படம் | Thehindu

அண்மையில் நம்மாழ்வார் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அது அவர் குறித்த தனி ஆளுமையின் பதிவாக அமையாமல், அவர் ஆற்றிய மகத்தான பணியின் படமாக அமைந்ததால், அதிலிருந்து கற்றுக்கொள்ள நமக்கும் சில விடயங்கள் இருப்பதாகப்பட்டது.

யார் இந்த நம்மாழ்வார்?

நம்மாழ்வார். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பரவலாக அறியப்படும் இயற்கை விஞ்ஞானி. இயற்கை வேளாண் துறையையும், உணவு உற்பத்தியையும் பரவலான பேசுபொருளுக்குள்ளாக்கியவர். அதற்காக தன் முழுசீவியத்தையும் அர்ப்பணித்த மனிதர். வருடத்தின் தொடக்கப் பகுதியில் மரணமடைந்தார். இந்த நூற்றாண்டில் வாழ்ந்த அரிய மனிதர்களுல் நம்மாழ்வாருக்கு இருக்கின்ற மதிப்பு அளப்பரியது. அவரி்ன் இழப்பு ஈடுசெய்யமுடியாத இடைவெளியை இயற்கை வேளாண்துறையில் விட்டுசென்றிருக்கிறது. வழமையாக அரிய மனிதர்களுக்கு வாரிசுகள் என்று சொல்லக்கூடியளவுக்கு யாருமே இருப்பதில்லை என்கிற பொதுநியதி இவரிடமும் பிரயோகமாகியிருப்பது இன்னும் துயரம்.

படம் சொல்வதென்ன?

வானகம். மழை கண்டுகொள்ளாத கட்டாந்தரையான பூமி. மிகப்பெரும் வானம் பார்த்த நிலம். அந்த மண் எதற்கும் லாயக்கற்றது. மலட்டு மண் என பலராலும் கைவிடப்பட்டது. விவசாயம் சாத்தியமேயில்லையென மனிதர்களால் கழட்டிவிடப்பட்ட தரை. ஆனால், நம்மாழ்வார் அதை மாற்றிக்காட்டுகிறார். வானகத்தை வேளாண் பண்ணைத்திட்டத்துக்குள் எடுத்துக்கொள்கிறார். அந்த நிலத்தை அர்த்தப்படுத்த வேண்டுமாயின் நீர் வேண்டும். நீர் வேண்டுமாயின் மழை. மழை வேண்டுமாயின் காடு.

நீரற்ற நிலத்தில் எப்படி காட்டை உருவாக்குவது?

முதலில் அங்கு வறண்ட நிலத்தில் வளரக்கூடியதும், குறைந்தளவு நீரில் தப்பிப்பிழைத்து வாழக்கூடியதுமான தாவரங்கள் நடப்படுகின்றன. போதாக்குறைக்கு மயில் போன்ற பறவைகளும், முயல் போன்ற விலங்குகளும் இடும் எச்சங்களில் இருந்து குறுங்காடு வளர்கிறது. சில வருடங்களில் குறுங்காடு உருவாகிறது. எப்போதாவது பெய்யும் மழைநீரை அந்த நிலமெங்கும் சேமித்துக்கொள்கிறார். குடங்களில் நீர்நிரப்பி சின்னதுவாரமிட்டு, அவை நடப்படும் புதுமரக்கன்றுகளின் கீழ் வைக்கப்படுகின்றன. அதிலிருந்து சொட்டுசொட்டாக வடியும் நீர் அந்தத் தாவரத்தின் உயிருக்கு போதுமானதாக அமைந்துவிடுகிறது. அயல் ஊர் விவசாயிகளின் உதவியுடன் அகழிகள், குட்டைகள், குளங்கள் என ஆங்காங்கே வெட்டப்படுகின்றன. அவற்றில் பெய்யும் மழையின் நீர் சேமிக்கப்படுகிறது. அந்த நீர் வானகத்தின் இயற்கை வேளாண்மைக்கு பயன்பட்டு, மிகுதியானது நிலத்தடிநீராக மாறுகின்றது.

விவசாயமும் சக்கரபாத்திகளின் அமைப்பு முறையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இந்த பாத்தி அமைப்பில் குறைந்தளவு நீரை அதிகளவு விவசாயத் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒருபக்கம் காடுவளர, மறுபக்கம் இயற்கை விவசாயம் செழிக்கிறது. இந்த படிமுறையில் வறண்டு கிடந்த வானகம் செழிப்பு பெறுகிறது. எழுத்துக்களில் இலகுவாக சொல்லிவிட முடிகிறது. ஆனால், இதனை செய்துகாட்ட அவருக்கு நீண்டகாலம் தேவைப்பட்டிருக்கும். அவர் அதைப்பற்றி யோசிக்கவேயில்லை. இயற்கை மீது ஆர்வமிருந்ததால் காலத்தை கணக்கிடாமல் செய்துகாட்டினார். வானகம் இப்போது செழிப்பான பூமி.

நமக்கு இதில் என்ன இருக்கிறது?

வானகம் மாதிரித்தான் யாழ்ப்பாணம். வறண்டநிலம். அங்கேயும் ஏன் காடுகளை உருவாக்க முடியாது. நீர் சேமிப்பைசெய்து, நிலத்தடிநீரை பெருக்கமுடியாது. வானகத்தைவிட யாழ்ப்பாணத்துக்கு அதிகமாகவே மழைவீழ்ச்சி கிடைக்கிறது. மணல்தரை இலகுவாக நீரை உள்ளீர்த்துவிடும். இது சாத்தியமில்லை என்று சொல்லக்கூடும். யாழ்ப்பாணத்தில் செம்பாட்டு நிலமுடைய இடங்களும் உள்ளன. அவை விவசாயநிலங்கள். அங்கு நிலத்தடி நீர்சேமிப்பு அதிகமாகவே இப்போதும் தேவைப்படுகின்றது. நம்மாழ்வார் கையாண்ட அதே பொறிமுறையை நாம் கையாளவேண்டிய அவசியமில்லை. அவர் இந்தத்திட்டத்தை மேற்கொண்டது இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்பு. ஆனால், இன்று விவசாயமுறையிலும், நீர்சேமிப்பு முறையில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதைவிட யாழ்ப்பாணத்துக்கான விவசாய பல்கலைக்கழகம் கூட உண்டு. வடக்கிற்கான விவசாய அமைச்சே உண்டு. இயற்கை மீது ஆர்வமிருப்பவர்களால் இதைச் செய்யமுடியும்.

நம் முன்னாலும் நீர்நிலைகளையும், இயற்கை விவசாயத்தையும் பெருக்கவேண்டிய தேவை எழுந்திருக்கிறது. முதலில் வன்னியிலிருக்கின்ற இரணைமடுக்குளத்தை காப்பாற்றிக்கொள்ளவேண்டும். ஏற்கனவே, வறண்டுகொண்டிருக்கும் இரணைமடுக்குளத்தின் நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதற்கு உலகவங்கிகள் கோடிக்கணக்கில் பணம் கொட்டவும் தயாராக இருக்கின்றன. அந்த நிதியை ஏன் இப்படியான திட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. யாழ்ப்பாணத்தில் மையங்கொள்ளும் அந்நியநாட்டு தொழிற்கம்பனிகளுக்குத் தேவையான நீரை இரணைமடுக்குளத்திலிருந்துதான் எடுக்கவேண்டுமா என்ன? எதிர்கால சந்ததியும் நல்லாயிருக்குமே. வன்னி – யாழ்ப்பாணத்துக்கிடையே இந்த நீர்ப்பிரச்சினையால் எழக்கூடிய அரசியல் ஆபத்தையும் தவிர்க்கலாமே!

இரணைமடுக்குளத்தை மையப்படுத்தி உருவாகும் ஆபத்தான அரசியல் நமக்கு நன்றாகவே தெரியும். வெறுங்கதைகளாக மட்டுமே அதை பேசிக்கொண்டிருக்கிறோம். மாதம் 20 வெற்றுத் தீர்மானங்களை இயற்றி, உணர்ச்சிமய அரசியல்பேசி மக்களை ஏமாற்றுவதைவிட இப்படியேதாவது செயற்றிட்டங்களை முன்னெடுக்கலாம். அதுவே ஆரோக்கியமான அறிவுசார் அரசியல்வாதிகளுக்கு அழகும் கூட.

ஜெரா

Jera