படம் | JDSrilanka

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 06 | ஆறாவது பாகம்

###

உலகளாவிய தமிழர்கள் முன்னெடுக்கும் அரசியலின் வெற்றி வீதம் எத்தனை?

இலங்கைத் தமிழரது அரசியலை ஒற்றை மனிதனாக தானே தீர்மானித்த பிரபாகரனின் 25 வருட கால ஆளுகை வரலாற்றின் சுருக்கம் இதுதான்,

சேர்ந்து வாழ முடியாது என்பதால் பிரிந்து செல்ல வேண்டும் என்ற கொள்கையோடு தனது ஆயுதப் போராட்டத்தை அவர் நடத்தினார். காலப் போக்கில், பிரிந்து செல்ல வேண்டும் என்பதால் சேர்ந்து வாழ முடியாது என்று அவரது கொள்கை மீளுருவாக்கம் பெற்றது.

பிரிந்து செல்லவே வேண்டும் என்ற முடிவை அவர் எடுத்துவிட்டிருந்ததால், சேர்ந்து வாழுவதற்கான வழிகளை விசுவாசமாகப் பரீட்சித்துப் பார்க்க அவர் விரும்பவில்லை; அவரால் முடியவில்லை; அவருக்குத் தெரியவில்லை.

இறுகிப் போய் கிடக்கும் சிங்கள பௌத்த ஒற்றையினக் கோட்பாடு என்றுமே இளகி வராது என்ற காரணத்தைக் காட்டியே பிரபாகரன் தனது வன்முறை அரசியலைத் தொடர்ந்தார். அவர் கூறியது போலவே, சிங்கள பௌத்த ஒற்றையின மனேபாவம் தளர்வடையவில்லை; அதே வேளையில், அவ்வாறு அது தளர்வடைகின்ற சூழல்கள் உருவாகி வருவதற்குப் பிரபாகரன் விடவுமில்லை. எந்தக் கோட்பாட்டுக்கு எதிராகத் தனது ஆயுதப் போராட்டத்தை அவர் தொடங்கினாரோ, ஒரு கட்டத்தில், அந்தக் கோட்பாட்டையே தனது ஆயுதப் போராட்டத்திற்கான மூலதனமாகவும் அவர் ஆக்கிக்கொண்டார். அடித்து இளக்கி, இறங்கிவர வைப்பதற்குப் பதிலாக, சிங்கள பௌத்தத்தை அவர் மேலும் இறுக்கித் திடப்படுத்தினார்.

சிங்கள பௌத்தம் தெற்கிலும் மேற்கிலும் திடப்படத் திடப்படத்தான், வடக்கும் கிழக்கும் பிரிந்து செல்வதற்கான காரணங்கள் வலுப்படும் என்று அவர் நம்பினார். தமிழர் பக்கத்திலிருந்த மென்கோட்பாட்டாளர்களையும் மென்சிந்தனையாளர்களையும் அவர் அகற்றினார்; சிங்களத் தரப்பிலிருந்து கனிந்துவந்த நல்லெண்ண சூழல்களையும் அவர் கலைத்தார். தமிழ் தேசியக் கோட்பாட்டை வலுப்படுத்தியதன் மூலமாகச் சிங்கள ஒற்றையினக் கோட்பாடு வலுவடைய அவர் வழி வகுத்தார். சிங்கள ஒற்றையினக் கோட்பாடு வலுவடைய வலுவடைய, அதனையே மூலதனமாக இட்டு, தமிழ் தேசியக் கோட்பாட்டையும் அவர் திடப்படுத்தினார்.

ஒரு கட்டத்தில், தமிழர் தரப்பில், தமிழ் தேசியக் கடும் கோட்பாட்டோடு அவர் மட்டுமே நிமிர்ந்து எழுந்து, சிங்கள பௌத்த ஒற்றையினக் கடும் கோட்பாடே இந்த நாட்டை ஆளும் சூழலை ஏற்படுத்தினார். இரு தரப்பிலும் கடும் கோட்பாடுகளே உருக்கொண்டு எழுந்துவிட்டபோது, இனிச் சமரசங்கள் செய்யத் தேவையில்லை, செய்யவும் முடியாது என்ற முடிவுக்கு இரண்டு தரப்புமே வந்து சன்னதமாடத் தயாராகின.

விளைவு – பிரபாகரனைப் போலவே ஒற்றைச் சிந்தனையுடனும் மனத்திமிருடனும் செயற்திறனுடனும் எதிர்ப்பக்கத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷ வந்து சேர்ந்தார். சிந்தனையும், திமிரும், செயற்திறனும் சமப்பட்ட போது, ஆள் வளத்திலும், ஆயுத வலுவிலும், உலகப் பலத்திலும் மேலோங்கியிருந்த – அரசு என்ற அங்கீகாரத்தையும் கொண்டிருந்த – கோட்டாபய ராஜபக்‌ஷ முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் முடித்துவைத்தார்.

இந்த வரலாற்றுச் சுருக்கத்திலிருந்து உலகளாவிய தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன…?

இப்போதைய நிலவரமும், ஏறக்குறைய இதே போன்றதுதான். ஆனால், பிரபாகரன் இப்போது இல்லை; அவர் வகித்த பாத்திரத்தை வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தமிழ் அமைப்புகள் வகிக்க முற்படுகின்றன.

மேற்குலகத்தை முன்னிலைப்படுத்தி புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியற் செயற்பாடுகளுள் இப்போது முதன்மையாய் இருப்பது மூன்று விடயங்கள்:

ஒன்று, மேற்குலக அரசுகளுக்கும் அரசியற் கட்சிகளுக்கும் இலங்கைத் தமிழர்களின் நிலையை விளக்க எடுக்கப்பட்டுவரும் பரப்புரைப் பணிகள் (Lobbying)

அடுத்தது, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் புறக்கணிக்குமாறு கோரும் போராட்டங்கள்.

மூன்றாவது, இலங்கை அரசினர் வேறு நாடுகளுக்குப் பயணங்களை செய்கின்ற போது, அவர்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற வீதிப் போராட்டங்கள்.

புலம்பெயர்ந்திருக்கும் தமிழ் சமூகமே இலங்கைத் தமிழ் மக்களுக்கு இன்று இருக்கும் பலம்; உண்மையில் அதுதான் ஒரே பலம். ஏறக்குறைய உலகப் பெரும் நாடுகள் வைத்திருக்கும் அணு குண்டுகளைப் போன்ற பலம் என்று அதனை ஒப்பிடலாம். நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், பலம் என்பது அதன் நோக்கத்தை அடைவதற்கான ஒன்றே அல்லாமல், அது பாவிக்கப்பட்டே ஆகவேண்டிய ஒன்று அல்ல. இன்றைய உலகில், அணு ஆயுதங்களை வைத்திருக்கின்ற நாடுகளதும், அவற்றைத் தயாரிக்க விழுந்தடிக்கின்ற நாடுகளதும் நோக்கம் அடுத்த நாடுகளைத் தாக்குவது அல்ல. மாறாக, அடுத்த நாடுகள் தம்மைத் தாக்காது ஒரு கவசத்தை ஏற்படுத்துவதே. அணு குண்டுகளின் நோக்கம், “நீ அடித்தால் நானும் அடிப்பேன்” என்ற செய்தியைச் சொல்வதும், “நான் அடித்தால் அவனும் அடிப்பான்” என்று அடுத்த நாடுகளைச் சுய எச்சரிக்கை செய்ய வைப்பதும் ஆகும். அத்தகைய ஒரு ஞானத்துடன்தான் ஒரு பலம் உபயோகப்படுத்தப்பட வேண்டும். புலம்பெயர் சமூகம் என்ற பலம் எத்தகைய ஞானத்தோடு இலங்கைத் தமிழர்களுக்காகப் பயன்படப் போகின்றது என்பதே பெரிய கேள்வி. பிரபாகரன் எத்தகைய ஞானத்தோடு அதனை முன்பு பயன்படுத்தினார் என்பதுவும் இங்கு தமிழர்களுக்கு இருக்கின்ற பாடம்.

பிரபாகரனின் காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் என்ற இந்த மாபெரும் சக்தி, சரிகளுக்கும் பிழைகளுக்கும் அப்பால், தேவைகளுக்கும் தேவையின்மைக்கும் அப்பால், அவரது கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கும், அவரது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்குமான ஒரு கருவியாகவே மிகப் பெருமளவிற்குப் பயன்படுத்தப்பட்டுவிட்டது. சுயமாகச் சிந்தித்து இயங்குவதற்கான செயற்பாட்டுச் சுதந்திரம் இந்த இரண்டு பணிகளையும் நிறைவேற்றுவதற்கான எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

ஏறக்குறைய, அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு போலவே புலம்பெயர்ந்த தமிழ் சமூகமும் வைக்கப்பட்டிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரது இனப்பற்றும், வன்னியிலிருந்து சொல்லப்படுபவற்றை எவ்வளவுக்குத் துல்லியமாக அவர் செய்கின்றார் என்பதன் மூலம் அளவிடப்பட்டது போலவே, ஒவ்வொரு புலம்பெயர்ந்த தனித் தமிழனின் இனப்பற்றும், அவர் எவ்வளவு அதிகமாக நிதியை வழங்குகின்றார் என்பதிலிருந்து அளவிடப்பட்டது. விடுதலைப் புலிகளின் போராளிகள் புரிந்துகொண்டிருந்த தியாகங்களின் காரணமாகவும், போர்க்களங்களில் அவர்கள் படைத்துக்கொண்டிருந்த சாதனைகளின் காரணமாகவும், பிரபாகரனின் எண்ணங்களை ஈடேற்றுவதிலேயே புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் கருத்தாக இருந்தது. இதே காரணங்களுக்காக, மாற்றுச் சிந்தனைகளும், அவற்றை முன்வைத்தவர்களும் நிராகரிக்கப்பட்டார்கள். இவ்வாறான மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பது, அந்தப் போராளிகளின் தியாகங்களை அவமானப்படுத்துவது போன்றதாகக் கருதப்பட்டது.

ஏதோ ஓர் அதிசயத்தைப் பிரபாகரன் நிகழ்த்தப் போகின்றார் என்ற எதிர்பார்ப்புடனும், நிகழ்த்துவார் என்ற நம்பிக்கையுடனும் மறுகேள்வியின்றி மக்கள் எல்லாவற்றையும் தந்தார்கள். அப்பழுக்கில்லாத தூய விசுவாசத்துடன் கைகள் சிவக்கத் தம்மை வருத்தி வாரிக் கொடுத்த பல உள்ளங்களை எனக்குத் தனிப்பட்ட முறையிலேயே தெரியும். பிரபாகரனின் போராளிகளது அர்ப்பணிப்பு மனோபாவத்திற்கு ஈடான அல்லது அதை விடவும் அதிகமான அர்ப்பணிப்பு மனோ நிலையோடும் நிச்சயமாகப் பலர் இருந்தார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இறுதியில் எல்லாம் என்னவாகிப் போனது என்பது எல்லோருக்குமான பாடம். சொந்த வீடுகளைக் கூட ஈடாக வைத்து நிதியைக் கொடுத்தவர்களும், வங்கிகளில் சொந்தக் கடன்களைப் பெற்றுத் தானம் வழங்கியவர்களும், அவ்வாறெல்லாம் கொடுத்தவர்கள் நடுத் தெருவுக்கு வந்ததும், தற்கொலைகள் புரிந்ததும், மனநலம் பாதிக்கப்பட்டு வீதிகளில் அலைந்ததும், குடும்பங்கள் பிரிந்ததும் வெளிநாட்டுத் தமிழர்களிடையே நடந்தது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் மனநிலை மிகவும் நுட்பமாகப் பார்க்கப்பட வேண்டியது. பிரபாகரன் இறந்துவிட்டமையையே அவர்களுள் பலரால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியாது இருக்கின்றது; பொருள், பணம், உழைப்பு, செல்வாக்கு என எல்லாவற்றையும் கொட்டிக் கொடுத்தும் எதையுமே அடைந்துவிடமுடியவில்லை என்ற துயருக்குள்ளும் அவர்களுள் பலர் மூழ்கிப்போயுள்ளார்கள்; இருந்தாலும், ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உள்ளுணர்வு இப்போதும் அவர்களை உந்தித் தள்ளியபடி இருக்கின்றது. இலங்கைக்குள் தமிழர்ளுக்கான அரசியல் இயங்குவெளி நாற்புறமும் நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவர்கள் கருதுகின்றார்கள். அதனால், பிரபாகரனுக்குப் பின்னான காலத்தில், கட்டுப்பாடற்ற செயற்பாட்டு வல்லமையுடன் இருக்கும் தாங்களே அவர்களது மீட்பர்களாக அவதரித்திருப்பதாக அவர்களுள் பலர் நம்புகின்றார்கள். இவ்வாறான உணர்வுகளின் உந்துதலினால் தங்களது செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்துச் செல்லுகின்றார்கள்.

முதலாவது அரசியற் பரப்புரைப் பணிகள்,

மேற்குலக நாடுகளின் அரசுகளுடனும் அங்குள்ள அரசியற் கட்சிகளுடனும் பரப்புரைகளில் ஈடுபடுவது ஒரு நுட்பமான பணி. இது இராஜதந்திரத் தொடர்பாடல் போன்றது. எவ்வளவுக்கு எவ்வளவு இரகசியத் தன்மை பேணப்படுகின்றதோ, அவ்வளவுக்கு அது பயன்களைத் தருவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். எவ்வளவுக்கு எவ்வளவு விடயங்கள் வெளிப்படுகின்றதோ, அவ்வளவுக்கு அது இலங்கை அரசையே சிங்கள மக்களிடத்தில் பலப்படுத்தும். அதாவது, முன்னைய காலங்களில் பிரபாகரன் காட்டிய மூர்க்கத்தனமான எதிர்ப்பைக் காட்டி, எந்த அளவுக்குச் சிங்களவர்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்‌ஷ தன்னைத் திடப்படுத்திக்கொண்டாரோ, அதே போன்றதான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.

அதே வேளையில், தமது நலன்களுக்காகத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி நகர்த்த முற்படும் நாடுகள் தொடர்பிலும் அவதானம் தேவை. தமிழர் தரப்புக்களால் வெளிநாட்டு அரசைச் சேர்ந்தவர்களுக்கு சொல்லப்படும் செய்திகளும், கொடுக்கப்படும் தகவல்களும், அங்கு எடுக்கப்படும் பரப்புரை நடவடிக்கைகளும் இலங்கைத் தமிழர்களுக்கு நன்மைகளைக் கொண்டுவருவதற்கே பயன்படுத்தப்படும் என்பதற்கு எவ்வாறான உறுதிப்பாடுகள் உள்ளன…? அதைவிடவும் முக்கியமாக, இலங்கைத் தமிழர்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்துவதற்கு இந்த விடயங்கள் பயன்படுத்தப்படமாட்டா என்பதற்கு எவ்வகையான உத்தரவாதங்கள் உள்ளன…?

மேற்குலகம் ஓர் ஆட்சி மாற்றத்தை விரும்பக்கூடும். அவ்வளவு தான். இந்த நாட்டினைச் சமூக, பொருளாதார, இராணுவ, அரசியல் ரீதியாகத் திடப்படுத்திவிட்டு, ஆட்சியை மாற்றி தமக்கு ஏற்றவர்களிடம் நாட்டைக் கொடுப்பது மட்டும்தான் மேற்குலகத்தின் நோக்கம். தமிழர் தரப்புக்களால் உலகளாவிய ரீதியில் சொல்லப்படும் செய்திகளும், கொடுக்கப்படும் தகவல்களும், எடுக்கப்படும் நடவடிக்கைகளும் இலங்கைத் தமிழர்களது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கே நிச்சயமாகப் பயன்படுத்தப்படும் என்பதற்கு எவ்வாறான உறுதிப்பாடுகள் உள்ளன…?அதைவிடவும் முக்கியமாக, வெறுமனே இந்த ஆட்சி மாற்ற முயற்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாக ஆகிவிடாது என்பதற்கு எவ்வகையான உத்தரவாதங்கள் உள்ளன…?

இங்கே, தமிழ் பேசும் மக்கள் கேட்க வேண்டிய முதற் கேள்வி, மேற்குலகம் சாதிக்க முனைகின்ற இந்த ஆட்சி மாற்றம் நிச்சயமாகச் சாத்தியமாகும் என்பதற்கு எவ்வாறான சாதக நிலைகள் உள்ளன…?

அடுத்த கேள்வி, மாறுகின்ற ஆட்சியில் சிங்கள பௌத்தர்கள் அல்லாதோரின் உரிமைகளும் இனமானமும் மதிக்கப்படும் என்பதற்கு எவ்வாறான உத்தரவாதங்கள் உள்ளன…?

இப்போது இருக்கின்ற ஆட்சி நிறுவனமயப்படுத்திவிட்டுப் போகும் ஒரு கோட்பாட்டைக் கடந்து (institutionalisation of policy) இந்த ஆட்சி உருவாக்கிவிட்டுப் போகும் ஓர் அரசியல், இராணுவப் புறச் சூழலைக் கடந்து, இந்த ஆட்சிக் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டுவிடும் ஓர் இன மேலாதிக்க மனோ நிலையைத் தாண்டி வரப்போகின்ற அரசு பெளத்த சிங்களவர்கள் அல்லாதோருக்கு நன்மைகள் செய்யக் கூடிய சாதகங்கள் எவ்வளவு உள்ளன…?

அடுத்தது, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் புறக்கணிக்குமாறு கோருகின்ற போராட்டங்கள்.

இது ஒரு சிக்கலான பணி. இந்த நாட்டின் பொருளாதார அடித்தளத்தைத் தளர்வடையச் செய்வதை இலக்காகக் கொண்டு வெளிநாட்டுத் தமிழர்களால் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் இருக்கும் முதலாவது சிக்கல், குறிப்பிட்ட சில நபர்கள் மீதோ அல்லது குடும்பங்கள் மீதோ என்றில்லாமல், ஒட்டுமொத்தமான ஒரு நாட்டின் மீதே பொருளாதார அழுத்தங்களைப் பிரயோகிக்கும்போது முதலில் தாக்கங்களுக்கு உள்ளாகக் கூடியவர்கள் அந்த நாட்டிலுள்ள மிகவும் நலிந்த மக்கள். இலங்கையைப் பொறுத்தவரை, தற்போதைய நிலையில், அந்த மிகவும் நலிந்த தரப்பினர் தமிழ் மக்கள் தான். அப்படியிருக்கையில், தமிழ் மக்கள் மீது தாக்கங்களை ஏற்படுத்தாத வகையில் இலங்கை என்ற நாட்டின் அரசை மட்டும் பொருளாதார ரீதியாகப் பணிய வைப்பது எவ்வாறு…?

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான இன்னொரு முரண்பாடு என்னவெனில், அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இலங்கை அரசை நாலு பக்கத்தாலும் நெருக்குவதற்குக் காரணங்கள் வேறு; நிச்சயமாக இந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்குவது அவர்களது நோக்கம் அல்ல. மாறாக, இந்த நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி, இந்த நாட்டு மக்களின் பொருண்மியத் தேவைகளை நிறைவுபடுத்தி, மீண்டும் ஒரு குழப்பகரமான மனோபாவத்திற்குள் அவர்கள் சென்றுவிடாது சீர்படுத்தி, இந்த நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறுக்கத்தையும் உறுதிப்படுத்தவே அவர்கள் வேலை செய்கின்றார்கள்.

ஐரோப்பிய, ஸ்கன்டினேவிய மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகள் செய்வதற்காகப் படையெடுக்கின்றன; திருப்பிச் செலுத்தத் தேவையில்லாத உதவியாகவும் மிகக் குறைந்த வட்டி வீதத்திற்கும் பல மில்லியன் டொலர்களை தனியார் துறையின் வியாபார முன்னெடுப்புக்களுக்கு அமெரிக்கா வழங்குகின்றது; அவுஸ்ரேலியா வெளிப்படையாகவே உதவுகின்றது; சீனா தெரிந்தும் தெரியாமலும் அள்ளிக் கொடுக்கின்றது; இந்தியா தெரியாமலும் தெரிந்தும் கொடுக்கின்றது. இந்த நிலையில் இலங்கை மீது பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கு உலகத் தமிழ் அமைப்புக்கள் வகுக்கும் நுட்பங்களும் திட்டங்களும் அதற்குக் கொடுக்கப்படும் நேரமும் சக்தியும் வளமும் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்…?

மூன்றாவது, இலங்கை அரசுக்கு எதிராக வெளிநாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீதிப் போராட்டங்கள்.

குறிப்பாக, தமிழர்கள் பெருவரியாக வாழும் நாடுகளுக்கு மஹிந்த ராஜபக்‌ஷ பயணிக்கின்றபோது, அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டப் போராட்டங்களைச் செய்து – அவரை ஓடி ஒளிக்க வைத்து – அவரை அவமானப்பட வைத்து – அவரைத் திருப்பி அனுப்புகின்ற செயற்பாடுகள். இங்கே கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், ராஜபக்‌ஷவைப் பலவீனப்படுத்த எனச் செய்யப்படும் இத்தகைய போராட்டங்கள், உண்மையில், அவரது மக்களிடத்தில் அவரை மிக ஆக்ரோசமாகப் பலப்படுத்துகின்றன என்பதாகும். தன்னுடைய ஆயுதப் போராட்ட காலத்தில், தனது எதிர்ப்பு வீரியத்தை அதிகரித்ததன் மூலம் சிங்கள பௌத்த ஒற்றையினவாதக் கோட்பாட்டைப் பிரபாகரன் எவ்வாறு பலப்படுத்தினாரோ, அதற்கு ஒப்பான ஒரு பலப்படுத்தலையே வெளிநாட்டுத் தமிழர்களின் வெளிப்படையான போராட்டங்கள் ஏற்படுத்துகின்றன. இதன் விளைவு என்னவெனில், எல்லோரும் விரும்புகின்ற ஆட்சி மாற்றம் நடைபெறாமலே போகலாம்; போர்க் குற்றங்களுக்கான தண்டனைகள் வழங்கப்பட்டாலும், அதனால் தமிழர்களுக்கு எவ்வித நன்மைகளும் விளையாமலே போகலாம்.

சிங்களக் கிராமங்களில் மஹிந்த ராஜபக்‌ஷ சிங்களத்தில் ஆற்றுகின்ற உரைகளை வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் அறிவதற்கான வாய்ப்புகளே இல்லை. உள்நாட்டில் வாழுகின்ற தமிழர்கள் கேள்விப்படுவதற்கான வாய்ப்புகளே மிக மிக அரிது. அந்த உரைகள் ஒவ்வொன்றினதும் சாராம்சச் சுருக்கம் இது தான்,

“முப்பது ஆண்டு காலமாக உங்களைக் கொன்றொழித்த பயங்கரவாதிகளை நான் அழித்தேன்; பிரபாகரனை நான் கொன்றேன். இன்று இந்த நாடு அனுபவிக்கின்ற சுதந்திரத்தையும் அமைதியையும் நானே பெற்றுத்தந்தேன்; இதற்கு முன்னர் நீங்கள் வாக்களித்து வெற்றிபெற வைத்த எந்தத் தலைவரும் செய்யாததை நான் செய்தேன். இதைச் செய்ததற்காக என்னை மின்சாரக் கதிரையில் உட்கார வைப்பதற்கு உலகெல்லாம் இருக்கின்ற புலிகளின் ஆட்கள் வெளிநாட்டுச் சக்திகளோடு சேர்ந்து வேலை செய்கின்றார்கள். தமிழ் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து உங்களை விடுவித்ததற்கு வெகுமானமாக, எனக்கு மரண தண்டனையைப் பரிசளிக்க வேண்டும் என்றுதான் நான் போகின்ற நாடுகளிலெல்லாம் தமிழர்கள் ஒன்று திரண்டு போராட்டங்களை நடத்துகின்றார்கள். உங்களுக்காகவே நான் இந்த அவமானங்களைத் தாங்குகின்றேன்; உங்களுக்காக நான் எதையும் தாங்குவேன். தூக்கு மேடையில் ஏறவும் நான் தயார். தூக்குக் கயிற்றை எனது கழுத்தில் போட்டுவிட்டு, ஆட்சிக் கதிரையில் தங்களது ஆட்களை அமர்த்த வெளிநாட்டுக்காரர்களும் தமிழர்களும் முயற்சிக்கிறார்கள். உங்களுக்காக சாவைச் சந்திப்பது கூட எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், எனக்கு இருக்கும் ஒரே கவலை, என்னை வீழ்த்திவிட்டுத் தமிழர்களோடு சேர்ந்து ஆட்சியிலே அமரப் போகின்ற ஆட்கள், எங்களது பல்லாயிரம் பிள்ளைகளைகளின் உயிர்களை விலையாகக் கொடுத்து நாம் பெற்றெடுத்த இந்தச் சுதந்திரத்தை வெளிநாட்டுக்காரர்களுக்கு விற்றுவிடப் போகின்றார்கள். உங்களை அவ்வாறான ஒரு நிர்க்கதி நிலையில் விட்டுச் செல்வது மட்டும்தான் எனது கவலை. ஆனால், எனக்குத் தெரியும், நீங்கள் என்னைக் கைவிட மாட்டீர்கள். நீங்கள் என்னுடைய மக்கள்; நான் உங்களின் சேவகன். நீங்கள் என்னைச் சுற்றிக் கவசமாக எப்போதும் இருப்பீர்கள்… இருப்பீர்களா, இல்லையா?!”

இத்தகைய எரியூட்டும் உரைகளைக் கேட்டதன் பின்பு வருகின்ற தேர்தலில் சிங்கள மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்று அல்ல.

மஹிந்த ராஜபக்‌ஷவையும் அவரது ஆட்சியையும் வீழ்த்துவதற்கு ஆவேசத்தோடு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள், பிரபாகரனின் காலத்தைப் போலவே, அவரைப் பலப்படுத்துவதாகவே முடிகின்றதெனின், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் தமது திட்டங்களில் அடிப்படையான தந்திரோபாய மாற்றம் ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.

பிரபாகரனின் காலத்தைப் போல, ஒரு வரம்பிற்குள்ளேயே இயங்கவேண்டிய தேவையோ, நிர்ப்பந்தமோ இப்போது இல்லை; எவரையும் மீறாது செயற்பட முடியாது என்ற சூழலும் இல்லை. அதனால், சுயமாகவும் சுதந்திரமாகவும் மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகளின் வழியாக, புலம்பெயர்ந்த தமிழ் சமூக அமைப்புகள், தமக்கென நடைமுறைச் சாத்தியமான தந்திரோபாயங்களை வகுக்க வேண்டும்.

ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக திருச்சிற்றம்பலம் பரந்தாமன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.