படம் | TAMILGUARDIAN

தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு தனிக் கட்சியாக பதிவுசெய்வது தொடர்பான விவகாரம் மீண்டும் தலைநீட்டியிருக்கிறது. கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்ய வேண்டும் என்னும் கோரிக்கை கடந்த ஜந்து வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. எனவே, இது ஒரு புதிய கோரிக்கையோ அல்லது அரசியல் வாசகர்கள் அறியாத சங்கதியோ அல்ல. ஆனால், இதுவரை இந்தப் பிரச்சினைக்கான காத்திரமான தீர்வை எவராலும் காண முடியவில்லை. இதனை கூட்டமைப்பிலுள்ள தலைவர்கள் எவ்வாறு பரபஸ்பர விட்டுக்கொடுப்புடன் கையாளப்போகின்றனர் என்பதிலும் தெளிவற்ற ஒரு நிலையே காணப்படுகிறது. கூட்டமைப்பை ஒரு தனி அரசியல் கட்சியாக மாற்றியமைப்பதில் உள்ள தடைகள் என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது புலிகளின் ஆயுத பலத்தின் வாயிலாக தமிழர் அரசியல் அரங்கிற்கு அறிமுகமான ஒன்றாகும். இது அரசியல் வாசகர்களுக்கு புதிய விடயமும் அல்ல. அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதே வன்முறை அரசியலை நியாயப்படுத்துவதற்கான ஜனநாயக வடிவமாகவே தமிழ் சூழலுக்கு அறிமுகமாகியது. இதன் காரணமாகவே தெற்கின் அரசியல் தரப்பினர் கூட்டமைப்பை புலிகளின் பதிலியாக பார்க்க முற்பட்டனர். இன்றும் தெற்கின் கடும்போக்குவாதிகளின் பார்வையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டவில்லை. தெற்கின் கடும்போக்குவாதிகளின் அப்படியான புரிதலுக்கு, கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் சிறிதரன் போன்ற கடும்போக்குவாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வப்போது தெரிவித்துவரும் கருத்துக்களும் ஒரு காரணமாகும். இது தொடர்பில் இப்பத்தி முன்னரும் சில விடயங்களை பதிவுசெய்திருக்கிறது. இதிலுள்ள முரண்நகை, முன்னாள் இயக்கங்கள் தொடர்பில் கூட்டமைப்பில் உள்ளவர்கள் மாறுபாடான அபிப்பிராயங்களை தெரிவிக்கும் போது சிறிதரன் போன்றவர்கள் அது பற்றி எதுவும் பேசுவதில்லை. ஒரு வேளை வன்முறை அரசியலிலிலும் நல்ல வன்முறை அரசியல் – கெட்ட வன்முறை அரசியல் என்றவாறான வேறுபாடுகள் இருக்கின்றன போலும். ஒரு தகவலுக்காகவே இதனை குறிப்பிட்டேன். எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது மிதவாதிகளது முயற்சியாலோ அல்லது தற்போது கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஏனைய முன்னாள் போராட்ட இயக்கங்களின் முயற்சியாலோ உருப்பெற்ற ஒன்றல்ல. மாறாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் முயற்சியினால் உருவாகிய ஒன்றாகும். ஆனால், அன்றைய சூழலின் நிலைமைகளை புரிந்துகொண்டு, அனைவரும் புலிகளின் விரும்பத்திற்கு இணங்கினர். புலிகள் பலமாக இருந்தவரைக்கும் கூட்டமைப்பில் யார் பெரியவர், யாருக்கு அதிகமான நாடாளுமன்ற பிரதிநிதிகள் இருக்கின்றனர் போன்ற விவாதங்கள் ஏதும் எழவில்லை. ஆனால், புலிகளின் வீழ்சியைத் தொடர்ந்தே இப்படியான விவாதங்கள் மேலெழுந்தன; முரண்பாடுகள் தோன்றின.

கடந்த ஜந்து வருடங்களாக அவ்வப்போது இந்த முரண்பாடு பூதாகரமாக மேலெழுவதும், பின்னர் அடங்கிப் போவதும், மீண்டும் திடிரென்று மேலெழுவதாகவும் தொடர்கிறது. இதனை இப்படியே தொடரவிடுவது நல்லதா? இது குறித்து சிந்திக்க வேண்டிய பொறுப்பு தமிழ் புத்திஜீவிகள், ஊடகத் தரப்பினர் மற்றும் கருத்துருவாக்கப் பிரிவினர் ஆகியோருக்கு இல்லையா? ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைசார் அரசியலுக்கு தலைமைதாங்குவதாக முகம்காட்டும் கூட்டமைப்பானது, தனக்குள் இருக்கின்ற பிரச்சினையையே நிவர்த்தி செய்யமுடியாமல் தடுமாகின்றதெனின் அதன் பொருள் என்ன? புலிகளின் அழிவைத் தொடர்ந்து கூட்டமைப்பே, தமிழ் மக்களின் பிரதான அரசியல் தலைமையாக உள்ளுக்குள்ளும் வெளியிலும் அங்கீகாரம் பெற்றது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம், கூட்டமைப்பிலுள்ள எந்தவொரு கட்சியையும் தமிழ் மக்கள் தெரிவு செய்யவில்லை மாறாக, கூட்டமைப்பையே தெரிவு செய்திருக்கின்றனர். எனவே, கூட்டமைப்பை ஒரு வலுவான அரசியல் கட்சியாக மாற்ற வேண்டுமென்னும் கோரிக்கையில் தவறில்லை. மக்களின் ஜனநாயக ரீதியான முடிவுக்கு சட்ட அந்தஸ்த்தை வழங்குவது தொடர்பில் முரண்பட ஏதும் இல்லை. அந்த வகையில் நோக்கினால் கூட்டமைப்பு பதிவு விவகாரத்தில் மக்கள் விரோத நோக்கம் எதுவும் இல்லை. ஒரு உயர்ந்த நோக்கமே தெரிகிறது.

தமிழர் அரசியல் வரலாற்றில் முரண்பட்ட தரப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்ற சந்தர்ப்பங்களென்று இரண்டைத்தான் குறிப்பிட முடியும். ஒன்று 1985இல் இடம்பெற்ற திம்பு பேச்சுவார்த்தை. இதன்போது அப்போது மிதவாதிகளின் களமாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் பிரதான ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அனைத்தும் ஒரு நோர்கோட்டில் இணைந்திருந்தன. அதன் பின்னர் இடம்பெற்ற சந்தர்ப்பமாக புலிகள் பலமாக இருந்த காலத்தில், புலிகளின் தலைமையை அங்கீகரித்து மிதவாத அமைப்பான தமிழரசு கட்சியும் ஏனைய பிரதான இயக்கங்களும் ஒன்றிணைந்தன. ஒரு சிலர் இதில் விடுபட்டிருந்தாலும் கூட ஒப்பீட்டடிப்படையில் திம்புவிற்கு பின்னர் இடம்பெற்ற ஒரு முக்கிய அனைத்துக் கட்சி உடன்பாடென்று இதனை குறிப்பிடலாம். திம்பு பேச்சு வார்த்தையின் போதான இணக்கப்பாட்டிற்கும் கூட்டமைப்பிற்கான இணக்கப் பாட்டிற்கும் அடிப்படையிலேயே வேறுபாடுண்டு. ஆனால், தமிழர் அரசியல் அரங்கில் மிதவாதிகளும் ஆயுத போராட்ட இயக்கங்களும் ஒரு புரிதலும் சந்தித்துக் கொண்ட சூழல் என்னும் அடிப்படையிலேயே இதனை குறிப்பிடுகின்றேன். இன்று கூட்டமைப்பை எடுத்துக் கொண்டால் அதன் வெளித்தோற்றத்தில் ஒரு பண்முகத்தன்மை தெரிகிறது. ஆனால், அது உள்ளுக்குள் தெரியவில்லை. இதுதான் அனைத்து முரண்பாடுகளுக்குமான அடிப்படையான காரணம். இந்த முரண்பாடுகள் கழையப்படாவிட்டால் அனைத்து தரப்பினரும் ஓரணியில் நிற்பதற்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு வீணாகும்.

இங்கு நான் கூறவந்த முக்கியமான விடயம் வேறு. அதனை குறிப்பிடுவதற்காகவே சில விடயங்களைப் பதிவுசெய்ய வேண்டி ஏற்பட்டது. புலிகளை வீழ்த்திய ஒரு அரசு என்னும் வகையில், ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசு, தமிழ் தேசியக் கூட்டமைப்போடு வலிந்து பேசுவதற்கான அவசியம் ஏதும் தமக்கில்லையென்றவாறே செயலாற்றி வருகிறது. இத்தகையதொரு சூழலில் ஒப்பீட்டளவில் கூட்டமைப்பு ஒன்றே பேரம் பேசுவதற்கான பலத்தை கொண்டிருக்கிறது. இத்தகையதொரு சூழலில் கூட்டமைப்பு வலுவிழக்குமாயின் அரசை தமிழர் நிலையில் எதிர்கொள்வது இயலாத ஒன்றாகலாம். இந்த நிலையில், கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக உருமாற்றும் விவகாரம் வெறும் உள்முரண்பாடாக தொடருமாயின், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயர் வேறு எவரதும் கைகளுக்கு செல்வதற்கான வாய்ப்பை உதாசீனம் செய்ய முடியாது. கூட்டமைப்பு பதிவு விவகாரம் கடந்த ஜந்து வருடங்களாக இழுபறிப்படும் நிலையில், ஒரு சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரை தங்களுக்கு தருமாறு தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். இது பற்றி நான் அறிந்த தகவல்களின்படி, கூட்டமைப்பினர் தொடர்ந்தும் தங்களது நிலைப்பாட்டை தேர்தல் ஆணையாளருக்கு வழங்காவிடின், அவர் வேறு ஒருவருக்கு குறித்த பெயரை வழங்கக் கூடிய சாத்தியம் அதிகமாக காணப்படுகிறது. தேர்தல் ஆணையாளர் இது பற்றி ஏலவே கூட்டமைப்பினருக்கு அறிவுறுத்தியுமிருக்கிறார். ஏனெனில், தற்போதிருக்கின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயருக்கு சட்டரீதியாக எவரும் உரித்துக் கூற முடியாது. தேர்தல் ஆணையாளர் தொடர்ந்தும் கூட்டமைப்பின் தலைவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கவும் மாட்டார். அந்த வகையில் பார்த்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயருக்கு ஆபத்து நெருக்கிக் கொண்டிருக்கிறது என்பதில் ஜயமில்லை. ஆனால், இந்த ஆபத்தை ஏன் கூட்டமைப்பின் தலைவர் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர்?

தற்போதைய நிலையில் கூட்டமைப்பின் முன்னாள் ஒரேயொரு தெரிவுதான் உண்டு – அதாவது, கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஏதாவதொரு கட்சியின் பெயரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று மாற்ற வேண்டும். அது தமிழரசு கட்சியாக இருப்பின் தற்போதிருக்கின்ற வீட்டு சின்னத்தையே கூட்டமைப்பின் சின்னமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழரசு கட்சி அதற்கு இணங்காவிடின் ஏனைய கட்சியொன்றின் பெயரை மாற்றலாம். புதிய சின்னமொன்றில் கூட்டமைப்பு தன் அரசியலை தொடரலாம். ஏனெனில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு புதிய கட்சியாக தற்போதைக்கு பதிவுசெய்ய முடியாது. ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட ஒரு தேர்தல் நிலுவையில் இருக்குமிடத்து புதிய கட்சிகளை பதிவுசெய்ய முடியாது. ஆனால், கட்சியொன்றின் பெயரை மாற்ற முடியும். கூட்டமைப்பின் தலைவர்கள் விடயங்களை குறைத்து மதிப்பிடு வார்களாயின் அதன் விளைவை அவர்கள் நிச்சயம் எதிர்கொள்ள நேரிடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயர் நிச்சயம் பிறிதொருவரின் கைகளுக்கு போகநேரிடம். அவ்வாறு கூட்டமைப்பு பிறிதொரு அணியின் கைகளுக்கு செல்லுமாயின் இதுவரை கூட்டமைப்பை தங்களின் தலைமையாக ஏற்று வாக்களித்த மக்கள் ஏமாற்றத்திற்குள்ளாவர். உண்மையில் அது கூட்டமைப்பின் தலைவர்கள் மக்களுக்கு செய்த பெரும் அனியாயமாகவே வரலாற்றில் பதிவாகும்.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.