணோட்டத்தில்தான் தங்களின் அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றனர். பெய்ஜிங் – கொழும்பு நெருக்கமானது யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் பிரதான வெளிவிவகார வெற்றியாகும்.

விடுதலைப் புலிகளுக்கும் – ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி அரசிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் சீனாவின் ஈடுபாடு குறித்து பிரஸ்தாபிக்க ஏதும் இருக்கவில்லை. 2003இல் ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை அதிகரிப்பது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் சலுகை அடிப்படையிலான கடனை வழங்குவதற்கும் சீனா இணக்கம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜின்பியோ இலங்கைக்கு விஜயம் செய்தார். இதன​போது இருதரப்பு ஒத்துழைப்புக்கள் பற்றி உரையாடப்பட்டது. இதன் விளைவாக 2005 செப்டெம்பர் மாதம் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சீனாவிற்கு விஜயம் செய்தார். இதன் போதே இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்தளவிலான பங்களிப்பு (Comprehensive partnership) குறித்து இணக்கம் காணப்பட்டது. கலாசாரம், பொருளாதாரம், நிதி மற்றும் உல்லாசப்பயணத்துறை தொடர்பான முக்கிய உடன்பாடுகள் மேற்படி சந்திரிக்காவின் விஜயத்தின் போது இணக்கம் காணப்பட்டன. இதன் பின்னர் ஜனாதிபதி ராஜபக்‌ஷ 2007இல் சீனாவிற்கு விஜயம் செய்தார். சீன – இலங்கை இராஜதந்திர உறவின் ஜம்பதாவது ஆண்டு நிறைவையொட்டி சென்றிருந்த ஜனாதிபதி ராஜபக்‌ஷ இருதரப்பு உறவுகளை மிக உயர்ந்தளவில் வலுப்படுத்துவதற்கான உடன்பாடுகளை எட்டினார். இவை அனைத்தினதும் விளைவாகவே நான் மேலே குறிப்பிட்ட மூலோபாய பங்களிப்பிற்கான ஒத்துழைப்பு கைச்சாத்திடப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் அழைப்பை சீன ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். எனவே, இங்கு ஒரு விடயத்தை குறித்துக்கொள்ள வேண்டும். சீன – இலங்கை உறவிற்கான அடித்தளம் சந்திரிக்கா காலத்திலேயே போடப்பட்டுவிட்டது. ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் காலத்தில் அது ஆழ வேர்விட்டு வளர்ந்திருக்கிறது.

இலங்கையின் நலன்கள் என்னும் தனிக் கண்ணோட்டத்தில் நோக்கினால், இலங்கை – சீனக் கூட்டின் விளைவாக இலங்கை பல நன்மைகளை பெற்றிருக்கிறது. இதனைப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு என்னும் இரண்டு நிலையில் நோக்கலாம். பொருளாதார ரீதியாக நோக்கினால், யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையின் கட்டுமான பணிகளில் சீனாவின் கடனுதவி பிரதான பங்கு வகித்துவருகிறது. இதன் மூலம் இலங்கைக்கு கடனுதவி வழங்கும் நாடுகளில் முதன்மை பாத்திரத்தை ஏலவே சீனா கைப்பற்றிக்கொண்டது. இன்றைய நிலையில், இலங்கைக்கான நேரடி அன்னிய முதலீட்டிற்கான மிகப்பெரிய வழிமூலமாக இருப்பது சீனாவாகும். அத்துடன், அபிவிருத்தித் திட்டங்களுக்கான கடன் உதவிகளை வழங்கிவரும் பிரதான பங்காளியாகவும் சீனாவே விளங்குகின்றது. குறிப்பாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானம், இலங்கைக்கான முதலாவது நான்கு பக்க அகல அதிவேகப் பாதை (First four-lane expressway) மற்றும் புதிய தேசிய திரையரங்கு. இப்படியான லாபகரமான விடயங்களை இலங்கை இதுவரை பெற்றுள்ளது. தற்போது ஏற்படுத்தப் பட்டிருக்கும் முலோபாய ஒத்துழைப்பிற்கான உடன்பாட்டின் ஊடாக இன்னும் பல நன்மைகளையும் இலங்கை பெறவுள்ளது. பாதுகாப்பு ரீதியாக நோக்கினால் மேற்கின் அழுத்தங்களின் போது சீனா இலங்கைக்கு பக்கபலமாக தொழிற்பட்டு வருகிறது. தொடர்ந்தும் இலங்கைக்கு பக்கபலமாக இருப்பதாக உறுதியளித்துள்ளது. கொழும்பு – பெய்ஜிங் உறவு வலுவடைந்து கொண்டு செல்லுவதன் பின்னால் சீனா கடைப்பிடித்துவரும் உள்நாட்டு விடயங்களில் தலையிடாக் கொள்கையே முக்கியமாக செல்வாக்குச் செலுத்திவருகிறது. இந்த விடயம்தான் கொழும்பு – புதுடில்லி உறவில் நெருடல்களை ஏற்படுத்தும் விடயமாகவும் இருக்கிறது.

இது குறித்து பல்வேறு வகையான அவதானங்கள் இருந்த போதிலும், இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கு எதிர்காலத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உலகளவில் தோன்றும் அரசியல் மாற்றங்களிலேயே தங்கியிருக்கிறது. சீனா, அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு உதவிய காலத்திலிருந்து சீனாவின் செல்வாக்கு குறித்த விவாதங்களும் தொடர்ந்தவாறே இருக்கின்றன. ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஸ்தாபிக்கப்பட்ட அம்மாந்தோட்டை துறைமுகமானது, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவ ரீதியாக காலூன்ற முயலும் சீனாவின் நீண்டகால திட்டத்தின் ஒரு அங்கம் என்றவாறு சில ஆய்வுகள் உண்டு. இந்திய வெளிவிவகார ஆய்வாளர்கள் மட்டுமன்றி றொபேட் கப்லான் போன் அமெரிக்க புவிசார் அரசியல் நிபுணர்களும் அவ்வாறானதொரு கண்ணோட்டத்தையே பதிவு செய்திருக்கின்றனர்.

ஆனால், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான கட்டுமான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சீனா தன்னுடைய இராணுவப் பிரிவு (PLA detachment) ஒன்றை அங்கு நிலைகொள்ளச் செய்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறது. இது தொடர்பான தகவலை, சீனாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் நிஹால் ரொட்றிக்கோ சமீபத்தில் தெரிவித்திருக்கின்றார். துறைமுக கட்டுமானப் பணிகளுக்கான பாதுகாப்பு என்னும் பெயரிலேயே சீனா அத்தகையதொரு வேண்டுகோளை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால், அத்தகையதொரு தேவைப்பாடு இல்லையென்று தான் சீன அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். எதிர்காலத்தில் நிலைமைகள் எப்படியும் மாறலாம். ஆனால், ஒரு விடயத்தை இங்கு அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சீனா இலங்கையின் ஆட்சியாளர்கள் மீதுள்ள பற்றினாலோ அல்லது இலங்கை மக்கள் மீதுள்ள பாசத்தினாலோ எதனையும் செய்யவில்லை. பலம்பொருந்திய சக்திகளுக்கு எந்தவிதமான சென்றிமென்டுகளும் இருப்பதில்லை. ஆனால், இப்படியான பலம்பொருந்திய சக்திகள் இலங்கையில் காலூன்றுவது தமிழர் அரசியலில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்பதை கவனிக்க வேண்டிய பொறுப்பு தமிழர் தலைமைகளுக்கு உண்டு. 1971இல் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சீன வெளிவிவகார அமைச்சர், நாங்கள் இந்த நாட்டை நேசிக்கிறோம் என்று குறிப்பிட்டாராம். அது என்ன வகையான நேசம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.