படம் | Developmentnews

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் பேச தயாராக இருப்பதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகின்றார். வட மாகாண சபையுடன் சேர்ந்து இயங்க விரும்புவதாக அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவிக்கின்றார். இந்தக் கருத்து வெளிப்பாடுகள் எல்லாம் கூட்டமைப்பு இந்தியாவுக்குச் சென்று திரும்பிய பின்னர் வெளிவருகின்றன. இதன் உள்நோக்கம் எதுவாக இருந்தாலும் இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பதையும் வடமாகாண சபையுடன் ஒத்துப் போக வேண்டும் என்ற எண்ணத்தையும் அரசு குறைந்த பட்சமேனும் வெளிப்படுத்தியுள்ளது என்று கூறலாம்.

18 சுற்று பேச்சுக்கள்

இங்கு கேள்வி என்னவென்றால் அமைச்சர் திஸ்ஸவிதாரன தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு 18இற்கும் மேற்பட்ட பேச்சுக்களை நடத்தி இனப் பிரச்சினைக்குத் தீர்வாக யோசனை ஒன்றை முன்மொழிந்தது. அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி பங்குபற்றாது விட்டாலும் சமர்ப்பிக்கப்பட்ட அந்த யோசனை எங்கே? தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் 11 சுற்றுப் பேச்சுக்கள் 2010ஆம் ஆண்டு நடைபெற்றன. அதில் பல விடயங்களில் அரசு உறுதிமொழி வழங்கியது. ஆனால், அவற்றில் ஒன்றையேனும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் தொடர்ந்து பேசிப் பயனில்லை என கூறி கூட்டமைப்பு பேச்சில் இருந்து வெளியேறியது. சர்வதேச சமூகத்திற்கும் தமது நிலைப்பாட்டை கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் விளக்கிக் கூறி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் பேச தயாராக இருப்பதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளமை எந்த அடிப்படையில்? வட மாகாண சபை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் வடமாகாண ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கின்றார் என்பது கண்கூடு. அத்துடன், மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள் பலவற்றை மத்திய அரசு எடுத்துவிட்டது அல்லது நடைமுறைப்படுத்தாமல் உள்ளது எனலாம். இந்த நிலையில், வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட விருப்பம் என்று அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ கூறியதன் நோக்கம் என்ன? அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் கருணா போன்று அரசின் செல்லப் பிள்ளைகளாக இருந்தால், வட மாகாண சபைக்கான அதிகாரங்கள் அனைத்தும் கிடைக்கும் அல்லது மஹிந்த சிந்தனையை ஏற்றால் அதிகாரங்கள் கிடைக்கும் என்ற தொனியில் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார்.

அமைச்சர் டக்ளஸ் கூறியது

முதலமைச்சராக பதவியேற்றிருந்தால் மாகாண சபைக்குரிய காணி – பொலிஸ் அதிகாரங்களை இலகுவாக பெற்றிருப்பேன் என்று அமைச்சர் டக்ளஸ் ஐந்து நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். ஆகவே, அரசின் செல்லப் பிள்ளையாக, அவர்கள் சொல்வதை மட்டும் செய்பவர்களாக இருந்தால் அதிகாரங்கள் கிடைக்கும் என்பது இதன் பொருளாகும். 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டம், 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான ஐந்து ஆண்டுகாலம் சென்றும் எதுவும் நடக்காத நிலையில் அரசின் பங்காளிக் கட்சியாக இருந்துகொண்டு மிக இலகுவாக அந்த அதிகாரங்களை பெற முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுவது யாருடைய தயவில் என்பது எல்லோரக்கும் இலகுவாக புரிகின்றது. அவ்வாறு முதலமைச்சராக பதவி வகித்து காணி பொலிஸ் அதிகாரங்கள் கிடைத்திருக்கும் என்று எடுத்துக் கொண்டால் இந்த அரசு மாறி ஐக்கிய தேசிய கட்சி பதிவியேற்றால் அல்லது இந்த அரசு கூட அமைச்சர் டக்ளஸூடன் ஏதோ ஒரு காரணத்திற்காக முரண்பாட்டால் தொடர்ந்து அதிகாரங்கள் வட மாகாண சபைக்கு கிடைக்குமா?

கருணை, நட்பு, பாவம் புண்ணியம் பார்த்து கொடுப்பது அல்ல அரசியல் அதிகாரம். அது இலங்கை அரசுடன் தொடர்புபட்டதும் அல்ல. 1948ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி, அவ்வப்போது சிறிய கட்சிகளை இணைத்துக் கொண்டு அரசை அமைத்தனர்; போரை நடத்தினர். 1983ஆம் ஆண்டு இந்திரா காந்தியில் இருந்து இன்றைய நரேந்திர மோடி வரை எத்தனை சந்திப்புகள், பேச்சுக்கள். ஆனால், இன்று வரை சிறியளவு அதிகாரங்களேனும் பகிரப்படவில்லை. 1983ஆம் ஆண்டுக்கு முந்திய அஹிம்சைப் போராட்ட காலங்களில் கூட மிதவாத தலைவர்கள் என்று சொல்லக்கூடிய செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுடன் கூட பேசி ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

சம்பந்தன் காலத்திலும் கூட

போர் நடைபெற்ற 30 ஆண்டு காலத்தை தவிர்த்து 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான ஐந்து ஆண்டு காலகட்டத்தில் கூட மிதவாத தலைவரான சம்பந்தனுடன் கூட பேச்சு நடத்தி, குறைந்தபட்ச அதிகாரங்களையேனும் அரசு வழங்கவில்லை. “2009 மே மாதத்தின் பின்னரான சம்பந்தனுடைய காலத்தில் இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லையானால், மீண்டும் ஒரு வன்முறை ஏற்படலாம் என்றும் – அதன் பின்னர் வரக்கூடிய தமிழ் தலைவர்கள் சம்பந்தன் போன்று மென்போக்கானவர்களாக இருக்க மாட்டார்கள் என்றும் – அரசியல் ஆய்வாளர் தயான் ஜயதிலக எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆகவே, எந்த நிலையிலும் இனப் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்காது, ஒற்றை ஆட்சி கோட்பாட்டை கொண்டு செல்வதுதான் இந்த அரசின் நிலைப்பாடு. ஏன், ஐக்கிய தேசிய கட்சி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் என எதிர்பார்க்கப்படும் சோபித தேரர் கூட ஒற்றையாட்சிக் கோட்பாட்டை கைவிடமாட்டார்கள். ஜே.வி.பியும் அதற்கு விதிவிலக்கல்ல.

மாகாண சபை இல்லாமல் போகலாம்

அரசியலமைப்பில் உள்ள மாகாண சபை முறை இல்லாமலும் போகலாம். அடுத்து வரப் போகின்ற ஜனாதிபதி, அவர் எந்தக் கட்சியாகவும் இருக்கலாம் அல்லது சோபித தேரராகவும் இருக்கலாம். மாகாண சபை முறையை ஒழித்துவிட்டு மாவட்ட சபையை அல்லது கிராமிய சபையை உருவாக்கி தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை கொச்சைப்படுத்தும் தீர்வு ஒன்றை முன்வைக்கக் கூடிய வாய்ப்புகளும் உண்டு. இதுதான் இன்றைய நிலை. 1920ஆம் ஆண்டு பிரித்தானியரை எதிர்ப்பதற்காக இனவேறுபாடு இன்றி உருவாக்கப்பட்ட இலங்கைத் தேசிய இயக்கம் பிளவுபட்டதில் இருந்து தமிழ் – சிங்கள பிரச்சினை தலை தூக்கியது. ஆக, 80 ஆண்டுகளுக்கும் மேலான இன முரண்பாட்டு அனுபவங்களும், 60 ஆண்டுகால அரசியல் போராட்ட அனுபவங்களும் தமிழர்களுக்கு பல விடயங்களை கற்றுக் கொடுத்துள்ளன. இந்த நிலையில், அமைச்சர் டகளஸ் கூறிய மேற்படி கருத்தும், அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் மேற்படி விருப்பமும் தமிழர்களின் நீண்டகால அரசியல் போராட்டங்களை மலினப்படுத்துகின்றன.

தேசிய இனங்களிடையே அதிகாரங்கள் பகிரப்படுவதுதான் இனப் பிரச்சினைக்கான தீர்வே தவிர, சலுகைகள் கருணைகள் அல்ல; அவை மிதவாத அரசிலும் அல்ல. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் செய்கின்ற மிதவாத அரசியலில் சரி, பிழைகள் இருந்தாலும், அரசின் அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் கருணை, சலுகைகளை அவர்கள் ஒருபோதும் ஏற்பதில்லை. அல்லது அதனை முழுமையாக நம்பி இதுதான் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று அவர்கள் ஒருபோதும் கூறியதும் கிடையாது.

இலங்கைத் தேசியம்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுதலைப் புலிகளை ஒருபோதும் ஆதரித்தவர் அல்ல. தமிழ்த் தேசிய கோட்பாட்டை ஏற்றவரும் அல்ல. ஆனால், அரசியலமைப்பில் உள்ள குறைந்தபட்ச அதிகாரங்களைக் கூட அரசு வழங்கவில்லை என்பதை அவர் வெளிப்படையாகவே கூறுகின்றார். ஆனால், அவரைக் கூட புலிகளின் குரல் என்றுதான் அரசு கூறுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவும், ஜே.வி.பியும் கூட விக்னேஸ்வரனை ஓரக் கண்ணால்தான் பார்க்கின்றனர். ஆகவே, இதுதான் உண்மை நிலை. அரசுடனும் இனவாத சிங்கள அரசியல் கட்சிகளுடனும் இணக்க அரசியலில் ஈடுபடுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளை கூட ஓரக் கண்ணால்தான் சிங்களத் தலைவர்கள் பார்க்கின்றனர். இலங்கைத் தேசியம் என்ற வரையறைக்குள் சகல இனங்களும் வரவேண்டும் என்பதான் சிங்கள தலைவர்களுடைய நிலைப்பாடு.

இந்த நிலையில், பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா என்பது போல, அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்கள் செயற்படக்கூடாது. தனிப்பட்ட நலன்களை பெறுவதற்காக தேசிய இனம் ஒன்றின் உரிமைகளை அடகு வைக்கவும் கூடாது.

தினக்குரல் பத்திரிகைக்காக அ. நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.