படம் | Pereracharles

இனப்பிரச்சினை விவகாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் ஒரேபோக்கில்தான் சென்று கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளும் நாட்டின் தேசிய கட்சிகள் என்றும் சொல்லப்படுகின்றது. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஆட்சி அமைப்பதால் தமது அரசுக்கு பெயரை மாற்றுவது வழமை. தற்போது பதவியில் உள்ள அரசு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என அழைக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் 17 வருட ஆட்சிக்குப் பின்னர் 1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அப்போது பொதுஜன ஐக்கிய முன்னணி என்று பெயரை வைத்துக் கொண்டது.

இடதுசாரி கட்சிகள்

பொதுவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசில்தான் இடதுசாரி கட்சிகள் பங்கெடுப்பார்கள். அமைச்சுப் பதவிகளையும் பொறுப்பேற்பார்கள். ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசில் இடதுசாரிகள் பங்கெடுப்பது இல்லை. ஏனெனில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சோசலிச தன்மை கொண்ட கட்சியாக பார்ப்பதன் காரணத்தால் இடதுசாரிகள் அந்தக் கட்சியுடன் கூட்டுச்சேருகின்றன. ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொறுத்தவரை ஆட்சியமைத்த ஒவ்வொரு காலகட்டத்திலும் ஐக்கிய தேசிய கட்சி அறிமுகப்படுத்திய முதலாளித்துவ மற்றும் திறந்த பொருளாதாரக் கொள்கையைத்தான் பின்பற்றி வந்ததுள்ளது.

தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசும் 1978ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை ஐக்கிய தேசிய கட்சி பின்பற்றிய கொள்கையைத்தான் தொடர்ந்து பின்பற்றி வருகின்றது. சீனாவுடனான நெருக்கமான உறவு மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் என்ற சில விடயங்களைத் தவிர வெளியுறவுக் கொள்கை உட்பட பொருளாதார கொள்கைகள் போன்ற விடயங்கள் ஐக்கிய தேசிய கட்சியை ஒத்ததாகவே உள்ளன. இங்கு இனப்பிரச்சினை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் இந்த இரண்டு கட்சிகளின் செயற்பாடுகளுக்கும் வித்தியாசம் இல்லை. உதாரணமாக சிங்கள குடியேற்றங்களை ஐக்கிய தேசிய கட்சிதான் ஆரம்பித்தது. போரையும் அந்தக் கட்சிதான் தொடக்கி வைத்தது.

அதே நடைமுறை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசு, 2006ஆம் ஆண்டு மீண்டும் போரை நடத்தி முடித்து, வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை தீவிரப்படுத்தி, புத்தர் சிலை வைத்தல், இராணுவ முகாம்களை மேலும் விஸ்த்தரித்தல், இராணுவக் கிராமங்களை அமைத்தல் போன்ற வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

1920ஆம் ஆண்டு தேசிய இயக்கம் பிளவுபட்ட போது சிங்கள மக்களிடையே கட்சி முறை இருக்கவில்லை. ஆனால், தமிழர்களுக்கு எதிரான இனவாத உணர்வு அன்று மேலோங்கியிருந்தது. 1931ஆம் ஆண்டு டொனமூர் யாப்புடன் கட்சி அரசியல் உருவாகி இரு கட்சி அரசியல் முறை ஆரம்பிப்பதற்கு முன்னரே 1948இல் திருகோணமலையில் சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. மேற்படி இருகட்சிகளும் தோன்றுவதற்கு முன்னர் இருந்த தமிழ் எதிர்ப்புவாதம் இன்று இருகட்சி அரசியல் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.

ஆகவே, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் மாத்திரமல்ல, இடதுசாரிகளை இனவாத அரசியலுக்கு பழக்கியெடுத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் மற்றும் மூத்த சிங்கள தலைவர்கள், தமிழ்த் தலைவர்கள் அனைவரும் இனப்பிரச்சினையின் தற்போதைய அவல நிலைக்கு பொறுக்கூற வேண்டும். சர்வதேச விசாரணைக்குழு முன்னிலையில் மனச்சாட்சியுடன் இவர்கள் சாட்சியமளிக்கவும் வேண்டும். இந்த இடத்தில்தான் மஹிந்த ராஜபக்‌ஷ அரசில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள் பற்றிய கேள்விகள் எழுகின்றன. தேசிய இனங்களின் விடுதலை – சகோதரத்துவம் என்பது இடதுசாரிகளின் முக்கிய பண்பு. ஆனால், தங்களை இடதுசாரிகள் எனக்கூறிக் கொண்டு அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான டி.யு. குணசேகர, திஸ்ஸவிதாரண, தினேஸ் குணவர்த்தன, ராஜித சேனாரட்ன, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இந்த அரசில் சமத்துவத்தைக் காண்கின்றனரா? இதில் அமைச்சர் ராஜித சேனாரட்னவைத் தவிர ஏனையவர்களுக்கு இடதுசாரி என்ற அடையாளங்களுடன் கட்சிகளும் உண்டு. அவர்கள் தங்கள் கட்சிகளின் மாநாட்டை நடத்தும்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அழைப்பும் விடுத்து இருக்கின்றனர்.

வாடகைக்கு அமர்த்த முடியும்

ஆகவே, இந்த இடதுசாரிகள் பச்சை இனவாதத்தையும், குறிப்பிட்ட நபர்களுடைய முதலாளித்துவம் மற்றும் அடக்குமுறைகளையும் நேரடியாகக் கண்டுகொண்டு அமைச்சுப் பதவிகளில் இருப்பதால் இடதுசாரி கொள்கை என்பதற்கு எந்தவகையான அர்த்தத்தை இவர்கள் கொடுக்க முற்படுகின்றனர்? இவர்களை இடதுசாரி என்றே கூற முடியாது என நாடாளுமன்றத்திற்கு வெளியில் உள்ள இடதுசாரிக்கட்சிகள் கூறுகின்றன. ஆனால், இலங்கையில் கட்சி அரசியல் என்பது 1935இல் லங்கா சமசமாஜ கட்சி என்ற இடதுசாரி கட்சியுடன்தான் தோற்றம் பெற்றது. 1972இல் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடதுசாரிகளையும் இணைத்துக் கொண்டு மக்கள் ஐக்கிய முன்னணி அரசை அமைத்தார். அப்போது, “இடதுசாரிகளை (மாக்சியவாதிகளை) வாடகைக்கு அமர்த்த முடியும்” என்று சிறிமாவோ பண்டாரநாயக்க கிண்டலாகவும் கூறியிருந்தார். அந்தளவுக்கு இடதுசாரிகளின் கொள்கை நகைப்புக்கிடமாகியிருந்தது.

விக்கிரமபாகு கருணாரட்ன

கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான நவசமாஜ கட்சி, செந்திவேல் தலைமையிலான புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, ஐக்கிய சோசலிச முன்னணி போன்ற சில இடதுசாரி இன்றும் தங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கின்றன. ஆனால், பெரியளவில் மாற்றங்களை கொண்டுவர முடியவில்லை. ஆனாலும், நாடாளுமன்ற அரசியலில் உள்ள கட்சிகள் மற்றும் தலைவர்களின் செயற்பாடுகளை இவர்கள் விமர்சிக்கின்றனர். இனப்பிரச்சினை விவகாரத்தில் ஆரோக்கியமான தீர்வு ஒன்றுக்கு வலியுறுத்துகின்றனர். ஆனாலும், இவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை செலுத்துவதில் தோல்வியடைந்து விட்டனர். எனினும், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி தவிர்ந்த ஏனைய மேற்படி இடதுசாரிகள் சர்வதேச விசாரணைக்கு ஆதரவு கொடுக்கின்றன. மேற்கத்தைய முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிரான இந்த இடதுசாரிகள் சர்வதேச விசாரணைக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் தங்கள் கொள்கையில் இருந்து விலகிவிட்டார்கள் என்ற குற்றச் சாட்டுக்களும் உண்டு.

ஆனாலும், இனப்பிரச்சினை விடயத்திலும் மஹிந்த ராஜபக்‌ஷ அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் இந்த இடதுசாரிகள் சர்வதேச விசாரணைக்கு ஆதரவு அல்லது அதனை வரவேற்கின்ற பண்பை கடைப்பிடிக்கின்றனர் என்று கூறலாம். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள் போன்றவற்றுக்கு எதிராக ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இணைந்து இந்த இடதுசாரிகள்தான் கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை துணிச்சலாக முன்னெடுத்தன. காலத்திற்கு ஏற்ப கொள்கைகளில் புதிய வடிவமைப்புகளை செய்தல் அல்லது செயற்பாட்டு முறைகளை மாற்றியமைத்தல் என்ற பண்பு அரசியல் கட்சிகளுக்கு இருப்பது அவசியம். இடதுசாரிகளும் அதற்கு விதிவிலக்கல்ல.

இனவாத அரசியல்

ஆனால், இனவாத அரசியலை முன்னெடுப்பது ஏற்புடையதல்ல. இலங்கை அரசியல் வரலாற்றில் இடதுசாரிகளில் அனேகமானோர் இனவாத அரசியலை முன்னெடுத்து வந்தனர். ஆனாலும், மேற்படி சில இடதுசாரிகள் சிங்கள மக்களையும் ஒன்றிணைத்த வெகுஜன பேராட்டம் ஒன்றை அன்றிலிருந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், தமிழர் விகாரத்தில் விடிய விடிய இராமர் கதை, விடிந்த பின்னர் இராமன் சீதைக்கு என்ன முறை என்று கேட்கின்ற நிலைதான் சிங்கள மக்களிடம் உண்டு என படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் கூறியிருந்தமையை இங்கு நினைவுபடுத்துகிறோம்.

தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.