படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம்

ஜனாதிபதித் தேர்தல் களம் மலையகத்திலும் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஏதிர்பார்க்காதவகையில் மைத்திரிபால சிறிசேனா பொது வேட்பாளராக களமிறங்கியதால் மலையக அரசியல் வாதிகள் பலர் ஆடிப்போயுள்ளனர். குறிப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செய்வதறியாது தினறுகின்றது. ஆறுமுகம் தொண்டமான் பொது எதிரணிக்கு மாறுவது பற்றியும் யோசித்திருந்தார். ஆனாலும், அமைச்சர்களுடைய கோவைகள் தன் கையில் உள்ளன என ஜனாதிபதி அறிவித்ததும் ஆறுமுகம் அடங்கிவிட்டார்.

மலையக மக்கள் மஹிந்தவின் இனவாதம் காரணமாக அவரை ஆதரிக்க பெரியளவிற்கு விரும்பவில்லை. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசுடன் நிற்பதால் தான் ஓரளவு ஆதரவு கிடைக்கின்றது. தோட்டப்புறங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க கட்டமைப்பு வலுவாக உள்ளது. அங்கு மக்களும் தங்களின் பிரச்சினை உட்பட பல்வேறு விவகாரங்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் தங்கியுள்ளனர். இதனால், அது கூறும் வேட்பாளரையே ஆதரிக்க முற்படுகின்றனர்.

ஆனால், நகர்ப்புற மலையக மக்களின் நிலை அவ்வாறானதல்ல, அவர்களை தோட்ட மக்களுடன் ஒப்பிடும் போத ஓரளவிற்கு சுயாதீனமானவர்கள். அரசியல் விடயங்களை நுணுக்கமாகப் பார்க்கும் ஆற்றலும் கொண்டவர்கள். இதனால், சுயாதீனமாகச் சிந்தித்து வாக்களிக்க முற்படுகின்றனர்.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் தோட்டப்புற மக்கள் அரச கட்சிக்கும், நகரப்புற மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதிகளவில் வாக்களித்திருந்தனர். அத்தேர்தலில் ஏறத்தாழ 50 வீதமான வாக்குகள் அரசிற்கும் மீதி 50 வீதமான வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கிடைத்திருந்தன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வாக்கு வங்கி அதிகளவில் சரிந்திருந்தது. அரசின் மீதான கோபமே இதற்கு பிரதான காரணம்.

இந்தத் தேர்தலில் வாக்குவங்கி மேலும் சரியலாம் என்ற பயம் ஆறுமுகம் தொண்டமானுக்கு உண்டு. இதனால்தான் எதிர்த்தரப்புக்கு மாறினால் என்ன என யோசிக்கத் தொடங்கியுள்ளார். இவருக்கு ஜனாதிபதித் தேர்தலை விட நாடாளுமன்றத் தேர்தல் பற்றித்தான் கவலை அதிகம். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அரசுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு நுவரெலியா மாவட்டத்திலிருந்து 03 ஆசனங்களையும், தேசியப்பட்டியலிருந்து 01 ஆசனத்தையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றிருந்தது. இதன் ஆதரவுடன் மாவட்டத்தில் முதல்நிலைக்கு வந்திருந்ததால் அரச கட்சிக்குப் போனஸ் ஆசனமும் கிடைத்திருந்தது.

தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ராதாகிருஸ்ணனும், இராஜதுரை, ஆறுமுகம் தொண்டமானின் அடாவடித்தனத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வெளியேறினர் என்பது வேறு கதை. இவர்களில் ராதகிருஸ்ணன் மலையக மக்கள் முன்னணியில் இணைந்து அதன் அரசியல் பிரிவுத்தலைவராக வந்ததுமல்லாமல், அரசுடன் இணைந்து பிரதி அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார். இராஜதுரை, திகாம்பரத்தின் கட்சிக்கு மாறி அங்கும் நிற்க முடியாமல் தனது இருப்பைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் அரச கட்சிகள் போட்டியிட்டால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கு ஒரு ஆசனத்திற்கு மேல் கிடைப்பது கடினம். சில வேளைகளில் இரண்டு ஆசனம் கிடைக்கலாம். தேசியப்பட்டியல் மூலம் ஒரு ஆசனம் கிடைக்கும். மொத்தம் 03 ஆசனங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி முதலாம் நிலைக்கு வந்தால், அங்கு 03 தமிழ் ஆசனங்கள் கிடைக்கக் கூடியதாக இருக்கும். இது ஐக்கிய தேசியக் கட்சி மூலம் வெற்றி பெறும் மலையகக் கட்சிகளை மேல் நிலைக்கு கொண்டு செல்லும் என்ற அச்சம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கு உண்டு.

மலையக மக்கள் முன்னணி இராதாகிருஸ்ணனுக்கு பிரதி அமைச்சர் பதவியும், அரவிந்த குமாருக்கு ஜனாதிபதியின் இணைப்பாளர் பதவியும் கொடுத்தவுடன் சற்று அடங்கியிருந்தது. ஆனால், இன்று எதிர்த்தரப்பு பலமானவுடன் யோசிக்கத் தொடங்கியுள்ளது. அதற்கு ஜனாதிபதி தேர்தலைவிட நாடாளுமன்றத் தேர்தல் பற்றித்தான் கவலை அதிகம். அரச கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டால் தமக்கு ஒரு ஆசனம் கூட கிடைப்பது கடினம் என்பது அதற்கு நன்றாகவே தெரியும். இராஜதுரை தனது இருப்பைப் பாதுகாப்பதற்காக முந்திக்கொண்டது போல தானும் முந்திக் கொண்டால் என்ன என அது தற்போது நினைக்கின்றது. மலைக மக்கள் முன்னணியின் செயலாளர் லோரன்ஸ் இதன் அடிப்படையில் தான் மஹிந்தரை ஆதரிப்பது என்ற தமது முன்னைய முடிவினை பரிசீலனை செய்யவிருப்பதாக பத்திரிகைக்கு அறிக்கை விட்டிருந்தார். ஆனால், மஹிந்தர் ஐக்கிய தேசியக் கட்சிப் பக்கம் இக்கட்சி செல்வதை அனுமதிக்கமாட்டார் போலவே தெரிகின்றது.

திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்திற்கும் எதிர்காலம் பற்றிய கவலை உண்டு. ஆனாலும், கிடைத்த பிரதி அமைச்சர் பதவியை உதறி எறிவதற்கு அது தயாராக இல்லை. இராஜதுரை தனது கட்சியில் வந்து சேர்ந்த போது அவருக்குரிய கௌரவத்தைக் கொடுத்திருந்தால் கட்சி சற்றுப் பலமாக இருந்திருக்கும். தலைமைத்துவப் போட்டி அதற்கு இடம் கொடுக்கவில்லை.

வட கிழக்கு வம்சாவளியான சிறிரங்கா சக்தி தொலைக்காட்சி கொடுத்த மாயையில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவானார். அங்கு தனது எதிர்காலத்தை நிச்சயப்படுத்திக் கொள்வது கடினம் என்பதால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசின் உதவியுடன் களமிறங்க முடிவு செய்தார். வடமாகாண சபைத் தேர்தலின் போது அதற்கான முயற்சிகளையும் செய்தார், ஆனால், தமிழ்த் தேசிய அரசியலுக்கு முன்னால் அவரது பம்மாத்து அரசியல் அங்கு எடுபடவில்லை. அரசும் அவருடன் பெரியளவிற்கு ஒத்துழைக்கவில்லை. டக்ளஸின் எதிர்ப்பு வேறு. இதனால், நுவரெலியா மாவட்டத்திற்கே மீண்டும் திரும்பிவிட்டார். முன்னர் போல சக்தி தொலைக்காட்சி மாயைகள் நுவரெலியாவில் எடுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் எனக் கூறமுடியாது.

மலையகத்தின் மிகப் பெரிய துரதிஷ்டம் அனைத்துக் கட்சிகளும் அரசுடன் இணைந்திருப்பது தான். தொண்டமான் உருவாக்கிவைத்த கலாச்சாரம் இது. அரசுடன் இணைவதன் மூலமே மலையக மக்களின் நலன்களைப் பேணலாம் என்பது அவரது கொள்கையாக இருந்தது. அவருக்காவது அரசுடன் பேரம் பேசி சிலவற்றைப் பெற்றுக் கொள்ளும் ஆளுமை இருந்தது. இப்போது உள்ள தலைவர்களிடம் அந்த ஆளுமை மருந்திற்குக் கூட கிடையாது.

அனைத்துக் கட்சிகளும் மஹிந்தவின் கூடாரத்திற்குள் ஒதுங்கியிருப்பதனால் இக் கூட்டங்களின் கோரிக்கைகளுக்கு பெரியளவில் செவிசாய்க்கவேண்டும் என்ற அவசியமும் மஹிந்தருக்கு இருக்கவில்லை. வெறும் அடிமைக் கூட்டங்கள் போலவே அரசினால் அவை மதிக்கப்படுகின்றன.

மலையகக் கட்சிகள் அனைத்தும் அரசுடன் இணைந்திருப்பதால் மலையக மக்களது பிரச்சினைகளை எடுத்துக்கூறுவதற்கு கட்சிகள் எவையும் இல்லை. ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனம் என்ற வகையில் அது பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கின்றது. மலையகத் தேசிய இனத்தை தாங்கு தூண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பன திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன. எதிர்க்கட்சி அரசியல் மூலவே தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் இவற்றை பேசுபொருளாக்கி பாதுகாப்புப் பொறிமுறைகளைக் கண்டறிய முடியும். எந்த வேலைத்திட்டத்தை நகர்த்துவதற்கு இந்த மலையகக் கட்சியும் தயாராக இல்லை. தங்களது இருப்பைப் பாதுகாப்பதற்காக மலையகத்தில் தேனும் பாலம் ஓடுவது போன்ற தோற்றத்தை இக்கட்சிகள் கொடுக்கப்பார்க்கின்றன.

அனைத்து மலையகக் கட்சிகளும் அரசிடம் சரணடைந்து இருப்பதால் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கின்ற மலையக மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை நோக்கி நகர்கின்றனர். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியும் இந்த மக்களுக்காக எதுவும் செய்யப்போவதில்லை. இந்த மக்களின் பிரஜா உரிமையையும், வாக்குரிமையையும் பறித்த கட்சியிடம் எதிர்பார்ப்பதற்கு பெரிதாக ஏதுமில்லை.

அதுவும் இந்தத் தேர்தலில் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் அனைத்தும் வெற்றுக் காசோலையில் கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்றே பொது எதிரணி எதிர்பார்க்கின்றது. இந்நிலையில், மலையக மக்களின் கோரிக்கைகளை எப்படித்தான் நிபந்தனை ஆக்கமுடியும்.

மலையகத்தைப் பொறுத்தவரை மலையகக் கட்சிகள் கையாலாகாத நிலையில் உள்ளன. மஹிந்தரின் தாழ்வாரத்தில் ஒதுங்கியிருக்கின்ற இரு பிரதான இடதுசாரி சிங்களக் கட்சிகளும் மலையக மக்களை எப்படி ஒடுக்குவது என்பதிலேயே கவனமாக இருக்கின்றன. இந்நிலையில், கட்சி அரசியலுக்கு அப்பாலான மலையக சிவில் சமூகமே மலையகத்தின் எதிர்காலத்தை கையில் எடுக்கவேண்டும். இது ஆரோக்கியமான கலந்துரையாடல்களை நடாத்தி மக்களை அமைப்பாக்கி அழுத்தம் கொடுப்பதன் மூலமே மலையக அரசியல்வாதிகளையும் சரியான பாதையில் கொண்டுவர முடியும்.

இன்று மலையகத்தின் ஆயிரக்கணக்கான மலையக இளைஞர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக கொழும்பில் வசிக்கின்றனர். ஒப்பீட்டு ரீதியில் இவர்கள் சுயாதீனமானவர்கள். பலதரப்பட்டவர்களுடன் உரையாடும் வாய்ப்பு இருப்பதனால் புலமை ரீதியாக மலையக அரசியலைப் பார்க்கும் ஆற்றலும் இவர்களுக்கு உண்டு. இவர்கள் ஒரு சக்தியாவதன் மூலம் வலுவான ஒரு சிவில் சமூகத்தை மலையகத்தில் வாழ்பவர்களையும் இணைத்து கட்டி எழுப்பமுடியும். சிங்கள முற்போக்கு சக்திகளின் ஒத்துழைப்பையும் வட கிழக்கு தேசிய சக்திகளின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

சம்பந்தப்பட்டவர்கள் இது பற்றி சிந்திப்பார்களா?