Photo, AP Photo/Eranga Jayawardena

தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் சட்டங்களையும் ஒழுங்கு விதிகளையும் ஆராய்ந்து மாற்றங்களை முன்மொழிவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணை ஆணைக்குழு முன்கூட்டிய பேச்சுவார்த்தையோ அல்லது முன்னறிவிப்போ இன்றி வந்திருக்கிறது. அது பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் வரை மிகுந்த எச்சரிக்கையுடன் ஒரு இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

தற்போதைய தேர்தல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் சகலவற்றையும் ஆராய்ந்து சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான முன்மொழிவுகளைச் செய்யும் பணி ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதற்குரிய நிபந்தனைகளின் பிரகாரம் விசேட பரிசீலனைக்கு எடுக்கப்படவேண்டிய விடயங்களில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், அச்சடிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளுக்குப் பதிலாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலத்திரனியல் வாக்களிப்பை அறிமுகப்படுத்தல் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் வாக்களிப்பதற்கு வசதி செய்தல் என்பவையும் அடங்குகின்றன.

இவை மெச்சத்தக்கவை. ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை வழமைக்கு மாறான ஏற்பாடுகளையும் இது உள்ளடக்கியிருக்கிறது. உதாரணமாக, ஆட்சிமுறையின் இரு வேறு மட்டங்களில் இரு தேர்தல்களில் ஒருவர் போட்டியிடுவதற்கும் மக்களால் தெரிவுசெய்யப்பட்டால் அவர் இரு சபைகளிலும் அங்கம் வகிப்பதற்கும் வகைசெய்வதற்கான ஏற்பாட்டைக் குறிப்பிடலாம். அத்துடன், ஆணைக்குழு நியமிக்கப்பட்ட நேரமும் கவனத்திற்குரியதாகிறது.

உத்தேசிக்கப்படும் மாற்றங்கள் கடுமையான சிந்தனைக்கு எடுக்கப்படவேண்டியவையாக இருக்கின்றன.

முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு ஆணைக்குழுவுக்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்த தேர்தலும் நடைபெறுவது சாத்தியமில்லை என்றாகிறது. மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் ஒரு குறிப்பிட்ட காலம் எடுக்கும்.

ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அமைச்சரவையின் அங்கீகாரத்துக்குப் பிறகு அவற்றை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கவேண்டும்.

அதையடுத்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக அவை அரசியலமைப்புக்கு இசைவானவையா இல்லையா என்பதைத் தீர்மானிக்கக் கோரி தாக்கல் செய்யப்படக்கூடிய மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரித்து அதன் தீரப்பைக் கூறவேண்டும்.

ஆணைக்குழு அதற்கு ஒப்படைக்கப்பட்டிருக்கும் பணியை ஆறு மாதங்களில் நிறைவுசெய்வது மிகவும் கடினமானதாக இருக்கும். முன்மொழிவுகளை விரிவான பொதுக் கலந்துரையாடலுக்கு  உட்படுத்த வேண்டியிருக்கும் இதற்கு நீண்டகாலம் தேவை. ஒரு வருடம் கூட தேவைப்படக்கூடும் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் சட்டவரைவு ஒன்றை தயாரித்திருப்பதாக கடந்தவார முற்பகுதியில் நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஷ செய்த இன்னொரு அதிர்ச்சியான அறிவிப்புக்குப் பிறகு விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி திடீரென்று நியமித்தது ஒரு புதிராக இருக்கிறது.

விஜேதாச முன்வைத்திருக்கும் தேர்தல் சீர்திருத்த யோசனைகளின் பிரகாரம் 225 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் 160 உறுப்பினர்கள் தொகுதி அடிப்படையிலும் மீதி 65 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்களிப்பு முறையின் கீழ் பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியல் மற்றும் மாவட்ட பட்டியலின் மூலமும்  தெரிவுசெய்யப்படுவர்.

விஜேதாச ராஜபக்‌ஷவின் யோசனைகள் புதிதாக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் பொறுப்பு எல்லைக்குள் வருகின்றன. கிட்டத்தட்ட ஏககாலத்திலான இரு அறிவிப்புக்களும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியவை.

அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்களை நடத்தவேண்டிய காலம் நெருங்கும்போது தேர்தல் சீர்திருத்தங்களும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான எல்லை நிர்ணய செயன்முறைகளும் அரசியல் மோதலுக்கு வழிவகுக்கக்கூடிய உறுதியற்ற ஒரு சூழலை உருவாக்கக்கூடியவையாக இருக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு

தேர்தல் காலப்பகுதி ஒன்றில் பணமும் நம்பகத்தன்மையும் மிகவும் முக்கியமான தேவைகளாக இருக்கும் நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி விரைவில் விடுவிக்கப்படவிருப்பதாக கடந்தவாரம் வந்த அறிவிப்பு அரசாங்கத்தைப் பொறுத்தவரை மகிழ்ச்சியான ஒரு செய்தியாகும். அரசியல் அரங்கில் தனது போட்டியாளர்களை விடவும் சர்வதேச வளங்களை பெரிய அளவில் பெற்றுக் கொள்ளக்கூடிய தகுதிநிலையில் இருப்பதாக அரசாங்கம் மக்களை நம்பவைப்பதற்கு இது உதவும்.

அரசாங்கத்துக்கு சர்வதேச முறைமைக்குள் (சர்வதேச நாணய நிதியமும் அதன் ஒரு அங்கம்) வலுவான ஆதரவு இருக்கிறது என்பதற்கு இது ஒரு அறிகுறியாகும். அதற்குரிய பெருமை ஜனாதிபதிக்கே உரியது எனலாம்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களுக்கும் அதன் இரண்டாவது தவணைக்  கொடுப்பனவின் தாமதத்துக்கும் அரசாங்கத்தின் ஒரே தெளிவான பதிலளிப்பு மின்கட்டணங்களின் அதிகரிப்பாகவே இருந்தது. பட்ஜெட் பற்றாக்குறையை சிறியதாக்க வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு இணங்க  வருவாயை அதிகரிக்க இவ்வாறு அரசாங்கம் செய்யவேண்டியிருக்கிறது. இது பொருளாதாரத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதுடன் சர்வதேச கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை துரிதப்படுத்தவும் உதவும் என்று அரசாங்க அமைச்சர்கள் கூறியிருக்கிறார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியின் இரண்டாவது தவணைக் கொடுப்பனவு விடுவிப்பு  எதிர்பார்க்கப்பட்டதை விடவும் விரைவாக வந்திருக்கிறது. இரண்டாவது தவணைக்  கொடுப்பனவை பெறுவதற்கு அரசாங்கத்தின் வருவாய் சேகரிப்பு போதுமானதாக இல்லை என்று சர்வதேச நாணய நிதியம் முன்னர் அறிவித்திருந்தது.

ஆட்சிமுறை தொடர்பிலான பிரச்சினை மேலும் கடுமையானதாகியிருக்கிறது என்று தெரிகிறது. கடுமுனைப்பான ஆட்சிமுறைப் பலவீனங்களையும் ஆழமாக வேரூன்றிவிட்ட ஊழலையும் கையாளுவதற்கு முன்னுரிமை கொடுத்து முன்னெடுக்கவேண்டிய 16 நடவடிக்கைளை உள்ளடக்கிய ஆட்சிமுறை குறைபாடுகள் (Governance Diagnostic Assessment) மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருக்கிறது.

அபிவிருத்திக்கு முன்தேவையாக இருக்கும் இந்த விவகாரங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மெச்சத்தக்கவையாக இருக்கவில்லை.

ஜனநாயக நியமங்களையும் சட்டத்தின் ஆட்சியையும் முறையாக பின்பற்றுவதில் அரசாங்கத்தின் கடந்தகால நடத்தைகள் நம்பிக்கை தருபவையாக இருக்கவில்லை. உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு அதனாலியன்றவரை முயற்சிகளை மேற்கொண்ட  போதிலும், அரசாங்கம் அந்தத் தேர்தல்களை ஒத்திவைத்தது.

உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தும் நோக்கத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல் ஆணைக்குழுவுக்கு விடுவிக்காமல் நிறுத்தி வைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் கூட அரசாங்கம் மதிக்கத் தவறியது.

ஏனைய சர்வதேச கடன் வழங்குநர்களுக்கு ஏற்புடையதான கடன் நிவாரணம் தொடர்பில் இலங்கையுடன் பூர்வாங்க உடன்பாட்டை எட்டியிருப்பதாக சீன அரசாங்கம் அறிவித்த கையோடு சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக்  கொடுப்பனவு விடுவிக்கப்படுவதாக  அறிவிப்பு வந்திருப்பது முக்கியமாக கவனிக்கவேண்டிய அம்சமாகும்.

இரண்டாவது தவணைக் கொடுப்பனவை தற்போதைக்கு வழங்குவதில்லை என்று இரு வாரங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியம் எடுத்த தீர்மானத்தில் செய்யப்பட்ட மாற்றத்தின் மீது இலங்கை அரசாங்கத்துக்கும் சீனாவின் எக்ஸிம் வங்கிக்கும் இடையில் காணப்பட்ட உடன்பாடு தாக்கத்தைச் செலுத்தவில்லை என்று கூறிவைக்க வேண்டும் என்று நாணய நிதியத்தின் அதிகாரிகள் உணர்ந்தமையும் கவனிக்கத்தக்கது.

இது சர்வதேச வல்லாதிக்க முகாம்களுடன் பேச்சுவார்த்தைகள் என்று வரும்போது மிகவும் விவேகமாக அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு தலைவர் என்ற ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் மதிப்பை மேலும் உயர்த்தியிருக்கிறது.

ஆனால், நாட்டுக்குள் பொதுமக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதில் அவருக்கு உள்ள சவால் தொடரவே செய்கிறது. அதற்கு பாதுகாப்புப் படைகள் மற்றும் பாதுகாப்புச் சட்டங்கள் மூலமாக மக்களை அடக்குவதற்குப் பதிலாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்கள் மூலமாக மக்களின் ஆணையை வென்றெடுப்பது அவசியமாகும்.

ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கொடுப்பனவைப் பெறும் கையோடு  ஜனாதிபதி விக்கிரமசிங்க அரசாங்கம் அண்மைய எதிர்காலத்தில் தேர்தல்களை நடத்தாமல் அதிகாரத்தில் இருப்பதற்கு திட்டமிடுகிறது என்று மக்கள் மத்தியில் உள்ள ஐயத்தை தணிக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறார் போன்று தெரிகிறது.

தேர்தல்களை தற்போதைக்கு தவிர்ப்பது இடம்பெற்றுவருகின்ற பொருளாதார மேம்பாடுகளை வலுப்படுத்துவதற்கு அவசியமானது என்ற வகையிலான கருத்துக்களை அரசாங்கத்தின் அரசியல் நேச சக்திகளுக்கு புறம்பாக சில வர்த்தகத்துறை தலைவர்களும் பொருளாதார நிபுணர்களும் வெளியிட்டு வந்திருக்கிறார்கள்.

முழுமையான நிலைவரமாகக் கூறமுடியாவிட்டாலும், மக்களில் பெரும்பான்மையானவர்களின்  வாழ்க்கைத்தரங்கள் சீர்கெட்டுக்கொண்டே போகிறது என்பது கவலைக்குரிய யதார்த்தமாகும். இவ்வருடம் வறுமை மட்டம் 25 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும் அடுத்த வருடம் அது 28 சதவீதமாகும் என்றும் உலக வங்கி புள்ளிவிபரங்கள் காட்டுகின்ற அதேவேளை உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் மந்தபோசாக்கு அதிகரிப்பதை காட்டுகின்றன. 20 சதவீதத்துக்கும் குறைவான மக்கள் ஆதரவையே அரசாங்கம் கொண்டிருக்கிறது என்று கருத்துக்கணிப்புகள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.

கடந்த ஒரு சில வாரங்களாக வெளியான பல்வேறு அறிவிப்புகள் அரசாங்கம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் ஒத்திவைப்பதற்கு அல்லது சாத்தியமானால் நடத்தாமலே விடுவதற்கு உத்தேசிக்கிறது என்ற ஊகங்கள் கிளம்புவதற்கு  வழிவகுத்திருக்கிறது.

நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எவரும் போட்டியிடக்கூடாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன அண்மையில் கூறியிருந்தார்.

“அவ்வாறு எவரும் போட்டியிட முன்வராவிட்டால் தற்போதைய ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருந்து நாட்டை முன்னேற்றக்கூடியதாக இருக்கும். போட்டியிட விரும்பும் எவரும் தங்களின் பொருளாதாரச் செயற்திட்டங்களை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ப்ஜெட் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். அந்த யோசனைகளை பட்ஜெட் அலுவலகம் பரிசீலனைக்கு உட்படுத்தி அவை யதார்த்தபூர்வமானவையா இல்லையா என்பதைக் கூறமுடியும். அந்த அலுவலகத்தினால் நிராகரிக்கப்படக்கூடிய செயற்திட்டத்தை எந்தவொரு வேட்பாளரும் எந்தத் தேர்தலிலும் மக்கள் முன்னிலையில் வைக்க முடியாது. தவிரவும், இலங்கை வங்குரோத்து அடைந்துவிட்டது என்று உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு நிலைவரத்துக்கு மத்தியில் வேறு மாற்று வழி இல்லை. இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்காக நிதியைச் செலவிடுவது விவேகமானதா என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும்” என்று வஜிர அபேவர்தன கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட தேசிய மகாநாட்டில் கடந்த வாரம் உரையாற்றிய ஜனாதிபதி விக்கிரமசிங்க அரசாங்கம் மீதான தனது அதிகாரப்பிடி குறித்து மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருப்பதை அரசியலமைப்பின் பிரகாரம் உரிய கால அட்டவணையில் தேர்தல்கள் நடைபெறும் என்ற அவரின் கூற்று உணர்த்தியது.

அடுத்தவருடம் ஜனாதிபதி தேர்தலும் அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலும் நடத்தப்படும் என்று  அவர் கூறினார். 2025 உள்ளூராட்சி தேர்தல்கள் 2025 முதல் அரையாண்டுக்குள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற ஜனாதிபதியின் அறிவிப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டிய தேவை இருக்கிறது. அந்தத் தேர்தல்கள் இவ்வருடம் மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டிருக்கவேண்டியவையே தவிர மேலும்இர வருடங்களுக்கு பிற்போடக்கூடியவை அல்ல.

மேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு, சர்வஜன வாக்கெடுப்பு, நாடாளுமன்ற தேர்தல் சீர்திருத்தம் குறித்தும் அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. இவை தனித்தனியாகவும் கூட்டாகவும் தேர்தல்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. தேர்தல்கள் தொடர்பில் அடாத்தான முறையில் தீர்மானங்களை எடுக்கக்கூடாது.

தங்களது அதிகாரம் தற்காலிகமானது என்பதையும் என்ன காரணமாக இருந்தாலும் மக்களின் வாக்குரிமையை நிராகரிப்பதற்கு தங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதையும் அதிகாரத்தில் இருப்பவர்கள் விளங்கிக் கொள்ளவேண்டியது அவசியமாகும்.

கலாநிதி ஜெகான் பெரேரா